Advertisement

Responsive Advertisement

தேவதை 2

 ஆதியை தங்களுடன் இழுத்துச் சென்றது கவியின் படை. 


ஆதி இப்படி ஒரு நிலை வருமென்று கனவில் கூட நினைக்கவில்லை. நேற்றைய நாளின் மகிழ்ச்சி இன்றும் நினைவில் இருந்தது.


ஆதி அன்பின் தேவ உலகில் உருவான கடைசி தேவதை. அவர்களது இனத்தில் தேவதைகள் பிறப்பதில்லை. உருவாகுகிறார்கள். அந்த உலகில் ஓடிக் கொண்டிருக்கும் நதியின் நீர் திவலைகளில் இருந்தும், வானத்தின் சிவப்பு வண்ணத்திலிருந்தும், அங்கிருக்கும் மண், மரம், பூக்களில் இருந்தும் சிறு வெண்புகையாய் உருவாகி சில நூறு வருடங்களுக்கு பிறகு தேவதைகளின் உருவமாக மாறுவார்கள். அவர்களை உருவாக்குவது அந்த உலகம்தானே தவிர மற்ற யாரும் இல்லை. 


ஆன்ம ரூபத்திலேயே அனைத்தையும் அறிந்துக் கற்றுக் கொண்டவள் ஆதி. அவளுக்கு அன்பை தவிர வேறு எதுவும் அவ்வளவாக தெரியாது. அந்த உலகத்தில் இருந்த மற்ற அன்பின் தேவ தேவதைகள் அவளை தங்களின் சகோதரியாக ஏற்றுக் கொண்டார்கள். அவளே கடைசி தேவதை என்பதால் அவர்கள் அனைவருக்கும் செல்லமாகவே மாறி விட்டாள். 


அவளுக்கு சிறந்ததொரு சகோதரனாக விளங்கியவன்தான் அந்த செழினி. அன்பை எப்படி பயன்படுத்த வேண்டும், அன்பை கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்பதைக் கற்று தந்தவன் அவன்.


ஆனால் அவனும் கூட அந்த அன்பை ஆயுதமாக பயன்படுத்தும் வித்தையை அவளுக்குச் சொல்லி தராமலேயே போய் விட்டான். 


அந்த மொத்த உலகத்திற்கும் சேர்த்து கடவுளால் ஒரு வரம் தரப்பட்டிருந்தது. அதுதான் அன்பை ஆயுதமாக பயன்படுத்துதல். அன்பின் தேவதைகள் என்பதால் இவர்களை மற்றவர்கள் வீழ்த்தி விடும் வாய்ப்பு அதிகம் என்று கடவுளருக்கே தெரியும். அதன் காரணமாக தரப்பட்ட வரம்தான் அது. ஆனால் அதிலும் ஒரு விபரீதம் இருந்தது. அன்பை ஆயுதமாக பயன்படுத்துதல் அவ்வளவு சுலபமானது அல்ல. மனதை மெள்ள கட்டுப்படுத்தி தன் அன்பு மொத்தத்தையும் ஒன்று சேர்த்து எதிராளியின் இதயத்தை பிய்த்து எடுக்க வேண்டும். அது ஆதியை தவிர அங்கிருந்த மற்ற அனைவருக்கும் சாத்தியமானதாக இருந்தாலும் கூட அவர்களாலும் கூட சத்திய தேவர்களின் வாள் வீச்சின் முன் நிற்க முடியவில்லை‌. 


அன்பின் தேவ தேவதைகள் போரிட தயாராகும் முன்பே மடிந்துப் போனார்கள். ஆனால் அப்பாவியான ஆதியோ அவர்களிடம் சிறை கைதியாக மாட்டிக் கொண்டாள்.


ஆதியை இழுத்துக் கொண்டு கவியும் அவனது படைகளும் தங்களின் உலகம் திரும்பியபோது வண்ண தேவதை உலகிலிருந்து பிடித்துக் கொண்டு வரப்பட்ட கைதிகளுக்கு சாபங்களையும், தண்டனைகளையும் தந்துக் கொண்டிருந்தார்கள் சத்திய தேவ இனத்தை சார்ந்த தேவர்களும், தேவதைகளும்.


"இவள் வேயறி.. இவள் கழீழிய அண்டத்தின் பாதுகாவல் தேவதை. இறந்துப் போன நம் சத்திய தேவதையின் உயிருக்கு ஈடாக இவளுக்கு நான் சாபத்தை வழங்குகிறேன். இவள் தன் கண்ணின் மணியால் காணும் நிறங்கள் அனைத்தும் இன்றோடு ஒழிந்துப் போகட்டும். இவளின் பார்வையில் கருப்பு வெள்ளையை தவிர மற்ற நிறங்கள் அழியட்டும்.!" என்று ஒருவன் சாபமிடவும் மற்ற இரு வீரர்கள் அவளை அங்கிருந்து இழுத்துச் சென்றனர்.


கவி ஆத்திரத்தில் இருந்தான். தன் உலகத்தை சேர்ந்த இருவர் இறந்ததன் காரணம் அவனின் கோபத்தை குறையாமல் வைத்திருந்தது. அப்பாவிகள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவனுக்கும் தெரிந்தது. ஆனால் அதை மாற்ற சிறிதும் முயலவில்லை அவன்.


எத்தனை பேரை பலியிட்ட பிறகு இந்த கோபம் போகுமோ? அந்த உலகமே கோபத்தில் பைத்தியமாகதான் இருந்தது. மற்ற உலகத்தாரை விடவும் அதிக சக்தி கொண்டிருந்த காரணம் மற்றவர்களை அழித்துக் கொண்டிருந்தது.


ஆதியை அங்கிருந்த கற்பாறை ஒன்றின் மீது தள்ளினான் கவியோடு இருந்த வீரன் ஒருவன். ஆதி கற்பாறையின் மீது மோதி கீழே சரிந்து விழுந்தாள்.


நிமிர்ந்துப் பார்த்தாள். கவியின் முகம் பார்த்தாள். 


"நான் எந்த தப்பும் செய்யல!" என்றாள்.


"எங்களின் மெய்யாவும் அந்த தப்பும் செய்யல!" என்றான் கவி.


அவனின் முகத்தை பார்க்கும்போது அவளால் எதிர்க்கவே முடியவில்லை. அவனின் கண்களை காணும்போது அவனிடம் அன்பை செலுத்த வேண்டும் போல தோன்றியது அவளுக்கு. 


அவள் தூய்மையான தேவதை. அவளால் அன்பு மட்டும்தான் செலுத்த முடியும். அதை அங்கிருந்த யாராலும் புரிந்துக் கொள்ள முடியவில்லை.‌ அவள் ஒரு குழந்தையை போல். புதிதாய் பிறந்த கடவுளை போல. 


கவியாலும் அவளது முகத்தை காண முடியவில்லை. என்னவோ செய்தது நெஞ்சுக்குள். அவளின் கண்ணீர் அவனை சுட்டது. அவளது வேதனை அவனை வாட்டியது. அதற்காகவே அவளை அதிகம் வெறுத்தான்.


தன் கத்தியை அவள் மீது காட்டினான். வெந்துப் பொசுங்கியவள் சில நொடிகளில் மீண்டும் சாதாரணமாக மாறிப் போனாள். அனைருக்கும் ஆச்சரியம். ஆனால் கவிக்கோ அதிர்ச்சி. அவளை கொல்ல முயன்றான். பல முறை முயன்றான். கடைசியில் தோற்றுப் போனான்.


எப்படி இது நடக்கிறது என்று யோசிக்க விரும்பவில்லை அவன். அவனின் எதிரி அவள். அவளை கொல்ல வேண்டும். அவ்வளவே. அவளை தன் கத்தியால் குத்தினான். ஆதியின் உடலில் பாய்ந்தது கத்தி. ஆனால் அவளின் உடலில் இருந்து ரத்தம் வெளிவரவில்லை. அவன் கத்தியை எடுத்துக் கொண்ட பிறகும் அவள் பழையபடிதான் இருந்தாள். 


அவனுக்கு கோபமாக வந்தது. தன் சக்தியை எதிர்க்கும் அளவுக்கு ஒரு ஜீவன் உள்ளதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளை அழிக்கும் வழியை யோசித்தான். வாழ்க்கை முழுக்க அவளை இதே உலகில் சிறை பிடித்து வைத்திருப்பது என்பது தன் வாழ்க்கைக்கு தானே வைத்துக் கொள்ளும் பொறி என்று அவனுக்குத் தெரியும்.


அதனால்தான் "இவளை வறண்ட பிரபஞ்சமான பால்வெளி அண்டத்திற்கு அனுப்பி வையுங்கள். அங்கேயே கிடந்து மடிந்துப் போகட்டும்.!" என்று வெறுப்பாக சொல்லி விட்டு அங்கிருந்துச் சென்றான்.


வீரர்கள் சிலர் வந்தனர். ஆதியின் தோளைப் பற்றினர். அவளை அங்கிருந்து இழுத்துக் கொண்டு நடந்தனர்.


ஆதி திரும்பிப் பார்த்தாள். கவியின் முதுகைப் பார்த்தாள். தாயை ஏங்கிப் பார்க்கும் குழந்தையைப் போல அவனைப் பார்த்தாள். அவளின் பார்வை தன் முதுகை துளைப்பதை கவியும் உணர்ந்தான்.


நொடிகள் யுகங்களாக நடந்தது. தன்னை மறந்துத் திரும்பிப் பார்த்தான். ஆதி பார்வையால் கெஞ்சினாள். வறண்ட பிரபஞ்சம், இருண்ட பிரபஞ்சமான பால்வெளி அண்டத்திற்கு சென்றால் பிறகு அவளால் அங்கிருந்து வெளிவரவே முடியாது. ஏனெனில் அது ஒரு சுழல் போல. அங்கே போனவர்கள் மாண்டு மட்டும்தான் போயுள்ளார்கள். 


"நான் என் உலகத்துக்கே போறேன்.. என்னை பால்வெளி அண்டத்துக்கு அனுப்பாதிங்க!" என்றாள் கெஞ்சலாக.


"உன்னால எங்க மெய்யாவை உயிரோடு கொண்டு வர முடியாது. அப்புறம் நாங்க மட்டும் ஏன் எங்க தண்டனையை குறைக்கணும்?" எனக் கேட்டவர்கள் விண்வெளியில் பறந்தார்கள்.


ஆதி பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.


கவியோ தனது மரத்தின் மீது கவலையாக அமர்ந்திருந்தான். இதயத்தின் ஒரு பாதியை இழந்தது போல இருந்தது அவனுக்கு. 


அவனின் மரம் வெள்ளை நிறத்துப் பனியால் உருவான மரம். அவனின் கோபத்தைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட மரம் அது.


அங்கிருந்த அனைவருக்குமே மரங்கள்தான் வீடுகளாக இருந்தன. அந்த உலகத்தின் மறுபக்கத்தில் நெருப்பால் உருவான மரங்கள் கூட உண்டு. தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.


அன்பின் தேவ உலகத்தில் இறந்துப் போன உடல்கள் அனைத்தும் காற்றாக மாறி கரைந்துக் கொண்டிருந்தன. அவ்வுலகம் தான் உருவாக்கிய ஜீவன்களை தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருந்தது. 


பால்வெளி அண்டத்தின் நுழைவாயிலில் நின்றார்கள் வீரர்கள். அந்த அண்டத்தை பார்க்கவே அருவெறுப்பாக இருந்தது அவர்களுக்கு. புத்தி சுவாதீனம் உள்ளவர்கள் அவர்களாகவே அந்த அண்டத்திற்குள் நுழைந்தது கிடையாது. அந்த அண்டத்திற்கு என்று அழகான கடவுள்கள் நிறைய பேர் இருந்தார்கள். ஆனால் அந்த பிரபஞ்சத்தின் வருங்காலத்தை அவர்கள் ஏற்கனவே கண்டு விட்டதால் எதையும் இதுவரை செய்யாமல் அமைதியாக இருந்தார்கள்.


சத்திய தேவர்கள் ஆதியை அந்த பிரபஞ்சத்திற்குள் தள்ளிவிட்டு அங்கிருந்து திரும்பி நடந்தனர்.


ஆதி அழுதபடி அந்த பிரபஞ்சத்தின் இடையில் வந்து நின்றாள். பல ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தன. பல கோடி கிரகங்கள் இருந்தன. ஆனால் அவளுக்கு தான் மட்டும் அனாதையாக இருப்பது போலிருந்தது.


ஆதியின் கண்களில் இருந்து விழுந்த கண்ணீரை தன்னை நோக்கி இழுத்தது ஒரு கிரகம். அவளையும் தன்னை நோக்கி இழுத்தது. அடுத்து என்ன நடக்கும் என்பதை அறியாமல் அந்த கிரகத்தின் ஈர்ப்பு விசைக்கு உந்தித் தள்ளப்பட்டாள்.


பிரபஞ்சத்தின் ஒரு நடு மூலையில் இருந்தது அந்த சிறு கிரகம். மிகவும் சிறிய கிரகம். அந்த கிரகம்தான் அவளை இழுத்திருந்தது.


அக்கிரகத்தின் தரையில் வந்து விழுந்தாள். கொதித்துக் கொண்டிருந்த நெருப்பு குழம்புகள் அவள் வந்து விழுந்ததும் ஜில்லிட்டு போக ஆரம்பித்தன. அந்த நெருப்பு குழம்புகளில் இருந்து புகை வெளியேறியது. வானம் நோக்கிச் சென்றது. அவள் வெம்மை தாங்காமல் கண்ணீர் விட்டாள். ஒற்றை துளி கண்ணீர் விழுந்ததும் நூறு மடங்காய் உருமாறியது அந்த கண்ணீர் துளிகள். மிஞ்சிருந்த நெருப்பு குழம்புகளை நனைத்தன அவை.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments