Advertisement

Responsive Advertisement

தேவதை 22

 நெவத்ஸி கிரகம் போர்க்களமாக இருந்தது. அவர்களின் கண்டுபிடிப்புகள், அவர்களின் போர் கருவிகள் என்று எதுவுமே அவர்களுக்கு உதவி செய்யவில்லை.


பெரிய பெரிய கட்டிடங்கள் கூட இடிந்து விழுந்தது. பாதாள சுரங்கங்கள் அனைத்தும் மண்ணில் மூடியது.


அங்கிருந்த உயர்ந்த கட்டிடம்‌ ஒன்றின் மீது நின்றிருந்தான் கவி. அவனின் கத்தி அவனிடம் இருந்தது. பல வருடங்களாக தொடாத கத்தி. சத்திய தேவ உலகில் எங்கோ தொலைத்து விட்ட கத்தி. ஆனால் இப்போது கண்டுபிடித்திருந்தான். அவ்வளவு கோபம். அவ்வளவு வெறி. 


கத்தி கை சேர்ந்த உடன் நெவத்ஸி கிரகத்திற்கு வந்தவன் அந்த கிரகத்தை அழிக்க ஆரம்பித்தான்.


நெவத்ஸி கிரகத்தார் உயர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் மனிதர்கள் மட்டும்தான். இவனோ தேவன். இவனின் கோபத்தின் முன்னும் வீரத்தின் முன்னும் அவர்களால் நொடி நேரம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை.


"எனது வாரிசுகளுக்காக இந்த கொலை!" என்று கர்ஜித்தான். ஆனால் ஆதியின் கண்ணீர்தான் காரணம் என்ற உண்மையை தன்னிடம் ஒத்துக் கொள்ள மறுத்தான்.


அவளின் சோகம் இவனை தாக்கி விட்டது. இறந்து கிடந்த பூமி மனிதர்களின் முகம் யுகம் யுகமாக அவன் சேர்த்து வைத்திருந்த அத்தனை ஆணவத்தையும் அடித்து நொறுக்கி விட்டது.


"எங்களை விட்டு விடுங்கள்!" என்றான் ஒரு நெவத்ஸியன்.


"அழிந்து போன என் மக்களை திருப்பி கொடு!" என்றான் இவன்.


அவன் புரியாமல் விழித்தான்.


"உங்களின் அழிவுக்காக நீங்கள் அழிகிறீர்கள்!" என்றவன் தன் கத்தியை மீண்டும் காட்டினான்.


நெவத்ஸியர் கதிர் இயக்க ஆயுதங்களை கண்டறிந்து விட்டிருந்தார்கள். ஆனால் கவியினுடைய கத்தியை போல வரவில்லை அவர்களுடையது. இவனுடைய கத்தியிலிருந்து வந்த சக்தி கட்டிடங்களை கூட தூள் தூளாக சிதற செய்தது.


"தேவ பதவியில் இருந்துக் கொண்டு எங்களை கொல்லலாமா நீங்கள்?" என்றாள் ஒருத்தி.


கலகலவென நகைத்தான். "நான் தேவன் அல்ல. கொடூரன். எனது வீரர்கள் இருவர் இறந்ததற்காகவே ஒரு தேவ உலகத்தையே அழித்தவன். இன்று என் மக்களை அழித்த உங்களை விடுவேனே?" நெஞ்சை தட்டிக் கொண்டு உரத்த குரலில் கேட்டான்.


"இது ஆதிக்காக! அவளின் கண்ணீருக்காக!" என்றவன் எறும்பாக தெரிந்த அத்தனை பேரையும் அங்கேயே கொன்று போட்டான்.


அந்த கிரகத்தில் முக்கால்வாசி பேர் இறந்துப் போனார்கள். கோர தாண்டவம் ஆடியிருந்தான். ஆடியவன் முழு கிரகத்தையும் அப்போதே அழித்து இருக்கலாம். ஆனால் ஆதியின் அருகாமைக்காக வந்த வேலையை முக்கால்வாசி மட்டும் முடித்துவிட்டு பூமியை நோக்கி கிளம்பினான்.


கவி இங்கே வந்ததும், அவன் இங்கே செய்த செயல்களும் நெவத்ஸி கிரக மக்களின் நெஞ்சில் விஷமாக விழுந்து விட்டது.


அவர்களுக்கு கடவுள் மீதே நம்பிக்கை இல்லை. இந்த தேவனுக்கு பயந்து அடங்கிப் போய் விடுவார்களா? 


ஐநூறு வருடங்கள் கடந்து விட்டது. நெவத்ஸி கிரகத்தின் ஒவ்வொரு ஊரிலும், தெருவிலும், வீட்டிலும் ஆதி மற்றும் கவியின் புகைப்படங்கள் இருந்தன.


அவர்கள் இருவரும் இக்கிரகத்தின் பகைவர்கள் என்று அவர்களின் வாரிசுகளுக்கு பாடம் எடுக்கப் பட்டன.


"நம் கிரகத்தை அழித்தவர்களை நாமும் அழிக்க வேண்டும். இந்த நெவத்ஸி கிரகத்தின் புகழ் இந்த பிரபஞ்சம் எங்கும் பரவ வேண்டும். பிரபஞ்சம் மொத்தமும் நமது காலடியில் வீழ வேண்டும்!" என்பது நெவத்ஸி கிரகத்தாரின் தினசரி சத்திய பிரமாணமாக இருந்தது.


பூமி கிரகத்தில்..


ஆதி தனது மர குகையில் படுத்திருந்தாள். ஐநூறு ஆண்டுகளாக படுத்துக் கொண்டேதான் இருக்கிறாள். அவளின் சோகம் அந்த பூமியின் காற்றில் ரத்தமும் சதையுமாக கலந்து விட்டிருந்தது. அவளின் மனதின் துக்கம் அந்த மண்ணில் கலந்து விட்டிருந்தது. ஆதியின் பெருமூச்சு ஒன்று கூடியதில் அவளின் சோகத்திற்கு பதிலாக அந்த கிரகத்தில் புதிதாக வெப்ப ஆறுகள் ஓட ஆரம்பித்தன.


அவளின் வருத்தமெல்லாம் சேர்ந்து பூமியின் மைய பகுதியில் இருந்த நெருப்பு குழம்பை வெளியே ஊற்றெடுக்க வைத்து விட்டன. பூமியின் மேற் பகுதிகளில் ஆறாய் ஓடின அந்த நெருப்பு குழம்புகள். குளமாய் நின்றன. கடலோடு கலந்தன. சமவெளிகளில் ஓடி அங்கிருந்து விலங்குகளை காவு வாங்கின.


மடிந்துக் கொண்டிருந்த விலங்குகளை பற்றி கூட அறியாமல் சோகத்தில் மூழ்கிய கிடந்தாள் ஆதி. அவளின் மூடிய கண்கள் எப்போது திறக்குமென்று அதே குகையில் ஒரு மூலையில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் கவி.


இந்த ஐநூறு வருடங்களும் அவனுக்கு சலிப்பை தந்து விட்டன. அவன் தன்னிலை இழந்து போய் விட்டான். படுத்து கிடந்தவளின் புன்சிரிப்பில்தான் தனது அடுத்த நொடி உயிர் பெறும் என்ற எண்ணத்தோடு காத்திருந்தான்.


அவன் அவளை அழைக்கவில்லை. நான் வந்துள்ளதாக அவளிடம் சொல்லவில்லை. மௌனமாக இருந்தான். அதுதான் பிடித்திருந்தது. அவனுக்கு யாரிடமும் கெஞ்சி பழக்கமில்லை. 


விலங்குகளின் ஓலக்குரல் கேட்டு அவ்வப்போது சென்று அவைகளை நெருப்பில் இருந்து காப்பாற்றுவான். மற்ற நேரங்களில் குகையில் அதே இடத்தில் சிலை போல் அமர்ந்திருப்பான்.


ஆதி அவ்வப்போது அழுவாள். சில நேரங்களில் மௌனமாய் கண்ணீர் மட்டும் விடுவாள். சில நேரங்களில் அன்பே என்று அழைத்து கதறுவாள். ஆனால் கண் மட்டும் திறக்கவே இல்லை. அவளுக்கு வந்துள்ளது அன்பின் காரணமான நோய் என்று நினைத்தான் கவி.


ஆனால் அதை எப்படி சரி செய்வது என்று அவனுக்கு தெரியவில்லை. அவளே தெளிந்து விடுவாள் என்று காத்திருந்தான். 


கவி பூமிக்கு வந்தது இயனிக்கும், வித்யநயனுக்கும் தெரியவில்லை. எங்கோ சென்று செத்து தொலைந்து விட்டான் போல என்று நினைத்தார்கள் அவர்கள்.


அவர்கள் அதனாலேயே சத்திய தேவ உலகத்தை பழி வாங்காமல் விட்டு விட்டனர். சத்திய தேவர்கள் அதே பழைய சோகத்தில்தான் மூழ்கி கிடந்தார்கள். கிரகமே சோம்பலில் இருந்தது. 


நாட்கள் நகர்ந்தது. பூமியில் இருந்து பல மிருகங்கள் நெருப்பின் காரணமாக மாண்டு போய் விட்டன.‌ இருந்த மற்ற மிருகங்களும் சொற்பமாகதான் இருந்தன. நெருப்பு குழம்பில் இருந்து வெளியான காற்றிலிருந்து உருவாகிய அமில மழையில் நனைந்து பல பறவை இனங்களும் அழிந்துப் போய் விட்டன.


கவிக்கு வருத்தமாக இருந்தது. இறந்த உயிரனங்களை கண்டு வெம்பி கொண்டிருந்தான். அவனுக்கு ஆதியின் மீதுதான் கோபம் வந்தது. 


அவளிடம் கோபத்தை வெளிக்காட்ட இயலாமல் வனத்தை விட்டு வெளியே நடந்தான். வனத்தின் வெளி ஓரத்தில் இருந்த ஒரு மரத்தின் கிளையில் வந்து அமர்ந்தான். பனி கொஞ்சமாக பொழிந்திருந்தது. சத்திய தேவ உலகத்தை நினைத்து பெருமூச்சு விட்டான்.


"அதே பழைய கவலையா?" கேள்வி கேட்ட பறவையை திரும்பிப் பார்த்தான். அது ஓர் அழகான சக்கரவாகம். 


"ஆமாம்!"


"எங்கள் அரசியை சமாதானம் செய்யுங்களேன்!" என்றது அப்பறவை அவனின் முன்னால் வந்து நின்று சிறகடித்தபடி.


"அவளை எப்படி சமாதானம் செய்வது? நான் ஒரு சத்திய தேவன். அதுவும் ஏந்தல். ஏந்தல்கள் எப்போதும் தங்களது கர்வத்தை விட்டுத் தர மாட்டார்கள்.!" என்றான்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW‌



Post a Comment

0 Comments