Advertisement

Responsive Advertisement

தேவதை 1

 வண்ண தேவ உலகமும் சத்திய தேவ உலகமும் அருகருகே இருந்த தேவ உலகங்கள். அங்கிருந்து சற்று தள்ளி இருந்தது‌ அன்பின் தேவ உலகம்.


அந்த மூன்று உலகங்களில் சத்திய தேவ இனம்தான் அதிக வீரம் கொண்டிருந்தது. 


வண்ண தேவதை உலகில் இருந்தவர்கள் புது புது பூக்களையும், வண்ணங்களையும் உருவாக்கி மகிழ்ந்துக் கொண்டிருந்தார்கள்.


சத்திய தேவ இனமோ சண்டையிடுவதையும், போரிடுவதையுமே முக்கிய பணியாக கொண்டிருந்தது. 


அன்பின் தேவ இனம். இவர்களை விட வித்தியாசமாக இருந்தார்கள். அவர்களுக்கு புன்னகைதான் உயிர் வளர்த்தது. மகிழ்ச்சி அதுதான் உணவாகவே இருந்தது.


இவர்களை படைத்த கடவுளர்களுக்கு வேறு பணிகள் இருந்ததால் இவர்களை அவர்கள் கண்டுக் கொள்ளவில்லை. இவர்களும் தங்களின் தேவ பணிகளை சரியாகதான் செய்துக் கொண்டிருந்தார்கள்‌. அந்த ஒரு நாள் வரை. 


அந்த ஒரு நாள்தான் அனைத்தையும் தலைகீழாக மாற்றி விட்டது.


சத்திய தேவ இனத்தை சேர்ந்த மெய்யா எனும் தேவ பெண்ணை வண்ண தேவ இனத்தைச் சேர்ந்த சஞ்சு எனும் ஒருவன் காதலித்து அழைத்துச் சென்றான்.


தேவ இனங்களுக்குள் கலந்து காதலிப்பதோ, கலந்துக் கொள்வதோ அங்கே தடையில்லை. ஆனாலும் சஞ்சு தன் சிறு அலட்சியத்தால் மெய்யாவின் குடும்பத்திடம் விசயத்தை சொல்லாமல் அவளை தன்னோடு அழைத்து வந்து விட்டான். ஆனால் செல்லும் வழியில் அவர்களை தடுத்தான் செழினி. அவன் ஒரு அன்பின் தேவ இனத்தை சேர்ந்தவன். பல நூறு வருடங்களாக மெய்யாவை விரும்பிக் கொண்டிருந்தான் அவன். ஆனால் மெய்யாவிற்கு அவனை பிடிக்கவில்லை. 


"என்னோடு வா!" என்றுச் சொல்லி மெய்யாவின் கைப்பற்றி இழுத்தான் செழினி. அவன் ஒரு அன்பின் தேவன். அவனுக்கு அடிதடி வராது என்று நம்பிக் கொண்டிருந்தாள் மெய்யா. அதனல்தான் சிறு அலட்சியத்தோடு "எனக்கு உன்னைப் பிடிக்கல. என்னை விடு!" என்றுச் சொல்லி கையைப் பின்னால் இழுத்துக் கொண்டாள்.


சஞ்சுவும் செழினியை அலட்சியமாகதான் பார்த்து நின்றான். அவனால் தங்களை என்ன செய்து விட முடியும் என்ற அசட்டுதனம்.


"நான் உன்னை நேசிக்கிறேன் மெய்யா!" 


"நான் சஞ்சுவை நேசிக்கிறேன். அவனும் என்னை நேசிக்கிறான். நாங்க புது உலகம் உருவாக்க போறோம்!" மெய்யா சொன்னதை செழினியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவனின் அன்பு பொய்யாவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 


அவனால் அவளை போரிட்டுக் கொள்ள முடியாது. அதனால்தான் அவளின் நெஞ்சத்தை கிழித்து அவளின் இதயத்தை வெளியில் எடுத்தான். அந்த இதயத்தை நான்காக பிய்த்து எறிந்தான். அன்பின் தேவ இனத்திற்கு தரப்பட்ட வரம், சக்தி அது‌. ஆபத்து காலத்தில் பயன்படுத்த வேண்டியதை பழி வாங்க பயன்படுத்தி விட்டான். மெய்யா அந்த இடத்திலேயே இறந்துப் போனாள். 


