Advertisement

Responsive Advertisement

தேவதை 25

 சானு அழகான இளைஞன். ஆதியின் பிரதிபிம்பம் போல இருப்பவன். அவனின் அழகான கண்களுக்கு பூமியில் இருந்த பறவைகளும் விலங்குகளும் அடிமையாக இருந்தன. 


ஆதி தனது அன்பை அவர்களுக்கு கடத்தவில்லை. ஆனால் அவளின் வாசம் கலந்து கலந்து அங்கிருந்த அனைவரின் கண்களிலும் ஒளியாய் மாறி விட்டது அன்பு.


நீங்கள் நினைப்பீர்கள் அன்பு அவர்களிடம் இருப்பது நன்மைதானே என்று. இல்லை. அந்த அன்பின் தீமை எந்த அளவுக்கானது என்பதை நீங்கள் அறியவில்லை.


அவர்களின் மனதிலோ ரத்தத்திலோ அன்பு கிடையாது. அதுதான் உண்மை. கண்களில் மட்டுமே அன்பு குடியிருந்தது. இப்போதைய தாமரை இலையின் தண்ணீர் போலதான் அவர்களின் அன்பும்.


ஆதியின் பலவீனம் அவளை மீண்டும் சாய்த்தது. அவள் அந்த பிள்ளைகள் மீது அன்பு காட்ட ஆரம்பித்து கடைசியில் அவர்களை அளவுக்கு அதிகமாகவே நேசிக்க ஆரம்பித்து விட்டாள்.


அவர்களை தன் ஜீவனின் மறு பகுதியாக பார்க்க ஆரம்பித்தாள்‌. அவர்களின் நலனில் பெரும் அக்கறை கொண்டிருந்தாள். அவர்களுக்கு அபூர்வமாக சோகம் தாக்குகையில் மனம் உடைந்து போனாள்.


இதோ எழுநூறு ஆண்டுகள் கடந்து விட்டது. நூறு மனிதர்களும் காற்றோடு பூக்களாக பறந்து திரிந்துக் கொண்டிருந்தார்கள். கவி தனது வீரத்தை முழுமையாக அவர்களுக்கு கற்பித்தான்.


கவியின் கையில் இருந்த வாளில் இருந்து நூறு பிரதி செய்து அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் வாளை லாவகமாக கையாண்டார்கள்.


ஆனால் ஒவ்வொரு முறையும் ஆதி உறங்க போன பிறகு என்ன ஆகும் என்பதுதான் விசயமே!


ஆதி வருடத்தில் சில மாதங்கள் நீண்ட நெடும் தூக்கத்திற்குள் மூழ்கி விடுவாள். அவளின் இதயத்தில் இருந்த காயங்களே அதற்கு காரணம். அவளால் தன் காயங்களில் இருந்து வெளிவர முடியவில்லை. அவளின் உறவுகளை திரும்ப கொண்டு வரவும் கவியால் முடியவில்லை.


அந்த அழகான பூமியில் அனைத்துமே சரியாகதான் நடந்துக் கொண்டிருந்தது.


ஆனால் அன்று ஃபயர் பூமிக்கு வந்து சேரும் வரை.


ஆதி நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவளின் கனவுகளில் அன்பின் தேவ உலகம் அழிக்கப்படாமல் இருந்தது. அவள் அந்த உலகில் பறந்து திரிந்தாள். அழகான பூக்களை கோர்த்து மாலை அணிந்தாள். அவளின் சகோதரர்களும் சகோதரிகளும் அவளோடு இருந்தார்கள். அவளுக்கு அந்த கனவை மிகவும் பிடித்திருந்தது. அந்த கனவிலிருந்து எழ கூடாது எனும் அளவிற்கு அந்த கனவே அவளுக்குப் பிடித்திருந்தது.


"ஆதி!" அவளின் தோளை தட்டினாள் ஃபயர்.


