Advertisement

Responsive Advertisement

மௌனம் 20

 ரூபி சிரமத்தோடு கண்களை திறந்தாள். அழுத கண்கள் இரண்டும் சிவந்திருந்தது. அவள் கண்களை திறந்தும் எரிந்தது.

கண் எரிச்சலை தாண்டி வேறு எங்கோ வலிகள் தோன்றின. நடந்ததை நினைத்தபடி கையையும் காலையும் பார்த்தாள். கட்டிப் போடப்பட்டிருந்த கையும் காலும் இப்போது விடுதலை பெற்றிருந்தன. இரு உள்ளங்கைகளும், பாதங்களும் வெள்ளை துணியால் கட்டுப் போடப்பட்டு இருந்தது. அவளின் காலில் இருந்த இரும்பு சங்கிலி அருகே இருந்த ஜன்னல் கம்பியில் பிணைக்கப்பட்டு இருந்தது. கை கால்களை ஊன்ற முடியாவிட்டாலும் கூட கால் முட்டியையும், கை முட்டியையும் பயன்படுத்தி அவள் தப்பி விடுவாள் என்ற சந்தேகத்தில்தான் சங்கிலியால் பிணைத்திருந்தார் தங்சேயா.

எவ்வளவோ பேரை கொன்ற தன்னால் ஏன் இந்த தங்சேயாவை கொல்ல முடியவில்லை என்று நினைத்துப் பார்த்தாள். சொந்த குடும்பத்திடம் இருந்துக் கடத்திச் சென்றவர் அவர். அவரின் தண்டனைகளுக்கு பயந்தே பெற்றோரை மறந்து விட்டதாக பொய்ச் சொன்னாள் ரூபி. 

அவளுக்கு வீரத்தைச் சொல்லித் தந்தான் தங்சேயா. ஆனால் அவன் மீதிருந்த அவளின் பயம் கடைசி வரை அவளை விட்டுச் செல்லவில்லை. அவளைப் பொறுத்தவரை அவன் ஒரு பூச்சாண்டி. இன்னமும் இந்த இருபத்தி நான்கு தாண்டிய வயதிலும் அவளின் பார்வைக்கு அவன் பூச்சாண்டிதான். தொலைக்காட்சிகளில் குழந்தைகள் சில நவீன கோமாளிகளை கண்டு பயந்து அழுவதைக் கண்டு நவீனும், புவினும் சிரிப்பார்கள். ஆனால் அந்த குழந்தைகள் அந்த நவீன கோமாளிகளுக்கு பயப்படுவதை போலதான் தானும் தங்சேயாவுக்கு பயந்துக் கொண்டிருக்கிறோம் என்பது ரூபியும் அறிந்த விசயம்தான். 

அவன் மீது கொண்ட பயம் எந்த அளவிற்கானது என்றால் அவன் முன்பே பத்து இருபது பேரை பயிற்சிக்காக சுட்டுக் கொன்றவள் ஒருநாள் கூட துப்பாக்கியை அவன் பக்கம் திருப்ப நினைத்ததே இல்லை. அவனின் அருகில் அவளின் உள்ளம் நடுங்கியது உண்மை. அவனின் முன்னால் அவள் நிற்க பயந்ததும் உண்மையே.! 

அந்த தீவில் பல நாட்கள் அழுது, பல நாட்கள் பட்டினி தண்டனை கிடந்து அதன் பிறகுதான் தங்சேயாவின் பேச்சைக் கேட்க ஆரம்பித்தாள் ரூபி. அவளை போல பேச்சு கேட்காத ஒரு சில குழந்தைகள் மரம் ஒன்றில் தலைகீழாக கட்டிப் போடப்பட்டு பட்டினியாக சாகடிக்கப்பட்டதை கண்களால் பார்த்துப் பயந்திருக்கிறாள் அவள். 

அவரின் பேச்சைக் கேட்டால் பணக்கார வாழ்வு, சுயமான மகிழ்ச்சிகள் என்று அவளுக்கு ஆசை காட்டினார்கள் தங்சேயாவின் உடன் இருந்தவர்கள். அவளின் குடும்பமே பணக்கார குடும்பம்தான். அவர்கள் தந்த மகிழ்ச்சியை இந்த உலகத்தில் வேறு யாராலும் தர முடியாது என்பது அவள் மட்டுமே அறிந்தது‌. பயத்தால் தன்னையே தனக்குள் கொன்றுவிட்டு எழுந்தவள் அவள். தான் அனாதையாக காரணம் உலகம் அல்ல, தங்சேயாவின் கிறுக்குப் புத்திதான் என்று அவளுக்கு தெரியும். ஆனால் அந்த கிறுக்குப் புத்திக்கு பயந்தே துப்பாக்கியை கையில் தூக்க வேண்டிய நிலை அவளுக்கு‌.

தங்சேயாவிடம் நல்ல மாணவி என்று பெயர் வாங்குவதில் ஒரே ஒரு லாபம் மட்டும் இருந்தது. அதுதான் மற்ற ஆண்களின் காம பசியிலிருந்து அவளின் உடலை காப்பாற்றிக் கொள்வது. பருவ பெண்ணாக மாறிய பிறகு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே தங்சேயாவிடம் நெருங்கி விட்டாள் ரூபி. 

அவள் அங்கே சென்ற நாளில் இருந்தே நவீனையும் புவினையும் அவளுக்குத் தெரியும். ஆனால் அவள் முதன் முதலில் ஒரு ஆபரேசனுக்காக அந்த தீவை விட்டு வெளியே சென்றபோதுதான் நவீன் புவினோடு நெருங்கினாள். 

இரவில் நவீனும், ரூபியும் குடிப் போதையில் அமர்ந்திருக்க அவர்களிடம் பந்த பாசங்கள் பற்றி ஏதோ நினைவில் பேசினான் புவின். அப்போதுதான் ரூபி தன் குடும்பத்தை பற்றி உளறினாள். நவீனும் தனக்கு தாய் தந்தை எல்லாமே புவின்தான் என்று அண்ணனை கட்டிக் கொண்டு அழுதபடி சொன்னான்.

அவர்கள் இருவரும் சொன்னது கேட்டு புவினுக்கே அதிர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு தனித் தீவு அவர்களின் உணர்வுகளை மழுங்கடிக்கவில்லை என்பதை அப்போதுதான் அவனும் புரிந்துக் கொண்டான்.

மறுநாள் போதை தெளிந்த பிறகு அவனிடம் கெஞ்சினாள் ரூபி. தான் சொன்ன எதையும் தங்சேயாவிடம் சொல்லி விட வேண்டாம் என்று கேட்டு அழுதாள். அப்போது நவீன்தான் 'நீ அழக் கூடாது பாப்பா.. நாங்க உனக்கு இனி அண்ணன்களா இருக்கோம். தங்சேயாவுக்கு எதுவும் தெரிய வேணாம்.. உனக்கு உன் குடும்பம் வேணாம்‌. நீ இப்படி ஒரு கெட்டவளா மாறி போனன்னு தெரிஞ்சா அவங்க வருத்தப்படுவாங்க.. நாம தங்சேயா இல்லாதபோது அண்ணன் தங்கச்சியா இருப்போம். மத்த நேரத்துல பாஸ், அசிஸ்டென்டா இருப்போம்..' என்றான்.

ஆனால் அவனேதான் புவின் இறந்ததும் மனமுடைந்துப் போய் விட்டான். அந்த தீவில் இருந்த எல்லோரையும் கொல்ல வேண்டும் என்று வெறி வந்தது. ஆனால் ரூபியை மட்டும் அந்த இடத்திலிருந்து தப்பிக்க செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்காகத்தான் நவீனை இந்தியா அனுப்பியபோது தங்சேயாவிடம் கேட்டு ரூபியையும் தன்னோடு அழைத்துக் கொண்டு வந்து விட்டான்.

ரூபியை போலதான் அவனுக்குள்ளும் தங்சேயாவை கண்டுப் பயம். அவனால் தங்சேயாவை தனியாய் கொல்ல இயலாது என்பதால்தான் தனசேகரிடமும் கூட அவன் உதவி கேட்டான். ஏதோ ஓர் எண்ணம். ஒரு நம்பிக்கை. புலிக்கு பூனை வேடம் போடும் ஒரே காரணமே புலி பூனையாகிவிடாது என்று எண்ணியதாலோ என்னவோ, தன் தோலை உரித்து விட்ட பிறகு அந்த தனசேகர் தனக்கு உதவி புரிவான் என்று எண்ணி விட்டான்.

