Advertisement

Responsive Advertisement

தேவதை 6

 ஆதியின் கண்ணீரை தூரத்தில் இருந்துப் பார்த்துக் கொண்டிருந்தான் கவி. இதயம் பிசைந்தது அவனுக்கு.


சில நாட்கள் முன்பு வாரி வந்து "எனக்கு அன்பின் தேவதையை மிகவும் பிடித்துள்ளது ஏந்தலே! நானும் அவளும் மணம் முடிக்க அனுமதி வழங்குங்கள் ஏந்தலே!" என்றான்.


கவிக்கு வந்த கோபத்தில் இந்த உலகத்தையே தலைகீழாக திருப்பிப் போட்டிருப்பான். 


"இன்றைக்கு என்னோடு பயிற்சிக்கு வா." என்றான் ஆதி.


வாரி மகிழ்ச்சியோடு தனது வாளை எடுத்தான். பலநாள் இந்த பயிற்சிக்காக காத்திருந்திருக்கிறான் அவன். ஆனால் கவியோடு பயிற்சி செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. கவி அந்த உலகின் மன்னன். கடந்த பல நூறு வருடங்களுக்கு ஏந்தலாக இருப்பவன். அவனோடு சரிசமமாக பயிற்சி செய்வது என்பது அந்த உலகில் மிகவும் கௌரமான ஒரு பணி. 


பயிற்சி நடந்தது. முதல் அடியிலேயே வாரியை கொன்று விட்டான் கவி. அவன் நேர்மையான முறையில் பயிற்சி செய்யவில்லை. வாரியை கொல்ல வேண்டும் என்பது மட்டும்தான் அவனின் ஒரே குறிக்கோளாக இருந்தது. 


சுற்றி இருந்தவர்கள் கவியின் ராட்சச குணம் புரியாமல் 'ஏந்தல் கையால் இறந்தவன் பாக்கியசாலி' என்றுச் சொல்லி வாரிக்கு இறுதி விடை தந்தார்கள்.


தனக்கு ஏன் இவ்வளவு வெறி என்று கவிக்குப் புரியவில்லை. ஆனாலும் அந்த கோபமும் கூட போதையாகதான் இருந்தது அவனுக்கு.


இப்போது வாரிக்காக ஆதி கண்ணீர் வடிப்பது கூட அவனுக்கு கோபத்தைதான் தந்தது‌. கடுப்போடு தனது பனி மரத்தின் மீது அமர்ந்திருந்தவன் கண்களில் ஆதி மாளிகையை விட்டு வெளியே வருவது தெரிந்தது.


கண்களை துடைத்துக் கொண்டு எங்கோ நடந்தாள். கவி மரத்தின் மீதிருந்து கீழே குதித்தான். அவளை பின்தொடர்ந்தான்.


ஆதி பனி ஆற்றின் கரைக்கு வந்தாள். வாரியோடு அவள் பேசிய அந்த இடத்திற்கு வந்தவள் முழங்காலை கட்டியபடி அமர்ந்தாள்.


"இங்கே என்ன பண்ற?" என்றபடி அவளின் அருகே வந்து அமர்ந்தான் கவி.


ஆதி முகத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.


"வாரி பாவம். அவரை ஏன் கொன்றீர்கள்?" என்றாள்.


கவி திகைத்தான். அவளுக்கு எப்படி தெரியும் என்றுக் குழம்பினான்.


"அவர் என்னிடம் மிகவும் பிரியமாக இருந்தார். அவரை கொன்றுவிட்டு நீங்கள் என்ன சாதித்தீர்கள்?" 


"என்ன உளறுற? நான் ஏன் அவனைக் கொல்லப் போறேன்?" என்றவன் சலசலத்து ஓடிய ஆற்றில் கையை விட்டு அலசினான்.


வெளியே இருந்த உறை நிலை குளிருக்கு தண்ணீர் சற்று வெதுவெதுப்பாக இருப்பது போலிருந்தது.


"நீங்க ஏன் இவ்வளவு கெட்டவரா இருக்கிங்க? உங்களுக்கு என் மேல ஏன் இவ்வளவு கோபம்? உங்க ஆட்கள் இரண்டு பேர் இறந்ததுக்கும் எனக்கும் நடுவில் என்ன சம்பந்தம்?" என்றாள் நெஞ்சம் வெம்ப.


