Advertisement

Responsive Advertisement

மௌனம் 24

 நகரங்களின் வீதிகளில் பாம் டிடெக்டர்களோடும் ஸ்கேனர்களோடும் காக்கியுடை அணிந்தவர்கள் திரிந்துக் கொண்டிருந்தார்கள். 

பாம் கண்டறியும் மோப்ப நாய்கள் அனைத்தும் பெரிய கட்டிடங்களுக்குள்ளும், முக்கிய இடங்களிலும் ஓடிக் கொண்டிருந்தன.

"என்னவோ நடக்கிறது.!" என்று செய்திகளில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

மக்கள் லேசாக திகிலடைந்து இருந்தார்கள். 

அரசு மெத்தனமாக செயல்படுகிறது என்று எதிர் கட்சிகள் பலவும் கோசம் போட்டுக் கொண்டிருந்தன.

காவல் துறையினர், போர்க்கால வீரர்கள், வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு வீரர்கள் என்று காவலுக்கென்று இருந்த அனைத்து பிரிவு வீரர்களும் களத்தில்தான் இருந்தார்கள். 

அரை மணி நேரத்தில் நாற்பத்தியெட்டு இடங்களில் இருந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன.

குமரனுக்கு ஒரு நம்பிக்கை. தன் நாடு. தான் அறிந்த நிலம். இங்கே எப்படி தேடினால் எந்த விசயம் கிடைக்கும் என்று தெரிந்து வைத்திருந்தார். காவல் துறை அதிகாரியாக இல்லாமல் தீவிரவாதியின் மனநிலையில் சிந்தித்துப் பார்த்து பல கட்டளைகளை பிறப்பித்தார்.

குண்டுகளில் பலவும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில்தான் இருந்தன. மருத்துவமனைகளில் சிலவும், ஷாப்பிங் மால்களில் சிலவும் இருந்தன.

அதன் பிறகு கட்டுப்பாடு இன்னும் கடுமையானது. பத்து பேர் கூடும் இடங்களில் கூட எல்லோரையும் பரிசோதித்த பிறகே உள்ளே அனுப்பி வேண்டும் என்று சொல்லப்பட்டது. அனைத்து முக்கிய கட்டிடங்களின் வாசலிலும் செக்யூடிரிக்கள் இருந்தனர். அனைவரும் மிடுக்கு குறையாமல் நின்று வந்தவர்களை சோதித்து உள்ளே அனுப்பினார்கள். 

விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. நாட்டிலிருந்து வெளியே செல்லும் அனைத்து வழிப்பாதைகளும் அடைக்கப்பட்டு விட்டன. கடல் படை வீரர்களும் வழக்கத்தை விட அதிகமாக ரோந்துச் சென்றுக் கொண்டு இருந்தார்கள்.

சாலைகளில் காவல்துறை வாகனங்கள் சென்றுக் கொண்டிருப்பதும் வந்துக் கொண்டிருப்பதுவுமாகவே இருந்தது.

தங்சேயா கோபத்தோடு அந்த மணற்வெளியில் காற்றை குத்திக் கொண்டிருந்தார். நவீன் இப்படி காலை வாரி விடுவான் என்று அவர் நினைக்கவேயில்லை.

நூறு இடங்களில் உள்ள வெடிகுண்டுகளையும் வெடிக்க வைப்பதற்கான ரிமோட் நவீன் அணிந்திருந்த ஜாக்கெட்டில்தான் இருந்தது. அவர் குறித்து வைத்துள்ள இருபது இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை அவன் நெருங்குகையில் அவன் வெடிப்பான். அவனோடு சேர்ந்து அந்த நூறு இடங்களும் வெடிக்கும். இதுதான் அவர் போட்டிருந்த கணக்கு. ஆனால் நவீன் அந்த இருபது இடங்களில் ஒன்றை தொடும் முன்பே அத்தனை வெடிகுண்டுகளும் எடுக்கப்பட்டு விடும் போல இருந்தது. அவருக்கு கோபம். அழிக்க மாட்டேன் என்று முரண்டு பிடித்தவனை வைத்தே இந்த நாட்டில் ஒரு பாதியை அழிக்க வேண்டும் என்று வெறி. பிறகு 'பார்த்தாயா, நீயேதான் இவர்களை கொன்றாய்.!' என்று நவீனின் கல்லறை முன்பு நின்று கொக்கரிக்க வேண்டும் என்று பேராவல். 

நவீன் எப்படி தனசேகரோடு கூட்டு சேர்ந்தான் என்று அவருக்கு விளங்கவே இல்லை. அவரை பொறுத்தவரை நவீனுடையது ஓர் அடிமை மூளை. அவர் சொல்வதை செய்ய கூடிய மனித இயந்திரம் அவன். அவ்வளவே! இவனுக்கு எப்படி புரட்சி எண்ணங்கள் என்று குழம்பினார். இந்த உலகத்தை பற்றி அத்தனை கூறியும் இந்த பாழும் கடலில் கலந்து விட்டானே என்று நினைத்து கூட சில நேரங்களில் கவலைப்பட்டார்.

தனது போனை எடுத்து வேண்டப்பட்ட ஒருவனுக்கு போன் செய்தார். ஆனால் தொடர்பு கிடைக்காமல் போனது. மீண்டும் மீண்டும் முயற்சித்து தோற்றவர் கோபத்தோடு போனை மணலில் எறிந்தார்.

நவீன் அந்த காரின் உள்ளேயே அமர்ந்திருந்தான்‌. உப்புக் காற்று நுரையீரலில் நிறைந்தது. தனது ஜாக்கெட்டை பார்த்துக் கொண்டான். 

தயங்கிவிட்டு ரதிக்கு கைபேசியில் அழைத்தான்.

"ஹலோ.." என்றாள்‌.

சில நொடிகள் மௌனமாய் இருந்தவன் "ரூபியை பத்திரமா அவளோட பேமிலிக்கிட்ட ஒப்படைச்சிடுவ இல்ல.?" என்றுக் கேட்டான்.

"ம்.. விசாரணை எல்லாம் முடிஞ்ச பிறகு சேர்த்துடுவோம்.! ஏன்.?"

"ரதி.." 

"ம்.."

"என் உடம்போடு பாம் கட்டியிருக்கு.. நான் சீக்கிரமே செத்துடுவேன்.!" 

"எ.. என்ன சொன்ன.?" தடுமாற்றமாக கேட்டாள்.

"ஆனா என்னால யாரும் சாக மாட்டாங்க.! நான் தனியாதான் இருக்கேன். தனியாதான் சாக போறேன்.!" 

"முட்டாள் என்ன சொல்ற.? நீ நல்லவனாகிட்டன்னு நினைச்சேன். இப்ப ஏன் பாமை கட்டி வச்சிட்டு இருக்க.?" கோபத்தோடு கேட்டவளை கண்டு சிரித்தவன் "சாரிம்மா.! இது நான் ஆசைப்படல. தங்சேயா தயாரிச்ச ஜாக்கெட். இதை நான் போட்டுக்கிட்டா அதுக்கப்புறம் அவர் ரூபியை தொட மாட்டேன்னு சொன்னாரு.!" என்றான்.

"கேவலமா இருக்கு. நீயெல்லாம் நிஜமாவே தீவிரவாதியா.?" 

"இல்ல.. ஓர் அடிமை நாய் ரதி. அடுத்தவங்க உயிரை எடுக்கணும்ன்னு எல்லோரும் விரும்புவது கிடையாது. யாரோ ஒருத்தன் மண்டையை சலவை பண்ணிதானே இங்கே இத்தனை பேரும் புத்தியில்லாம இருக்காங்க.!" என்றவன் "நான் இப்படியே சாக போறேன் ரதி.. நீ யார்ன்னு கூட எனக்கு நிஜமா தெரியாது.. ஆனா உன் அருகாமையில் ஏதோ ஒரு கனெக்சனை உணருறேன். நான் கனவு வாழ்க்கை வாழ்பவன் கிடையாது. ஆனாலும்.. ஐ.. ஐ லைக் யூ.! சும்மா ஒரு ஈர்ப்பு. அதுக்கு மேல வேற எதுவும் கிடையாது. உனக்கு என் கண்கள் பிடிச்சிருக்குன்னு தெரியும். ஆனா நான் வெடிச்சி சாக போறேன் ரதி. என் கண்களை கூட என்னால தானம் செய்ய முடியாது.!" என்றான் கரகரத்த குரலில்.

ரதிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவளின் விழிகளில் ஈரம் படர்ந்தது.

"நான் மறுபடியும் பிறந்தா உன்னை மீட் பண்ணனும் ரதி.!" என்றவனின் சிந்தையை ஜன்னல் தட்டப்படும் சத்தம் கலைத்தது‌.

நவீன் காரின் கதவு ஜன்னலை இறக்கினான்.

"ஏன்டாப்பா சாமி, உனக்கு இவ்வளவு எமோசனல்.? வெளியே வாடாப்பா.! உன் ஜாக்கெட்டை கழட்டணும்.!" என்றான் காரின் அருகே நின்றிருந்த விஷால்.

நவீன் ஆச்சரியத்தோடு கீழே இறங்கினான். வாழ்க்கை இந்த நொடியோடு முடிகிறது என்று நினைத்திருந்தவன் அவன். 

"குண்டு வைக்கிறது, சுடுறது, நாட்டை அழிக்கிறது, மக்களை கொல்லுறது தவிர வேற எதுக்குமே உங்க மூளையை யூஸ் பண்ண மாட்டிங்களா.? சுத்தமான மாட்டு மூளைடா உங்களுக்கு.!" என்ற விஷால் நவீனை பிடித்து அங்கிருந்த இரு வீரர்களிடம் ஒப்படைத்தான்.

வீரர்கள் இருவரும் அவனின் ஜாக்கெட்டை பரிசோதிக்க ஆரம்பித்தனர்.

"தங்சேயாவுக்கு கேட்டிருக்கும்.!" கவலையோடு சொன்னான் நவீன்.

"அவனுக்கு கேட்காது.. இந்த நாட்டோட செல்போன் சிக்னல்ஸ் எல்லாம் நிறுத்தியாச்சி.. ஸ்பெஷல் நம்பர்ஸ்ல உள்ள முப்பதாயிரம் பேரால மட்டும்தான் இப்போதைக்கு போன் யூஸ் பண்ணி கால் பேச முடியும்.! அந்த ஸ்பெஷல் நம்பர்ல உன் நம்பரும் இருக்கு!" என்ற விஷால் அந்த காரை ஆராய்ந்தான். 

"உன் தலைவன் எங்க ஆர்மி போர்ஸை அழிச்சிருக்கான்ப்பா.. முப்பத்தியிரண்டு பேர் இப்ப ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க.!" 

"சாரி சார்.. என்னாலதான் எல்லாம்.!" என்றவனிடம் மறுப்பாக தலையசைத்தான் விஷால்.

"எல்லாம் அந்த ரதி பொண்ணால.!" 

நவீனின் கையிலிருந்த போனின் மூலம் விஷால் சொன்னதைக் கேட்ட ரதி அதிர்ந்துப் போனாள். 

'நானா.?' என அவள் கேட்க இருந்த நேரத்தில் "அவதான் ஸ்டெல்லாவை போட்டா.. அதனாலதான் தங்சேயா இங்கே வந்தான். அவன் இங்கே வந்து ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டான். அவன் இப்ப கூண்டுக்குள்ள மாட்டிய பூனை. அவனை எங்களால பிடிக்க முடியாதுன்னு ரொம்ப கேவலமா நினைச்சிட்டான்.!" என்றுச் சொன்னான் விஷால்.

நவீன் குழப்பமாக இருந்தான்.

"வல்லவனுக்கு வல்லவன் வையகத்துல உண்டு ராசா.. உன் ஜாக்கெட்டை கழட்டும் அறிவும் எங்க விஞ்ஞானத்துக்கு உண்டு.!" என்று விஷால் சொல்லி முடித்த நேரத்தில் அவனின் ஜாக்கெட்டை கழட்டியே விட்டார்கள் அந்த இரு வீரர்களும்.

"சிம்பிள்தான் சார்.. பயம்தான் முக்கிய காரணியா இருந்திருக்கு.!" என்றவர்கள் அந்த ஜாக்கெட்டில் இருந்த வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் முயற்சியில் இறங்கினார்கள்.

"என்னால நம்பவே முடியல.!" என்றவனை அழைத்துக் கொண்டு தனது காருக்கு நடந்தான் விஷால்.

"தங்சேயாவையும் நாங்க நெருங்கிக்கிட்டு இருக்கோம்.!" என்றான் காரை இயக்கியபடி.

"ஆனா எப்படி சார்?" 

"அவன் இந்த வட்டாரத்தை விட்டு வெளியே போக முடியாது நவீன். நாங்க ஒன்னும் முட்டாள்கள் இல்லை.. போன முறை நாங்க வீழ காரணம் கூட பலமில்லாம போனதால் இல்ல.. துரோகிகளால் மட்டும்தான்.! இந்த முறை மொத்த துரோகிகளுக்கும் பெரிய வலையா விரிச்சிட்டோம்.." என்றவன் இடது பக்கத்தில் காரை திருப்பினான். அரை கிலோ மீட்டர் தாண்டி இருப்பார்கள். அங்கே தனசேகர் தன் காரின் மீது சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான்.

நவீன் குழப்பத்தோடு கீழிறங்கினான்.

"வா நவீன்.!" என்று அழைத்த தனசேகர் சூயிங்கம் ஒன்றை அவனிடம் நீட்டினான்.

வேண்டாமென்று தலையசைத்தான் நவீன்.

"உன் பாஸ்க்கு இந்த மண்ணுலதான் உயிரை விடணுமாம்.!" கேலியாக சொன்னான் அவன்.

நவீன் எட்டிப் பார்த்தான். காரை தாண்டி இருந்த இரு மரங்களை பார்த்தான். நடந்தான். மரங்களை தாண்டி பெரும் பள்ளம் இருந்தது. கீழே பார்த்தான். தங்சேயா நின்றிருந்தார். அவரை சுற்றி பத்து மனிதர்கள் நின்றிருந்தார்கள்.

"எ.. என்ன பண்ணப் போறோம்.?" தனசேகரை திரும்பிப் பார்த்துக் கேட்டான் நவீன்.

"அவங்க எல்லோரையும் கொல்ல போறோம்.!" என்றவன் சூயிங்கத்தை மென்றபடியே அருகே வந்தான்.

"இந்த நாட்டுல உள்ளவங்க உதவி செய்வாங்கன்னு நம்பி அவன் இங்கே வந்திருக்க கூடாது. இந்தியர்கள் ரொம்ப வித்தியாசமானவங்க. அவங்க மனசு எப்ப எப்படி மாறும்ன்னு யாருக்குமே தெரியாது.!" 

தனசேகர் சொன்னது அவனுக்குப் புரியவில்லை.

"அவன் பக்கமிருந்த ஏழு பேர் நம்மகிட்ட சரண்.!" 

"அந்த மந்திரி.!" குழப்பமாக கேட்டான்.

"அந்த பைத்தியக்காரனும்தான்.!" 

"ஆனா எப்படி.?" 

"சொன்னா சிரிப்ப.. நேத்து பாரதியார் பிறந்தநாளுக்கு பிரபல சேனல் ஒன்னுல பட்டிமன்றம் நடந்திருக்கு. மனிதமா சுதந்திரமான்னு தலைப்பாம்.!" 

"அந்த தலைப்பே வித்தியாசம்தான் சார்.. மனிதமும் சுதந்திரமும் எதிரெதிர் விசயம் கிடையாது.!" விஷால் இடை புகுந்துச் சொன்னான்.

"யெஸ்.. ஆனா இரண்டில் எது மனிதனுக்கு ரொம்ப முக்கியம்ங்கற ரீதியில் பட்டிமன்றம் நடந்திருக்கு.. அதுல ஸ்கூல் பசங்கதான் கலந்து பேசியிருக்காங்க.! கொஞ்சம் சென்சிடிவ்வாவே பேசிட்டாங்கன்னு நினைக்கிறேன்.. இல்லன்னா இவனுங்க மாறுவாங்களா.?" தங்சேயாவை பார்த்துக் கொண்டே சொன்னான் தனசேகர்.

நவீனுக்கு உண்மையிலேயே குழப்பமாக இருந்தது. ஒரு பட்டிமன்றம் எப்படி இவர்களின் மனதை மாற்றும் என்று அவனுக்கு சுத்தமாக புரியவில்லை.

"இந்த நாட்டோட வரலாறையும், துரோகத்தால் மட்டுமே மாண்ட அரசர்களின் வீரத்தையும் கேட்டு வளர்ந்த ஒரு இந்தியன் தீவிரவாதிகளோடு கூட்டு வைக்கிறான்னா அதுக்கான காரணம் அவன் முட்டாளா இருக்கணும். இல்லன்னா அவனுக்கு மூளை சலவை செய்யப்பட்டு இருக்கணும். கேவலம் தீவிரவாதிங்க இரண்டு பேர் மூளை சலவை செஞ்சதும் இவங்களும் அவங்களை போல யோசிக்கிறாங்கன்னா அப்பவே புரிஞ்சிக்கணும், அவங்களுக்கு மூளை வீக்குன்னு. அந்த வீக்கான மூளையை மீண்டும் சரி செய்ய ஒரே ஒரு பாரதி பாட்டே போதும்‌. ஆனா பசங்க பட்டிமன்றத்துல வெளுத்து வாங்கிட்டாங்க.. பலன் இவனுங்க சரணைஞ்சிட்டாங்க.!" 

நவீன் தலையை கீறிக் கொண்டான்.

"நீ எப்படி இப்படி தீவிரவாதியா மாறின நவீன்.?"

"தங்சேயா எங்களுக்கு சோறு போட்டாரு.. இந்த உலகமே தப்பா இருக்குன்னு சொன்னாரு.!"

"அதேதான் இங்கேயும். இந்த உலகம் நல்லதுன்னு பசங்க சொல்லியிருக்காங்க.. ஒரு கிளாஸ்ல பாதி தண்ணீர் இருக்கா, இல்ல பாதி கிளாஸ் காலியா இருக்கான்னு பார்க்கிறது அவங்கவங்க கண்ணோட்டம்தான்.. பாசிடிவ்வை பரப்பிக்கிட்டே இருக்கணும். அப்பதான் இவனுங்களை போல மிருக மூளையெல்லாம் கரெக்டா இருக்கும்.! இதெல்லாம் ஒரு விதி.. அறிவியல் விதி போல இதுவும் ஒரு கோட்பாட்டு விதி.!" விஷால் தன் பங்கிற்கு சொன்னான்.

தங்சேயா பைப் பிடிப்பதை வெறித்தபடி நின்றிருந்த நவீனுக்கு தனது மூளையைதான் முதலில் ரிப்ரெஸ் செய்ய வேண்டும் போல இருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW

Post a Comment

0 Comments