"என் அன்பு தங்கையே ஆதி.. நீ ஒன்றை புரிந்துக் கொள். இந்த பிரபஞ்சத்தில் மிகவும் ஆபத்தான ஆயுதம் அன்பு மட்டும்தான். மற்றவர்கள் அன்பை பற்றி அறிந்தாலும் அறியாவிட்டாலும் அவர்களை வீழ்த்த நம்மால் முடியும். அன்பு எதையும் சாதிக்கும். அன்பை கொண்டு இந்த பிரபஞ்சத்தை முழுதாய் அழிக்கவும் இயலும். அதே அன்பைக் கொண்டு இந்த பிரபஞ்சத்தை மீண்டும் மீட்டெடுக்கவும் முடியும். நீ முதலில் உன் இதயத்தை நம்ப வேண்டும். கண்கள் அன்பின் பிறப்பிடம். உதடுகளில் இருக்கும் புன்னகை அன்பின் உறைவிடம். ஆனால் இதயம் அந்த அன்பை உற்பத்தி செய்யும் மூல ஸ்தலம். உன் இதயம் தூய்மையான அன்பை சுமக்கும் என்றால் உன்னால் எதையும் செய்ய முடியும். நீ நம்பாமல் கூட போகலாம். உன் அன்பின் பரிசுத்தம் கடவுள்களையும் உன் காலடியில் மண்டியிட வைக்கும்! உன்னை நீ நம்பும்போதும், உன் அன்பு உன்னை பாதுகாக்க ஆரம்பிக்கும் போதும் நீ அந்த கடவுளை விடவும் உயர்ந்தவளாக மாறி விடுகிறாய்!" என்றான் செழினி.


அவனின் முன்னால் சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள் ஆதி. அவன் தன் வலது கரத்தை நீட்டினான்.


"சகோதரத்துவம் என்பது அன்பின் அடுத்த நிலை. நீயும் நானும் அன்பால் பிணைந்துள்ளோம். நான் மரித்தால் உன் இதயத்திலும் நீ மரித்தால் என் இதயத்திலும் அடைக்கலம் புகுவோம். இதுவே இந்த அன்பின் உலகத்தின் ஆனந்த நியதி. நம் எண்ணங்கள் எப்போதும் அன்பின் வெளிப்பாடாகவே இருக்க வேண்டும். நமது செயல்கள் அனைத்தும் அன்பின் காரணமாகவே இருக்க வேண்டும்!" என்றான்.


"நிச்சயம் சகோதரரே! எனக்கு அனைத்தும் புரிந்தது. அன்பு என்பது காற்றாகவும் பனியாகவும் மழையாகவும் நம் வாழ்வாகவும் உள்ளது. அதை போற்றி வணங்கி அன்பின் வழியில் நாம் எப்போதும் வாழ வேண்டும்!" என்றவள் அவனின் கையில் தன் கரம் பதித்தாள்.


"உனக்கு இன்னொரு ரகசியம் சொல்லட்டா?" மெல்லிய குரலில் கேட்டவனின் அருகே நெருங்கி அமர்ந்தாள்.


"என்ன சகோதரரே?" என்றவளை தன் மடி மீது தூக்கி வைத்துக் கொண்டவன் "அன்பை விட மோசமான ஒரு விசயம் உண்டு!" என்றான்.


அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக அவனை திரும்பிப் பார்த்தாள்.


"என்ன சகோதரரே?" எனக் கேட்டாள்.


"அதற்கு காதல் என்று பெயர். அன்பின் மற்றொரு பரிமாணம். ஆனால் மிகவும் ஆபத்தானது.!" என்றான்.


"ஓ!" உதடு குவித்தவளின் கன்னங்களில் தன் கரங்களை பதித்தவன் "நான் சொல்லும் வரை நீ யாரையும் காதலிக்காதே!" என்றான்.


"உங்களுக்கு என் மீதுதான் எவ்வளவு கனிவு?" எனக் கேட்டவள் அவனை அணைத்துக் கொண்டாள்.


அவளின் தலையை வருடி தந்தவன் "அன்பான சகோதரியே! கடைசியாக உருவான அன்பின் இளவரசியே, நீ அன்பின் மகாராணியாய் ஆகும்போதுதான் இந்த சகோதரனின் இதயம் நிறையும்.!" என்றான்.


