Advertisement

Responsive Advertisement

தேவதை 9

 தன்னை கொல்ல வந்தவனை கெஞ்சலாக பார்த்தாள் ஆதி.


"நான் பாவம் இல்லையா?" என்றாள்.


"உன் முகத்தை பார்த்தா என்னால கொல்ல முடியாது. அதனால்தான் மயக்க பானத்தை அருந்தி வந்துள்ளேன். அந்த பானத்தை விட உன் அன்பு அதிக மயக்கத்தை தர கூடியது அல்ல!" என்றவன் தன் கத்தியை மெதுவாக சுழற்றினான்.


ஆதிக்கு பயம் சூழ்ந்தது. 


"உன்னை கடத்தி செல்ல மட்டும்தான் வித்யநயன் அனுமதி தந்திருக்கிறார். ஆனால் நான் உன்னைக் கொல்லப் போகிறேன். ஏனெனில் உன்னை கடத்திச் செல்வதால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. அதை எங்களின் ஏந்தல் அறியவில்லை. ஆனால் நான் அறிவேன்!" என்றவன் பின்னால் நகர்ந்துக் கொண்டிருந்தவளை நெருங்கிக் கொண்டிருந்தான்.


வித்யநயனின் வாள் தன் தோளின் மீது பட இருப்பது கண்டு விலகிய கவி கோபத்தோடு தன் வாளை அவன் மீது காட்டினான். ஆனால் அதற்குள் வித்யநயன் விலகி வந்து தனது வாளால் இவனின் காலை தொட்டு விட்டான். கவி பற்களை கடித்தபடி தரையில் மண்டியிட்டான்.


வித்யநயன் ஆச்சரியத்தோடு தன் வாளைப் பார்த்தான். அவனின் மனம் துள்ளிக் குதித்தது. கவிக்கு இப்போது ஏற்பட்ட காயத்தை சாதாரண நாளில் ஏற்படுத்த வேண்டும் என்றால் அதற்கு வித்யநயன் மிகவும் போராடியிருக்க வேண்டியதாக இருந்திருக்கும். ஆனால் இப்போது சுலபமா காயப்படுத்த முடிந்தது. இவ்விசயம் வித்யநயனை விட கவிக்குதான் அதிக அதிர்ச்சியை தந்தது.


வித்யநயன் வெற்றிக் களிப்போடு கவியை நெருங்கினான்.


அதே நேரத்தில் "அன்பே!" என்று ஆதி கத்துவது கவியின் செவிகளில் வந்து விழுந்தது.


வித்யநயன் கவியின் கண்களுக்குத் தெரியவே இல்லை. நொடி நேரம் கூட கடந்திருக்காது. ஆதி இருந்த மாளிகைக்குள் வந்து நின்றான் கவி.


வித்யநயன் குழப்பத்தோடு தன் முன் இருந்த பனித் தரையைப் பார்த்தான்.‌ அங்கிருந்த கவி எங்கே சென்றான் என்றுப் புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்து அவனைத் தேடினான்.


'கண் முன் இருந்தானே, எப்படி மாயமாக மறைந்தான்?' என்றுக் குழம்பினான்.


ஆதியின் முன்னால் இருந்த வீரனின் வாள் ஆதியை தொடும் முன் இருவருக்கும் இடையில் வந்து நின்றான் கவி. அடுத்த நொடியில் அவனின் எதிரில் இருந்தவன் கழுத்து வெட்டப்பட்டு துடிதுடித்து கீழே விழுந்தான். இறந்தவனை கண்டு விம்மினாள் ஆதி.


கவி திரும்பிப் பார்த்தான். 


"உனக்கு ஏதாவது ஆயிற்றா?" எனக் கேட்டான். ஆதி இடம் வலமாக தலையசைத்தாள்.


"பாவம் இவன் இறந்து விட்டான்." என்றாள் கண்ணீர் விட்டபடி.


கவி இறந்தவனை பார்த்துவிட்டு இவள் புறம் பார்த்தான்.


"உன்னை கொல்ல வந்தான் அவன். ஆனா நீ அவனுக்காக அழுதுக் கொண்டு இருக்க.!" என்றான் அதிர்ச்சியும், விந்தையுமாக.


"கண் முன் ஓர் உயிர் போனால் யாரும் அழ மாட்டார்களா?" என்றாள் விம்மலோடு.


கவி கூரையை பார்த்தான். கண்ணாடி கூரையில் படிந்திருந்த பனிதான் தெரிந்தது. 


'யார் இவ? என்ன இவ? எதிரி இறந்தாலும் அழுறா. இவளை போல ஒருத்தியை நான் இதுவரை பார்த்ததே இல்ல. இவளிடம் நெருங்கிப் பழகினால் விரைவில் நானும் இவளைப் போல பைத்தியம் ஆகி விடுவேன்!' என நினைத்தவன் "அது யார் அன்பே?" என கேட்டான்.


ஆதி யோசனையோடு விழிகளை சுழற்றினாள்.


"எங்கள் உலகில் ஒருவரையொருவர் அப்படிதான் அழைத்துக் கொள்வோம். அன்பே என்றால் அன்புக்குரியவர். அன்புக்கு சொந்தக்காரர்." என்றவள் "நான் இறந்துப் போன என் சகோதர சகோதரிகளை மனதில் அழைத்தேன். உங்களுக்கு எப்படி கேட்டது?" என்றுத் தயக்கமாக கேட்டாள்.


கவியும் குழம்பிப் போனான். 'மனதுக்குள் அழைத்தாளா?' 


"உங்களின் காலில் அடிப்பட்டு உள்ளது!" பதறியபடி அவனின் காலடியில் மண்டியிட்டாள். காயம்பட்ட இடத்தை நடுங்கும் கரங்களோடு வருடி விட்டாள். அவளை தன்னிடமிருந்து விலக்கி தள்ள நினைத்தவன் அவள் தீண்டிய இடங்களில் காயம் குணமாவது கண்டு அதிர்ந்தான்.


அவளின் கலங்கிய விழிகளில் இருந்து கண்ணீர் சொட்டி தரையில் விழுந்தது. அவனின் உடம்பில் இருந்து வழிந்த ரத்தமும் நின்றுப் போனது.


"யா.. யார் நீ?" எனக் கேட்டவனைக் குழப்பத்தோடு நிமிர்ந்துப் பார்த்தாள்.


"நீ கார் குழல் பிசாசா?" 


அவன் கேட்டது மீண்டும் அவளைக் குழப்பியது. தனது குழலைப் பார்த்தாள். அவனுடையதை போல கருப்பாக இல்லாமல் இந்த சத்திய தேவ உலகத்தின் தரையை போல வெண்மையாக இருந்தது.


கவி தான் கேட்ட கேள்வியே தவறு என்றுப் புரிந்துக் கொண்டான். "வெண்குழல் பிசாசு.." என்றான்.


ஆதி எழுந்து நின்றாள்.


"நான் அன்பின் தேவதை ஏந்தலே!" என்றாள்.


"நான் உன் ஏந்தல் இல்லை. இந்த உலகிற்கு மட்டும்தான் ஏந்தல்!" இதை அவளிடம் சொல்லுவது முக்கியமா என்றுக் கூட புரியாமல் சொல்லிக் கொண்டிருந்தான்.


"ஒ.. ஒருவேளை நீ கடவுள் பெண்ணா?" அவளுக்கு கேட்காத சிறு குரலில் கேட்டான்.


"நீ அதற்குள் எப்படி இங்கே வந்தாய் கவி? உன்னை எங்கெங்கோ தேடினேன் நான். இங்கே வந்து ஒளிய வேண்டிய அவசியம் என்ன உனக்கு?" கேலியாக கேட்டபடி அந்த மாளிகைக்குள் நுழைந்தான் வித்யநயன்.


கவி பற்களை அரைத்தான்.


"யாருக்கு பயம்?" என்றான். அவனின் சிவந்த கண்களைக் கண்டு பயப்படுவது போல பாவனை செய்தான் நித்யநயன்.


"சத்திய தேவ உலகின் ஏந்தல் நீ! என்னோடு சண்டையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று காணாமல் போய் விட்டாய். வந்துப் பார்த்தால் இங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறாய்." என்றவன் அதன்பிறகுதான் தரையில் கிடந்த தன் வீரனை கண்டான்.


கவியையும், அவனின் பின்னால் இருந்த ஆதியையும் மாறி மாறிப் பார்த்தான். ஆதியை இங்கிருந்து கடத்த முயல்வது அறிந்துதான் கவி இங்கே வந்திருக்கிறான் என்று யூகித்தான் அவன். கவியின் காலில் இருந்த காயம் குணமானதையும் கண்டான். ஏதோ வித்தியாசமாக நடப்பதை சுலபமாகவே புரிந்துக் கொண்டான். 


"அவளை என்னிடம் கொடுத்து விடு. நான் இந்த உலகத்தை விட்டு அமைதியாக சென்று விடுகிறேன்." என்றான்.


கவி குழப்பத்தோடு ஆதியை கவனித்தான். ஆதி பயந்துப் போய் நின்றிருந்தாள். தரையில் கிடந்தவனை கண்டபிறகு நடக்க இருந்த விபரீதம் அவனுக்கும் புரிந்துப் போனது.


ஆதியை கையை பற்றினான். அவளை பின் நிறுத்தி அவளுக்கு அரணாய் முன்னால் வந்து நின்றான்.


அவளைக் கொல்ல வேண்டும் என்றுதான் இப்போதும் கூட விரும்பினான். ஆனால் அவளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் அது போலதான் உருவாகி இருந்தது. 


"இவளை தொட வேண்டும் என்றால் அதற்கு முன் நீ என்னைக் கொல்ல வேண்டும். ஆனால் அதற்கு முன் நீ இறந்து விடுவாய்." என்ற கவி தன்னை யாரோ அணைப்பது கண்டு உடல் சிலிர்த்து திரும்பிப் பார்த்தான். ஆதி அவனின் தோளில் முகம் பதிந்திருந்தாள். குழந்தையை போல இருந்தது அவளின் பார்வை.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments