Advertisement

Responsive Advertisement

மௌனம் 25

 ரஞ்சித் நல்ல தூக்கத்தில் இருந்தான். எங்கோ சைரன் சத்தம் கேட்டது. அவனின் தூக்கம் சிறிது கலைந்தது. உச்சு கொட்டியபடி சுவர் பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டவன் பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டான். ஆனால் அடுத்த அறுபதாம் நொடியில் அந்த போர்வை அவனிடமிருந்து எடுக்கப்பட்டது.

சட்டென்று தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான்‌. எதிரில் காவல் துறையினர் நால்வர் இருந்தனர். ரஞ்சித்தின் முகத்தில் நிழல் விழுந்தது.

"யார் நீங்க.?" என்றான். அவனின் குரலில் இருந்த பயம் அங்கிருந்த காவலர்களுக்கு சிரிப்பை தந்தது.

"நாங்க போலிஸ்.. அரசு அதிகாரியா இருக்கும் உனக்கு இது கூடவா உனக்கு தெரியல.?" கேலியாக கேட்டான் ஒருவன்.

"நான்.. நான் எந்த தப்பும் பண்ணல.." என்றவனின் பனியனை பற்றி அவனை எழுப்பி நிறுத்தினான் மற்றொருவன்.

"நீ தப்பு செஞ்சியான்னு நாங்க கேட்கவே இல்லயே.!" என்றான் கிண்டலோடு.

ரஞ்சித்திற்கு உடம்பு மொத்தமும் வியர்த்து ஊற்றியது. 

"இந்த நாட்டுல மொத்தம் எத்தனை இடத்துல சி.சி.டி‌.வி கேமரா இருக்கு தெரியுமா.?" எனக் கேட்டபடியே அவனை கட்டிலை விட்டு கீழிறக்கிய ஒருவன் அவனை அழைத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

"அரசாங்கத்தை தாண்டி தொலைபேசி, அலைபேசி உரையாடல்களை ஒட்டும் கேட்கும் அளவிற்கு திறமை உள்ள இளைஞர்கள் எத்தனை ஆயிரம் பேர் இங்கே இருக்காங்கன்னு தெரியுமா.?" என கேட்ட இன்னொருத்தன் தங்களின் முன்னால் வந்து நின்ற ரஞ்சித்தின் மனைவியை கேள்வியாக பார்த்தான்.

"என்னாச்சி.. இன்கம்டேக்ஸ் ரைடா.?" என்றாள் அவள் அதிர்ச்சியோடு.

"இல்ல மேடம்.. உங்க புருசனை தேச துரோக வழக்கின் கீழ் கைது செய்றோம்.. ஆறு மாசத்துக்கு முன்னாடி இந்த நாட்டுல வெடிச்ச குண்டுகளை இங்கே பதுக்கி வைக்க உதவி செஞ்சதே இவன்தான்னு இப்பதான் தெரிஞ்சிருக்கு.!" 

ரஞ்சித்தின் மனைவி அதிர்ச்சியோடு தன் வாயை மூடினாள்.

"ரஞ்சி.. நம்ம பொண்ணு சாக நீதான் காரணமா.?" என்றாள் போலிசார் சொன்னதை நம்ப முடியாமல்.

"பானும்மா.. இல்ல.. நம்ம பொண்ணு சாக நான் காரணம் இல்ல.. அந்த சூப்பர் மார்கெட்டுக்கு நீயோ பொண்ணோ போக வேண்டாம்ன்னு நான் முன்னாடியே எச்சரிச்சேன். ஆனா நீதான் கேட்கல.. அதுவும் இல்லாம நம்ம பொண்ணு இல்லன்னா என்ன.. இந்த உலகம் சுத்தமாகுது. அதுக்கு நம்ம பொண்ணோட ஆன்ம சக்தியும் கலந்திருக்கு.!" என்றான் ரஞ்சித்.

காவலன் ஒருவன் தன் சக காவலனை பார்த்தான்.

"நாட்டுல இவனை போல கிறுக்கு எத்தனையோ.!?" 

சக காவலனும் கவலையோடு தலையை அசைத்தான்.

"இதுங்க எல்லாம் பூமியிலயே இருக்க வேண்டிய பிறவி இல்ல.!" என்றான் அவன்‌.

அவர்கள் நால்வரும் ரஞ்சித்தை கொண்டு வந்து காரில் ஏற்றினார்கள்.

"என் மேல நீங்க எந்த ஆக்சனும் எடுக்க முடியாது.. எண்ணி அரை மணி நேரத்துல வெளியே வர போறேன் நான்.!" என்றான் ரஞ்சித். அதை சமயத்தில் ரஞ்சித்தின் வீடு டமார் என்று வெடித்து சிதறியது. வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து விழுந்தது ஒரு சிலிண்டர் உருளை.

ரஞ்சித் பேயடித்தார் போல இருந்தான்.

"உன் மகளோட சாவுக்கு நீ காரணமாகியிருக்க.. உன்னை நீ மன்னிச்சாலும் உன் பொண்டாட்டி மன்னிக்கல போல.!" என்ற டிரைவர் காரை கிளப்பினான்.

"என் பானு.." ஜன்னலை நோக்கி கையை காட்டினான் ரஞ்சித்.

"பையர் ஸ்டேசனுக்கு போன் பண்ணியிருக்கோம். வருவாங்க.. நீ எங்களோடு வா.!" 

ஓடிக் கொண்டிருந்த கார் ஒரு மேம்பாலத்தின் மீது வந்து நின்றது. காரின் கதவை திறந்துக் கொண்டு இறங்கினார்கள் அந்த நான்கு காவலர்களும்.

"இறங்கி வா மச்சி.!" என்று ரஞ்சித்துக்கும் கதவை திறந்து விட்டான் ஒருவன்.

ரஞ்சித் குழப்பத்தோடு கீழிறங்கினான். அவனின் கழுத்தை பற்றினான் ஒருவன். மற்றொருவன் தன் கைகடிக்காரத்தை பார்த்தான். பின்னர் பாலத்தின் கீழே இருந்த தொடர்வண்டி பாதையை பார்த்தான்.

தொடர்வண்டியின் சத்தம் மெல்ல காதில் விழுந்தது. 

"நவ்.!" என்றான்.

ரஞ்சித்தின் கழுத்தைப் பற்றிக் கொண்டிருந்தவன் அவனை தள்ளிக் கொண்டு பாலத்தின் ஓரத்திற்கு வந்தான்.

"என்ன.. என்ன பண்ண போறி" ரஞ்சித் முழுதாய் சொல்லி முடிக்கும் முன்பு அவனை தொடர்வண்டியின் பாதையில் எறிந்து விட்டான் அவனின் கழுத்தை பற்றிக் கொண்டிருந்தவன்.

"கேஸ் நம்பர் தெர்ட்டி ஒன் குளோஸ்.." என்றான்.

போனை எடுத்தான் ஒருத்தன். வீடியோவை ஓட விட்டான்.

மால் ஒன்றின் வாசலில் வெடிகுண்டு பையை விட்டுவிட்டு நகர்ந்த ஒருவன் அந்த வீடியோவில் தெரிந்தான். அவனைப் பற்றிய விவரங்கள் திரையின் மீது ஓடியது.

"நெக்ஸ்ட் டார்கெட்.. இங்கிருந்து முப்பது கிலோமீட்டர்.. பெயர் சாந்து.. வயசு நாற்பத்தியிரண்டு.!" என்றான் அவன்.

"போகலாம்.!" என்றபடி காரில் ஏறினார்கள் அனைவரும்.

அது ஒரு இளைஞர் இயக்கம். நாடு முழுக்க பரவி இருந்த மறைமுக இளைஞர் இயக்கம். சமூக பணிகள் பலவும் செய்துக் கொண்டிருப்பவர்கள். அந்த இளைஞர் இயக்கத்தில் ரதியும் இருந்ததுதான் விசயத்தை இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டு விட்டது. 

நடக்கும் விசயங்களை பற்றி ஒரு வாரம் முன்பே சொல்லி விட்டாள் அவள். அந்த நாளில் இருந்தே நாட்டின் முக்கிய கேமராக்கள், சந்தேகத்திற்கு உரியவர்களின் போன்கள் என்று கண்காணிக்கப்பட்டது.

அவர்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஆனால் அகிம்சையை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் அரசை விட வேகமாக ஓடிக் கொண்டிருந்தது இவர்களின் மூளைகள். அதனால்தான் இந்த தனி படை. 

இவர்களை பற்றி அரசாங்கத்திற்கு தெரியாது. ஆனால் தீவிரவாதிகள் யார் யாரென்று இவர்களுக்கு தெரியும். இந்த இரண்டு நாட்களில் மட்டும் இவர்களால் முந்நூத்தி எழுபது பேர் இறந்துப் போயுள்ளார்கள்‌. 

சாதி மதம் இனம் கடந்து மக்களை நேசிக்கும் இளைஞர்களின் படை இது. காஷ்மீர் முதல் குமரி வரை பரவியிருக்கும் இளைஞர் படை நரம்புகள் இவர்கள். இவர்களின் கூட்டத்தில் பத்து சதவீத பேருக்குதான் இந்த விசயமே தெரிந்திருந்து. விசயம் மொத்த பேருக்கும் தெரிந்தால் நாடே அல்லோகலப்பட்டு விடும் என்பதும் உண்மைதான்.

ரூபியின் அருகில் சிலையாய் அமர்ந்திருந்தாள் ரதி. நவீன் சொன்னதை மனதுக்குள் அசைப்போட்டுக் கொண்டிருந்தாள்‌.  எப்படி அவனை ஏற்றுக் கொள்வது என்று அவளுக்குப் புரியவில்லை. அவனுக்கு சிறை கிடைக்குமா இல்லை நாடு கடத்தல் கிடைக்குமா என்றே அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் அவன் உயிரோடு இருந்ததே அவளுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது‌. அவன் ரூபி மீது வைத்திருக்கும் பாசம் அவளை பிரமிக்க வைத்தது. அவன் தன்னிடம் பேசியது கூட அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

பெரும் வியாபாரி அவன். சொகுசு பேருந்து ஒன்றின் கடைசி சீட்டில் அமர்ந்திருந்தான். அந்த பேருந்தில் ஏறி அமர்ந்து அரை மணி நேரம் கடந்து விட்டிருந்தது.

"பஸ் கிளம்பாதுன்னு எத்தனை முறை சொல்றது.? கீழே இறங்குங்க.!" என்றான் அந்த பேருந்தின் ஓட்டுநன்.

"எவ்வளவு வேணாலும் பணம் தரேன்.!" என்று இரண்டாயிரம் நோட்டு கட்டு ஒன்றை எடுத்து சீட்டில் வைத்தான்.

"இரண்டு நிமிசம் இரு.. வரேன்.!" என்றவன் வெளியே நடந்தான். தன் போனை எடுத்தான்.

"மச்சி.. இங்கே சந்தேகப்படும்படியா ஒருத்தன் இருக்கான்.." என்றான் போனில்.

"நீ பிக்சர் அனுப்பு.!" எதிரில் இருந்தவன் சொன்னதும் மறைவாய் நின்று பேருந்தில் இருந்தவனை புகைப்படம் எடுத்தான் அந்த ஓட்டுநன்.

"அஞ்சி நிமிசம்.!" என்ற எதிரில் இருந்தவன் மூன்றாம் நிமிடத்திலேயே "போட்டோ மேட்ச் முடிஞ்சிடுச்சி.. அவன் நம்ம நாட்டுக்கு வந்த குட்டி தீவிரவாதி ஒருத்தனுக்கு தன்னோட ஹோட்டல்ல ரூம் தந்திருக்கான். இவன் அக்கவுண்ட்ல இருந்து ஐம்பது கோடி ரூபா வெளியே போயிருக்கு. ஆனா இவனுக்கு இருக்கற கடனுக்கு அஞ்சி கோடி கூட இவனால் அரேஞ் பண்ண முடியாது.. இவன் ரொம்ப டேஞ்சர்.. நான் செத்தாலும் பரவால்ல நாடு அழியணும்ன்னு நினைக்கிற கோஷ்டி.. அவனை முடிச்சிடு வர்மா.!" என்றான் எதிரில் இருந்தவன்.

அடுத்த இருபதாம் நிமிடத்தில் அந்த பேருந்து மலை பாதை ஒன்றின் மீதிருந்து கீழே உருண்டுக் கொண்டிருந்தது. வர்மா தனது கையிலிருந்த பெட்டியை பார்த்தான். பேருந்தோடு சேர்ந்து இறந்தவனின் பெட்டிதான்.

"புது பஸ் வாங்கியாகணும்.!" என்றபடியே அந்த கரும் பாதையில் தன் கண்களில் வெளிச்சம் வைத்து நடந்தான்.

அந்த அறையில் ஐம்பது பேர் இருந்தார்கள்.

"இப்படி ஒரு சிக்கல் வரும்ன்னு நினைக்கவேயில்ல.! நம்மால எங்கேயும் வெளியே போகவே முடியல. ஒரு பஸ், கார் ஓடல‌‌.. நம்ம காரை ஓட்டிட்டு போன ஆறு பேருமே இன்னும் திரும்பி வரல.. ஆறு பேரும் போன திசை வேற.. ஆனாலும் வரல.. நம்மை சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியல.. தங்சேயா சொன்னார்ன்னு வந்தோம். ஆனா அவரே இப்ப போனை எடுக்க மாட்டேங்கிறாரு.." என்று தலையை சொறிந்தான் ஒருவன்.

அதே வேளையில் அவனின் முன்னால் நின்றிருந்தவனின் நெற்றியில் வந்து துளைத்தது ஒரு குண்டு. குழப்பத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தார்கள் அனைவரும். அதே வேளையில் அந்த அறையின் உள்ளே வந்து பொத்துக் கொண்டு நின்றது ஒரு ராக்கெட்.

"நோ.." அவர்கள் ஓடும் முன் அந்த ராக்கெட் வெடித்து சிதறியது. அந்த அறையில் இருந்த அத்தனை பேரும் அடுத்த நிமிடத்தில் உடல் சிதறி இறந்துப் போனார்கள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW

Post a Comment

0 Comments