Advertisement

Responsive Advertisement

மௌனம் 23

 தனசேகர் தனது போனை கையில் எடுத்தான்.

தங்சேயாவை சுற்றி நின்றிருந்த பாதுகாப்பு படை வீரர்களின் தலைவனான சாகித்துக்கு அழைத்தான்.

"அந்த மந்திரி சாகட்டும்.!" என்றான்.

கூட்டத்தின் பின்னால் நின்றிருந்தான் சாகித். தனது காதில் இருந்த ப்ளூடூத்தை சந்தேகத்தோடு அழுத்தியவன் "என்ன சார் சொல்றிங்க.? அவர் நம்ம மந்திரி.!" என்றான்.

அதே வேளையில் அந்த படை வீரர்களின் நடுவில் நின்றிருந்த தங்சேயா "நாம அந்த மந்திரி பத்தி அப்புறமா பேசிக்கலாம்.. முதல்ல என் மகனை இங்கிருந்து அனுப்பி வச்சிடுறேன்.!" என்றார்.

நவீன் அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தான். மற்ற நேரமாக இருந்திருந்தால் நிச்சயம் அவரிடம் விழுந்திருப்பான். ஆனால் அவனின் நெஞ்சில் இருந்த வெடிகுண்டு ஜாக்கெட் அவனை இழுத்துப் பிடித்து நிறுத்தி இருந்தது. அனைவரையும் அழிக்க வேண்டும். அதற்காக எதை வேண்டுமானாலும், பாசமெனும் மாய வலையை கூட இவர் விரிப்பார் என்று அவனுக்குப் புரிந்துப் போனது.

படை வீரர்கள் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் நின்றிருந்தார்கள். மந்திரி ராஜ்ஜின் உயிர் அவர்களுக்கு முக்கியமாக பட்டது. இந்த நேரத்தில் அவசரப்படுவது சரியென்று படவில்லை.

தங்சேயா காரை திறந்தார். நவீனிடம் கை காட்டினார். நவீன் அந்த படை வீரர்களை தயக்கமாக பார்த்தபடியே காரில் ஏறி அமர்ந்தான்.

"இங்கிருந்து போ மகனே.! நீ எனது செல்ல மகன்.!" என்றவர் அவனின் தலையை வருடி தந்தார். நவீன் எவ்வளவோ கட்டுப்படுத்தினான். ஆனாலும் மனம் நெகிழ்ந்து விட்டது. பாசத்திற்கு இவ்வளவு கேவலமாக ஏங்குவோம் என்று அவன் நினைக்கவே இல்லை. நேற்று வரையிலும் தன் அண்ணனின் காதல் முட்டாள்தனமானது என்று நினைத்திருந்தவன்தான் இவன். ஆனால் இன்றுதான் புரிந்தது அண்ணன் ஏன் இமை மூடும் நேரத்தில் காதலில் விழுந்தான் என்று! மனதை எவ்வளவு இரும்பாக தயாரித்து வைத்திருந்தாலும் கூட இந்த பாசம் துரு போல மனதை மென்று தின்று விடுகிறது என்ற விசயம் புரிந்து தனக்குள் கசந்து சிரித்தான்.

"ஆல் த பெஸ்ட்.." என்று சிரிப்போடு சொல்லியபடியே அவனை விட்டு விலகி நின்றார் தங்சேயா.

நவீன் காரின் இன்ஜினை உயிர்ப்பித்தான். படை வீரர்கள் அசையாமல் நின்றிருந்தார்கள். நவீனை வெறித்தார்கள்.

தன் நெஞ்சில் இருக்கும் வெடிகுண்டுகளை வெடிக்க வைக்கும் ரிமோட் தன்னிடம் இருந்தால் தங்சேயா அருகில் இருந்த நேரத்திலேயே அதை வெடிக்க செய்து விடலாம் என்று நினைத்தான் நவீன். ஆனால் சுற்றி நின்றிருந்த வீரர்களை காணும்போதுதான் தனது எண்ணம் தவறு என்றுப் பட்டது.

காரை அங்கிருந்து கிளப்பினான் நவீன். தங்சேயா அவனை வெறித்துப் பார்த்துவிட்டு வீரர்கள் பக்கம் திரும்பினார். அவரின் இதழில் குறும்நகை ஓடியது. கேலியா கிண்டலா என்றுத் தெரியவில்லை. ஆனால் அவரின் எண்ணம் அதில் ஒன்றாகத்தான் இருக்கும் என்று அவர்களால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

சாகித் அதிர்ச்சியின் பிடியில் இருந்தான்.

"இன்னைக்கு எனக்கு இருக்கும் கடுப்புல எந்த கெட்டவனையும் வெளியே விட ஐடியா இல்ல சாகித். அந்த ராஜ் இதுவரைக்கும் ஊழலுக்காக இரண்டு முறை பதவி விலகி இருக்கான். அவனுக்கு மேற்கு பிரதேச நாடு ஒன்னோடு பயங்கர தொடர்பு இருக்குன்னு நம்ம எல்லோருக்குமே தெரியும். அவன் இவங்க ஆள்தான் சாகித். ஒரு நாட்டுக்காக ஒரு கிராமம் அழிஞ்சா தப்பு கிடையாதுன்னு சொல்லாடல் இருக்கு. அப்படி இருக்கையில மொத்த நாட்டுக்காகவும் ஒருத்தன் செத்தா தப்பே இல்ல.. அதுலேயும் அந்த ஒருத்தன் நாட்டை அன்னியனிடம் அடகு வைக்குற சதிகாரனா இருக்கையில் அவன் சாகுவதுதான் ரொம்ப சரி. தயவு செஞ்சி அவனை கொன்னுடு.. நான் உனக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் தரேன்.! ப்ளீஸ்.. இப்ப என்னால்தான் முடியும்.! நீ நம்ம நாட்டுக்கே காப்பாளன்.!" என்றான் தனசேகர்.

"ஆனா சார்.." தயங்கினான் இவன்.

"ப்ளீஸ் சாகித். இது போல மீண்டும் ஒரு வாய்ப்பு நமக்கு எப்பவுமே கிடைக்காம கூட போயிடும். கடவுள் உன் முன்னாடி வந்து நின்னா இன்னொரு நாள் பார்த்துக்கலாம்ன்னு விடுவியா.? இல்ல உடனே அவனை ப்ரே பண்ணுவியா.? அது போலதான் இதுவும். இவன் ராட்சசன் சாகித். இது போல சந்தர்ப்பம் இனி கிடைக்காது.. சுட்டுடு.. நம்ம நாட்டுக்காக.. நம்ம புள்ளைங்களுக்காக.. நம்ம தம்பி தங்கச்சி அம்மா அப்பாவுக்காக.‌." 

"ஓகே சார்.." என்றவன் கூட்டத்தில் புகுந்து முன்னேறி நடந்தான்.

அந்த நேரத்தில்தான் நவீனின் கார் அவ்விடத்தை விட்டு சென்றது‌.

"நான் இந்த நாட்டோட முக்கிய இடங்களில் குண்டு வச்சிருக்கேன். ஒரு இடம் இரண்டு இடம் இல்ல.. நூறு இடத்துல.. ஆனா அந்த நூறுக்கும் சேர்த்து ஒரே கன்ட்ரோல்.!" என்ற தங்சேயா தன் கையிலிருந்த செல்போனை ஒன்றை எடுத்து வெளியே காட்டினார். 

அவரை சுட வந்த சாகித் அதிர்ந்து நின்றான்.

"நீங்க என் பக்கத்துல வந்தா நான் இதை அழுத்திடுவேன்.! ஜஸ்ட் ஒன் டச்.. நூறு இடமும் சாம்பல்.!" என்றபடியே கூட்டத்தை விட்டு விலகி பின்னால் நடந்தார் தங்சேயா.

தனசேகர் தலையை பிடித்தபடி சுவரில் முட்டி நின்றான்.

"எனக்கு வர ஆத்திரத்துக்கு.!" என்று கத்தியவன் அங்கிருந்த பொருட்களை உடைக்க முயன்ற நேரத்தில் சட்டென வந்து தடுத்தான் விஷால்.

"சார்.. கன்ட்ரோல் யுவர் செல்ப்.! ரொம்ப நிதானமா முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கோம் நாம.!" என்றான்.

"அவனை விட எனக்கு விருப்பம் இல்ல விஷால்.!" 

"எங்களுக்கும்தான் சார்.. ஆனா அவனை இப்ப விட்டுதான் ஆகணும்ன்னு தோணுது.!"

"நோ.. விஷால் கொஞ்சம் நினைச்சிப் பாரு.! அவன் செத்தாலும் அந்த பாம்ஸ் வெடிக்கும். அவன் உயிரோடு இருந்தாலும் அந்த பாம்ஸ் வெடிக்கும்.!" 

"ஆனா அவன் உயிரோடு இருந்தா அந்த பாம்ஸை டிஸ்போஸ் பண்ண நமக்கு டைம் கிடைக்கும் இல்ல.?" 

"எப்படி அவனை அரெஸ்ட் பண்றது.? இல்ல அவனை எப்படி செயல்பட விடாம தடுக்குறது.?" லாவண்யா தனது சந்தேகத்தைக் கேட்டாள்.

குமரன் கைபேசி அழைப்பில் வந்தார். அவரும் கத்திவிட்டு போனை வைத்தார்.

நவீனோடு இணைக்கப்பட்டிருந்த மைக்கிலிருந்து வந்துக் கொண்டிருந்த சத்தத்தை கவனித்த விஷால் "இப்ப நவீனை என்ன செய்றது.?" என்றுக் கேட்டான்.

"அவனோடு பேசலாம்.!" என்றுப போனை எடுத்தான் தனசேகர்.

ஆனால் அதே வேளையில் நவீன் பேசும் சத்தம் அங்கிருந்த ஸ்பீக்கரில் கேட்க ஆரம்பித்தது.

"ஹலோ சார்.. நான் இங்கேயே கடற்கரை ஓரத்துல காரை நிறுத்தி இருக்கேன்.! நான் போட்டிருக்கும் ஜாக்கெட்டை கழட்ட முடியாது.. இதை எந்த விதத்திலும் அழிக்கவும் முடியாது‌. இது ரோபோடிக் மெக்கானிசம் கலந்த ஜாக்கெட்.!" என்றான் சிறு குரலில்.

போனில் அழைத்தான் தனசேகர். நவீன் ஒழித்து வைத்திருந்த போனை எடுத்து காதில் வைத்தான்.

"அதுக்கு இப்ப என்ன பண்ணலாம்ங்கற.?" என்றுக் கேட்டான்.

"இங்கேயே கடற்கரை ஓரத்துல இருக்கேன். தங்சேயா எப்ப இந்த ஜாக்கெட்டை வெடிக்க வைக்கிறாரோ அப்போது நான் மட்டும் வெடிச்சி செத்துப் போறான். சாரி சார்.. உங்க மிஷன்ல நான் செய்யப்போற குறைந்தபட்ச உதவி இது மட்டுமாதான் இருக்கப் போகுது. ரியலி சாரி!" என்றான் நவீன்.

ஆனால் தங்சேயா சிரிக்கும் ஓசை நவீனின் காதுகளில் விழுந்தது. குழப்பத்தோடு சுற்றிலும் பார்த்தான். தங்சேயா சிரிக்கும் சத்தம் தனசேகருக்கும் கூட கேட்டது.

திடீரென்று என்னவோ வெடித்தது. 

"அம்மா.!" என்று கத்தினான் சாகித்.

"ஓ மை காட்.. என்ன ஆச்சி.?" அவசரமாக கேட்டான் விஷால்‌.

சாகித் மெள்ள நிமிர்ந்துப் பார்த்தான். படை வீரர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். சாகித்தின் காலில் பலத்த அடி பட்டிருந்தது. சிரமத்தோடு கண்களை கசக்கிக் கொண்டு எதிரே பார்த்தான். தங்சேயா பேசிக் கொண்டே தன் கையிலிருந்த கன்ட்ரோலரை அழுத்தியதில் அந்த இடத்தில் குண்டு வெடித்தது. குண்டு எங்கே இருந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. அதே சமயம் இந்த குண்டு வெடிப்பில் தங்சேயாவிற்கு எதுவும் ஆகவில்லை என்றும் புரிந்தது. ஏனெனில் சாகித் பார்த்தபோது தங்சேயா தூரமாக ஓடிக் கொண்டிருந்தான்.

"பாம் வெடிச்சிருச்சி சார்.. பிளாஸ்டிக் எக்ஸ்போஸல் மாதிரி எதையோ அந்த ஆள் பாக்கெட்டிலிருந்து தூக்கிப் போட்டு பட்டனை அழுத்திட்டான்னு நினைக்கிறேன்.. சுதாரிக்காம போயிட்டோம். ரியலி சாரி.!" என்ற சாகித்துக்கு மயக்கம் வரும் போலவே இருந்தது.

தனசேகரின் கோபம் கூடிக் கொண்டே இருந்தது. அதை அதிகரிக்க செய்வது போல தங்சேயாவின் சிரிப்பு சத்தம் கேட்டது.

"முட்டாள் நவீன்.! நீ என்ன நினைச்ச.. உன்னை தனியா சாக விடுவேன்னா.? நான் வளர்த்திய ஒவ்வொரு உயிரும் பத்தாயிரம் உயிரை காவு வாங்க பிறந்தவர்கள்... உன் அண்ணனனால இந்த நாட்டுல பல லட்சம் பேர் செத்துப் போனாங்க.. கேவலம் நீ வெறும் ஐம்பது பேரை கொல்ல தயங்கிட்ட.! இனி என் தண்டனையை நீயும் சேர்ந்து அனுபவிக்கப் போற.!" என்றார் தங்சேயா.

"நவீன் உன் போனை ஸ்பீக்கர்ல போடு.!" அவசரமாக சொன்னான் விஷால்‌.

நவீன் ஸ்பீக்கரை ஆன் செய்ததும் "ஏய் முட்டாள் தங்சேயா.. உனக்குத்தான் எங்களை சரியா தெரியல.. நீ இருப்பது இப்ப எங்க மண்.! உன்னால எவ்வளவு தூரம் ஓட முடியும்.? எவ்வளவு நேரம் ஓட முடியும்.?" என்றுக் கேட்டான்.

தங்சேயா மீண்டும் சிரித்தான்.

"காவல் துறை அதிகாரி விஷால்தானே.?" எனக் கேட்டு சிரித்தவன் "உன்னை பத்தி முழு டீடெயிலும் என்கிட்ட உண்டு.! இந்த நாட்டுல உள்ள மொத்த பேரோட டேட்டாவும் என்கிட்ட உண்டு. ஏன் இந்த மொத்த உலகத்தோடதுன்னே சொல்லலாம்.! நான் கொண்ட வெறி என்னன்னு உங்களுக்கு புரியாது.! சாம்பலான இந்த உலகத்தின் மீது புது சாம்ராஜ்யம் உருவாக்க போறோம் நாங்க.! உங்களில் மிஞ்சி இருப்பவர்களுக்கு எங்களின் உலகம் சுதந்திர உலகமாக இருக்கும்.!" என்று சொன்னான்.

"மெண்டல் மான்னாரு.! இப்ப இவன் குண்டு வைக்கிற அளவுக்கு இருக்கான்னா அதுவே சுதந்திரம்தான்னு இந்த நாய்க்கு யார் புரிய வைக்கிறது.?" கோபத்தோடு கேட்டான் தனசேகர்.

"சார் நாயை இவனோடு கம்பேர் பண்ணாதிங்க.! நாய் நன்றியுள்ளது.! ஆனா இவன் பிறந்து வளர்ந்த பூமியையே அழிக்க பார்க்கறான்.!" விஷால் கடுப்போடு சொன்னான். 

"என்னவோ திட்டுங்க.! ஆனா உங்களோட எந்த தத்துவத்துக்கும் நான் சிக்க மாட்டேன்.!" என்ற தங்சேயா "டேய் நவீன், அந்த கடற்கரையோரோத்திலேயே எவ்வளவு நாள் காயலாம்ன்னு இருக்கியோ காஞ்சிட்டு இரு.! கஞ்சிக்கு செத்த பிறகு நீயா வெளியே நடப்ப.! நான் இருபது இடங்களை அந்த ஜாக்கெட் சென்சார்ல செட் பண்ணி வச்சிருக்கேன்.! நீ அந்த இருபதுல எந்த இடத்துக்கு போனாலும் பூம்தான்.! உன் அடிமை மூளையை வச்சி எவ்வளவு யோசிப்பன்னு நானும் பார்க்கறேன்.! நீ அங்கிருந்துட்டே நான் அழிக்கிற இடத்தையெல்லாம் பார்த்து அழுது சாகு.!" என்றான். அத்தோடு போனையும் துண்டித்துக் கொண்டான் தங்சேயா.

‌"மொத்த நாட்டுக்கு எமெர்ஜென்சி அலெர்ட் தந்திருக்கோம் சேகர்.! தங்சேயா சாகும் வரை நீங்க எல்லாருமே ஆன் டியூட்டிதான்.! ஒரு கேமரா விடாம கண்காணிங்க.. ஒரு போன் விடாம ரெக்கார்ட் பண்ணுங்க.. அவன் சாகணும்.!" என்றார் குமரன் போனை செய்து.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW

Post a Comment

0 Comments