செழினி சஞ்சுவை வெறித்தான். அவனை இழுத்துக் கொண்டு அங்கிருந்துச் சென்றான். வண்ண தேவதை இனத்திற்கு அவ்வளவாக சண்டையிட தெரியாது. அதனால்தான் செழினியோடு செல்ல வேண்டியதாகி விட்டது.


அந்த தேவதை பிரபஞ்சத்திற்கு மேற்பார்வை காவலர்களாக இருந்தவர்கள் மெய்யாவின் உடலை கண்டு அதிர்ந்து சத்திய தேவ உலகிற்கு செய்தி அனுப்பினார்கள்.


மெய்யாவின் உடல் சத்திய தேவ உலகிற்கு கொண்டு வரப்பட்டது. அவ்வுலகில் இருந்த முக்கியமானவர்கள் அனைவரும் ஒன்றுக் கூடினார்கள். அவ்வுலகின் இளம் அரசன் கவிக்கு மெய்யாவின் உடலை கண்டு ஆத்திரத்தில் ரத்தம் கொதித்தது.


என்ன நடந்தது என்று விசாரித்தார்கள். "வண்ண தேவன் சஞ்சுதான் மெய்யாவை இங்கிருந்து கூட்டிப் போனான்!" என்றுச் சொன்னாள் ஒரு பெண்.


"வீரர்களே உடனே வண்ண தேவ உலகத்திற்கு போங்க. அங்கிருக்கும் அனைவரையும் சிறை செய்யுங்க!" என்றான். வீரர்கள் படை அங்கிருந்துப் புறப்பட்டது. 


மெய்யாவின் உடலை வெறித்தான் கவி. அவளின் இதயம் வெளியெடுக்கப்பட்டிருப்பதை அவனால் கவனிக்க முடிந்தது. இவளை அழைத்துச் சென்றது சத்திய தேவ இனத்தை சார்ந்தவனாக இருந்தாலும் கூட இவளைக் கொன்றது நிச்சயம் அன்பின் தேவ இனம்தான் என்பதை அவனாலும் யூகிக்க முடிந்தது.


படைவீரர்களின் மற்றொரு கூட்டத்தை அழைத்தான். "அன்பின் தேவ உலகத்திற்கு போங்க. இவளை கொன்றது யாரென கண்டுப்பிடித்து அவனை இங்க கட்டி இழுத்து வாங்க!" என்றான்.


அவர்களும் தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்றார்கள்.


பிரபஞ்ச வெளியில் தேடி சென்றபோதே தெரிந்தது மெய்யாவையும், சஞ்சுவையும் வழி மறித்தது செழினிதான் என்று. அவனை கைது செய்ய நினைத்து தேடி சென்றார்கள் வீரர்கள். 


மூன்று தேவ கிரகங்களுக்கும் இடையில் இருந்த மொட்டை பாறை விண்வெளி பாறையின் மீது அமர்ந்திருந்தான் செழினி. இவர்கள் சென்றபோது அவனின் முன்னால் இருந்த சஞ்சுவின் உடலை பார்க்க முடிந்தது.


"அவனையும் கொன்னிருக்கான்." என்றான் ஒரு வீரன்.


செழினி எழுந்து நின்றான்.


"சத்திய தேவர்களுக்கு இங்கே என்ன வேலை?" என்றான்.


"நீ எங்களின் தேவப் பெண்ணை கொன்னிருக்க. உன்னை கைது செய்ய வந்திருக்கோம் நாங்க." என்றபடி அருகில் வந்தான் ஒருவன். ஆனால் அதே நேரத்தில் செழினி தன் அருகே வந்தவனின் இதயத்தையும் பறித்து அவனையும் கொன்று விட்டான்.


"மிருக பிசாசாய் மாறிட்டான் போல. அவனை பிடிச்சி கொல்லணும்." என்று அவனை சுற்றி வளைக்க முயன்றார்கள் வீரர்கள்.


ஆனால் அதற்குள் அவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். சத்திய தேவ இனம் அவனை பின்தொடர்ந்தது. ஆனால் அப்போதும் கூட அவனை இவர்களால் பிடிக்க முடியவில்லை.


சத்திய தேவ உலகத்தில் மெய்யாவின் உடலை கோட்டை ஒன்றிற்குள் வைத்து இறுதி மந்திரம் வாசித்தார்கள்.


கவி உறைந்துப் போய் நின்றிருந்தான். அவனுக்கு நடப்பது அத்தனையும் கனவு போல இருந்தது. இந்த தேவ உலகத்தின் வரலாறு இவர்களின் தைரியத்தில் எழுதப்பட்டது. இத்தனை கோடி ஆண்டுகளில் சத்திய தேவ இனத்தில் ஒரு உயிர் கூட கொலையால் பறி போனது கிடையாது. அவர்கள் சத்திய தேவர்கள். போரிடுவதும், அதில் வெற்றிப் பெறுவதும் அவர்களுக்கு வெகு சாதாரணம். 


வரலாற்றில், அந்த உலகின் பதிவேட்டில் பதிவான முதல் கொலை. அதை அங்கிருந்த யாராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கவியால் சுத்தமாக முடியவில்லை. அவன் அரச பதவியேற்று சிறிது வருடங்கள்தான் முடிந்திருந்தது. அவனின் ஆட்சியில் இப்படி ஒரு கரும்புள்ளி. இருக்கும் மற்ற தேவ உலகங்கள் அனைத்தும் தங்களை கேலி செய்வதை அவனால் யோசித்துப் பார்க்க முடிந்தது. 


என்ன செய்தால் இந்த கொலைக்கு சமம் ஆகும் என்று யோசித்தான். அந்த நேரத்தில்தான் இறந்துப் போன போர்வீரனின் உடலையும் கொண்டு வந்தார்கள் மற்ற வீரர்கள். இரண்டாம் கொலை. இரண்டாம் மரணம். சத்திய தேவ இனமே இடிந்துப் போய் அமர்ந்து விட்டது.


"நம்மை யாராலும் கொல்ல முடியாதுன்னு நிரூபிச்சிட்டு இருந்தோம். ஆனால் கேவலமான அன்பின் தேவன் ஒருத்தன் நம்ம வீரர்களை கொன்னு இருக்காங்க. இந்த விசயத்தை எந்த வகையில் கையாளுவதுன்னு கூட தெரியல." மூத்த ஆசிரியன் ஒருவன் சொன்னான். 


கவி தலையை பற்றியபடி யோசித்துப் பார்த்தான்.


"வேற வழி எதுவும் இல்ல. அன்பின் தேவ இனத்தை அழிக்கிறது மட்டும்தான் ஒரே வழி. நமக்கு எதிரிகள் எங்கேயும் இருக்க கூடாது.." என்றவன் தன் படையோடு அன்பின் தேவ உலகிற்கு புறப்பட்டான். 


அழகான உலகம் அது. புன்னகைத்துக் கொண்டிருந்த தேவர்களால் நிரம்பி இருந்தது. பூக்கள் கூட மற்ற உலகங்களை விட இங்கே அதிக அழகில் இருந்தது.


சத்திய தேவ படை சூரிய புயல் போல அந்த உலகிற்குள் நுழைந்தது. கண்ணில் பட்ட அனைவரையும் கொன்றார்கள். அந்த உலகத்து தேவர்களையும், தேவதைகளையும் சில மணி நேரங்களிலேயே கொன்று தீர்த்து விட்டார்கள். அப்பாவியான அன்பின் தேவ இனமும் இவர்களின் கோபத்தையும் வீரத்தையும் தாங்க முடியாமல் மடிந்துப் போனது.


கவி பெரியதாக போரிடவில்லை. கண்ணில் பட்டவர்களையெல்லாம் தன் கத்தியால் கொன்றபடி முன்னேறிக் கொண்டிருந்தான். அவனின் வாளில் இருந்து வெளியேறிய சிவப்பு கதிர்கள் அந்த இடத்தையே நெருப்பால் கருக செய்தது. அந்த நெருப்பில் மாண்டுப் போய் கொண்டிருந்தார்கள் பலரும்.


அந்த உலகின் ஒரு மூலையில் இருந்த அந்த நந்தவனத்திற்கு கடைசியாகதான் வந்து சேர்ந்தது கவியின் படை. 


வெளியில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பூக்களோடு பேசி சிரித்துக் கொண்டிருந்தாள் ஆதி. ஆதி ஒரு இளம் தேவதை. அழகான முகம். அன்பால் ஈர்க்கும் கண்கள். புன்னகையின் புது பரிமாணத்தை சுமந்திருக்கும் இதழ்கள். தீர்க்கமான முகம் அவளுடையது. 


நந்தவனத்தின் நடுவில் இருந்தவள் மற்றவர்களின் கூக்குரல் கேட்டு சத்தம் வந்த இடம் நோக்கி ஓடினாள். சிறிது சிறிதாக அழிந்துக் கொண்டிருந்த நந்தவனத்தில் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தார்கள் தேவர்களும் தேவதைகளும். அவர்களை பூ கொய்வதை போல கொன்றுக் கொண்டிருந்தது எதிரி படை.


தன் தோழி ஒருத்தி கத்தியால் தாக்கப்படுவது கண்டு அவளை நோக்கி ஓடினாள் ஆதி. ஆனால் இரண்டாம் அடியில் நிறுத்தப்பட்டாள். அவளின் முன்னால் நின்ற கவி அவளை மேல நகர விடவில்லை. 


வீரன். இள வயது தேவன். அழகான அம்சமான வீரன். சிவந்த கண்கள் அவனுடையது. கோபத்தில் இருக்கிறான் என்று அவளுக்கும் கூட புரிந்தது. அவன் அவளை விட இருமடங்கு உடம்பை கொண்டிருந்தான். வீரர்களுக்கு இது சகஜம்தானே என்று எண்ணினாள் அவள்.


அந்த முகத்தை வெளிகாட்டாமல் இருந்தால் இவனை ராட்சசன் என்று கூட நினைத்திருப்பாள் அவள்.


"இங்கே என்ன நடக்குது?" அவளின் குரல் இசையாக ஒலித்ததை கண்டு ஆச்சரியப்பான் கவி. பூக்களால் தொடுத்த ஆடையை அணிந்திருந்தாள் அவள். காதுகளில் இரு சிறு பூக்கள் காதணிகளாக இருந்தது. அவளின் கழுத்தில் சிவப்பு ஆபரண மாலை ஒன்றும் இருந்தது. கழுத்தில் பூமாலை ஒன்றையும் அணிந்திருந்தாள். அவள் இப்படி பூக்களால் அலங்கரித்துக் கொண்டு இருப்பது அவனுக்கு வித்தியாசமாக தோன்றியது.


அவன் சத்திய தேவ உலகில் அரசன். அவனுக்கென்று நிறைய பணிகள் உள்ளது. அவனுக்கு மற்ற உலகங்களை பற்றி அறிந்துக் கொள்ள கூட நேரம் இல்லை. அதனால் இவர்களின் அலங்காரம் பற்றியும் தெரியவில்லை.


"இந்த உலகத்தை அழித்துக் கொண்டிருக்கிறோம். நீயும் சாக போகிறாய்!" என்றவன் தன் கத்தியை உருவினான்.


ஆதி பயத்தோடு அவனையும் அந்த நந்தவனத்தையும் பார்த்தாள். அந்த நந்தவனம் அதற்குள் முழுதாக அழிக்கப்பட்டு விட்டிருந்தது. ஆங்காங்கே இறந்துக் கிடந்த தேவர்களையும் தேவதைகளையும் கண்டு கண்ணீர் விட்டாள். அவளின் கண்ணீர் தரையில் விழுந்த கணத்தில் குட்டி குட்டி பூக்களாக மாறிக் கொண்டிருந்ததை அங்கிருந்த யாருமே கவனித்திருக்கவில்லை.


"எங்களின் மக்களை அழிக்காதீர்கள்." கையெடுத்து கும்பிட்டுக் கேட்டாள். அதே வேளையில் அங்கே ஓடி வந்தார்கள் படையின் மொத்த வீரர்களும்.


"இந்த உலகத்தில் இருந்த எல்லோரையும் அழித்தாயிற்று ஏந்தலே!" என்றார்கள் கவியிடம்.


ஆதி அதிர்ச்சியோடு தன் நெஞ்சத்தின் மீது கையை வைத்தாள். இதயம் பலவீனமாக துடித்தது. மற்றவர்களை மனதிற்குள் அழைத்துப் பார்த்தாள். 


'அன்பின் சகோதரிகளே.. அன்பின் சகோதரர்களே.. இங்கே நான் தனியாக உள்ளேன். யாராவது இருந்தால் என்னருகே வர முடியுமா?' என்றுக் கேட்டாள். 


பதில் வரவில்லை. அவர்கள் சொன்னது உண்மைதான். தன் இனம் அழிந்துப் போயிற்று என்பதை அவளால் உணர முடிந்தது.


"எல்லோரையும் போல நீயும் சாக போற!" என்றான் கவி.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments