Advertisement

Responsive Advertisement

மௌனம் 28

 பூட்டியிருந்த அந்த மண்டபத்தை திறந்து உள்ளே சென்றார் குமரன். 

"சார் எங்களை ஏன் பிடிச்சி வச்சிருக்கிங்க?" அந்த இளைஞர்கள் கூட்டத்தில் இருந்து முன்னால் வந்து நின்றுக் கேட்டான் ஒருவன்.

குமரனின் பின்னால் வந்த தனசேகர் "உங்களுக்கு ஏதுடா பாம்? உங்களுக்கு ஏதுடா கன்? உங்களால எப்படிடா எங்க சிஸ்டத்தை கூட ஹேக் பண்ண முடிஞ்சது?" என்றான் ஆச்சரியமாக.

ரதி அந்த கூட்டத்தின் கடைசியில் நின்றிருந்தாள்.

"என்னை ஏன்டா இங்கே கூட்டி வந்திருக்காங்க? நான் எதுவும் செய்யலையே!" என்றாள் கவலையாக.

"யாருக்கு தெரியும். நம்ம இளைஞர் கூட்டத்துல உள்ள எல்லோருடைய தகவலையும் இவங்க திரட்டி இருக்காங்க." என்றான் அவளின் அருகே இருந்தவன்.

"உங்களை போல இளைஞர் படையை பார்க்கும்போது சந்தோசமா இருக்கு. ஆனா கொஞ்சம் பயமாவும் இருக்கு. நாங்க செய்ய வேண்டிய வேலைகளில் நீங்க ஏன் குறுக்கிடுறிங்க?" என்றார் குமரன்.

இளைஞன் ஒருவன் முன்னால் வந்தான். "அப்படின்னா இங்கே என்ன நடந்தாலும் நாங்க கை கட்டி வேடிக்கை பார்க்கணும். அப்படிதானே?" என்றுக் கேட்டான்.

"நாங்க இருக்கோம்டா!" என்றான் விஷால் ஒரு புறமிருந்து.

"நீங்க இருந்துட்டுதான் இருக்கிங்க சார். ஆனா நாடு நல்லபடியே இருக்கணுமே! நாங்க பெருசா எதுவும் செய்யல. வெறிநாயை அப்புற படுத்தும் அதே மனநிலையோடு அந்த தீவிரவாதிகளை வெளியே அனுப்பி இருக்கோம். நீங்க எங்களை பாராட்டலன்னாலும் பரவால்ல.. வேற ஏதாவது பண்ணி பசங்க கோபத்தை கிளறி விடாதிங்க. அடக்குமுறைதான் எழுச்சிக்கான முதல் படியே!" என்றான் ஒருவன்.

குமரனும் தனசேகரும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"இன்னொரு நாள் பார்த்துகலாம் சார். சும்மா வார்ன் பண்ணி விட்டுடலாம்!" என்றான் தனசேகர்.

"நீங்க செஞ்சது ரொம்ப தப்பு. ஆனாலும் முதல் தடவை தப்பு பண்ணியிருக்கிங்கன்னு வெளியே யாருக்கும் சொல்லாம உங்களை மன்னிச்சி விடுறோம். ஆனா இன்னொரு முறை நீங்க எங்க கட்டுப்பாட்டை தாண்டிப் போக டிரை பண்ணா அப்புறம் நாங்க வேற மாதிரி நடந்துக்க வேண்டி வரும். இதை லாஸ்ட் வார்னிங்கா நினைச்சி பத்திரமா இருந்துக்கங்க!" என்ற குமரன் கதவை திறந்து விட்டார்.

"இவங்க சொன்னா கேட்டுப்போமா? இவங்க சரியா நடக்கலன்னா நாம இப்படிதான் நடந்தாகணும்!" என்றபடியே வெளியே நடந்தான் ஒருவன்.

ரதியும் அந்த கூட்டத்தோடு கலந்து வெளியே செல்ல இருந்த நேரத்தில் விஷால் அவளின் கையை பற்றி இழுத்து நிறுத்தினான். ரதியோடு துணை இருந்தவன் விஷாலை நோக்கி வந்தான்.

"நான் இவங்களோடு பர்சனலா பேச வேண்டி இருக்கு!" விஷால் சொன்னது கேட்டு தயக்கமாக அவன் ரதியை பார்த்தான்.

"நான் வரேன்.‌ நீ போ!" என்றவளிடம் தலையசைத்து விட்டு வெளியே நடந்தான்.

விஷாலை கேள்வியாக பார்த்தாள் ரதி.

"பத்திரிக்கைக்காரிக்கிட்ட எந்த ரகசியமும் நிற்காதுன்னு ப்ரூஃப் பண்ணியிருக்கிங்க!" என்றான்.

ரதி உதட்டை கடித்தபடி சுவற்றை வெறித்தாள்.

"இந்த விசயத்துக்கு பத்திரிக்கைக்காரியா இருக்க வேண்டிய அவசியம் இல்ல சார். சாதாரண பொது ஜனமா இருந்தா போதும். இது உங்களை காப்பாத்த செஞ்ச போர் இல்ல‌. எங்களை காப்பாத்திக்க நாங்களே செஞ்ச போர்!" 

குமரன் அவளை அளந்தார். நெடிந்து வளர்ந்து ஒடிசலாக இருந்தாள். கண்களில் கோபம் இருந்தது. இம்மாதிரியான பெண்கள் பார்த்த நொடியில் அவரை ஈர்த்து விடுகின்றனர்.

"ஆனா உங்களால நம்ம நாட்டோட சட்ட ஒழுங்கு கெட்டு போயிருக்கும். தெரியுமா?" என்றார்.

கடுப்போடு சிரித்தவள் "இந்த நாட்டுல எங்களை போல சாதாரண குடிமக்களை அழிக்கணும்ன்னு நினைக்கற கெட்ட சக்திகள் இருக்காங்க. சொந்த நாட்டுக்கு துரோகம் செய்வதை கூட பக்கத்துக் கடையில் பணியாரம் வாங்கி சாப்பிடுற மாதிரி செஞ்சிட்டு இருக்காங்க. அவங்களை நீங்க அழிச்சிருந்தா நாங்க ஏன் தலை தூக்க போறோம்? இது எங்களுக்கான லாஸ்ட் வார்னிங் இல்ல‌. உங்களுக்கானது. நீங்க சரியா இருங்க. நாங்களும் சரியா இருப்போம்!" என்றவள் விஷால் பக்கம் திரும்பினாள். "வேற ஏதாவது விசாரிக்க வேண்டி இருக்கா?" என்றாள்.

"ஸ்டெல்லாவை எப்படி சுட்ட?" தனசேகர் அவளருகே வந்து நின்றுக் கேட்டான்‌.

"அவங்க வீட்டுக்கு ஒயரிங் ரிப்பேர் பண்ண வந்திருப்பதா சொல்லி உள்ளே போனேன். அவன் பக்கத்துல வந்த அடுத்த செகண்டே சுட்டுட்டேன். அவன் மட்டுமில்ல அவனை போல எத்தனை பேர் இருந்தாலும் அதேதான். ஏனா அவனுக்கு வரலாறு இல்ல. எனக்கு இருக்கு. நான் பிறக்கும் முன்னால் இந்த மண்ணை ஆண்ட ராஜாக்கள் எத்தனை போரை சந்திச்சாங்கன்னு எங்களுக்குத் தெரியும். எங்க பாட்டனும், பூட்டனும் கத்தி கடப்பாரையிலிருந்து, நாட்டுவெடி வரை பழகியிருந்தவங்கதான். அவங்க ஜீன் எல்லாம் ரத்தத்துல இருக்கு சார். விளக்கை ஏத்தி வைக்க ஒரு ஆள் தேவைப்படுற மாதிரி எங்களோட கோபத்தை வெளிக் கொண்டு வர இந்த மாதிரி விசயங்கள் தேவைப்படுது. நான் முட்டாளா கூட இருக்கலாம். ஆனாலும் ரொம்ப கர்வமா பீல் பண்றேன்.." என்றவள் அங்கிருந்து வெளியே நடந்தாள்.

"அடுத்த முறை ஏதாவது திட்டம் போட்டா அதை நமக்குள்ளேயே வச்சிக்கங்கப்பா! போன முறை நாலு துரோகி. அவங்களையாவது பிடிச்சி கொன்னோம். இந்த முறை போராளிகள். நாட்டுல துரோகிகள் கூட செழிப்பா வாழ்ந்துட முடியும். ஆனா போராளிகளுக்கு மரணம் மட்டும்தான் ஒரே பரிசா இருக்கும். அதனால இவங்களை செயல்பட விடாம செய்ய ஏதாவது செய்ங்க!" என்றார் குமரன்.

மற்ற இருவரும் சரியென தலையசைத்தனர்.

"அந்த தங்சேயாவோட சாம்பலை என்ன பண்ணிங்க?" 

"சுத்தமான மாட்டு சாணத்தோடு கலந்து குழி தோண்டி ஊத்தி மூடிட்டோம்!" என்ற விஷாலை வியப்பாக பார்த்தவர் "கிரேஸி கைய்ஸ்!" என்றுவிட்டு நகர்ந்தார்.

குழந்தைகளின் இரைச்சல்கள் சங்கீதமாக ஒலித்துக் கொண்டிருந்தது அந்த வீட்டில். ரூபி தனக்கென தரப்பட்ட அறையில் அமர்ந்திருந்தாள். ஜன்னல் வழி தெரிந்த தோட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். இந்த அறை அவளின் சிறு வயது அறைதான். இவள் வந்த பிறகு வீடே கொண்டாட்டமாக இருக்கிறது‌. இதற்கு முன்பும் கூட இப்படிதான் இருந்திருக்கும் என்று அவளுக்கு தெரியும். இருந்தாலும் ஒவ்வொருவரும் விழுந்து விழுந்து கவனிக்கையில் அவளுக்கு மகிழ்ச்சி பத்து மடங்கு கூடிக் கொண்டிருக்கிறது என்பதுவும் உண்மைதான். 

அம்மாவும் அப்பாவும் அவளின் சிறு வயது நினைவுகளை விட சற்று முதிர்ந்திருந்தார்கள். ஆனாலும் பாசம் இப்போதும் அதே போலதான் இருந்தது.

"மாது.." அவளின் யோசனையை கலைத்தது ராகுலின் குரல். திரும்பினாள். அவளின் அருகே வந்து அமர்ந்தான். நேற்று இங்கே வந்த போது அறிமுக நிகழ்ச்சியின் போது இருந்தான்‌.‌ பிறகு இப்போதுதான் பார்க்கிறாள் இவனை. எப்போதும் தரையையே பார்த்தான். அவளை பார்க்க தயங்கினான்.

"அடையாளமே தெரியாத அளவுக்கு வளர்ந்துட்ட ராகுல்!" என்றவளுக்கு உண்மையிலேயே அந்த வீட்டில் இருந்த தன் வயதை ஒத்தவர்களை அடையாளம் காண முடியவில்லை. பெரியவர்கள் அப்படியே இருந்தார்கள். ஆனால் குழந்தைகளின் முகம் முதல் உருவம் வரை மாறி விட்டிருந்தது. இவன்தான் தன்னை கோவில் கூட்டத்தில் தொலைத்த அத்தை மகன் என்பதே பாட்டி சொல்லிதான் அவளுக்கு தெரியும். அவ்வளவு மாறி விட்டிருந்தான் அவன்.

சட்டென அவளின் கையை பிடித்தான். "அம்மா!" காயத்தை அவன் தொட்டு விடவும் தன்னை மறந்து கத்தி விட்டாள்.

"சா.. சாரி மாது. நான் உன்னை காயப்படுத்த நினைச்சி தொடல!" என்றவன் அவசரமாக அவளின் உள்ளங்கையை ஊதினான்.

"ப்ராமிஸ் மாது! அன்னைக்கு நான் உன்னை தொலைப்பேன்னு நினைக்கவே இல்ல. நீ தொலைவேன்னும் நான் நினைக்கல. என்னாலதான் நீ சைக்கோ கில்லர்கிட்ட மாட்டிக்கிட்ட! ரியலி சாரி மாது. இத்தனை வருசமா நான் நல்லா கூட தூங்கல தெரியுமா? உன்னை தேட எவ்வளவோ முயற்சி செஞ்சோம். நான் என்னால முடிஞ்ச அளவுக்கு போராடினேன். ஆனா உன்னை பத்திய தகவலே எங்களுக்கு கிடைக்கல.." 

தன் உள்ளங்கையில் தண்ணீர் துளிகள் விழுவது கண்டு குழம்பியவள் ராகுலை நிமிர்த்தினாள். கண்கள் தாண்டியிருந்த கண்ணீர் அவளை கண்டு மேலும் அதிகமானது.

"எதுக்கு இப்ப அழற பைத்தியம்? உன்னை நான் எப்ப தப்பு சொன்னேன்? நான்தான் உன் பக்கத்துல நிற்காம கூட்டத்துல கலந்துட்டேன். என் விதி அப்படி!" என்றாள்.

பாய்ந்து அவளை அணைத்துக் கொண்டவன் "ஐ ரியலி மிஸ் யூ மாது. நீ என்னை மன்னிப்பன்னு நான் நினைக்கவே இல்ல. வீட்டுல எல்லோரும் என்னை இன்னமும் ஒதுக்கிதான் வச்சிருக்காங்க தெரியுமா?" என்றான்.

"இட்ஸ் ஓகேப்பா. அவங்ககிட்ட நான் பேசுறேன்!" என்றவள் அவனின் தோளை வருடினாள்.

"உனக்கு ஒரு உண்மை தெரியுமா? தொலைஞ்சி போன உன்னை காணாம நான் மனசுக்குள்ள உடையுறேன்னு என் அண்ணன்.." அவன் முழுதாய் முடிக்கும் முன் கணைப்பு குரல் ஒன்றுக் கேட்டது. திரும்பினார்கள் இருவரும். விஷால் அந்த அறையின் வாசற்படியில் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான்.

ராகுல் ரூபியை விட்டுவிட்டு விலகினான்.

எழுந்து வந்து விஷாலை அணைத்துக் கொண்டான். "தேங்க்ஸ் அண்ணா.. நீ இல்லன்னா நான் காலம் முழுக்க என் சுய மன சிறையிலேயே வாழ்ந்து செத்திருப்பேன்!" என்றவனை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தினான் விஷால்.

"எதுக்கு இவ்வளவு எமோசனல்? ஒன்னும் ஆகல. நீ போய் படி!" என்று அனுப்பி வைத்தான். 

ரூபியிடம் வந்தான். 

"நீங்க ராகுலோட அண்ணான்னு நான் நினைக்கவே இல்ல!" தரை பார்த்து சொன்னவளின் அருகே வந்து அமர்ந்தான். மேஜையின் மீதிருந்த மருந்தை எடுத்து அவளின் உள்ளங்கையில் தடவினான்.

"நான் சொன்னாலும் உனக்கு தெரிஞ்சிருக்காது!" 

அவன் சொன்னதும் உண்மைதான். ராகுல் மனதில் பதிந்த அளவுக்கு இவன் பதியவே இல்லை. எப்போதும் அமைதியாக ஓரமாக ஒதுங்கி இருப்போரை யார்தான் நினைவில் வைத்துக் கொள்வார்கள்? 

"தேங்க்ஸ்.." 

புன்னகைத்தபடி நிமிர்ந்தவன் "நீ ரூபிணிகான்னு உன் பேரை சொல்லி இருந்தா முதல் நாளே நான் உன்னை அடையாளம் கண்டு பிடிச்சிருக்க சான்ஸ் இருக்கு. நீதான் நீட்டி முழக்கிட்ட!" என்றான்.

அவளுக்கும் சிரிப்பு வந்தது. "ஆனா என் பேர் அதுதான்!" என்றாள்.

"உன் பேரண்ட்ஸ் நீ காணாம போனதும் வழக்கு பதிவு பண்ணியிருக்காங்க.. வெறும் ரூபிணிகான்னு! ராகுல் மாது மாதுன்னு உளறிட்டு இருப்பான். ஆனா அதை கூட நான் அப்ப சரியா கவனிக்கல. தனசேகர் சார் கூப்பிட்டு சொன்ன பிறகுதான் நீதான் நான்.. எங்க குடும்பம் தேடிய அதே ரூபிணிகான்னு தெரிஞ்சது!" என்றான்.

"முன்னாடியே சொல்லி இருக்கலாம்!" சிறு குரலில் சொன்னாள். பாட்டி அறிமுகப்படுத்தி வைத்திருக்காவிட்டால் அவன் யாரென்று அவளுக்கு தெரிந்தே இருக்காது.

"உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமா?" அவளின் பாதத்தை பார்த்தபடி கேட்டான்.

ரூபி யோசித்தாள்.

"நா.. நான் போய் உன் அம்மாவை அனுப்பட்டா?" 

"தூ..‌தூக்கம் வர மாதிரி இருக்கு. கட்டிலுக்கு போகணும்.!" தயக்கமாக சொன்னவளை கைகளில் தூக்கியவன் அவளை கட்டிலில் கிடத்தினான். ரூபி அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக இருந்தாள்.‌

"ஸ்வீட் ட்ரீம்ஸ்.." என்றுவிட்டு வெளியே நடந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW

Post a Comment

0 Comments