"ஆதி!" 


"சகோதரரே இன்னும் சற்று நேரம் உங்களின் தோள் சாய்கிறானே!" என்றவளின் தோளை உலுக்கியது ஒரு கரம்.


ஆதி விருப்பமே இல்லாமல் கண் விழித்தாள். அது ஓர் அழகான மலர் கோட்டை. அவளின் குழந்தைகள் அவளுக்காக உருவாக்கிய கோட்டை அது. அதில் ஒரு பக்கத்தில் ஆதியும், மறு பக்கத்தில் கவியும் இருந்தார்கள். கவி தனது பலவீனம் என்பதை ஆதி உணர்ந்ததாலோ என்னவோ அவனிடம் நெருக்கம் காட்டாமல் இருந்தாள். அவனைப் பார்க்கவும் தயங்கினாள். அவனோடு பேசவே இல்லை அவள்.


"கடவுள்.." என்றவள் எழுந்து நின்றாள். புது குழந்தைகள் கிடைத்த பிறகு அவளுக்கு கடவுள்கள் மீதிருந்த வருத்தமும் கூட மறைந்து விட்டிருந்தது.


"ஆதி.. நீயோ அன்பின் தேவதை. ஆனால் உன் பிள்ளைகள் உயிர் வதை செய்துக் கொண்டிருக்கிறார்கள். உனக்கு மனம் வலிக்கவே இல்லேயா?" எனக் கேட்டாள் ஃபயர்.


ஆதிக்கு குழப்பமாக இருந்தது.


"உயிர் வதையா? என் பிள்ளைகளா?" என்றாள் ஆச்சரியத்தோடு.


ஆமென தலையசைத்தாள் ஃபயர்.


"அவர்கள் இந்த பூமியை ரத்த காடாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மனதில் உள்ள கொடூரம் தினமும் கூடிக் கொண்டே இருக்கிறது.!" 


ஆதி நம்பாமல் வெளியே நடந்தாள்.


"ஏன் என்னிடம் வந்து இப்படி ஒரு பொய்யை சொல்லுகிறீர்களோ? என் பிள்ளைகள் என்னை போலவே அன்பை போதிப்பவர்கள்!" என்றவள் வானில் பறந்தாள். வனத்தின் நடு மத்தியில் இருந்தது அவளின் கோட்டை. அவள் அந்த கோட்டையை விட்டு வெளியே வந்த உடனேயே ரத்த வாசம் அவளின் மூக்கை துளைத்தது. நம்பவே இயலவில்லை அவளால்.


வனத்தின் எல்லையில் இருந்தான் சானு. அங்கிருந்த கடைசி மாமத யானையின் தந்தத்தை பிடித்து பின்னால் தள்ளிக் கொண்டிருந்தான். அவனின் வலிமை தாளாமல் அதன் தந்தங்களில் முறிவு ஏற்பட்டது. யானை வலி தாங்காமல் அலறும் சத்தம் காதில் கேட்டு அந்தரத்திலேயே மயங்கி விட்டாள் ஆதி. நினைவு இழந்து பொத்தென்று தரையில் விழுந்தாள். 


குட்டி யூடின்னு எல்லோரும் சொல்றிங்க. ஆமாப்பா மத்த எல்லா கதையிலும் ஒரு யூடிக்கு 1000+ வார்த்தைகள் எழுதுவேன்‌. ஆனா இப்ப இந்த கதைக்கு 650தான் எழுதுறேன். ஏனா கை சேராயோ கனவே கதைக்கு டபுள் யூடியா எழுதிட்டு இருக்கேன். அந்த கதை கொஞ்சம் லைட்டா டிராஜிடி கலந்தது. படிக்கறவங்க மனசு ஹர்ட் ஆக கூடாதேன்னு கதையை வேகமா முடிச்சிட்டு இருக்கேன். அதனாலதான் இது குறைஞ்சிடுச்சி. சின்ன யூடியா தரதுக்கு மறுபடியும் சாரி.. 


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments