ஆதி மீண்டும் கண்களை திறந்தபோது கவி அவளின் முன்னால் இருந்தான். அவனிடம் சரணைடைய கூடாது என்று தன்னிடமே கெஞ்சிக் கொண்டாள். அவனின் கண்களில் அன்போ பாசமோ இல்லை. ஆனால் அவனை பார்ப்பதும் அவன் தன் அருகில் இருப்பதுவுமே அவளுக்கு மனதுக்குள் நடுக்கத்தை தந்தது.
செம சீரியஸா ஒரு மேட்டர் சொல்றேன் மக்களே.. அன்பின் தேவதையா மட்டும் இருக்கவே கூடாது. நாம மட்டும் அன்பை காட்டுவோம். எதிரிகளையும் நேசிப்போம். ஆனா அவங்களுக்கு நம்ம நேசத்தை மதிக்கவோ புரிஞ்சிக்கவோ கூட நேரம் இருக்காது.
"தாயே.. உங்களுக்கு என்ன ஆச்சி?" என சானுவின் குரல் கேட்டு நிமிர்ந்தாள். அவனின் மடியில்தான் படித்திருந்தாள். அவளின் தலையை வருடி தந்துக் கொண்டிருந்தான் அவன்.
அவனின் கண்களில் தெரிந்த அன்பை கண்டு உள்ளம் உருகியவள் எழுந்து அமர்ந்தாள். நூறு பிள்ளைகளும் சுற்றி நின்றுக் கொண்டிருந்தார்கள். அவளின் மலர் கோட்டையில்தான் இருந்தார்கள் அனைவரும்.
அவளின் வருத்தம் நீங்க அவர்களின் கண்கள் போதுமானதாக இருந்தது. ஆனால் நடந்ததை நினைத்தவளுக்கு வேதனைதான் வந்துச் சேர்ந்தது.
"நீ ஏன் உயிர் வதை செய்தாய் சானு? ஓர் அப்பாவி யானையின் உயிரை பறித்து விட்டாயே! அதன் வேதனையும் வலியும் உனக்கு தெரியவில்லையா?" எனக் கேட்டாள் கலங்கும் விழிகளோடு.
அவளின் விழிகளை துடைத்து விட்டான் சானு.
"விலங்கிற்காக கண்ணீர் சிந்தலாமா தாயே? அந்த யானை இல்லாவிட்டால் இன்னும் ஆயிரம் யானைகள் உண்டு!" என்றான்.
ஆதி அதிர்ச்சியோடு "விலங்கும் உயிர்தானே தானு? அதனை கொன்ற போது உன் உள்ளம் வேகவில்லையா?" எனக் கேட்டாள்.
அவளின் கேள்வி அவனுக்கு அபத்தமாக இருந்தது. இவள் தூங்கிய பிறகே வேட்டைக்கு செல்ல வேண்டும் என்று இவ்வளவு நாளும் கவி விதித்திருந்த விதியின் காரணம் இப்போது புரிந்தது.
"ஆனால் நான் வீரமானவன். நான் யாரோ ஒருவரோடு போட்டியிட்டு அவர்களை வென்றால்தானே என் வீரர் பற்றி நானேவாவது அறிந்துக் கொள்ள முடியும்? இங்கே இருப்பவர்கள் அனைவரும் என் சகோதர சகோதரிகள். இவர்களோடு நான் சண்டையிட கூடாது. அதனால் நான் வேறு வழியின்றி விலங்குகளோடு போட்டியிடுகிறேன். எந்த விலங்கு எனது பலத்துக்கு சமமாக உள்ளது என்று நினைக்கிறேனோ அந்த விலங்குகளோடு சண்டை செய்கிறேன்!"
ஆதி அதிர்ச்சியில் வாயை பொத்தினாள்.
"இ.. இதற்கு முன்பும் இப்படி உயிர்களை கொன்று உள்ளீர்களா?" எனக் கேட்டவள் அங்கிருந்த மற்றவர்களையும் பார்த்தாள். அனைவரும் அமைதியாக நின்றனர்.
கவி கண்களை சுழற்றினான். 'இந்த பைத்தியத்தோடு எவ்வளவு நாள் போராடணுமோ?' என்று நினைத்தான்.
"அம்மா.. உங்களுக்கு ஏன் இவ்வளவு வருத்தம்? உயிர்கள்ன்னா இறக்கத்தான் செய்யும். அவங்க மரணத்திற்கு வீர வரலாறு தருகிறோம் நாங்கள். இதற்கு அவைகள் எங்களுக்கு நன்றிக்கடன் பட்டவைகளாக இருப்பர்" என்றாள் ரியேசி முன்னால் வந்து.
ரியேசியின் முகத்தில் தெரிந்த புன்னகைக்கும் அவள் சொன்ன வார்த்தைக்கும் இடையில் பத்து பால்வீதியின் தூரங்கள் இருப்பது போலிருந்தது ஆதிக்கு.
மனிதர்களின் உருவில் இருந்தார்கள். ஆனால் விலங்கின் மனதை உடையவர்களாக உள்ளார்களே என்று வருந்தினாள்.
'இல்ல. விலங்கின் மனது அல்ல.. இந்த கவியை போன்ற மனதை உடையவர்கள்!' என நினைத்தவளுக்கு அழுகை பொங்கியது.
அழகான பூக்களை சிதைப்பதை போல தன் குழந்தைகளின் மனதை இவன் சிதைத்து வைத்துள்ளானே என்று மனம் வெதும்பினாள். ஆனால் அவளால் கோபப்பட முடியவில்லை. அவனை வெறுக்கவும் முடியவில்லை.
கவி அவளின் முன்னால் வந்து அமர்ந்தான். பூக்கள் அனைத்தும் அவன் அமர்ந்ததும் வாடி போவது போல தோன்றியது அவளுக்கு.
"ஆதி.. இவர்கள் மனிதர்கள்.. இவர்களால் போரிடாமல் இருக்க முடியாது!" என்றான் மென்மையான குரலில். அவனின் குரல் அவளின் இதயத்தை பூக்களால் வருடியது. அவளின் வருத்தத்தை கூட இளக செய்தது.
"இவர்கள் என் பிள்ளைகள்.. பிறகு எப்படி இவர்களால் உயிர்வதை செய்ய இயலுகிறது?" கண்ணீர் மல்க கேட்டாள்.
"ஒரே விசயத்தை மீண்டும் மீண்டும் கேட்கிறார் அம்மா!" என்று முனகினாள் ரியேசி.
கவி வருத்தமாக ஆதியை பார்த்தான். அவளின் கையை பற்றினான். ஆதிக்கு அவனை அணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. சொந்த மனதை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்காய் வருந்தினாள்.
"இவர்கள் உன் பிள்ளைகள் மட்டுமல்ல. என் பிள்ளைகளும் கூட. இவர்களின் ரத்தத்தில் வீரம் கலந்துள்ளது. அதனால் இவர்கள் இப்படிதான் இருப்பார்கள். ஆனால் உன் கண் முன் எதுவும் செய்ய மாட்டார்கள். நீ இந்த மலர் கோட்டைக்குள் நிம்மதியாய் உறங்கும் நேரத்தில் மட்டுந்தான் அவர்கள் வேட்டைக்கே செல்கிறார்கள். நீ அதனால் கவலை கொள்ளாதே!" என்றான்.
ஆதி நம்பிக்கை இல்லாமல் அவனை பார்த்தாள்.
"எப்படி உங்களால் இப்படி பேச முடிகிறது ஏந்தலே? இவர்கள் சிறு குழந்தைகள். இவர்களின் நெஞ்சில் நஞ்சை விதைத்து உயிர் பலியை கற்று தந்திருக்கிறீர்கள். எனது நிம்மதியை அழிக்க நினைத்தே இதையெல்லாம் செய்கிறீர்கள்!" என்றாள் அழுகையோடு.
கவிக்கு அவளை அறைய வேண்டும் போல இருந்தது.
"உன் துக்கம் காண முடியாமல்தான் நான் இவர்களை உருவாக்கினேன் ஆதி. ஆனால் நீ என்னை குறை சொல்லுகிறாய். உனக்காக நான் மீண்டும் இறங்கி வருகிறேன்!" என்றவன் எழுந்து நின்றான்.
மனிதர்கள் நூறு பேரும் அவனின் பதிலுக்காய் காத்திருந்தார்கள்.
"இனி இங்கே வேட்டை வேண்டாம்!" அவன் சொன்னது கேட்டு அவர்களுக்கு பகீரென்று இருந்தது.
"இந்த பிரபஞ்ச வெளியில் எத்தனையோ ஆயிரம் கிரகங்களில் ஜீவராசிகள் உண்டு. அவர்களை வெற்றிக் கொண்டு வரும் அளவிற்கு உங்களுக்கு வீரம் உள்ளதா என்று பரிசோதிக்கலாம்!" என்றான்.
நூறு பேரும் ஆச்சரியத்தில் விழி விரித்தார்கள். அவன் சொன்னது புரிந்து கொண்டாட்ட கூச்சலோடு துள்ளிக் குதித்தார்கள்.
ஆதிக்கு இதயமே நிற்பது போலிருந்தது. அவசரமாக எழுந்து நின்றாள்.
"இப்படி செய்யாதீர்கள் பிள்ளைகளே! நீங்கள் மற்ற கிரகங்களுக்கு அன்பை பரப்புங்கள். அன்பு மாட்டுமே நிலையானது. அதுவே இந்த பிரபஞ்சத்தின் சக்திகளை தட்டி எழுப்பும் அளவிற்கு சக்தியை உடையது!" என்றாள்.
ராழா சிரித்தான். ஆதி சொன்னதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
"அம்மா.. நீங்கள் எங்களின் குழந்தை போலவே இருக்கிறீர்கள். அப்படிதான் யோசிக்கவும் செய்கிறீர்கள். அன்பை விட வீரமே பலம் வாய்ந்தது. உங்களுக்கு இதை இன்னும் சில ஆண்டுகளில் நிரூபிக்கிறோம்!" என்றான்.
ஆதி உடைந்து அமர்ந்தாள். ஆனால் அவர்கள் கண்டுக் கொள்ளாமல் வெளியே நடந்தார்கள்.
இப்போதும் கூட ஏமாற்றம் என்பதை இவள் உணரவில்லை. பதிலாக புத்தி வராத சிறு குழந்தைகள் அவர்கள் என்று நினைத்தாள். அந்தக் குழந்தைகள் இந்த பிரபஞ்சத்தின் பல கிரகங்களை தலை கீழாக புரட்டி போட இருக்கிறார்கள் என்பதை அவள் அறியவேயில்லை. அவள் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட தயாராக இருந்தாள். அன்பின் தேவதையாக இருப்பதின் மொத்த சாபத்தையும் இவள் ஒருத்தியே அனுபவித்தாள்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
VOTE
COMMENT
SHARE
FOLLOW
0 Comments