Advertisement

Responsive Advertisement

மௌனம் 29

 மந்திரி ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

"ஏன்?" என்று அனைவரும் கேட்டார்கள். யாருக்கும் பதில் சொல்லவில்லை அவர். ஆனால் மனசாட்சியிடமும் மௌனமாக இருக்க முடியவில்லை. 

"நான் இந்த நாட்டோட மந்திரி.. லட்சக்கணக்கான மக்கள் என்னை நம்பினாங்க. ஆனா நான் முன்ன பின்ன தெரியாதவங்க சொன்னதை கூட நம்பியிருக்கேன். சுய சிந்தனையை தொலைச்ச அந்த டைம்லயே நான் ஒரு மந்திரியா இருக்கற தகுதியை இழந்துட்டேன்.!" என்றார் தனக்குத் தானே. தனக்கு வந்த திடீர் ஞானோதயத்துக்கு தனக்குத் தானே நன்றி சொல்லிக் கொண்டார். 

அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த விசயத்தில் மதில் மேல் பூனை மனம்தான். ஆனால் பணமும், தங்சேயாவின் சொற்பொழிவுகளும் அவரை சாய்த்து விட்டன. தனக்கு எதிராய் இருக்கும் மற்ற கட்சிகள், தன் கட்சியிலேயே தனக்கு எதிராக சதி செய்துக் கொண்டிருக்கும் மற்றவர்கள் என தன் எதிரிகளை சமாளிக்கவும், அவர்களை விட சற்று மேல் மட்டத்திற்கு சென்று விட வேண்டும் என்ற ஆசையிலுமே தங்சேயாவின் பக்கம் சாய்ந்து விட்டார். அப்போதும் கூட தான் அந்த விவகாரத்திலிருந்து தப்பித்து விட வாய்ப்பு கிடைக்காதா என்று யோசித்துதான் காத்திருந்தார் அவர். 

குமரன் இவரைத் தனியாக சந்தித்துப் பேசினார். "உங்களுக்கு கீழே வேலை செய்ய எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா சார்? உங்களை நம்பி ஓட்டு போட்டவங்களுக்கு துரோகம் செஞ்சி இருக்கிங்க. நீங்க அத்தனை பேரோட இடத்துல இருந்து அவங்களை பாதுகாப்பிங்கன்னு உங்களை நம்பி வீட்டுல இருந்தாங்க. அவங்க எல்லோருக்கும் துரோகம் செஞ்சிட்டிங்க. சின்ன குழந்தையிலிருந்து நாளைக்கு சாக போற கிழவன் வரை அத்தனை பேருக்கும் துரோகம். முடிஞ்சா செத்துப் போயிடுங்க சார். உங்களை போல துரோகிகள் வாழ இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கல!" என்றவர் அத்தோடு அங்கிருந்து கிளம்பி விட்டார்.

ராஜ் சாகும் அளவிற்கு அவ்வளவு நல்லவர் இல்லை. அதே சமயம் தன் தவறுகளை அசைப்போடாத அளவிற்கு மனசாட்சி இறந்தவரும் இல்லை. தன் மனசாட்சி தரும் தண்டனைதான் தனக்கான வாழ்நாள் தண்டனை என்று நினைத்தார் அவர்.

"நிஜமாவே தங்சேயா செத்துட்டாரா?" நம்பிக்கை இல்லாமல் விஷாலிடம் கேட்டாள் ரூபி.

"என் கண் முன்னாடிதான் செத்தான். அவன் ஒன்னும் கடவுள் இல்ல, அழிக்க முடியாமல் போக. சரியான சந்தர்ப்பம் அமைஞ்சிருந்தா அவனை கொல்ல என் இரண்டு கையும் போதும்! இத்தனை நாள் அவன் மறைஞ்சிதான் வாழ்ந்தான். தீவிரவாதி இவன்தான்னு அடையாளம் கண்ட பிறகு, அவன் தன் முன்னால் இருக்கான்னு தெரிஞ்ச பிறகும் அவனை அப்படியே விட நாங்க என்ன பைத்தியமா?" என்றவன் அவளின் பாத காயங்களை பார்த்தான். ஓரளவு ஆறி விட்டிருந்துது. ஆனாலும் கூட அவளால் கால் ஊன்ற முடியவில்லை. ரூபியின் தங்கையும், விஷால் ராகுலின் தங்கையும்தான் அவளுக்கு உதவிச் செய்துக் கொண்டிருந்தார்கள்.

அவளின் அம்மாவும், சித்தி அத்தையும், பாட்டியும் அவளை சிறப்பாக கவனித்தார்கள். அவளுக்குதான் உள்ளம் குறுகுறுத்துக் கொண்டிருந்தது. தன்னைப் பற்றிய உண்மை தெரிந்தால் அதன் பிறகும் இவர்கள் இதே போல பாசம் காட்டுவார்களா என்று சந்தேகித்துக் கவலைக் கொண்டாள். 

தனசேகருக்கு வேலை பார்க்கவே பிடிக்கவில்லை. போன முறை தோற்றதும் வலித்தது. இந்த முறை வெற்றி பெற தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதும் அவனுக்கு வலித்தது. ஏதோ கடமைக்கு செயலாற்றுவது போலிருந்தது. அதற்காக தங்சேயா இறந்ததில் நிம்மதி இல்லாமல் இல்லை.‌ 

பரந்தாமன் ரிங்கான தன் போனை எடுத்தார்.

"ரதி.. இந்த மாசத்துக்கு இன்னும் கன்டென்ட் ரெடி பண்ணல! எங்கே இருக்க நீ?" என்றார் கவலையோடு.

"இரண்டு நாள்ல வந்துடுறேன் சார்.." என்றாள் ரதி.

"சரி நீ எங்கேதான் இருக்க?" மீண்டும் கேட்டார் அவர்.

"பிரெண்ட் ஒருத்தங்களை பார்க்க தூரமா போறேன் சார்.. இரண்டு நாள்ல திரும்பிடுவேன்! திரும்ப முடியாம போனா கன்டென்டை எழுதி அனுப்பிடுறேன்!" என்றவள் அவர் பேசி முடித்த பிறகு அழைப்பை துண்டித்துப் போனை பேக்கில் போட்டுக் கொண்டாள். தன் முன் நின்றிருந்த படகில் ஏறினாள்.

சில மணி நேரங்களுக்கு பிறகு அந்த அழகிய தீவிற்கு வந்துச் சேர்ந்தது அந்த படகு. ரதி படகை விட்டு இறங்கினாள். அந்த சிறு தீவு அந்த மாலை நேரத்தில் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்திய பெருங்கடலில் உள்ள சிறு தீவு அது. வசதி படைத்த மற்ற நாட்டுக்காரர்கள் சுகமான ஓய்வுக்கும், சொகுசு விடுமுறைக்காகவும் இந்த தீவுக்கு வந்துச் சென்றுக் கொண்டிருந்தார்கள். 

ரதி படகை விட்டு இறங்கியதும் அவளின் முன்னால் வந்து நின்றாள் நவீனா. மார்பிற்கு கச்சை போல எதையோ கட்டி இருந்தாள். இடுப்பின் கீழ் வரிவரியாக இருந்த பாவாடை ஒன்றை அணிந்திருந்தாள். 

இங்கே அவன் பெல்லி டேன்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறான் என்பதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் உடையை கூட மாற்றாமல் அவன் தன்னை தேடி ஓடி வந்தது அவளுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அவனை மேலிருந்து கீழாக கவனித்தாள். செக்ஸியாகதான் இருந்தான். அந்த மார்பு கச்சை சற்று கீழிறங்கினால் அவனின் நடனத்தை ரசிப்பவர்கள் என்ன செய்வார்கள் என்று விபரீதமாக யோசித்தாள்.

"இங்கே ஏன் வந்திருக்க?" என்றான் நவீன்.

ரதி அவன் தன்னை வரவேற்பான் என்று எதிர்பார்க்கவில்லை. 

"நான் இங்கே வருவது உனக்கு எப்படி தெரியும்?" 

"தனசேகர் சார் போன் பண்ணாரு!" என்றவனின் இடுப்பைக் கிள்ளிச் சென்றான் அவர்களை கடந்துச் சென்ற ஒரு இளைஞன்.

இடுப்பை தடவிக் கொண்டான் நவீன். ரதியின் ஆச்சரியத்தில் உறைந்தாள். கொஞ்சம் சிரிப்பு வந்தது. கொஞ்சம் பரிதாபம் வந்தது. 

"பெண்ணா இருந்தா எங்கேயும் பாதுகாப்பு இல்ல!" என்றாள்.

"ஆமா. இப்பதான் சொன்னாங்க!" கிண்டலாக சொன்னவன் "எதுக்கு இங்கே வந்திருக்க?" என்றுக் கேட்டான் நடந்துக் கொண்டே.

"ஐ லவ் யூ!" நவீனின் நடை தடைப்பட்டது. தான் கேட்டது உண்மைதானா என்பது போல திரும்பிப் பார்த்தான். ரதி அவனை ஏக்கமாக பார்த்து நின்றாள். சட்டென பார்வையை மாற்றிக் கொண்டவன் "ந..நமக்குள்ள ஒத்து வராது ரதி!" என்றான் எங்கோ பார்த்தபடி.

"ஐ நோ! ஆனா உன்னை விட முடியல நவீன். ரொம்ப யோசிச்சிட்டுதான் இங்கே வந்தேன்!" என்றாள். இவனின் முகவரியை தெரிந்துக் கொள்ள வேண்டி தனசேகரை எவ்வளவு தொல்லை செய்தாள் என்று அவனுக்குதானே தெரியும்?

"நான் கெட்டவன் ரதி!" அவளை நிறுத்திச் சொன்னான் நவீன். அவள் பக்கம் திரும்பினான். அவளின் முகத்தை ஏக்கம் கலந்த வேதனையோடு பார்த்தான்.

"எட்டாத மிட்டாய் நீ. தயவு செஞ்சி ஆசைக் காட்டாம போ! உனக்குன்னு நல்ல வாழ்க்கை இருக்கு. போய் உன் வாழ்க்கையை வாழு. என் பின்னாடி வராதே!" என்றான்.

ரதி அவனின் கையை பிடித்தாள். அவன் கையை விலக்கிக் கொள்ள முயன்றான். ஆனால் அவளின் பிடி வலுவாக இருந்தது.

"ம்மா!" என்றான் வேதனையாக. அந்த அரை அம்மாவில் ஆயிரம் சேதிகள் சொல்லப்படாமல் இருந்தது.

"என்னை விடு!" என்றான். இங்கேயே உடைந்து விழுந்து விடுவோமோ என்று பயமாக இருந்தது அவனுக்கு. 

"நேசிக்கிறேன் நவீன்! நீ யாரா இருந்தாலும் இதே காதல்தான். இறந்த காலத்தில் நீ கெட்டவன். அதை நானும் மறக்கல. ஆனா நீ அந்த தவறுகளை செய்ய காரணம் உன்னை தூண்டி விட்டவன்தான். நான் என் நாட்டை ரொம்ப நேசிக்கிறேன். அதனால உன்னை மன்னிக்க முடியாதுதான். ஆனா நீயும் எங்களில் ஒருவன், நீ இப்படி மாற காரணம் எங்க சமுதாயம்தான். அதுக்காக உன் தவறுகளை மறந்துப் போக டிரை பண்றேன்.." என்றாள்.

நவீனின் நரம்புகளில் சிறு நடுக்கம் ஓடியது. "வே.. வேணாம் ரதி. எனக்கு எதிரிகள் அதிகம். நீ நல்லா வாழணும். சத்தியமா நான் இப்படி ஒருத்தர் வாழணும்ன்னு ஆசைப்படுவேன்னு கூட இதுக்கு முன்னாடி நினைச்சதே இல்ல. நீ யாரோ நான் யாரோ. ஆனா நீ வாழணும்ன்னு நான் ஆசைப்படுறேன். என்னை விட்டு விலகிப் போயிடு!" என்றவன் அவளை விட்டுவிட்டு நடந்தான்.

ரதி அவனை பின்தொடர்ந்தாள். அவனை விட்டு செல்ல விரும்பவில்லை அவள்.

மாலை நேரம் இரவாக மாறிக் கொண்டிருந்தது. நவீனா கூடாரம் போல அமைந்திருந்த அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தாள். ரதி சுற்றும் முற்றும் பார்த்தபடி அவனை பின்தொடர்ந்து சென்றாள்.

அது அந்த கட்டிடத்தின் பின்பகுதி. ரதியை நிறுத்தினான் ஒரு காவலன்.

நவீனா திரும்பிப் பார்த்தாள். 

"நான் அவளோட பிரெண்ட்!" என்று நவீனாவை கை காட்டினாள்.

காவலன் நவீனாவை திரும்பிப் பார்த்தான். தன் கீழுதட்டை நாவால் ஈரம் செய்துக் கொண்டான். அவளை பார்த்தான் என்பதை விட வெறித்தான், அவளை தன் கண்களாலேயே தின்றான் என்றும் சொல்லலாம். நவீனா வெறுப்போடு அவனை முறைத்துவிட்டு உள்ளே சென்றாள்.

ரதியின் கையை பற்றினான் அந்த காவலன். "அவளோட பிரெண்டா நீ? நான் அவ மேல ஆசையா இருக்கேன். என் ஒரு மாச சம்பளத்தை அவளுக்கு தர தயாரா இருக்கேன். அவ ஒரே ஒருநாள் என்னோடு காப்பி சாப்பிட வரணும். உதவி செய்ய முடியுமா?" என்றுக் கேட்டான்.

ரதி பதில் சொல்லும் முன் அவளின் கையை பற்றியது ஒரு கரம். நிமிர்ந்து பார்த்தாள். நவீனா நின்றிருந்தாள். அவளை அங்கிருந்து இழுத்துக் கொண்டு உள்ளே போனான்.

"பைத்தியமா நீ? எதுக்கு அவனோடு பேசிட்டு இருக்க?" என்றான்.

"காப்பி சாப்பிட கூப்பிடுறான். ஒருநாள் போய்ட்டுதான் வாயேன். ஒருமாச சம்பளம் தரானாம்!" என்றவளின் தாடையை பற்றியவன் "அவன் என்ன காப்பி சாப்பிட கூப்பிடுறான்னு உனக்கு தெரியாதுன்னு சொல்லாத!" என்றான். 

ரதி கிண்டலாக சிரித்தாள். அவனை சீண்ட விரும்பவில்லை. ஆனாலும் "என்னோடு காப்பி சாப்பிட வரியா? நான் என் இரண்டு மாச சம்பளத்தை தரேன்!" என்றாள்.

கண்களை சுழற்றியவன் "சாத்தானா நீ?" என்றுக் கேட்டான். 

அவள் பதில் சொல்லும் முன் மணியடிப்பது போல சத்தம் கேட்டது. நவீனா அவளை விட்டுவிட்டு அங்கிருந்த ஒரு கதவை தாண்டி நடந்தாள். ரதி பின்னால் ஓடினாள். ஆனால் அந்த கதவை தாண்டி இருந்த பெரிய மேடையையும், இருண்ட அறையையும், நவீனா நின்றிருந்த இடத்தை மட்டும் வெளிச்சத்தால் வட்டமடித்திருந்த விளக்கையும் கண்டு பின்னால் வந்து நின்றாள்.

நவீனா இடுப்பை வளைத்தபடி சிலை போல நின்றிருந்தாள். மெல்லிய இசை ஆரம்பித்தது. வானம் பார்த்திருந்த அவளின் கை மெல்ல அவளின் உடலின் மீது ஊர்ந்தது. இடுப்பு அப்படியும் இப்படியுமாக ஆடியது‌. சற்று நேரத்தில் நடனம் வேகம் பிடித்தது. நவீனாவின் கையை கவனிப்பதா இல்லை இடுப்பை கவனிப்பதா என்று கூட ரதிக்கு தெரியவில்லை.

"வாவ்!" ஆச்சரியத்தோடு அவனின் நடனத்தைப் பார்த்து நின்றாள். 

அரை மணி நேரம் சென்றதே அவளுக்குத் தெரியவில்லை. மேடையின் கீழ் இருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்த சிலர் மேடை அருகே வந்து நவீனாவை நோக்கி பணத்தை வீசினார்கள். ரதிக்கு ஆச்சரியம் கூடியது.

"செம! பையனுக்கு நல்ல மவுசுதான்! யாரும் கடத்திட்டு போகாத வரை நல்லதுதான்!" என நினைத்தாள். 

நவீனா நடனத்தை முடித்துக் கொண்டு திரும்பினாள். அவளின் பின்னால் வந்த அந்த அரங்கின் மேனேஜர் சில பண தாள்களை சுருட்டி அவளின் கையில் திணித்துவிட்டு நகர்ந்தான்.

"இன்னைக்கு சம்பளமா? நல்லாதான் ஆடுற!" என்றாள் ரதி அவனின் விக் முடியினை வருடியபடி.

"ஷெட் அப். இங்கே இருக்கும் யாருக்கும் நான் பையன்னு தெரியாது!" சிறு குரலில் சொன்னான் அவன்.

"சாரிப்பா. ஆனாலும் நீ பெண்ணா டக்கரா கலக்கற!" 

நவீனா அந்த தீவின் கடற்கரை ஓரத்தில் இருந்த தனது சிறு வீட்டிற்கு வந்தாள்.

"உன் வீடா?" என்றபடி உள்ளே நுழைந்தாள் ரதி.

"என் சம்பாதியதுக்கு இந்த வீடுதான் கிடைச்சது. நீ தயவு செஞ்சி இங்கிருந்து கிளம்பு ரதி!" 

வீட்டுக்குள் வந்தவன் தனது அலங்காரத்தை கலைத்துக் கொண்டு ஆடைகளை கழட்டி எறிந்தான்.

ரதி அவனை குறுகுறுவென பார்த்தாள். 

"நான் டிரெஸ் மாத்துறேன். அந்த பக்கம் திரும்பி நில்லு!" என்றுச் சீறினான் நவீன்.

ரதி உதட்டை சுழித்தபடி திரும்பினாள். 

"நீ செக்ஸியா இருக்க. பெண் வேஷத்திலும் அப்படிதான் இருக்க. ஆணாகவும் அப்படிதான் இருக்க. எனக்கு எப்பவுமே கண்கள் மீது பெரிய ஈடுபாடு உண்டு. உன் கண்களை பார்த்த உடனே விழுந்துட்டேன் நான். நீ எதிர்பார்க்காத அளவுக்கான காதல் இது. முட்டாள்தனமான நேசம். சமூகமும், மக்களும் ஏற்றுக் கொள்ள இயலாத ஒரு காதல். ஆனா என் மனசுல இருக்கும் காதல் அதேதானே!? நீ தீவிரவாதின்னு தெரிஞ்சதும் நான் என்ன நினைச்சேன்னா உன்னை கொன்னுட்டு நானும் செத்துடணும்ன்னு. பைத்தியக்காரதனமா தெரியுது இல்ல? ஆனா வேற எந்த வழியும் தெரியல. நீ அப்ரூவரா மாறிட்டன்னு தெரிஞ்சதும் நான் எவ்வளவு சந்தோசப்பட்டேன்னு உனக்குத் தெரியாது. உன்னோடு நான் கனவுல வாழாம நிஜத்துலயும் வாழ முடியும்ன்னு ஒரு நம்பிக்கை பிறந்தது." என்றவள் அவனிடமிருந்து சத்தம் ஏதும் வராமல் இருக்கவும் பெருமூச்சு விட்டாள்.

"நீ ரொம்ப கெட்டவன். ஆனா உன்னை விடவும் கெட்டவங்க ரொம்ப சாதாரணமா, அதிக சுதந்திரத்தோடு வாழும்போது நான் ஏன் உனக்கு ஒரு சான்ஸ் தர கூடாதுன்னு யோசிக்கிறேன்! நீ என்.. நம்ம நாட்டுக்குள் வந்தா நான் தினமும் சந்தேகத்தோடுதான் நாட்களை கடத்துவேன். சாரி. ஆனா அதான் உண்மை. நாம ஏன் இந்த தீவுலயே வாழ கூடாது.? நீ என் கண் முன்னாடி இருந்தா போதும். நான் உன்னை சந்தேகப்படல. எதிர்காலத்துல அப்படி ஒரு வாய்ப்பு வந்துட கூடாதுன்னு மட்டும்தான் ஆசைப்படுறேன். பிரச்சனையே இல்லாம ஒரு கனவு வாழ்க்கை வாழ்ந்துட்டு போயிடலாமே! இங்கேயே அழகான நமக்கான சின்ன வாழ்க்கை.!" 

இப்போதாவது அவன் பதில் சொல்வானா என்று எதிர்பார்த்தாள். அவள் திரும்ப இருந்த நேரத்தில் அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டான் நவீன்.

"நி.. நிஜமாவா?" என்றான் தயங்கிய சிறு குரலில். 

ரதிக்கு புரியவில்லை.

"நீ என்னோடு சேர்ந்து இந்த தீவுல வாழப் போறியா? என்னை உன் கண் முன்னாடியே வச்சிக்க போறியா? நிஜமாவா?" 

ரதி திரும்பினாள். அவனின் கலங்கிய கண்கள் அவளை நெருப்பாக சுட்டது. அந்த கண்களை ரொம்ப விரும்பினாள் அவள்.

அவன் நெஞ்சில் சாய்ந்தாள். "நிஜமா வாழ ஆசை. உன்னை என் கன்ட்ரோல்ல வச்சிக்க ஆசை." 

நவீன் அவளின் தோளில் முகம் புதைத்து அழுதான்.

"நான் கடந்து வந்த பாதை உனக்கு தெரியாது. பசி, பட்டினி, தீவிரவாதம்,‌ பயம், பயங்கரமான ஆயுதங்கள், தண்டனைகள்.. எத்தனையை தாண்டி வந்தேன் தெரியுமா? என்னால நார்மல் லைஃப் வாழ முடியும்ன்னு நான் ஒருநாள் கூட நினைச்சதே இல்ல. எனக்கே தெரியும், அது சாத்தியமில்லாத ஒன்னுன்னு! என்னை எந்த பொண்ணும் விரும்ப மாட்டான்னு நினைச்சேன். எனக்கு பேமிலிங்கற ஒரு விசயம் அமையும்ன்னு நான்.." அவனை மேல பேச விடாமல் அவனின் உதட்டில் விரல் பதித்தாள் ரதி.

"ஐ லவ் யூ!" என்றாள்.

நவீன் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். 

"இனி எங்க மேகசின்ல இந்த தீவை பற்றிய சேதிகள் அதிகம் வரும்ன்னு நினைக்கிறேன்!" என்றாள். 

"தேங்க்ஸ்.. என்னோடு வாழ வந்ததுக்கு. இது ரொம்ப ரிஸ்க்ன்னு தெரிஞ்சும் வர.. ரொம்ப தேங்க்ஸ்!" என்றவன் அவளின் நெற்றியில் உதடு பதித்தான். 

"லவ் யூ.. உன்னை இனி என்கிட்டயிருந்து யாராலும் சிறையெடுக்க முடியாது!" என்றாள் அவள். 


***

ரூபிணிக்காவின் கையிலிருந்த மோதிரத்தின் மீது விழுந்தது இரு துளி கண்ணீர். 

"ரூபிணிகா.!" விஷால் தன் அருகே வருவது கண்டு அவசரமாக தன் கண்களை துடைத்துக் கொண்டாள்.

அவளருகே வந்தவன் அவளின் முகத்தைப் பற்றி நிமிர்த்தினான். அவளின் கண்களை ஆழமாக பார்த்தான். 

"ரொம்ப அழகா இருக்க!" என்றான்.

"நாம இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்!" எங்கோ பார்த்தபடி சொன்னாள்.

சிரித்தான் விஷால்.

"மறுபடியும் விளையாட்டா?"

மறுப்பாக தலையசைத்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

"எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல!" 

விஷால் அவளை விட்டு விலகி நின்றான்.

"நமக்கு நிச்சயத்தார்த்தம் முடிஞ்சிடுச்சி. இப்ப நீ இப்படி சொல்ற.! இத்தனை மாசம் லவ்வுன்னு சொல்லி என்னோடு சுத்தும்போது இந்த விருப்பம் இருந்ததா?" கோபத்தோடு கேட்டவனை தயக்கமாக பார்த்தவள் "ப்ளீஸ்.. எனக்கு பிடிக்கல!" என்றாள். அவளை மேலே பேச விடவில்லை அவன். அவளின் கையை பற்றினான். அவளது மோதிரத்தை கழட்டி தூர எறிந்தான்.

"சந்தோசமா இரு!" என்றவன் அவளை விட்டு விலகி நடந்தான்.

ரூபிணிக்காவின் போன் ஒலித்தது. கண்ணீரை துடைத்தபடியே சென்று போனை எடுத்தாள்.

"ரூபி பாப்பு! என் திட்டத்துக்கு சம்மதமா? இல்ல உன் லைப்ல நீயே மண்ணைப் போட்டுக்க போறியா?" என்றான் எதிரில் பேசியவன்.

ரூபிணிகா நிற்காமல் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"என் குடும்பத்தை விட்டுடு. நான் என்ன வேணாலும் செய்றேன்!" என்றாள்.

அடுத்து என்ன நடந்ததுன்னா அதை அடுத்த பாகத்துல சொல்றேன் நட்புக்களே.

இதுவரை இந்த தொடருக்கு ஆதரவு தந்த அனைத்து நட்புக்களுக்கும் நன்றிகள். உங்களின் வோட்ஸ், கமெண்ட்ஸ், ஊக்குவிப்பு ஸ்டிக்கர்ஸ்க்கு (பிரதிலிபி) நன்றிகள். 

சைலண்ட் ரீடர்ஸ்க்கும் எனது நன்றிகள்.

இந்த பாகம் எப்படி இருந்ததுன்னு எல்லோரும் சொல்லுங்க. கதையின் நிறை குறைகளை பட்டியலிடுங்கள். 

கதை நல்லா இருந்ததுன்னா உங்க பிரெண்ட்ஸோடும் ஷேர் பண்ணுங்க. எனது கதையின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை உடனே பெற என்னை பாலோவ் பண்ணுங்க. 

இதோட அடுத்த பாகம் இன்னும் சில மாதங்களில் ஆரம்பம் ஆகும். 

நாளையிலிருந்து சிறகொடிந்த தேவதை தொடர் அப்டேட்/அன்லாக் ஆகும். நட்புக்கள் அனைவரும் அந்த கதைக்கும் மறக்காமல் உங்களின் ஆதரவுகளை கொடுங்க. 

நன்றிகளுடன் உங்கள் CRAZY WRITER

Post a Comment

1 Comments

  1. ரூபிக்கு இன்னும் நல்ல நேரம் வரவில்லையா?

    ReplyDelete