"நான் கெட்டவன்தான். அதுக்கு இப்ப என்ன? உன் இனத்தை முழுசா அழிக்காம எனக்கு என் கோபம் தீராது. அதையே சொல்லி நேரத்தை வீண் பண்ணாத!" என்றான் அவன் சிடுசிடுப்போடு.


"நான் இறந்தால் உங்களுக்கு கோபம் தீருமா?" என்றாள்.


திகைத்து நிமிர்ந்தவனின் கண்கள் பயத்தில் நிறைந்து இருந்தது. அதைக் கண்டு அதிசயித்துப் போனாள் ஆதி.


"என்னை உங்களால் கொல்ல முடியாவிட்டால் என்னை வேறு எதிரிகளிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் கொல்லட்டும் என்னை. தயவுசெய்து எனக்காக இந்த உதவியை செய்யுங்கள். இதற்கு மேல் என்னோடு நெருங்கி பழகும் யாரையும் கொல்ல வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது." என்றாள்.


கவியின் கைகளில் நரம்புகள் முறுக்கேறிக் கொண்டிருந்தது. 


"ரொம்ப நல்லவளா நடிக்காத? நீயும் அந்த செழினியை போலவே கெட்டவள்தான்." என்றவன் எழுந்து அங்கிருந்து நடந்தான்.


அவனுக்கு எரிச்சலாக இருந்தது. எப்படி இவளால் இவ்வளவு சாதாரணமா நடந்துக் கொள்ள முடிகிறது என்று கடுப்பானான்.


ஆனால் ஆதி அமைதியாக இல்லை. தன்னை எதிரியாக நினைக்கும் இரண்டு எதிரி உலகங்களுக்கு சேதி அனுப்பினாள்.


தன் இறப்பை தானே வேண்டினாள். அவளுக்குத் தெரிந்தது அன்பு மட்டும்தான். அவள் அன்பு செலுத்தும் அனைவரையும் கொன்றுக் கொண்டிருந்தான் கவி. அதை மட்டும் அவள் தெளிவாக புரிந்து வைத்திருந்தாள். தான் இறந்துப் போனால் பிறகு யாரும் இறக்க வேண்டி இருக்காது என்றுத் தனக்கு தானே முடிவெடுத்தாள். 


காழர்கள் உலகம் சன்னமான ஒளியோடும், அதீத இரைச்சலோடும் இருந்தது. 


உலகின் மேற்பரப்பில் இருந்து மேக விரிப்பு ஒன்றில் படுத்திருந்தான் வித்யநயன். அந்த உலகத்தின் தலைமை பொறுப்பு இப்போது அவனின் தலையில் இருக்கிறது.


மேக விரிப்பில் படுத்தபடியே தரையை பார்த்தான். தரையில் ஒரு புறம் பச்சை நதி ஓடிக் கொண்டிருந்தது. நதியின் கரையோரத்தில் பலர் படுத்திருந்தனர். சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறுவர் பெரியவர் பேதம் இல்லாமல் கலந்துப் பேசிக் கொண்டிருந்தனர்.


ஆற்றிற்குள் பலர் நீந்திக் கொண்டிருந்தார்கள். அனைவரும் பாதி மீன் ரூபத்திலும் பாதி கவியை போன்ற ஒரு முகமும் இரு கைகளும் கொண்ட ரூபத்திலும் இருந்தார்கள். 


கவிழ்ந்துப் படுத்திருந்த வித்யநயன் தன் இரு கால் வாலையும் ஒருமுறை ஆட்டினான். மேலும் கீழும் அழகாக அசைந்தது அந்த தட்டையான இரண்டு வால்களும். 


தரையில் இருந்த சிலர் ஒரே ராகத்தில் எதையோ பாடிக் கொண்டிருந்தார்கள்‌. இரைச்சலின் காரணமே அந்த பாட்டுதான். அவர்களுக்கு பாட்டு பாடவே வராது. ஆனால் அது வெளி உலகத்தார் கேட்க நேர்ந்தால்தானே தெரியும்? அவர்களுக்கு அதுதான் இனிமையான சங்கீதம்.


