Advertisement

Responsive Advertisement

தேவதை 20

 ஆதியின் மனம் விட்டுப் போனது. இதை விட அவள் அதிகம் உடைந்ததாக நினைவில் இல்லை.


அனைவரும் அவளை ஏமாற்றுகிறார்கள் என்பது மட்டும் புரிந்தது. அன்பின் தேவதையாக இருந்ததால் அவர்கள் யாரையும் அவளால் வெறுக்கவும் முடியவில்லை.


யாரையும் வெறுக்க முடியாமல் போனதன் காரணமாய் அவள் தன்னை வெறுத்தாள். தன்னால்தான் தன் குழந்தைகள் இறந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உணர்ந்து அழுதாள். தான் எதற்கும் உதவாதவள் என்பது புரிந்துக் கதறினாள்.


சமவெளி நோக்கி ஓடியவளை பிடித்து நிறுத்தினாள் ஃபயர்.


"உன்னால் அங்கே செல்ல முடியாது ஆதி. வேற்றுக் கிரகத்தாருக்கு இது நீ இருக்கும் கிரகம் என்றுத் தெரிய கூடாது. பிறகு இதனால் எதிர் காலத்திலும் பிரச்சனைகள் மட்டுமே வரும்." என்றாள்.


"இந்த நொடியில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. பிறகு எதிர்காலம் எப்படி இருந்தால் என்ன? உங்களை கடவுள் என்று நம்பினேன். கை தந்து கழுத்தறுத்தீர்!" என்றவளின் விழிகளில் இருந்து ஆறாக கொட்டியது கண்ணீர். மழையை விட இவளின் கண்ணீர்தான் அதிக அடர்த்தியாக இருந்தது.


"பூமியை தண்ணீரால் நிரப்ப போகிறாள். அப்புறம் எந்த ஜீவனும் வாழ இடம் கிடைக்காது!" எங்கிருந்தோ குரல் கேட்பது கண்டு திரும்பினாள் ஆதி. அக்வா அவளுக்கு பின்னால் தூரமாக நின்றிருந்தார்.


"திட்டமிட்டு என்னை காயப்படுத்துக்கிறீர்கள்." இதை தவிர வேறு என்ன சொல்வதென்று கூட அவளுக்குத் தெரியவில்லை.


"அவர்கள் சென்ற பிறகு நாம் புது மனிதர்களை உருவாக்கலாம்!" ஃபயர் சொன்னது கேட்டு அதிர்ந்தாள் ஆதி.


"அவர்கள் பொம்மைகள் அல்ல!" என்றாள் சிறு குரலில்.


"ஆனால் அவர்கள் தேவர்களும் இல்லை!" கை விரித்தபடி சொன்னார் அக்வா.


ஆதி இடம் வலமாக தலையசைத்தாள்.


"யாரும் வேண்டாம். நானே என் மக்களை காப்பாற்றிக் கொள்கிறேன்!" என்றவள் ஓடினாள். அவள் சமவெளியை அடையும் முன் அவளின் முன்னால் வந்து நின்றாள் ஃபயர்.


"விதியை மாற்றி அமைக்காதே!" என்றாள் அவள்.


"நான் அழிவதா உங்கள் விதி?" ஆதி கேட்டது கடவுள்களுக்கு வருத்தத்தை தந்தது.


"ஆ..ஆ.ஆ.." இறப்பவர்களின் குரல் கேட்டு நடுங்கினாள் ஆதி.


உயிர் போய் வந்தது அவளுக்கு‌. இப்படியே தொடர்ந்தால் மன வலி தாங்காமல் இறந்து விடுவோம் என்று நம்பினாள்.


"அன்பின் தேவதையாக இருப்பது போன்று ஒரு தவறு வேறு ஏதும் இல்லை. அன்பின் தேவதைக்கு குழந்தைகளாக இருப்பது போன்று ஒரு சாபமும் இருக்காது!" என்றாள் பற்று அறுந்த குரலில்.


கடைசி மனிதனின் இதயமும் தனியாய் பிரித்தெடுக்கப்பட்டு மழை ஈர மண்ணில் தூக்கி எறியப்பட்டது. 


"போகலாம் நாம். அடுத்த கிரகத்தில் போய் ஆதியை தேடலாம்!" என்றபடி கப்பலில் ஏறினான் ஒருவன்.


மற்றவர்களும் கப்பல்களில் ஏறினார்கள். ஆகாய கப்பல்கள் அங்கிருந்து புறப்பட்டன.


ஆதியின் கையை விட்டாள் ஃபயர்.


ஆதியால் சமவெளிக்கு செல்ல முடியவில்லை‌. கால்கள் மடிந்து விழுந்தது. வனத்தின் எல்லையிலேயே மண்டியிட்டு விட்டாள்.


சிவப்பு ரத்தம் கலந்த மழை நீர் அவளை நோக்கி ஓடி வந்தது.


அழுது சலித்தாள். வலித்து நொந்தாள். ரத்த வாசம் கலந்த ஈர காற்று அவளின் மேனி தீண்டும் நேரத்தில் நெருப்பை தொட்டது போல உணர்ந்தாள்.


இறந்து கிடந்தவர்களின் உடலைப் பார்த்தாள். 


எல்லாம் முடிந்து விட்டது. இந்த பிரபஞ்சத்தில் விடாமல் துரத்தி அடிக்கப்பட்டாள்‌. பிறரின் சுயநலங்களினால் தன் உணர்வுகளை தொலைத்தாள். யாரின் ஆசைக்கோ இவள் தீனியாகிப் போனாள்.


சிற்பம் வேண்டுமென்று செதுக்கியவர்கள் இரும்பு உளியை தேடாமல் தன்னை போன்ற காற்று உளியை ஏன் தேட வேண்டும் என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.


அவளின் சிறு சிறு சந்தோசங்கள், புன்னகைகள், நிம்மதி என அனைத்தையும் பரிசாக கேட்டார்கள் சுயநலவாதிகள்.


"ஆதி!" மண்டியிட்டு இருந்தவளின் தோளில் வைத்து கை வைத்தார் ஹார்ட்.


"வலிக்கிறது கடவுளே! என்னை கொன்று விடுங்கள்." என்றாள்.


ஃபயர் அதிர்ச்சியோடு அவளின் முன்னால் வந்து நின்றாள்.


"நீ இந்த கிரகத்திற்கு தேவை ஆதி. உன்னால் மட்டும்தான் இங்கே உயிர்களை உருவாக்க முடியும்!" என்றாள்.


கசப்பாக சிரித்தாள் ஆதி.


"எப்படி!? எதிரிகளிடம் தாக்கு பிடிக்க இயலாத எனது குழந்தைகள் உங்களுக்கு எதற்கு? என் குழந்தைகளும் என்னைப் போலவே தினம் கோடி முறை ஏமாற்றப்பட்டு அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு இறந்துப் போக வேண்டுமா? இப்போது இறந்தவர்கள் போதாதா?" என்றாள் கண்ணீர் மல்க.


ஹார்ட் இடம் வலமாக தலையசைத்தார்.


"இது அப்படி இல்லை ஆதி. பால்வெளி அண்ட ஆன்மாக்களுக்கு மரணமில்லை. நீ கோடி முறை அவர்களுக்கு பிறப்பு தர முடியும்!" என்றார். அவளுக்கு சமாதானம் செய்ய முயன்றார்.


ஆதி கேலியாக அவரைப் பார்த்தாள்.


"கோடி பிறப்பு எதற்கு? ஒற்றை பிறப்பு தந்த வலி போதாதா?" என்றாள்.


கவி பனிப் பூக்களை கையில் வைத்து ஆராய்ந்துக் கொண்டிருந்தான். பூர்வ உலகிலிருந்து படையெடுத்து வர போவதாக அங்கிருக்கும் ஒற்றன் செய்தி அனுப்பி இருந்தான்.


சத்திய தேவ உலகில் யாரிடமும் வாள் இல்லை. அனைவருமே தொலைத்து விட்டிருந்தார்கள். படுத்து உறங்கும் வாழ்க்கைக்கு எதற்கு கத்தி என்று நினைத்து விட்டார்கள்.


கவி தனக்கு வந்த செய்தியை அந்நியம் போலதான் நினைத்திருந்தான். என்ன செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. புத்தி சுத்தமாக வேலை செய்யவில்லை. ஆசை ஆதியை அருகே கேட்டது. ஆனால் அவள் எங்கே என்று அவனால் கண்டறிய முடியவில்லை.


அன்பின் தேவ உலகை அழித்ததற்காக வருத்தப்பட்டான். நூலகத்திற்கு முன்பே சென்றிருந்தால் அன்பின் தேவதை யாராவது ஒருத்தியோடு கூடி விதியின் குழந்தையை பெற்று பிரச்சனைகள் எதுவும் வராதபடி செய்திருக்கலாம் என்று நினைத்தான்.


அவன் இப்போதும் ஆதியை விரும்பவில்லை. அவள் தேவைப்பட்டாள். அவளை அரை குறையாக நேசிப்பதற்காக அவளை வெறுக்கத்தான் செய்தான் அவன். அவளின் அன்பையும், அழகான முகத்தையும் வெறுத்தான்.


அவன் சுதந்திரமாக இருக்க விருப்பினான். அன்பு ஒரு பூட்டு என்பது அவனின் கணக்கு.


கழுத்தில் இருந்த பனிப் பூக்களை கையில் எடுத்தான். அவனின் விரல் பட்டு உடைந்தது பனிப் பூக்கள்.


அவனுக்கு வெறுப்பாக இருந்தது. பூக்கள் கூட அவனின் பேச்சை கேட்க மறுத்தன.


மரத்தின் கிளையில் திரும்பிப் படுத்தான்.


"அன்பே!" ஆதியின் குரல் திடீரென்று கேட்கவும் துள்ளி எழுந்தான்.


வந்து விட்டாளா என்று சுற்றும் முற்றும் தேடினான்.


"அன்பே! என் சகோதரர்களே! என் சகோதரிகளே! என்னால் முடியவில்லை. வலி மிகுந்துக் கொண்டே இருக்கிறது. தத்துவம் பேசும் இக்கடவுளுக்கு எனது வலி தெரியவில்லை. நீங்கள் எனக்குள் ஐக்கியமாகியது உண்மையென்றால் என்னை உங்களோடு ஏற்றுக் கொள்ளுங்களேன். என்னால் இறக்க முடியவில்லை. வழி தெரியவில்லை. மரணத்தை எப்படி கொண்டு வருவது என்று யாரேனும் வந்து எனக்கு சொல்லிச் செல்லுங்களேன்!" அவளின் குரல் அவனின் சமீபத்தில் கேட்டது. ஆனால் அவள் தென்படவில்லை. எங்கே பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது. 


அவளின் வலி அறிந்து தனக்குள் துடித்தான். உடம்பும் மனமும் என்னவோ செய்தது அவனுக்கு.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments