அந்த சக்கரவாகம் கவியின் பதிலுக்கு சிரித்தது.
"நீங்கள் ஏந்தல். ஏந்தலின் வேலை தன் உலகை காப்பதே. உலகம் காக்க ஆதி வேண்டும். அப்படியென்றால் நீங்கள் ஆதியிடம் கெஞ்சினாலும் கூட அதுவும் ஏந்தலின் பணியில் ஒன்றாகதானே இருக்கும்?" எனக் கேட்டது.
கவி யோசித்தான்.
"ஆனால் நான் வீரத்தின் விளை நிலம்!"
"மன்னிக்கவும் ஏந்தலே! வீரமும் அன்பின் முன்பே மண்டியிடும் என்பதே இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை விதி. ஆனால் இங்கே அனைவரும் ஆதியை துன்புறுத்துகிறீர்கள். அவள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் கடைசி அன்பின் தேவதை. அவளின் மனம் மிகவும் விரிசல் விட்டு உள்ளது. அதிகம் உடைந்தாளானால் பிறகு அன்பு முழுதாய் தீர்ந்துப் போகும். இந்த பிரபஞ்சமும் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போக ஆரம்பிக்கும். நீ கெஞ்ச மறுக்கும் ஒற்றை காரணத்தால் இந்த பிரபஞ்சமே முடிவுக்கு வர போகிறது. வாழட்டும் உன் வீரமும் ரோசமும்!" என்ற பறவை அங்கிருந்து பறந்து சென்றது.
கவி குழம்பினான். உண்மையிலேயே இந்த பிரபஞ்சமும் சேர்ந்து அழிய போகிறதா என்று பயந்தான். ஆனால் இத்தனை விசயங்கள் இந்த சக்கரவாகத்துக்கு எப்படி தெரியும் என்று யோசித்துக் குழம்பினான்.
வானம் தாண்டி பறந்தது அந்த சக்கரவாகம். பிரபஞ்சத்தின் வீதிக்கு வந்ததும் பறவையாக இருந்த ஃபயர் தனது பழைய உருவத்திற்கு வந்தாள்.
"ஒரு உலகத்தை உருவாக்க எவ்வளவு மெனக்கெட வேண்டி உள்ளது!? அப்பப்பா.. ஆனால் இத்தனை செய்தும் கூட வருங்கால மனிதர்கள் எங்களை குறை சொல்வதிலேயே காலத்தை கடத்த போகிறார்கள் என்பதுதான் சற்று கவலையாக உள்ளது!" என்றாள்.
"காப்பாற்றுங்கள்!" குரல் கேட்டு ஓடினான் கவி.
மாமத யானை ஒன்று பனியினுள் புதைந்துக் கொண்டிருந்தது. பூமியில் இருந்த கடைசி மாமத யானை அது. கவி ஓடி சென்று அதன் தும்பிக்கையை பற்றினான்.
"சிரியா.. உனக்கு ஒன்றும் ஆகாது. நான் உன்னை காப்பாற்றுகிறேன்!" என்றபடி அதை மேலே இழுத்தான்.
சிரியா சிரமப்பட்டு மேலே வந்தது.
"என்ன ஆயிற்று?"
"பனி சரிவு ஏந்தலே! அரசியாரின் மன வருத்தத்தால் ஒரு பக்கம் எரிமலைகள் வெடித்து சிதறுகின்றன. அதன் எதிரொலியாய் இங்கே பனிசரிவு.!" என்றது அந்த யானை.
யானையின் நீண்டிருந்த தந்தத்தை தடவி தந்தான் கவி. அது ஒரு அழகான யானை. அதன் ரோமங்கள் மீதும் தந்தத்தின் மீதும் அடிக்கடி வருடி தருவான் கவி. இந்த புவியில் அவனுக்கு நல்ல தோழன் போல பழகி வந்தது அந்த யானை.
"நான்தான் உன்னை மீட்டு விட்டேனே சிரியா. உனக்கு இனி பிரச்சனை இல்லை!" என்றான் கவி.
சோகத்தில் முகம் வாடியது சிரியாவுக்கு.
"இல்லை ஏந்தலே. நான் கடைசி நேரத்தில் பயத்தில் கத்தி விட்டேன். எனக்கு வாழவே பிடிக்கவில்லை!" என்றது.
அதிர்ச்சியில் யானையை பார்த்தான் கவி.
"ஏன் சிரியா? நான் உன் மீது பாசம் கொண்டுள்ளேன்!"
"நான் ஓர் அனாதை ஏந்தலே! இவ்வளவு பெரிய உலகம். ஆனால் நான் மட்டும்தான் இங்கே ஒரு மாமத யானை. எனக்கு இணை இல்லை. நண்பர் இல்லை. சொந்தம் இல்லை. அனாதையாக இருப்பது வருத்தமளிக்கிறது ஏந்தலே!" என்றது.
கவி ஆதரவாக அதன் மேனியை தடவி தந்தான்.
"ஓர் இனம் அழியலாம். ஆனால் அந்த அழியும் இனத்தின் கடைசி ஆளாக நாம் இருக்கவே கூடாது ஏந்தலே. அந்த மொத்த இனத்தின் அழிவின் வலியையும் இந்த கடைசி ஆளின் தோளில் இறக்கி வைத்து விடுகிறது விதி! எனக்கே வாழ பிடிக்கவில்லை. பாவம் எங்கள் அரசி. எப்படி இத்தனை ஆண்டுகளை அனாதையாக கடந்தார்களோ!" என்றது கவலையாக.
அனைவரும் ஆதியை பற்றியே பேசுவதாக தோன்றியது கவிக்கு.
ஆனால் சிரியா சொல்வதில் உண்மை இருப்பது போலவும் இருந்தது. ஓர் இனத்தின் கடைசி ஆளாக வாழ்வது உண்மையிலேயே மாபெரும் சாபம்தான் என்று தோன்றியது.
'அடப்பாவி! மாபெரும் சாபமா? நீ கொன்றாய். நீ அழித்தாய் என்று சொல். அவளுக்கு எந்த சாபமும் இல்லை. உனது அகங்காரமே அவளை அனாதையாக நிறுத்தியது!' என்றது அவனுக்குள் இருந்த குரல்.
"எங்கள் தேவி அனாதையாக இருக்க பயந்து மனிதர்களை உருவாக்கினார்கள். ஆனால் அந்த மனிதர்களையும் அந்நியர்கள் அழித்து விட்டார்கள். எங்கள் தேவிக்கு எப்போதும் நட்டமே நிகழ்கிறது!" என்று புலம்பியபடி பனியில் அடி வைத்து நடந்தது சிரியா.
கவி யோசனையோடு வனத்தை நோக்கி நடந்தான்.
"அவள் அனாதையாக இருக்க பிடிக்காமல் மனிதர்களை உருவாக்கினாள் என்பது உண்மையானால் அவள் ஏன் அவளின் சகோதர சகோதரிகளை போன்ற உருவத்தில் மனிதர்களை உருவாக்காமல் என்னைப் போல உருவாக்கினாள்?" என தன்னிடமே கேட்டான் கவி.
'அவள் உன்னை நேசிக்கிறாள்!' என்றது மனதின் குரல்.
"அவள் ஓர் அன்பின் தேவதை. அவளுக்கு நேசிப்பதுதான் பணியே. அவளை என்னை மட்டுமல்ல அனைவரையும்தான் நேசிக்கிறாள்." என்றான்.
'ஆனால் அனைவரையும் நேசித்தும் உன்னை போல மனிதர்களை உருவாக்கினா. முட்டாள் அவள்!' மனதின் குரலுக்கு பதில் அளிக்காமல் குகையினை நோக்கி நடந்தான்.
தூரத்தில் செல்லும்போதே ஆதியின் வாசம் வந்தது.
குகையினுள் நுழைந்தவன் ஆதியின் அருகே சென்று அமர்ந்தான்.
பூ மெத்தையில் சுருண்டு படுத்திருந்தாள். அவளின் தோளில் கை பதித்தான்.
"ஆதி எழு.. உனது சிரமத்தை தீர்த்து வைக்க நினைக்கிறேன் நான். உனக்கு என்ன தேவையென்று கேள்!"
இத்தனை நூறு ஆண்டுகள் கடந்த பிறகு இவனுக்கு ஏன் தன் மீது அக்கறை என்ற எண்ணம்தான் ஆதிக்கு முதலில் வந்தது. அவளால் இப்போது யாரையும் நம்பவே முடியவில்லை. அவளுக்குள் இருந்த அன்பு அப்படியேதான் இருந்தது. ஆனால் அனைவரும் ஏமாற்றுவார்கள் என்ற எண்ணமும் ஆழமாக பதிந்திருந்தது.
"எழு ஆதி. என்னோடு ஏதாவது பேசு. நான் உனக்காக எனது சத்திய தேவ உலகத்தை விட்டுவிட்டு வந்துள்ளேன்."
ஆதிக்கு ஆச்சரியமாக இருந்தது. எதற்காக விட்டு வந்தான் என்றுக் கேட்க ஆவல் பிறந்தது.
"உனது வலியை என்னால் தாங்க இயவில்லை ஆதி. உன் வேதனை தீர்க்க என்னால் முடிந்த அளவு முயல்கிறேன். உனக்கு என்ன வேண்டுமென்று சொல்!" என்றான். குரலில் கெஞ்சல் இல்லாதவாறு பார்த்துக் கொண்டான்.
ஆதி எழுந்து அமர்ந்தாள். அவளின் கண்கள் அவனை கண்டு மின்னியது. அவளின் கண்களின் ஆழத்தில் தெரிந்த அன்பை அவனால் இனம் கண்டறிய முடிந்தது.
"எனக்கு என் பிள்ளைகள் வேண்டும்." என்றாள் கெஞ்சலாக.
அவளின் கெஞ்சல் அவனை நடுங்க செய்தது. அவன் ஒத்துக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் அவனை அசைத்துப் பார்க்கும் வித்தை அவளின் மொழிகளிலும் கண்களிலும் இருந்தது.
"ஆனால் அது எப்படி சாத்தியம்?" என்றவனிடம் 'இந்த பிரபஞ்ச கடவுள்களிடம் சென்று நான்கு ஆன்மாக்களை வாங்கி வா!' என்றது உள்மனம்.
ஆனால் கடவுள்களை சந்திக்க அவனுக்கு சற்று சலிப்பாக இருந்தது.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
VOTE
COMMENT
SHARE
FOLLOW
0 Comments