ஆனால் வித்யநயனுக்கு இந்த பாடலை பிடிக்கவில்லை. ஏனெனில் இசையும், பாட்டும் அவனுக்கு நன்றாக தெரியும். 'பாடல் என்பது மனதை உருக்குவதாக இருக்க வேண்டும். சிலர் அழுதால் கூட அழகாய் இருக்கும். சிலரின் மரண கூச்சல் கூட மனதிற்கு சிலிர்ப்பை தரும்.' என்று நினைத்தவன் அப்படி பட்ட சங்கீதத்தை மீண்டும் எப்போது கேட்போம் என்று இருந்தது.


அதே வேளையில் அவனின் காலடியில் வந்து விழுந்தது பனி பறவை ஒன்று. பார்க்கும்போதே புரிந்தது அது சத்திய தேவ உலகிற்கு சொந்தமான பறவை என்று.


"தூது எடுத்து வந்தாயா துஷ்ட பறவையே?" எனக் கேட்டபடியே அதை கையில் எடுத்தான்.


அதன் பனி இறகில் செதுக்கி இருந்த படங்களை பார்த்தான். 'அன்பு உலகின் கடைசி தேவதையான ஆதி இப்போது சத்திய தேவ உலகில் இருக்கிறாள். திறமை இருப்பவர்கள் வந்து அவளின் உயிரை கொய்து செல்லலாம்.!' என்று படமாக வரைந்திருந்ததை படித்து புரிந்துக் கொண்டவன் கலகலவென நகைத்தபடி தன் விரலை சொடுக்கிட்டான். அவனின் விரல்களில் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது. அந்த பனி பறவையை எடுத்து அந்த நெருப்பின் மீது காட்டினான். அந்த பறவை துடிதுடித்தது. தப்பிச் செல்ல போராடியது. ஆனால் வித்யநயனின் கைகள் இரும்பாக இருந்தன. ஓல குரலோடு கரைந்து மடிந்துப் போனது அந்த பறவை.


அந்த பறவையிடம் ஆசையாய் கேட்டு தூது அனுப்பியிருந்தாள் ஆதி. இப்படி அதன் உயிர் போகும் என்று தெரிந்திருந்தால் நிச்சயம் அனுப்பி இருக்கவே மாட்டாள்.


வித்யநயன் தரையை நோக்கிப் பாய்ந்தான். நேராக நீருக்கு அடியில் இருந்த கோட்டைக்குதான் சென்றான். அங்கிருந்த ஒரு அறையை திறந்தான். பாசிகளால் நிறைந்திருந்த அறையை கைகளால் சுத்தம் செய்தான்.


கண்ணாடி ஒன்று மிகவும் பெரியதாக நின்றிருந்தது. அதில் இரு கூட்டம் சண்டை போட்டுக் கொள்ளும் காட்சி திரைப்படம் போல ஓடியது. அது சத்திய தேவ கூட்டமும், காழர்களின் கூட்டமும் போட்டுக் கொள்ளும் சண்டை. அவர்களால் எப்போதுமே சத்திய தேவர்களை வெல்ல முடியவில்லை. அதற்கான காரணம் முட்டாள் கூட்டமான சத்திய தேவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இவனுக்குத் தெரியும்.


சத்திய தேவர்களுக்கும், வண்ண தேவர்களுக்கும் சக்தி தருவது அன்பின் தேவ உலகம்தான். 


அன்பு என்பது அந்த உலகங்களின் காற்றோடு கலந்து இருந்தது. அவர்களின் மேனி அன்பை தினமும் சுவாசித்து பலம் பெற்றிருந்தது. இதை அவர்கள் அறியாதது மற்ற உலகத்தாருக்கு ஆச்சரியமே. தனக்கு எங்கே எதன் மூலம் சக்தி கிடைக்கிறது என்பதை கூட அறியாதவர்கள் ஏன் வாழ வேண்டும் என்று மற்றவர்கள்தான் கடுப்பானார்கள்.


அவர்களுக்கு அன்பின் தேவ உலகம் மீது எந்த வெறுப்பும் கோபமும் கிடையாது. அவர்களுக்கு சத்திய தேவர்களை அழிக்க வேண்டும். ஆனால் அவர்களை வெல்ல வேண்டும் என்றால் அதற்கு முதலில் அவர்களுக்கு மறைமுக சக்தி தரும் அன்பின் தேவ உலகை அழிக்க வேண்டும்.


ஆனால் அவர்களால் எவ்வளவு முயன்றும் அன்பின் தேவ உலகத்தை அப்போது அழிக்க முடியவில்லை. ஏனெனில் இவர்கள் போய் நின்றாலே அவர்களின் அன்பு நிறைந்த கண்களை கண்டு அமைதியாக திரும்பி விடுவதாக இருந்தது. ஆனால் அவர்களின் வருத்தமும் ஒருநாள் தீர்ந்தது. அதுதான் புத்தியில் சிறந்த கவி அன்பின் தேவ உலகத்தை வேட்டையாட புறப்பட்ட போதுதான் அந்த திருநாள் வந்தது. தங்களால் செய்ய முடியாததை அவனே செய்கிறானே என்றெண்ணி அனைவரும் மகிழ்ந்தனர்.


அன்பின் தேவ உலகம் முழுதாய் மறைந்தபோது இவர்கள் இங்கே திருவிழா கொண்டாடினார்கள். சத்திய தேவர்களின் சக்தி முழுதாய் வடியும் வரை காத்திருக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அதிலும் பாதி விதியாய் அந்த சத்திய தேவ உலகம் முழுதாய் அழியும் முன்னால் அன்பின் கடைசி தேவதையை சிறை பிடித்து வந்து விட்டான் கவி.


மீண்டும் எப்போது வாய்ப்பு கிடைக்குமோ என்று காத்திருந்தான் வித்யநயன். கடித சேதியை நினைத்துப் பார்த்தான்.


அவனால் நிச்சயம் அவளை கொல்ல முடியாது. ஆனால் அவளை ஏமாற்றி தூரமாக அழைத்து வந்து விட்டால் போதும் என்று திட்டமிட்டான்.


தனது திட்டத்தை அவன் செயலாற்ற யோசித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் பூர்வ உலகில் இருந்த இயனின் கையில் இருந்த பனி பறவை வாங்கி நசுக்கிக் கொண்டிருந்தான் செழினி.


"சத்திய தேவர்கள் ஒருத்தங்களை கூட நான் உயிரோடு விடப் போறதா இல்ல." என்றான் பற்களை கடித்தபடி.


இயனி தனது மகிழ்ச்சியை வெளிப்படையாக காட்டாமல் அமைதியாக நின்றிருந்தான்.‌ செழினி கடந்த சில நாட்களாக இந்த உலகில்தான் விருந்தாளியாக இருக்கிறான்.


அவனை பற்றிய எந்த தகவலும் வெளியே செல்லாத அளவிற்கு பத்திரமாக பாதுகாத்து வந்தார்கள். 


"ஆதி அவன்கிட்ட இருக்கா." என்றான் ஒற்றை வரியில்.


அவனை பற்றி எப்படி வெளியே யாருக்கும் தெரியாதோ அது போலதான் அவனுக்கும் வெளிவிசயங்களை சொல்லாமல் வைத்திருந்தான் இயனி.


"அப்படிதான் போல. பாவம் அந்த தேவதையை கடத்தி வச்சிருக்காங்க.." என்றான் ஒன்றும் தெரியாதவன் போல.


செழினி கோபத்தில் கையை காற்றில் குத்தினான்.


"அந்த உலகத்தையை மண்ணோடு மண்ணா மாத்தணும். அப்பதான் நிம்மதி எனக்கு." என்றுக் கர்ஜித்தான்.


ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பதில் கை தேர்ந்தவனான இயனி இப்போதும் அமைதியாகதான் நின்றான். யார் அடித்துக் கொண்டால் என்ன? அவனுக்குத் தேவை சத்திய தேவர்களின் அழிவு மட்டும்தான்.


ஆதி இரண்டு நாட்களில் பழைய நிலைக்கு வந்து விட்டாள். அவளை சுற்றி இருந்த அனைவரும் அவளை அன்போடு கவனித்துக் கொண்டனர். அதுவே அவளை மீட்டெடுத்து விட்டது. அவசரப்பட்டு கடிதம் அனுப்பி விட்டோமோ என்று கூட நினைத்தாள். ஆனால் கை மீறிய‌‌ விசயத்திற்கு யார் என்ன செய்ய இயலும்?


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments