ஆதி பனி பூக்களை பார்த்தபடி அமர்ந்திருந்திருந்தாள்.
"இதோ வருகிறேன்!" என்று சொல்லிவிட்டு சென்றான் கவி. அவன் வரும் வரை பூக்களையாவது ரசிக்கலாமே என்று ரசித்துக் கொண்டிருக்கிறாள் ஆதி. ஆனால் சென்றவன் வரவில்லை.
சத்திய உலகத்தின் நூலகத்தில் இருந்தான் கவி. கண்ணாடியை வெறித்தான்.
"என்னை பைத்தியமென நினைத்தாயா நீ?" எனக் கேட்டான்.
கண்ணாடி பதில் சொல்லவில்லை.
கண்ணாடியில் குத்தினான். எட்டி உதைத்தான். தனது வாளை எடுத்து அதனை வெட்டினான். கண்ணாடி அப்படியேதான் இருந்தது.
"நீ முட்டாள் போல ஓர் உலகத்தை அழித்தால் அதற்கு நான் காரணமாவேனா?" எனக் கேட்டது கண்ணாடி.
"ஆஆஆ"வென கத்தினான் கவி.
"இப்போது என்னால என் உலகத்தை காப்பாத்த முடியாது. என்னை காப்பாத்திக்க முடியாது. ஒரு ஏந்தலாக இருந்தும் தோத்து போக போறேன்!" என்றான் ஆத்திரத்தோடு.
கண்ணாடி அவனைப் பரிதாபமாக பார்த்தது.
"ஒரு குழந்தையை சிரமப்படுத்தியது உன் நினைவில் இல்லைதானே?" எனக் கேட்ட கண்ணாடியில் குத்தினான் கவி.
"எனக்கு வலிக்காது" என்றது கண்ணாடி.
"அவள் ஒரு குழந்தைன்னு நீ என்கிட்ட சொல்லல!" என்றான் கோபத்தோடு.
"நீ அறியாததுக்கு நான் பொறுப்பா?" அப்பாவியாக கேட்டது கண்ணாடி.
தலையை பற்றினான் கவி.
"அறியாமல் போனேன். தெரியாமல் தவறு செய்தேன்!" என்றுப் புலம்பினான்.
"இன்னும் முப்பத்தினாங்காயிரம் வருடங்கள் நான் காத்திருக்க வேண்டும். ஆனால் அதுவரை இந்த உலகம் என்ன செய்யும்?" என்றான் பயத்தோடு.
"இந்த முப்பத்தினான்காயிரம் வருடத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அவளுக்கு புத்தி வந்து விடலாம். தூய அன்பின் தேவதையாக உள்ளவள் இன்னும் பிற விசயங்களை கற்றுக் கொண்டு விடலாம். உன்னை நேசிக்க மறுக்கலாம். உன்னை விட பலசாலியாக உருவாகி விடலாம். தன் உலகத்தை அழித்த உன்னை பழிவாங்கி அழிக்க கூட முயலலாம்!" என்றது கண்ணாடி.
பயத்தில் மேனி சிலிர்த்தது கவிக்கு.
இப்படி நடக்க கூடாது என்று ஆசைப்பட்டான். ஆதியை தனது அடிமையாக நினைக்க கூட பிடித்திருந்தது. ஆனால் எதிரியாக நினைக்க மனம் வரவில்லை.
ஏதாவது யோசித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு வெளியே நடந்தான்.
"வேறு ஏதேனும் உதவி வேண்டுமா?" கேட்ட கண்ணாடியை திரும்பிப் பார்த்தவன் "ஆமா.. சீக்கிரம் அழிந்து போய் விடு!" என்றான்.
"ஏந்தலா இவன்? ராட்சசனை போல சபிக்கிறான்!" என்று முனகியபடி தனது தூக்கத்திற்குள் நுழைந்தது அந்த கண்ணாடி.
அவனுக்கு ஆதி வேண்டும். அவளை தூரமாக துரத்த விரும்பவில்லை.
அவனோடு ஒட்டிக் கொண்டிருந்த ஆதியின் வாசம் அந்த உலகத்தை இப்போதைக்கு புத்துணர்வாக செயல்பட வைத்தது. அவ்விசயத்தை அவனால் யூகிக்கவும் முடிந்தது.
"அவ வேணும். என் மக்களுக்காக.. என் உலகத்துக்காக வேணும்!" என்று முனகினான்.
ஆதி மலர் கோட்டையை விட்டு வெளியே வந்தாள். கவி சென்று ஒரு திங்கள் முடிந்து விட்டது. இன்னும் திரும்பி வரவில்லை. ஆதிக்கு அழுகையாக வந்தது. அவன் ஏமாற்றி விட்டான் என்று மனம் குமுறினாள்.
சானுவும் மற்றவர்களும் வந்து அடிக்கடி அவளை தொந்தரவு செய்தார்கள். கவி எங்கே என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
"அவர் எங்கேயோ போயிருக்காரு!" என்றவள் அவர்களை தானே மேற்பார்வையிடலாம் என்ற எண்ணத்தோடு வெளியே வந்தாள்.
பெரிய மரம் ஒன்றில் கிளையிலிருந்து தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது ஒரு நீர் யானை. ஏழெட்டுப் பேர் சுற்றி நின்று அந்த நீர்யானையை அடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆதிக்கு கண்ணீர்தான் வந்தது.
"இப்படி செய்யாதிங்க!" என்றாள் அவர்களிடம் ஓடிச் சென்று.
"தாயே.. இது ஒரு விலங்கு.!" என்றான் ஒருவன்.
ஆதி மறுப்பாக தலையசைத்தாள். "இல்லை இது ஒரு ஜீவன்.. உங்களுக்கு புரியலையா? இதன் அழுத கண்கள், குருதி சிந்தும் உடல் கண்டுமா இரக்கம் வரல?" எனக் கேட்டாள்.
அவர்கள் அமைதியாக நின்றார்கள்.
ஆதி அந்த விலங்கை கட்டவிழ்த்து விட்டாள். அந்த விலங்கின் காயங்களை குணப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தாள்.
"நாங்க இப்ப என்ன செய்வது? எங்களுக்கு சலிக்கிறது!" என்றாள் ஒருத்தி.
ஆதி அவர்களை பார்த்து புன்னகைத்தாள். "இந்த வனங்களில் இருக்கும் மிருகங்களை உங்களால் நட்பாக்க முடியுமா? உங்களுக்கு இது சவால். ஆளுக்கொரு தோழமையோடு திரும்பி வருவீர்களா?" எனக் கேட்டாள்.
அவர்கள் அனைவரும் அவளை சோகமாக பார்த்தனர்.
"எங்களை பற்றி நீங்கள் அறியவில்லை!" என்றவர்கள் ஆளுக்கொரு திசையில் ஓடினர்.
அவர்கள் சொன்னது ஆதிக்கு புரியவில்லை. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அனைவருமே திரும்பி வந்து விட்டனர். அவர்களின் பின்னால் விலங்குகளும் பறவைகளும் கூட்டமாக இருந்தது.
ஆதிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
"எங்களால் எங்களின் அன்பை கொண்டு அனைத்து உயிர்களையும் அடிமைப்படுத்த முடியும் தாயே!" என்றான் ஒருவன்.
ஆதி வாய் பேச மறந்தாள்.
அவர்களின் கண்களில் இருந்த அன்பின் சக்தியை அவர்கள் தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போதுதான் அவளுக்குப் புரிந்தது.
"இது தவறு!" என்றாள் வெகு நேரத்திற்கு பிறகு.
"இது மிகவும் தவறு. நமது சக்தியை நாம் எப்பவும் தவறாக பயன்படுத்த கூடாது!" என்றாள்.
"நம்மகிட்ட இருக்கற சக்தியை பயன்படுத்த கூடாதுன்னா பிறகு எதுக்கு சக்தி இருக்கணும்? நீங்க மிருகங்களை அழைத்து வர சொன்னிங்க. நாங்க அழைத்து வந்தோம். அப்போதும் குறை சொல்றிங்க.. இது ரொம்ப மோசம்!" என்றவர்கள் கலைந்துச் சென்றார்கள்.
ஆதி கவலையோடு ஆற்றின் கரையில் அமர்ந்தாள்.
இவர்களை எப்படி சரி செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை. கவியும் வரவே இல்லை.
தினமும் மனிதர்களுக்கு புத்தி சொல்லி சலித்துப் போனாள்.
"தந்தை இல்லாததால் வான ஊர்திகளின் வேலை நின்று விட்டது. நாங்கள் சோகமாக உள்ளோம். நீங்களும் உங்கள் பங்கிற்கு எங்களை வாட்டாதீர்கள்!" என்றார்கள் அவர்கள்.
ஆதிக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான். அவள் உருவாக்கிய மனிதர்களை நினைத்து இப்போது வருந்தினாள். அவர்கள் இருந்திருக்கலாம் என்று நினைத்தாள்.
சில வாரங்கள் கடந்து விட்டது. பால்வீதி கடவுள்களிடம் சென்று உதவி கேட்கலாமா என்று யோசித்தாள் ஆதி. ஆனால் அவர்கள் செய்த துரோகமும் நெஞ்சில் ரணமாக இருந்தது. ஆனாலும் அதை தவிர வேறு வழி தெரியவில்லை அவளுக்கு.
அவள் புறப்பட இருந்த நேரத்தில் பூமிக்கு வந்தான் கவி.
ஆதி அவனை கண்டதும் கடவுள்களிடம் செல்ல வேண்டியதை மறந்துப் போனாள்.
மனிதர்களின் ஆனந்த கூச்சலில் கூடி களித்து விட்டு மறுநாளில் ஆதியினை தேடி வந்தான் கவி.
"நான் ஒரு விசயம் கேட்க வந்திருக்கேன்.. உனக்கு என்னை மணம் செய்ய சம்மதமா? நீ என்னை மணம் செய்துக் கொண்டால் உன்னை எங்களின் உலகிற்கு அழைத்துச் செல்வேன். உன்னை கைதியாக இல்லாமல் எனது ராணியாக அழைத்துச் செல்வேன். எங்கள் உலகில் நீ சுதந்திரமாக வாழலாம். உனக்கான பதவியை நீ சரியாய் பயன்படுத்த உனக்கு பயிற்சி தருவேன்!" என்றான்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
VOTE
COMMENT
SHARE
FOLLOW
0 Comments