"இன்னும் அரை மணி நேரத்துல இந்த நாட்டுல பத்து இடத்துல பாம் வெடிக்க போகுதுன்னு தகவல் வந்திருக்கு.." என்ற தனது சக காவலரை கவலையோடு பார்த்தான் தனசேகர்.

"சந்தேகத்துக்குரிய எல்லா இடங்களையும் சோதனைப் போட சொல்லியிருக்கேன்.. எங்கேயும் கூட்டம் சேரக் கூடாதுன்னு ஏற்கனவே உத்தரவு இருக்கு.. எதாவது செய்வோம்.." என்றான்.

அவனுக்கு தன் மூளையில் சுண்டெலி ஓடுவதைப் போல குழப்பமாக இருந்தது. தங்சேயாவை பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தோடு இந்த வெடிகுண்டு விசயமும் சேர்ந்து அவனை தொல்லைச் செய்தது.

யோசனையில் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தவனின் போன் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். லாவண்யா அழைத்திருந்தாள்.

"சார் தங்சேயா இருக்கும் இடம் தெரிஞ்சிடுச்சி.. அவனை தேடித்தான் விஷால் சார் போயிருக்காரு.!" என்றாள்.

தனசேகர் நிம்மதியாக பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டான்.

"அவனை பார்த்த உடனே கொல்லணும்.." என்று கருவினான்.

"உடனே நான் அங்கே போறேன்.." என்றவனிடம் தான் எங்கே இருக்கிறோம் என்று சொன்னாள் லாவண்யா.

"சின்னையன் செத்த இடத்துல நீ தனியா இருப்பது டேஞ்சர் லா.. பின்பாட்டு படிக்கறவனுங்க நம்மை விட அவங்களுக்குதான் அதிகம். நீ அவன் பாடியை போஸ்ட்மார்டதுக்கு அனுப்பிட்டு அங்கிருந்து நகர்ந்துடு.. அவன் செத்தது இன்னும் ஒரு வாரத்துக்கு யாருக்குமே தெரிய கூடாது.!" என்றான்.

"ஓகே சார்.." என்றுவிட்டு போனை வைத்தவள் ரதியிடம் விசயத்தை சொன்னாள். அதே வேளையில் வாசலில் ஆம்புலன்ஸும் வந்து சேர்ந்தது. சின்னையனின் உடல் அதில் ஏற்றப்பட்ட பிறகு 'இவனின் உடல் மிக ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும்' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள் லாவண்யாவும் ரதியும்.

சின்னையன் சொன்ன வீட்டை விட்டுத் தூரத்திலேயே காரை நிறுத்தினான் விஷால். கை விலங்கிடப்பட்டிருந்த நவீனின் கை விலங்கை அவிழ்த்து விட்டான்.

"நீங்க எல்லாம் தங்சேயா கையில் சிக்க நாங்க எல்லோருமே ஏதோ ஒரு விதத்துல காரணம்தான்.! குழந்தைகளுக்கு சரியான பாதுகாப்பு இல்லாதது, சிறு வயது அனாதைகளை பராமரிக்க தவறியது, குழந்தைகளை கூட பட்டினி சாவுக்கு பலி கொடுத்ததுன்னு எங்க மேலேயும், நம்ம சமுதாயத்து மேலயும் தப்பு இருக்கு. உன்னை என்னால முழுசா விடுவிக்க முடியாது. ஆனா ரூபியை காப்பாத்தி கூட்டி வரும் வரை மட்டும் நீ சுதந்திரமா இருக்கலாம்.." என்றான்.

"தேங்க்ஸ் சார்.." என்றவன் இங்கே வரும் வழியில் ரூபியை பற்றியும், தன்னை பற்றியுமான அனைத்து உண்மைகளையும் சொல்லி விட்டிருந்தான். அதனால்தான் விஷால் கொஞ்சம் மனிதாபிமான இரக்கம் கொண்டிருந்தான்.

அவனுக்கு ரூபியின் மீது இப்போது வரை கோபம்தான். ஆனால் அவள் கடந்து வந்த பாதையை கேட்ட பிறகு கொஞ்சமே கொஞ்சம் இரக்கம் வந்திருந்தது. சிறு பட்டாம்பூச்சிகளை பிடித்து வலுக்கட்டாயமான முறையில் விஷ பூச்சியாக மாற்றுவது எவ்வளவு கொடூரமானது என்பதை அவனாலும் புரிந்துக் கொள்ள முடிந்தது.

தங்சேயாவை பற்றி ஓரளவுக்கு அவனால் யூகிக்க முடிந்தது. எந்தெந்த நாடுகளை அவன் அழிக்க நினைக்கிறானோ அந்த நாடுகளுக்கு அந்தந்த நாட்டிலிருந்து கடத்திச் சென்று தீவிரவாதிகளாக மாற்றிய ஆட்களைதான் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தான். வேலியே பயிரை மேய்வதை காணும்போது ஏற்படும் கேவலமான திருப்தியை போன்றதே இந்த திருப்தியும் என்பது விஷாலின் எண்ணம்.

அவன் அந்த வீட்டை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தவுடன் இரண்டு பெரிய லாரிகள் அவனருகே வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பங்களா வீட்டை நோக்கி ஓடினார்கள்.

கார் ஒன்று வேகமாக வந்து நவீனின் அருகே நின்றது. அதிலிருந்து இறங்கிய தனசேகர் "இன்னும் இங்கேயேதான் இருக்கிங்களா.? உங்களுக்கு உதவணுமேன்னு அவசரமா வந்தோம் நாங்க.!" என்றான்.

"கொஞ்சம் லேட்டாதான் வந்தோம் சார்.." என்ற விஷாலோடு சேர்ந்து அந்த பங்களாவுக்குள் நுழைந்தான் தனசேகர். பங்களாவின் வாட்ச்மேனை கைது செய்து அழைத்துச் சென்றுக் கொண்டிருந்தார்கள் இரு காவலர்கள்.

வீட்டின் கதவு உதைத்துத் திறக்கப்பட்டது.

"இவன் இங்கே இருப்பான்னு நம்புறியா.?" எனக் கேட்ட தனசேகரிடம் "தெரியல சார்.." என்றான் விஷால்.

மிக கவனத்தோடு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து உள்ளே சென்றார்கள் அனைவரும். 

"இங்கே ஏதாவது பாம் இருந்தா.? இந்த இடம் நம்மை திசை திருப்ப யூஸ் பண்ணி இருந்தா.?" என்றுக் கேட்டான் ஒரு காவலன்.

"ஆனா நாம சின்னையனை பிடிச்சது இவனுக்கு தெரியாதே.. சின்னையன் நம்மகிட்ட சொன்னதும் இவனுக்கு தெரியாதே.!" என்ற விஷால் சுற்றியிருந்த எல்லா அறைகளையும் பார்த்தான். காவலர்கள் ஆளுக்கொரு அறையில் நுழைந்து தேடினார்கள். 

"இந்த வீட்டுல எந்த ஆயுதமும் இல்ல. மனிதர்களும் கூட இல்ல.." என்றான் ஒரு காவலன். 

"ஓகே.. வேற ஏதாவது தடயங்கள் கிடைக்குதான்னு பார்க்கலாம்.." என்ற விஷால் "சார் இங்கே வாங்க..‌" என்று மாடியிலிருந்து ஒருவன் அழைத்ததும் ஓடினான்.

மாடியின் ஒரு அறையில் மயங்கிக் கிடந்தாள் ரூபி. அவளின் கை காலில் இருந்த கட்டை கண்டதும் அனைவருமே அதிர்ச்சியாக நின்று விட்டார்கள்.

"என்னாச்சி இவளுக்கு.?" என்ற விஷால் அவளின் அருகே சென்றான்.

"தங்சேயா இவளுக்கு தண்டனை தந்திருக்காரு.. துரோகிகளுக்கு தர முதல் கட்ட தண்டனை.. உள்ளங்கைகளிலும், கால் பாதங்களிலும் தலா ஏழு வெட்டு வெட்டி இருப்பாரு.." என்ற நவீன் ஜன்னலோடு பிணைந்திருந்த சங்கிலியை உடைக்க முயன்றான். 

"தள்ளு.." என்ற தனசேகர் அந்த சங்கிலியின் பூட்டின் மீது சுட்டான்.

"ரூபி.." அவளை எழுப்ப முயன்றான் நவீன். அவளின் உடல் அனலாக கொதித்தது.

அதே நேரத்தில் "சார் நாட்டுல பத்து இடத்தில் பாம் வெடிச்சிருக்கு.." தனசேகரிடம் வந்து சொன்னான் ஒரு காவலன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW


Post a Comment

0 Comments