Advertisement

Responsive Advertisement

வாழ்வு 1.2

 POV of shakithya..


நான் சாகித்யா. பதினேழு வயது பெண். வகுப்பில் எப்போதும் கடைசி மதிப்பெண் பெறும் முட்டாள் மாணவி.


நம்மை நாமே முட்டாள் என்று சொல்லிக் கொள்ள கூடாதுநான். ஆனால் என் இடத்தில் நீங்கள் இல்லையே! தினமும் இரவு பன்னிரெண்டு வரை விழித்திருந்து படிக்கிறேன். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து விடுகிறேன். ஆனால் எவ்வளவு படித்தாலும் மனதில் பாடம் பதிவதே இல்லை. 


படிக்கும் பொழுதுகளில் அனைத்தும் நினைவிருக்கும். ஆனால் நேரம் வரும் வேளையில் மறந்து விடும்.


அப்பா பிசினஸ் செய்து வருகிறார். அவருக்கு என் மீது மிகவும் பிரியம். ஆனால் இந்த படிப்பில் கோட்டை விடும் காரணத்தால் அவருக்கும் என் மீது கோபம். அவ்வப்போது திட்டி வைப்பார். அம்மா எப்போதும் திட்டுவாள். அழுதபடி வாங்கிக் கொள்வேன். அவளுக்கு என்னை எப்போதுமே பிடிக்காது. எனக்கு சாதிக்க வேண்டும் என்று பெரிய ஆசை இல்லை. இன்று எழுதும் கிளாஸ் டெஸ்டிலாவது மார்க் வாங்கி விட வேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வளவே!


என் பையில் உள்ள சாப்பாடு மதியம் கெட்டுப் போய் விடும். இது சத்தியம். ஆனால் எப்படி என்று எனக்குப் புரியவில்லை. சமையல்கார தாத்தா எப்போதும் நன்றாகதான் சமைத்து தருகிறார். அப்பாவின் சாப்பாடு கெடுவதில்லை. அம்மா எடுத்துச் செல்லும் சாப்பாடும் கெடுவதில்லை. ஒருவேளை எங்கள் பள்ளியின் வெப்ப சூழ்நிலை காரணம் என்றும் பழி சொல்ல முடியாது. எங்களது ஏசி வகுப்பறை. 


"சாகித்யா.." சரோ அழைத்தாள். திரும்பிப் பார்த்தேன். சாலையின் மறுபக்கமிருந்து வந்துக் கொண்டிருந்தாள்.


"சரோ.." கையசைத்தேன். எனது தோழி இவள். என்னை போன்ற முட்டாளுக்கு வாய்த்த புத்திசாலி தோழி. அவளின் அறிவு அதிகம். முதல் நான்கிற்குள் மதிப்பெண் எடுத்து விடுவாள். என்னை எப்படியாவது பரிட்சையில் ஜெயிக்க வைத்து விட வேண்டும் என்று போராடிக் கொண்டிருப்பவள். அவளின் சிரிப்பும் அழகு. அவளின் செல்ல கோபமும் அழகு. எனக்காக பிட் கூட தயாரித்து தந்திருக்கிறாள். ஆனால் என்னால்தான் வெற்றிப் பெற இயலவில்லை. ஆனால் அப்போதும் கூட ஏதாவது சொல்லி என்னை சிரிக்க வைத்து விடுவாள். ஆனால் அவளுக்கும் எனது உணவு கெட்டுப் போவதை பற்றி நான் சொல்லவில்லை. 


அவள் மிகவும் ஒல்லியானவள். அவள் கொண்டு வருவது சிறு டிபன் பாக்ஸ். அவளுக்கு வயிறு நிரம்பினால் போதும் என்பது எனது எண்ணம். அதனால் நான் கெட்டுப் போன உணவை அவள் அறியாமல் உண்டுக் கொண்டிருக்கிறேன். இன்னொரு விந்தை என்னவென்றால் எனது மதிய உணவில் இருந்து வாசம் ஏதும் வராது. வெறும் சுவை மட்டும்தான் கசந்திருக்கும். 


என்னை பார்த்தவள் சாலையில் இறங்கி வந்தாள். அப்போதுதான் நான் கவனித்தேன் இடது பக்கமிருந்து வந்துக் கொண்டிருந்த பேருந்தை.


"சரோ.. வராதே!" என்றுக் கத்த முயன்றேன். ஆனால் வாய் எழவேயில்லை. யாரோ என் கழுத்தைப் பிடித்துக் கொண்டது போல நாக்கிலிருந்து சத்தம் வர மறுத்தது.


சரோ பேருந்தை கவனிக்கவில்லை. புன்னகையோடு என்னைப் பார்த்தபடி வந்தாள். சாலையின் இடது பக்கத்தை கை காட்டினேன். ஆனால் அவள் கவனிக்கவேயில்லை. 


'அவள் என் தோழி.!' சாலையில் இறங்கினேன். அவளை நோக்கி நான் ஓட முயன்ற வேளையில் என்னை யாரோ பின்னால் இழுத்தார்கள். இழுத்தவர்களின் மீது நான் மோதி நின்ற வேளையில் எனது வலது பக்கத்தில் இருந்துக் கார் ஒன்று என்னை கடந்துச் சென்றது. கால் நொடி தப்பியிருந்தாலும் இன்னேரம் காரில் மோதி இறந்திருப்பேன் நான். நூலிழையில் உயிர் தப்பினாலும் இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது. நெஞ்சத்தை பற்றிக் கொண்டேன். வியர்வை முகத்தில் முத்து முத்தாக பூத்து விட்டது.


பயத்தோடு எதிரே பார்த்தேன். பேருந்து நின்று விட்டிருந்தது. பஞ்சர் என்று தெரிந்தது. பேருந்தின் முன் பக்க கண்ணாடியை தடவியது சரோவின் கைகள். என்னைப் பார்த்தபடி ஓடி வந்தாள்.


"சாகித்யா.. என்னாச்சி? காட்.. கொஞ்சம் இல்லன்னா நீ அடிப்பட்டு இருப்ப!" என்றாள் பயத்தோடு.


நான் இன்னமும் பயத்தோடுதான் இருந்தேன். 


சரோ நிமிர்ந்துப் பார்த்தாள்.


"தேங்க்ஸ் சார்!" என்றாள்.


என்னை இந்த தோளில் இருந்து அந்த தோள் வரை வளையமிட்டு அணைந்திருந்த கரம் என்னை விட்டு விலகியது. திரும்பிப் பார்த்தேன். உயரமாக இருந்த மனிதர் ஒருவர் நின்றிருந்தார்.


"கவனமா இரும்மா!" என்று என் தலையை தடவி விட்டு பள்ளியின் கேட்டை தாண்டி உள்ளே நடந்தார். வெள்ளை சட்டையும், பழுப்பு கால்சட்டையும் அணிந்திருந்தார். ஏனோ இவரை பிடித்திருந்தது.


நானும் சரோவும் வகுப்பறையில் பைகளை வைத்துவிட்டு பிரேயரில் வந்து நின்றோம். 


பிரேயர் நடக்க ஆரம்பித்தது. என்னைக் காப்பாற்றிய உயர மனிதர் புவனா டீச்சரின் அருகே நின்றிருந்தார். நான் அவரையே பார்ப்பதை அறிந்ததாலோ என்னவோ என் பக்கம் பார்த்தார். மென்மையாக புன்னகைத்தார். எனக்கு இவரை பார்க்கையில் கடவுளின் மாறுவேசம் போல இருந்தது. அவரின் புன்னகையும் கூட உள் மனம் வரை வருடியது.


பிரேயர் முடிந்தது. ஆனால் நாங்கள் கலைந்து செல்லும் முன் புவனா டீச்சர் மைக்கின் முன் வந்து நின்றார்.


"காலை வணக்கம் குழந்தைகளே! இவர் நமது புது பிரின்சிபால்.!" என்று உயர மனிதரை கை காட்டினார்.


"வாவ்!" என்னை மீறி ஆச்சரியப்பட்டு விட்டேன்.


என் பக்கத்து வரிசையில் நின்றிருந்த சூர்யா என்னை கேலியாக பார்த்தான். அவன் சரியான குரங்கு. வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்துக் கொண்டிருந்தான். அதனாலேயே என்னை இளக்காரமாக பார்ப்பான். 


பிரின்சிபால் பக்கம் பார்வையை திருப்பினேன். இவர் எனக்கு நல்ல சகுனம் போல தெரிந்தார். இனி எனது துரதிர்ஷ்டம் நீங்கும் போல மனது சொன்னது.


"குட் மார்னிங் சில்ரன்ட்ஸ்.. நான் கலையரசன். இனி உங்களுக்கு நான்தான் பிரின்சிபால்‌. உங்களின் தேவைகளையும் குறைகளையும் நீங்க தாராளமா என்கிட்ட வந்துச் சொல்லலாம். அனைவரும் நன்றாக படிக்கணும்ன்னுதான் நானும் ஆசைப்படுறேன்.!" 


எனது முகம் இயல்பாய் வாடி விட்டது. இவர் விரைவில் என்னை வெறுக்கப் போகிறார் என்று புரிந்துப் போனது.


"ஆனா படிப்பு உங்களுக்கு நல்லபடியா வரலன்னா அதை நினைச்சி சோர்ந்துப் போகாம உங்களின் தனி திறமையை கண்டுப் பிடிப்பிங்கன்னு நம்புறேன். எனது பள்ளி மனப்பாடம் செய்யும் மெஷின்களை மட்டுமே உருவாக்காமல் அவரவர் திறமையை வெளிக்கொணரும் ஒரு உண்மையான பள்ளியாக இருக்கும் என்று நம்புகிறேன்!" 


அவர் பேசி முடித்ததும் கை தட்டல்கள் பறந்தது. அவர் சொன்னதில் மனம் மயங்கி நின்று விட்டிருந்தேன் நான். கை தட்டல் ஓசை கேட்டு மனம் விழித்தது. அவசரமாக கையை தட்டினேன். கலையரசன் சார் என்னைக் கண்டு சிறு கேலியோடு சிரிப்பது போலிருந்தது. அவர் என்னை கவனிக்கிறார் என்பது உள்ளுக்குள் பட்டாம்பூச்சிகளை பறக்க விட்டது. 


நான் இன்றைய டெஸ்டில் மார்க் எடுத்து விடுவேன் என்ற நம்பிக்கை வந்து சேர்ந்தது.


வகுப்பறைக்கு வந்து சேர்ந்ததும் ஒரே கூச்சலாக இருந்தது. ஆனால் அடுத்த கால் நிமிடத்தில் வகுப்பாசிரியர் வந்து விட்டார். அனைவரும் கப்சிப்பென்று அமர்ந்து விட்டனர்.


வருகை பதிவேடு முடிந்தது. பாடம் நடந்தது. அவர் நடத்திய அனைத்தும் தெள்ள தெளிவாக புரிந்தது. ஆனால் பரிட்சையில் அல்லவா கோட்டை விடுகிறேன்?


அடுத்த வகுப்பு கணிதம். டீச்சர் வந்துச் சேர்ந்த அடுத்த நிமிடத்திலேயே பாதி பேர் சென்று வராண்டாவில் வரிசையில் அமர வேண்டும் என்று விட்டார்.


நான் தனியாய் வெளியே நடந்தேன். சரோ உள்ளேதான் அமர வேண்டும். கணித ஆசிரியைக்கு எங்களின் நட்பின் அளவு தெரியும் என்பதால் எங்களால் சேர்ந்து அமர்ந்து டெஸ்ட் எழுத முடியாமல் போனது.


ஜெராக்ஸ் பேப்பரை அனைவருக்கும் வினியோகித்தான் சூர்யா. என் அருகே வந்ததும் நக்கலாக பார்த்தபடி கேள்வி தாளை மேலிருந்து கீழே பறக்க விட்டான். என் முகத்தில் வந்து மோதியது பேப்பர்.


"ஜெராக்ஸ்க்கு ஒரு ரூபா. நீ எழுத போற பேப்பருக்கு இரண்டு ரூபா.. எல்லாமே தண்டம் சாகித்யா.. நீ ஏன் டைம் வேஸ்ட் பண்ற? இப்பவே பேப்பரை கசக்கி எறிஞ்சிட்டுப் போய் உன் டேடிக்கிட்ட நாலு எருமை வாங்கி தர சொல்லி அதை மேய்க்கலாம் இல்ல?" என்றான் கண்களை சாய்த்து.


அவன் சற்று அழகாய் இருப்பான் என்று உங்களிடம் முன்பே சொல்லவில்லை நான். அழகு எந்த அளவிற்கு உள்ளதோ அதை விட பத்து மடங்கு அதிகமாக திமிர் உள்ளது அவனுக்கு. அவனின் கொழுப்பை குறைக்கும் சக்தி எனக்கு இல்லாமல் போனதை எண்ணி கவலைக் கொள்கிறேன்.


"உன்னை விட அழகான எருமைகள் எங்கே இருக்கும் சூர்யா?" எனக் கேட்டேன் நான்.


சுற்றும் முற்றும் பார்த்தபடி தன் கையிலிருந்த கேள்வித் தாள்களை என் அருகே சிதற விட்டான். அதை பொறுக்குவது போல குனிந்தான். ஒற்றை கையால் தாள்களை பெருக்கியபடியே எனது கையினை கிள்ளினான். "அம்மா!" சத்தமில்லாமல் கத்தினேன்.


"முட்டாளுக்கு எதுக்கு இவ்வளவு வாய்? உன் வாயை ஒருநாள் நான் உடைக்க போறேன்!" என்றான்.


கேள்வித் தாள்களை எடுத்துக் கொண்டு அடுத்த மாணவனிடம் நகர்ந்தான். வலியில் கண்ணீர் தளும்பியது எனக்கு. இவனுக்கு ஒருநாள் நன்றாக பதிலடி தர போகிறேன் நான்.


புறங்கையால் விழிகளை துடைத்துக் கொண்டேன். 


"எல்லோரும் எழுத ஆரம்பிங்க!" டீச்சர் சொன்னதும் அனைவரும் எழுத ஆரம்பித்தார்கள். 


நான் கேள்வித் தாளை பயத்தோடு பார்த்தேன்.


அதே வேளையில் என் மேல் நிழல் ஒன்று விழுந்தது. திரும்பினேன். பழுப்பு பேண்ட். அண்ணாந்துப் பார்த்தேன். பிரின்சிபால் சார் என்னைப் பார்த்து புருவம் உயர்த்தினார். அவரின் புன்னகை அழகாய் இருந்தது.


"பரிட்சையை எப்போது நமக்கு நாமே வச்சிக்கறதா இருக்கணும். கேள்வியும் நாமாவே இருக்கணும். அதற்கான பதிலையும் நாமே கண்டுப்பிடிக்கணும்!" என்றார் என்னிடம்.


எனக்கு புரியவில்லை. ஆனால் அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்க பிடித்திருந்தது.


ஏனோ எனது உமிழ் நீரின் சுவை அதிகரிப்பது போலிருந்தது. 


புன்னகைத்தேன். அவரும் பதில் புன்னகை செய்தார். அந்த கண்களில் ஏனோ சிறு கவலை தெரிந்தது. என்னால் அதை கண்டறிய முடிந்தது நினைத்து ஆச்சரியமாக இருந்தது. 


கேள்வித் தாளைப் பார்த்தேன். அதிசயத்திலும் அதிசயமாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் நினைவிற்கு வந்தது. மறக்கும் முன் எழுதி விடலாம் என்று அவசரமாக எழுத ஆரம்பித்தேன். கணித ஆசிரியை வாயிலில் வந்து நின்றார். பிரின்சிபால் சார் டீச்சரோடு உரையாட ஆரம்பித்தார்‌. இருவரும் ஏதோ பொதுவாக பேசினார்கள். நேரம் முடியும் முன்பே பதில் மொத்தத்தையும் எழுதி விட்டேன் நான். எழுந்து சென்றுப் பதில் இருந்த பேப்பரை டீச்சரிடம் நீட்டினேன்.


டீச்சர் பேப்பரை திருப்பிப் பார்த்துவிட்டு அதிர்ந்துப் போனார்.


"பிட்டு எங்கே வச்சிருந்த சாகித்யா?" எனக் கேட்டார்‌.


"கேள்வி தவறாக உள்ளது மேடம்.." என்றார் பிரின்சிபால்.


டீச்சர் தயங்கினார்.


"இங்கே நீங்களும் நானும் இருக்கும்போதுதான் சாகித்யா பரிட்சையை எழுதினாள். அப்புறம் எப்படி பிட் அடிச்சிருக்க முடியும்?" எனக் கேட்டார்.


அவர் என் பெயரை சொன்னது எனக்குப் பிடித்திருந்தது‌.


டீச்சர் குழம்பிப் போனார். தயக்கத்தோடு என்னை அமர சொல்லி கை காட்டினார். கலையரசன் சார் என்னை புன்னகையோடு பார்த்துவிட்டு என்னை கடந்துச் சென்றார்.


Kalaiyarasan POV


நான் கலையரசன். போன வருடமே ஐம்பதை கடந்து விட்டேன். எனக்கு ஆத்திரமாக வருகிறது.


என்னால் என் கோபத்தை அடக்கவே முடியவில்லை. என் கோபத்தின் காரணம் எனக்கு நடந்துக் கொண்டிருக்கும் துரோகம்.


கடந்த இரு ஜென்மங்களாக நான் என் துணையில்லாமல் வாழ்ந்து மடிந்துக் கொண்டிருக்கிறேன். போன ஜென்மத்தில் என் இணையின் மரணத்தை நான்கு முறை பார்த்தேன் நான்‌. இந்த ஜென்மத்தில் இரண்டு முறை‌. எங்களது திருமணம் முடிந்த மறுநாள் இதய நோயில் இறந்துப் போன சாகித்யா என் அண்ணனுக்கு மகளாக மீண்டும் பிறந்தாள். அவளை நான் மணம் முடிக்க முடியாதது கூட தவறாய் தோன்றவில்லை. ஆனால் என் கண் முன்பே அவளின் ஒன்பது வயதில் மாடி படியில் தடுமாறி விழுந்து எனது மடியில் படுத்த வண்ணம் உயிரை விட்டாள்.


இதோ இப்போது மூன்றாம் முறையாக பிறந்துள்ளாள். இவளை கண்டுபிடிக்கவே எனக்கு பதினேழு ஆண்டுகள் ஆகி விட்டது. என் கண் முன் மீண்டும் இறந்திருப்பாள். ஆனால் கடைசி நொடியில் காப்பாற்றி விட்டேன்.


சாகித்யாவோடு ஏன் என்னால் இணைய முடியவில்லை என்பது ஒரு குழப்பம். ஆனால் ஏன் நான் பழி வாங்கப்படுகிறேன் என்பது எனது தீர்க்கவியலாத குழப்பம்.


சாகித்யா.. என் ஜீவனின் மற்றொரு பாதி. இவளுக்கு வரும் ஆபத்தை என்னால் முன் கூட்டி அறிய முடியும். இவளை கொஞ்சம் என்னால் படிக்கவும் முடியும். எனது சக்திகளை பயன்படுத்தி இவளின் சிறு சிறு பிரச்சனைகளை என்னால் தீர்க்கவும் முடியும். இவள் என் ஜீவனின் மறுபகுதி என்பதையும் என்னால் உணர முடியும். ஏனெனில் நான் சாதாரண மனித ஆன்மா இல்லை. நான் படிநிலை தாண்டிய சில சக்திகளை பெற்ற ஆன்மா. சாகித்யா ஒவ்வொரு முறையும் அவளின் புண்ணியத்தின் பலனை எனக்கே தந்தாள். நான் ஒவ்வொரு முறை பிறக்கும்போதும் ஆயிரக்கணக்கான உயிர்களின் சாவை தள்ளிப் போட்டிருக்கிறேன். அவர்களின் ஆசிர்வாதங்கள் என அனைத்தும் சேர்ந்துதான் எனது ஆன்மாவின் படிநிலை உயர்ந்துள்ளது. 


ஆனால் இந்த இரு ஜென்மங்களாக உருவாகியுள்ள புது பிரச்சனையை எப்படி சரி செய்வது? தொடர்ந்து ஏழு ஜென்மத்திற்கு என் மனமும் இவளின் மனமும் இணையாமல் போய் விட்டால் பிறகு என் ஆன்மா அழிந்து விடும். என் ஆன்மாவின் மீதி அவள்‌. அதனால் நான் அழிந்த பிறகு அவளின் ஆன்மாவும் அழிந்து விடும். 


இனி என்ன செய்வது? நடக்கும் பிரச்சனையை எப்படி கண்டறிவது? இதன் பிண்ணணியில் உள்ளவர்களை எப்படி அறிவது?


இதையெல்லாம் அடுத்த அத்தியாயத்தில் சொல்றேன் நட்புக்களே..


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

2 Comments