ஆதிக்கு தன்னை நினைத்து பரிதாபமாக இருந்தது. உண்மையில் அவனின் அருகாமைதான் அவளை மயக்கி கொண்டிருந்தது. ஆனால் இதை சொன்னால் அவன் நம்புவானா?
அவனை அணைத்து முத்தமிட சொன்னது அவளின் மனம். அவன் கொஞ்சல் பார்வையில் கேட்டால் தன் உயிரை கூட பரிசென தந்துவிடும் நிலையில்தான் இருந்தது அவளின் மனம்.
"இதுவரை நீ எத்தனை பேரை கொன்றுள்ளாய்?" கவி கேட்டது கண்டு அதிர்ந்தவள் அவனை விட்டு விலகி நின்றாள்.
"நான்.. நான் யாரையும் இதுவரை கொன்றது இல்லை." என்றாள்.
கவி நம்ப முடியாமல் அவளை வெறித்தான்.
"ஏன்?"
"ஏன்னா? நாங்க கொலைக்காரங்க கிடையாது. நாங்க அன்பின் தேவர், தேவதைகள்.. எங்களால் மற்றவர்களை கொல்ல இயலாது." என்றாள் விழிகளை அகல விரித்தபடி.
அவளின் தாடையை பற்றியவன் "நம்பும்படியாக பொய் சொல்லவாவது விரைவில் கற்றுக் கொள்." என்றான்.
அவளின் கழுத்தில் இருந்த மாலையை கண்டவன் "இதை ஏன் அணிந்திருக்கிறாய்?" எனக் கேட்டபடி மாலையை கையில் எடுத்தான்.
"பி.. பிடித்திருந்தது.." தரையை பார்த்தபடி சொன்னவளை விந்தையாக பார்த்தவன் அந்த மாலையை தனது கழுத்தில் போட்டுப் பார்த்தான். அருகே இருந்த பனியில் தன் முகம் பார்த்தான். மாலையோடு பார்க்க சற்று வித்தியாசமாக இருந்தது. ஆனால் அழகாய் இருப்பது போலதான் இருந்தது.
"சரி. இதை நான் வச்சிக்கிறேன். நீ போய் வேறு செய்துக் கொள்!" என்றான்.
ஆதி ஏறிட்டுப் பார்த்தாள். ஏக்கமாக அந்த மாலையை பார்த்தாள். கவிக்கு கோபம் கொப்பளித்தது. ஒரு மாலையை அதுவும் தனது மரத்தின் பூக்களை கொண்டு உருவாக்கிய மாலையை கூட அணிய தனக்கு உரிமை இல்லையா என நினைத்தான்.
அந்த கண்களும், பார்வையும் இல்லாமல் இருந்திருந்தால் அந்த மாலையை கழட்டியே இருக்க மாட்டான். ஆனால் இப்போது மாலையை கழட்டி அவளின் கழுத்தில் போட்டு விட்டான்.
"போ.." என்று அவளை பிடித்து அங்கிருந்து தள்ளி விட்டான்.
ஆதி அதிர்ச்சியோடு தன் கழுத்தில் இருந்த மாலையை பார்த்தாள்.
'மாலை என்பது வெற்றியின் அடையாளம். முக்கியத்துவத்தின் அடையாளம். மனங்கள் இரண்டு இணையுகையில் அதற்கு சாட்சியாகும்.!' அன்பின் தேவ உலகில் செடி கொடிகளிடம் கேட்டு கற்றுக் கொண்ட சேதியை நினைத்துப் பார்த்தவளுக்கு இதயம் தாறுமாறாக துடித்தது.
இப்போது இவன் மாலையை அணிவித்தது இதில் எந்த அடையாளம் என்று அவளுக்குப் புரியவில்லை.
"போவென்று சொன்னேன்." அவன் மீண்டும் சொன்னான்.
ஆதி அங்கிருந்து ஓடி வந்து விட்டாள். தனக்கென தரப்பட்ட அறையில் அமைதியாக வந்து அமர்ந்தவள் பனியில் தன் உருவம் பார்த்தாள். மாலையின் நிறம் அதிகம் சிவந்திருப்பது போலிருந்தது. அவன் இட்டதால் இப்படியோ என்று கூட யோசித்தாள்.
மரத்தின் மீது ஏறி அமர்ந்த கவி கிளை ஒன்றில் தலை சாய்த்தான்.
"ரொம்பவும் அழகான பெண்.. ஆனால் அழகு முழுக்க நஞ்சே." என்றான்.
அதே நேரத்தில் அவனின் கையில் வந்து அமர்ந்தது ஒரு பறவை.
"காழர்கள் உலக பறவை!" சந்தேகத்தோடு பறவையை கவனித்தான்.
"நான் காழர் உலக பறவை. ஒற்றர் பொழி என்னை அனுப்பி வைத்திருக்கிறார். இன்னும் நான்கு தினங்களில் காழர்கள் படை சத்திய தேவ உலகத்தின் மீது படை எடுத்து வரும் என்று நம்ப படுகிறது. இதை உங்களுக்கு அறிவித்த உடன் என்னை கொன்று விட சொல்லி ஒற்றர் சொல்லி.." பறவை மீதியை சொல்லும் முன்பே அதன் கழுத்து தனியாய் துண்டாகி விழுந்து விட்டது. பனியில் விழுந்த அதன் நீல ரத்தத்தை வெறித்துப் பார்த்தான் கவி.
"எங்கள் உலகத்தை படையெடுத்து வெல்ல உங்களுக்கு அவ்வளவு ஆசையா? வாருங்கள்.. உங்களை வேட்டையாடி வெகு காலம் ஆகி விட்டது போல.." என்றான் தனக்குள்.
அடுத்த நாள் ஆயுதங்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டன. கவி தனது கத்தியை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தான். இன்னும் லட்சம் கோடி பேரை கொல்லலாம் இந்த ஒற்றை கத்தியால்.
பெருமிதத்தோடு கத்தியை உறையில் போட்டுக் கொண்டான்.
சத்திய தேவர்கள் உற்சாகத்தில் இருந்தார்கள். போரிட மட்டுமே தெரிந்தவர்களுக்கு போர் நடந்தால்தானே உற்சாகம் இருக்கும்?
ஆதி கலவரத்தோடு அந்த உலகத்தை பார்த்தாள்.
"என்ன நடக்குது இங்கே?" எனக் கேட்டாள்.
"போர்.. காழர்களோடு!" என்றாள் அவளோடு ஒட்டிக் கொண்டிருந்த பெண்.
"உங்களுக்கு சண்டையிட தெரியாது இல்லையா? நீங்கள் இந்த மாளிகையின் உச்சியில் நின்றபடி பாருங்கள். சண்டை நடக்கும் இடங்கள் உங்களுக்கு தெளிவாக தெரியும். எங்களின் வீரம் கண்டு நீங்கள் ஆச்சரியப்பட போகிறீர்கள்." என்றாள்.
'வீரமா? என் இனத்தையே மொத்தமாக அழித்தது அல்லவா உங்களின் வீரம்?' என மனதுக்குள் கேட்டவள் இருந்த இடத்திலிருந்தபடியே பயிற்சி மைதானத்தைப் பார்த்தாள்.
வாள்களில் இருந்து வெளியேறும் கதிர்கள் பட்டு பனி பல இடங்களில் நிறம் மாறி இருந்தது. ஆதியால் இந்த பயிற்சியையே பார்க்க முடியவில்லை. எப்படி போரை பார்ப்பதோ என்றிருந்தது.
ஆனால் இவளுக்காக போர் நிறுத்தப்படுமா என்ன?
அடுத்த நான்காம் நாள் வந்துச் சேர்ந்தது காழர்களின் படை.
"இவர்கள் எப்படி தயாராக இருக்கிறார்கள்?" குழப்பத்தோடு கேட்டான் வித்யநயன்.
'எனது ஒற்றன் உன் உலகில் இருப்பது உனக்கு தெரியாது எதிரியே!' என நினைத்த கவி நேரடியாக சென்று வித்யநயனோடு சண்டையிட்டான்.
இருவருக்கும் சம அளவு சக்தி இருந்தது. இருவரின் வாட்களும் சம அளவு சக்தி உடையது. அதனால் அந்த சண்டை நீடித்தது. கவியின் உடம்பிலும் வித்யநயனின் உடம்பிலும் காயங்கள் உண்டானது.
ஆதி தனது அறையில் நின்றபடி இவர்களைதான் பார்த்துக் கொண்டிருந்தாள். யாருக்கு அடிப்பட்டாலும் அவளுக்கு வலித்தது.
கண்ணீர் தானாய் உகுந்தது. சத்திய தேவர்கள் சிலரும், காழர்கள் சிலரும் அடிப்பட்டு கீழே சாய்ந்தனர். ஆதி தன் விம்மலை அடக்க முயன்றாள்.
சில நேரங்களுக்கு மேல் அவளால் அந்த போரை பார்க்க முடியவில்லை. முகத்தை மூடியபடி திரும்பிக் கொண்டாள்.
"சண்டை இல்லாமல் அன்பாய் வாழ இவர்களால் முடியாதா?" எனக் கேட்டாள்.
"ஓ முடியுமே!" திடீர் குரல் கேட்டு திகைத்து நிமிர்ந்தாள்.
காழன் ஒருவன் நின்றிருந்தான். இவளை பார்த்து பற்களை காட்டி சிரித்தான். ஆதிக்கு உடம்பில் சிலிர்ப்பு ஓடியது.
"சண்டை நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் இந்த சத்திய தேவர்களின் மொத்த உலகமும் அழிய வேண்டும். அதற்கு முதலில் நீ இறக்க வேண்டும்." என்றபடி அவளை நெருங்கினான் அவன்.
ஆதி பயத்தோடு பின்னால் நகர்ந்தாள்.
"எ.. என்னை விட்டு விடுங்கள்!" என்றாள்.
"உன்னை கடத்தி செல்ல ஆசைதான். உன்னை போன்றதொரு அழகு தேவதையை யார்தான் அழிக்க நினைப்பார்கள்? ஆனால் நேரம் இல்லை. எங்களுக்கு வேறு வழியும் இல்லை!" என்றவன் தன் கையில் இருந்த வாளை அவளை நோக்கி காட்டினான்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
VOTE
COMMENT
SHARE
FOLLOW
0 Comments