Advertisement

Responsive Advertisement

தேவதை 4

 கவி வனியை கோபமாக பார்த்தான்.


"நாங்க சத்திய தேவர்கள்.. நாங்கள் வாழ மற்ற உலகத்தாரின் உதவி வேண்டுமா? நல்ல நகைச்சுவை!" என்றான்.


"கவி நீ ஒரு விசயத்தை தெளிவாக புரிந்துக் கொள். இங்கே படைக்கப்பட்ட எதுவும் வீணாக படைக்கப்படவில்லை. இந்த தேவ பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உலகமும் மற்றொரு உலகத்தோடு மறைமுக தொடர்பு உடையது. இந்த சத்திய தேவ உலகத்திற்கு தேவையான சக்திகள் அன்பின் ஈர்ப்பு விசையோடு கலந்திருக்கிறது. இப்போது அன்பின் உலகம் இல்லாமல் போனதால் உங்க உலகமும் அழியப் போகிறது."


கவி இடம் வலமாக தலையசைத்தான்.


"அதெப்படி நாங்கள் அழிவது? இதற்கு மாற்று வழி என்ன?" என்றுக் கேட்டான்.


"அன்பு இந்த காற்றோடு கலக்க வேண்டும். அதற்கு அன்பின் தேவர்களோ, தேவதைகளோ வேண்டும். நீங்கள் அவர்கள் அனைவரையும் கொன்று விட்டதன் காரணமாக இனி அதுவும் சாத்தியமில்லை.. எனக்கு வேறு வேலை இருக்கிறது. நான் கிளம்புகிறேன்!" என்றவர் அங்கிருந்து சென்றார்.


கவி அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.


என்ன செய்வது என்று புரியவில்லை. தாங்கள் வாழ வேண்டுமானால் அன்பின் தேவதையோ தேவனோ தேவை என்று மட்டும் புரிந்தது. 


பால்வெளி அண்டத்தின் உள்ளே வீசப்பட்ட அந்த தேவதை பெண் நிலைத்திருப்பாள் என்ற நம்பிக்கை கவிக்கு இல்லை. 


தனது படைகளை அழைத்தான்.


"இந்த பிரபஞ்சத்தின் அத்தனை மூலை முடுக்குகளிலும் சென்று தேடுங்கள். செழினி எங்கே இருந்தாலும் அவனை கொல்லாமல் பிடித்துக் கொண்டு வாருங்கள்." என்றுக் கட்டளையிட்டான்.


படைகள் எட்டு திசைக்கும் பறந்தது.


அந்த உலகத்தில் இருந்த ஒரு அழகு தேவதை அவனைத் தேடி வந்தாள்.


"ஏந்தலே.. என்னவோ தெரியவில்லை. எனக்கு வாழ்வின் மீது பிடிப்பே இல்லை. இந்த பிரபஞ்சம், இந்த உலகம், நம் தேவ இனம் என அனைத்தும் அநாவசியம் என்றுத் தோன்றுகிறது!" என்றாள்.


அவள் சொல்ல வருவது கவிக்கு புரியவில்லை.


"மிகவும் சோர்வாகவும், பொறுப்பில்லாமலும் உணர்கிறேன்.!" என்றவள் தன் கத்தியை எடுத்து தன்னையே குத்திக் கொண்டாள். கவி அவளை தாங்கிப் பிடித்தான்.


"முட்டாள் பெண்ணே! என்ன செய்தாய்?" எனக் கேட்டவன் அவளைக் காப்பாற்ற முயன்றான். ஆனால் அப்பெண் இறந்துப் போனாள்.


காரணம் அவனுக்கு இன்னமும் கூட சரியாக விளங்கவில்லை என்பதுதான் உண்மை.


அந்த கிரகம் வீரத்தில் சிறந்தது. அங்கே வாழ்ந்தவர்கள் தற்கொலை செய்துக் கொள்ளும் அளவிற்கு கோழைகள் கிடையாது. 


கவி மீண்டும் வனியை தேடி ஓடினான். விசயத்தை சொல்லி உதவிக் கேட்டான்.


"ஏற்கனவே சொன்ன அதே தீர்வுதான் கவி. அன்பின் தேவ தேவதைகளின் மூச்சுக்காற்று உங்களின் உலகத்தில் கலக்க வேண்டும். இல்லையேல் இப்போது நடப்பதுதான் தொடரும்." என்றார்‌ அவர்.


கவி ஆத்திரத்தோடு பற்களை கடித்த நேரத்தில் "நீ ரொம்ப வருந்துகிறாயே என்று ஒரு விசயத்தை சொல்கிறேன் கேள். அந்த பால்வெளி அண்டத்திற்குள் ஒரு தேவதையை தள்ளி விட்டுவிட்டு வந்தீர்களாம். ஆனால் அந்த அண்டம் அவளை அழிக்கவில்லை. அவளின் உதவியோடு பிரகாசமடைய ஆரம்பித்திருக்கிறது. சென்று அவளிடம் உதவி கேள். அவளிடம் கெஞ்சி கேட்டு உன் உலகத்திற்கு அழைத்து வா." என்றார் வனி.


கவி யோசனையோடு தலையசைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான். தன் உலகம் வந்தவன் தனது படைகளில் சிலரை மட்டும் அழைத்துக் கொண்டு பால்வெளி அண்டத்திற்கு கிளம்பினான். வனி சொன்னது போலவே பிரகாசமடைந்துக் கொண்டிருந்தது அவ்வண்டம். ஆதி இருக்கும் இடத்தை தேடாமலேயே அவனால் கண்டறியவும் முடிந்தது. 


அவளின் வாசமோ, அன்போ ஏதோ ஒன்றை அவனால் அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது. 


ஒரு நட்சத்திர குடும்பத்திற்கு வந்துச் சேர்ந்தான். அந்த சிறிய நட்சத்திரத்தை சுற்றி எட்டு கிரகங்கள் சுற்றிக் கொண்டிருந்தன. அதில் அந்த நட்சத்திரத்திடமிருந்நு மூன்றாவதாக நெருங்கி இருந்த கிரகத்தில்தான் ஆதியை கண்டான் அவன். அந்த கிரகத்திற்கு அவன் வந்தபோது நதியின் மேடு ஒன்றில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தாள் ஆதி. ஆனால் அது அவளின் கண்ணீரில் உருவாகிய நதி என்பதை சில நொடிகளுக்கு பிறகே புரிந்துக் கொண்டான் கவி. அது வெறும் மணலாலும், கல்லாலும் உருவாகியிருந்த கிரகம்.


தன் படை வீரர்களுக்கு கை காட்டினான் கவி. நால்வரும் நான்கு புறமிருந்து அவளை நெருங்கினார்கள். தங்களிடமிருந்து மிக வலுவான சக்தி உடைய பனி கயிறை பயன்படுத்தி அவளை கட்டினார்கள்.


ஆதி பயத்தோடு எழுந்து நின்றாள்.


"ஏன் மீண்டும் என்னை தேடி வந்துள்ளீர்கள்?" என்றாள் அழுதபடியே.


"உன்னை இழுத்துச் செல்ல வந்துள்ளேன். நீ என் உலகிற்கு தேவை." என்றவன் தன் படையாட்களிடம் கை காட்டினான். அவர்கள் அவளை இழுத்துக் கொண்டு புறப்பட்டனர்.


கவி அந்த கிரகத்தை பார்த்தான். வெறும் தண்ணீரும் மணலும் மட்டும்தான் இருந்தது. "சிறிய சூரிய கோளாக இருக்க வேண்டியது இது. எப்படி இப்படி மாறியது?" என்று தன்னையே கேட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.


"நம் தேவதையை அவங்க இழுத்துட்டு போறாங்க.!" ஆக்சிசன் கவலையோடு சொன்னார்.


"ஆனா விதிப்படி அவளால்தானே இந்த முறை நம் பிரபஞ்சத்திற்கு புது யோசனை உயிர்கள் உண்டாகும்.?" ஃபயர் சந்தேகமாக கேட்டாள்.


"நடப்பது அத்தனையும் ஏதேனும் காரணத்தோடுதான் நடக்கும். பொறுத்திருந்துப் பார்க்கலாம்.!" என்றார் ஹார்ட்.


கவி ஆதியை கெஞ்சி அழைத்து வருவான் என்றுதான் வனி எதிர்ப்பார்த்தார். ஆனால் கட்டிப்போடப்பட்டு இழுத்து வரப்படுவதை கண்டவர் "மிருக தேவர்கள். இவர்களை திருத்த யாரால் முடியும்?" எனக் கேட்டார்.


ஆதியை அங்கிருந்த பனி குகைக்குள் தள்ளினான் கவி. "மூச்சு விடு!" என்றான் தன் கத்தியை அவள் முன் காட்டி.


திருதிருவென விழித்தாள் ஆதி. தன் இனமே அழிந்துப் போனதே என்ற கவலையில் இருந்தாள் அவள் இன்னமும். ஆனால் இவனின் திடீர் நடவடிக்கைகள் அவளுக்கு சலிப்பைதான் தந்தன. 


"இனி நீ இங்கேதான் இருக்க போற.." என்றவன் அந்த குகைக்கு பனி கதவு ஒன்றையும் உருவாக்கி அவளை பூட்டினான். கதவின் ஜன்னல் வழி பார்த்தவன் "உனக்கு ஏதாவது தேவையா?" என்றான்.


"என்னை விட்டு விடுங்கள்.‌ நான் என் உலகிற்கு செல்கிறேன்." என்றாள்.


"உன் தேவை எங்களுக்குத் தேவை. அதனால் நான் சொல்வது போலதான் நீ இருந்தாக வேண்டும். உனக்கு ஏதாவது தேவை என்றால் என்னிடம் கேட்கலாம். அதற்கு பதில் நீ இங்கேயே இருக்க வேண்டும்." என்றவன் பெரிய மலையையே பெயர்த்து எடுத்தது போல கர்வ சாதனையோடு அங்கிருந்து நகர்ந்தான்.


இரு பெண்களை அழைத்து ஆதிக்கு காவலாக வைத்தான். ஆதிக்கு இங்கே அழுகை கூட வரவில்லை. எல்லாம் இழந்த துக்கத்தில் இருந்தாள். 


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments