Advertisement

Responsive Advertisement

தேவதை 27

 ஆதி அதன் பிறகு தூங்கவே இல்லை. தினமும் தன் பிள்ளைகளை அழைத்து அவர்களுக்கு அன்பை பற்றிப் பாடம் போதித்தாள்.


"இந்த பிரபஞ்சத்தில் தேவைப்படும் ஒரே விசயம் அன்பு மட்டும்தான் குழந்தைகளே.. உங்களுக்கு இன்னும் விவரம் வரல. உங்களுக்கு பிரபஞ்ச அனுபவமும் தெரியல‌. நீங்க பிற்காலத்துல வருந்திட கூடாதுன்னு பயப்படுறேன் நான்!" என்றாள்.


அவள் பேசுவது அனைத்தும் உளறல் போலவே இருந்தது கவிக்கு.


"அவள் அன்பின் தேவதை. அன்பு மட்டும்தான் அனைத்திற்கும் தேவை என்று ஒருதலைப் பட்சமாக எண்ணுகிறாள். அவளுக்கு அவளின் உலக புகழை பிரபஞ்சம் பாட வேண்டும் என்று ஆசை. ஆனால் இந்த பிரபஞ்சத்தில் நிலைத்து வாழ அன்பை விட வீரமே மிக முக்கியம். முட்டாளுக்கு எப்படி சொன்னாலும் விளங்காது!" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன் தினமும் ஆதி அருகில் இல்லாத மற்ற சமயங்களில் மனிதர்களுக்கு சண்டை பயிற்சி சொல்லித் தந்தான்.


ஆகாய ஊர்தி ஒன்று மரத்தால் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த பிரபஞ்சத்தை வளைத்து தங்களின் சத்திய தேவர்களின் புகழை பரப்ப காலம் வந்து விட்டதாக அவன் நினைத்தான். சாதாரண மனிதர்கள் என்றாலும் கூட இவர்கள் மீது அவன் நம்பிக்கை கொண்டிருக்க முக்கியமான காரணம் ஒன்று உண்டு.


ஆதி தன் முன் அனைத்தும் நிகழ்ந்தாலும் அதை நல்வழிபடுத்தும் வழி தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தாள்.


தினமும் போர் பயிற்சி நடந்தது‌. ஆகாய ஊர்தியின் கட்டுமானமோ பல மடங்கு வேகத்தில் நடந்துக் கொண்டிருந்தது.


பிள்ளைகளிடம் பாடம் சொல்லி சலித்துப் போய் கவியிடம் வந்தாள் ஆதி.


அவனின் முகத்தையோ கண்ணையோ பார்க்க கூடாது என்று நினைத்தாலும் கூட அவனின் அருகாமையே அவளை செயலிழக்க செய்ய வைத்தது.


கவி தனது அறையில் இருந்தான். மலர் கோட்டையின் மறுபக்கம் இருந்தது அவனின் அறை. பனியினால் சுவரும், தரையும், கூரையும் வடிவமைக்கப்பட்டிருந்தது. அவனின் பாதணியோடு சேர்ந்திருந்த பனி பூக்கள் விதையை அவன் இங்கும் தூவி இருந்த காரணத்தால் அந்த பெரிய அறையின் நான்கு எல்லைகளாக பனி மரங்கள் வளர்ந்திருந்தன. பனி பூக்கள் தரையெங்கும் கொட்டி கிடந்தன. அவனின் அறைக்குள் நுழைந்தவள் பனிபூக்களின் வாசனையில் கிறங்கினாள். அத்தோடு சேர்ந்து வந்த அவனின் வாசத்தில் மனம் மயங்கினாள்.


மானம் கெட்ட மனதம்மா அன்பின் தேவ தேவதைகளுக்கு!


அவள் வந்தபோது கவி தனது படுக்கையில் இருந்தான். ஒரு கால் மீது மற்றொரு காலை போட்டபடி கூரையை பார்த்துக் கொண்டிருந்தான்.


"ச்சே.. என்னடா உலகம் இது? பொழுது விடியறதும் தெரியல.. முடியறதும் தெரியல!" என்று ஜன்னலை பார்த்து புலம்பினான்.


அவனின் உலகத்தில் இந்த உலகத்தின் ஏழு நாட்களை சேர்த்தால்தான் ஒருநாள் கணக்கு வரும். அதுவும் இரவையும் பகலையும் சேர்த்து கணக்கிட வேண்டும். அங்கே இரவு மிகவும் குறைவு. இந்த உலகத்தின் இரட்டை இரவுகள் அங்கே ஓர் இரவு. அவர்களுக்கு அதுதான் சரியாக இருந்தது. பகல் பயிற்சிக்காகட்டும் இரவின் ஓய்விற்காககட்டும் சரியாக இருந்தது. ஆனால் இங்கே இவன் இரு முறை வாள் சுழற்றிவிட்டு நிமிர்ந்தால் நட்சத்திரம் உச்சியை தாண்டி விடுகிறது. 


ஆதி அவனின் புலம்பலை கண்டு உள்ளுக்குள் நகைத்தாள். அவளின் உலகில் இரவுகள் இல்லை. அழகான எட்டு நட்சத்திரங்களுக்கு இடையில் சுழன்றுக் கொண்டிருந்தது அன்பின் உலகம். அதனால் எப்போதும் பகல்தான். கருகாத பூக்களும், தீராத அன்புமே அவர்களின் அடையாளமாக இருந்தது.


ஆதி நகைப்பது போன்ற அரவம் கேட்டு தனது பனி படுக்கையிலிருந்து திரும்பிப் பார்த்தான் கவி. ஆதி அவனின் அறையின் வாயிலில் நின்றிருந்தாள். எழுந்து அமர்ந்தான்.


"ஆதி!" 


தயக்கமாக உள்ளே வந்தாள். கொடூர மிருகத்தின் குகைக்குள் நுழைவது போல வெறுப்பு இருந்தது. ஆனால் அதை விட அதிகமாக அன்பு அவளை பழிவாங்கிக் கொண்டிருந்தது. 'அவனின் நெஞ்சில் சாய்ந்து உன் கவலைகளை சொல்' என்று சொன்னது அவளுக்குள் ஒரு குரல். 'அவனின் அழகான கண்களைப் பார். அந்த முகத்தில் உள்ள பேரொளியைப் பார்.. அவனின் இதழோரம் கசியும் புன்னகையை பார்!' என்றது அந்த குரல்.


பூ மரத்தின் தாழ்ந்த கிளை ஒன்றை அவளுக்கு கை காட்டினான். ஆதி சுற்றிலும் பார்த்தபடியே அமர்ந்தாள்.


"என்ன விசயமாக வந்துள்ளாய்?" 


நிமிர்ந்தாள். அவனின் கண்களைப் பார்த்தவள்‌ சுற்றுச்சூழலை மறந்தாள். கவி புருவம் உயர்த்தினான்.


"என்னை ரசிக்கத்தான் வந்தாயா?" அவனின் கேள்வியில் திடுக்கிட்டவள் இல்லையென தலையசைத்தாள்.


"நீங்க இந்த உலகத்தை விட்டு போயிடுறிங்களா?" எனக் கேட்டாள்.


நக்கலாக அவளைப் பார்த்தவன் "இந்த உலகம் ஆதியின் உலகம் என்று பெயரிடப்பட்டு உள்ளதா?" எனக் கேட்டான்.


"அப்படி சொல்லவில்லை.. நீங்க என் மனசை உடைக்கிறிங்க.. இது அழகான மனிதர்களால் நிரம்ப வேண்டிய பூமி. இங்கே உங்களின் குரோதமும், துரோகமும், கோபமும், வீரமும் கலக்கப்பட வேண்டாம்!" என்றாள் கெஞ்சல் குரலில்.


"ச்சுச்சு.!" உச்சுக் கொட்டினான் கவி. ஆதி பரிதாபமாக தன்னை எண்ணினாள். 


எழுந்து நின்றவன் அவளின் முன்னால் வந்து நின்றான்.


"நான் ஏன் உன்னை விட சிறந்தவன் என்றால் இதுதான் காரணம். இது போல் நீ என்னைப் பார்த்து உச்சுக் கொண்டிருந்தால் இன்னேரம் உன் தலையை கொய்திருப்பேன் நான்.. கோபம், குரோதம்.. இதை விடவும் மிக முக்கியம் சொரணையும், ரோசமும். அது என்னவென்று உனக்கு சுத்தமாக தெரியாது. அதன் முக்கியத்துவமும் உனக்குத் தெரியாது. முன்பு ஏதோ சில கிரகவாசிகளால் இந்த புவியின் மைந்தர்கள் சாக காரணம் இந்த குணங்கள் இல்லாமல் போனதால்தான். ஆனால் இன்று இவர்களிடம் அவை அனைத்தும் உண்டு. இவர்களை அழிக்க யாராலும் முடியாது. இவர்களுக்கு கோபம் வரும். எந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று இவர்களுக்குத் தெளிவாக தெரியும்.!" என்றான் கண்கள் இடுங்க.


அவன் பார்த்த பார்வையில் பயம் வந்தது அவளுக்கு. ஆனாலும் அவள் சொன்னது போல கோபம் மட்டும் வரவில்லை.


"எனது மனம் வாட்டமுறுகிறது.. குழந்தைகள் இப்படி உயிர் வதை செய்கையில் என் உயிர் மரணித்து பிறக்கிறது.. நீங்கள் சொன்ன முக்கியமான குணங்கள் என்னிடம் இல்லை. ஆனால் அதற்காக நான் வாழ தகுதி இல்லாதவள் இல்லையே.!?" எனக் கேட்டாள். 


கவி அவளின் தாடையை பற்றினான். பனி பூக்களை விடவும் மென்மையாக இருந்தாள். இதுவரை அவன் கூடல் கொண்ட ஆண்கள் பெண்களை விட இவளின் சருமம் மிகவும் பிடித்திருந்தது அவனுக்கு. கூடல் என்பது உடலின் ஆசை என்பதுதான் அவன் அறிந்த அறிவு. இவளையும் கூட அப்படிதான் அணுக நினைத்தான். 


"உனக்கு பிடிக்கவில்லையென்றால் நீ எங்காவது சென்று விடு!" என்றான்.


அவனின் தீண்டலில் உயிர் ஒருபுறம் பனியாய் கரைந்தது. அவன் சொன்னது ஒரு புறம் பயத்தையும் கவலையையும் தந்தது.


"எனக்கு செல்ல வேறு போக்கிடம் இல்லை ஏந்தலே!" என்றவளுக்கு தன் உலகத்தின் நினைவில் கண்கள் கலங்கியது.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments