Advertisement

Responsive Advertisement

தேவதை 21

 ஆதியின் சோகம் கவியின் மனதைக் கனத்துப் போக செய்தது.


"ஆதி நீ எங்கே இருக்க?" எனக் கேட்டான் காற்றோடு.


"அன்பே! என் வலியை போகச் செய்ய மாட்டீர்களா?" என்றாள் ஆதி.


"ஆனா நீ எங்கே இருக்கன்னு தெரியலையே ஆதி!" குழம்பினான் கவி.


"வலிக்குது!" என்றாள்.


"ஆதி.." கத்தினான். அவனின் முன்னால் இருந்த காட்சிகள் அனைத்தும் மாறிப் போனது.


மழை பெய்துக் கொண்டிருந்த தண்ணீர் கிரகம் ஒன்றில் இருந்தான். வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட அவ்வுலகை சுற்றிப் பார்த்தான். எங்கே இருக்கிறோம் என்று அவனுக்கு விளங்கவில்லை.


"ஆஆஆஆ.." ஆதியின் கத்தல் சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசை நோக்கி ஓடினான். 


வனம் ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு மண் மேட்டில் மண்டியிட்டு இருந்தாள் ஆதி. அதிர்ந்து போய் அவளிடம் ஓடினான்.


கடவுள்கள் அதற்கும் முன்பே அவ்விடத்தை விட்டு கிளம்பி விட்டிருந்தார்கள்.


"விதிப்படிதான் அனைத்தும் நடக்கும்!" என்றார் ஹார்ட்.


"என் பிள்ளைகள் பிரபஞ்சத்தின் மற்ற ஜீவராசிகளை போல இயந்திரங்களாக இருக்க கூடாது. ஆனால் இயந்திரம் போல மனதை மாற்றும் அளவுக்கு வலிமை உள்ளவர்களாக இருக்க வேண்டும். என் மக்களை நான் விரும்பியது போலவே நிச்சயம் உருவாக்குவேன்!" என்றார் அவர்.


ஆதி தரையில் கை பதித்து இருந்தாள். கையை மோதிச் செல்லும் ரத்த ஆற்றில் அவளின் கண்ணீரும் கலந்தது.


"என் குழந்தைகள்!" என்றாள் அழுகையோடு.


"ஆதி!" அவனின் குரல் கேட்டு நிமிர்ந்தாள். விழிகளில் அன்பு இல்லை. சோகம் மட்டும் கடலளவு இருந்தது.‌ அவனால் இவளை காணவே முடியவில்லை. அவ்வளவு இம்சையாக இருந்தது.


"ஆதி என்ன ஆச்சி?" எனக் கேட்டான்.


"அன்பின் தேவதை இல்லையா? அதனால்தான் அனைவரும் என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.!" என்றாள் வெறுப்பாக.


கவிக்கு புரியவில்லை.


"என்னாச்சி?" என்றான் மீண்டும்.


"அங்கே இறந்து கிடப்பவர்கள் அனைவரும் நான் உருவாக்கிய எனது குழந்தைகள்!" என்றாள்.


கவி அவளை அதிர்ச்சியோடு பார்த்தான். இவளுக்கு எதற்கு இவ்வளவு பெரிய வேலை என்று நினைத்தான். அவள் கை காட்டிய திசையில் நடந்தான்.


அவள் ஒரு தேவதை. அவளுக்கான வேலை பிரபஞ்சத்தில் அன்பை பரவ செய்வது மட்டும்தான். அவளுக்கு ஏன் இந்த உயிர் உருவாக்கும் வேலை என்று நினைத்தான்.


ஆனால் இறந்து கிடந்தவர்களை கண்டவனுக்கு யோசனை நின்றுப் போனது.


அனைவரும் அழகான மனிதர்கள். அவனையே அச்சில் வார்த்தது போல இருந்தார்கள். நின்ற இடத்திலிருந்து திரும்பி ஆதியை பார்த்தான். அழுதுக் கொண்டிருந்தாள். மீண்டும் இவர்கள் புறம் திரும்பினான். கண்கள் கலங்கியது அவனுக்கு.


வாழ்நாளில் முதல் முறையாக அவனுக்கும் கண்ணீர் வந்தது. அவர்களை அவளின் குழந்தைகளாக நினைக்க முடியவில்லை. அக்குழந்தைகள் அவனுக்கும் சொந்தமானது போல இருந்தது. அவனை நினைத்து உருவாக்கினாள். அவனுக்கும் சொந்தமானவர்கள்தானே!?


அவ்வளவு அழகு. இறந்து கிடந்த ஒருவனின் விழிகள் திறந்து இருந்தது. அந்த விழிகளில் மரணிக்காத அன்பு ஆழமாக கிடந்தது. கவியின் கண்ணீர் கன்னங்கள் தாண்டியது.


ஒரு உலகத்தையே அழித்தவன். சம்பந்தம் இல்லாத கிரகத்தில் கண்ணீர் வடித்தான்.


பெண் ஒருத்தியின் அருகே மண்டியிட்டான். அவளின் கையை பற்றினான். சில்லிட்ட கரங்களில் பூ போன்ற மென்மையை இன்னமும் காண முடிந்தது.


அன்பின் தேவ தேவதைகள் நினைத்திருந்தால் அவனிடமிருந்து தப்பித்து இருக்க முடியும். அவர்களின் சக்தியை பயன்படுத்தி சத்திய தேவர்களை கொன்றிருக்கவும் முடியும். ஆனால் இவர்கள். பிறந்த குழந்தைகளை போல. இவர்களை கொல்வது இரக்கமற்ற செயல் என்று நினைத்தான்.


'ஹாஹாஹா...' யாரோ சிரிக்கும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான்.


மழையின் வடிவில் ஒரு உருவம் நின்றிருந்தது.


"உனக்கு கருணையா?" என்றது.


கவி உதட்டை கடித்தான்.


"இவர்கள் இறக்க காரணம் உனது பாவங்கள்தான்!" என்றது அது.


கவி அதிர்ச்சியோடு அந்த உருவத்தைப் பார்த்தான்.


"நீ ஒரு உலகத்தையே அழித்தாய். அதன் பாவமாய் உனது குழந்தைகள் அனைவரும் இப்படிதான் மாண்டுப் போவார்கள். ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் இந்த விதி மாறாது.


உனது உருவத்தை யாரெல்லாம் தங்களின் உருவமாக கொள்கிறார்களோ அவர்கள் அனைவரும் பரிதாபமாக மாண்டுப் போவார்கள். கவியின் வாரிசுகள் அழிவை தங்களின் கருவில் சுமந்து பிறப்பவர்கள்!" என்றது.


கவி இடம் வலமாக தலையசைத்தான்.


சிரித்தது அந்த உருவம். "தனது வாரிசு என்ற ஒன்று வந்ததும் உனது கல் மனதில் மாற்றமா? எதற்கு கவி? நீ ஆசைப்பட்டது போல ஆதி அழிந்துக் கொண்டிருக்கிறாள். நீ சென்று பெண்களோடும் ஆண்களோடும் சல்லாபி. நீ அதற்காக பிறந்தவன்தானே!?" என்றது.


கவி தலையைப் பற்றினான். அவனால் இந்த பழியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


"நான் கவி.. சத்திய தேவ உலகின் ஏந்தல். எனது வாரிசுகளுக்கு அழிவு கிடையாது. எனது வாரிசுகள் யாரிடமும் தோற்க மாட்டார்கள்!" என்றுக் கத்தினான்.


ஆதி வலியோடு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் சொல்வது கேட்டு சிரித்தாள். வலி சிரிப்பு.


"உனது வாரிசுகள் தோற்க மாட்டார்கள். ஆனால் எனது வாரிசுகள் அழிவார்கள், என்னைப் போலவே! வாழ தகுதி இல்லாத தேவதை நான்." என்றாள் சிறு குரலில். 


இவள் சொன்னது அவனின் செவிகளில் விழுந்தது. இவளிடம் ஓடி வந்தான். இவளின் முன் மண்டியிட்டான்.


"ஆதி அழாமல் இரு. நம்மால் இவர்களை பிழைக்க வைக்க இயலுமா என்று பார்க்கிறேன்!" என்றான்.


கேலியாக பார்த்தவள் "இறந்தவர்களை பிழைக்க வைக்கப் போகிறீர்களா? அப்படியானால் என் சகோதரர்களையும் சகோதரிகளையும் மீட்டுக் கொண்டு வாருங்கள்." என்றாள்.


கவிக்கு கோபமாக வந்தது.


"முட்டாள். அவர்கள் அழிந்துப் போனார்கள். ஆனால் இவர்கள்.."


"இவர்களும் அழிந்துதான் போனார்கள் ஏந்தலே!" என்று கதறியவள் ‌"நீங்கள் இதுவரை என்னை ஏமாற்றியது போதாதா? நீங்கள் இதுவரை எனக்கு தந்த தண்டனை போதாதா? என்னை கொன்று விடுங்கள். நிம்மதியாய் அழிந்துப் போவேன். இந்த சுயநல பிரபஞ்சத்தில் என்னால் ஒரு நாள் கூட வாழ இயலாது என்று புரிந்துக் கொண்டேன். அன்பு எப்போதும் இப்படி ஏமாற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். நான்தான் முட்டாள். எனது அன்பையும் நேசிக்கும் ஒரு கூட்டம் இருக்கும் என்று நம்பி விட்டேன்!" என்றவளின் தோளைப் பற்றினான் அவன்.


"போதும். உனது கதறலையும் உலறலையும் கேட்க எனக்குப் பிடிக்கவில்லை. நீ என்னை நினைத்து இந்த மனிதர்களை உருவாக்கி உள்ளாய். அதனால் விதிப்படி இவர்கள் எனக்கும் குழந்தைகள். இப்போதும் உன் அன்பின் தேவ வம்சம் மீதோ உன் மீதோ உள்ள அன்பால் நான் இதை செய்யவில்லை. அவர்கள் எனது வாரிசுகள். அவர்களை வாழ வைக்கும் பொறுப்பு என்னிடம் உள்ளதால்தான் இதை செய்கிறேன். உன் அழுகையை வேறு எங்கேனும் சென்று அழு. அதற்கு முன் இவர்களை கொன்றுப் போட்டவர்கள் யாரென்றுச் சொல். அவர்களை அழிக்காமல் எனக்கு தூக்கம் வராது!" என்றான்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments