Advertisement

Responsive Advertisement

தேவதை 33

 நெவத்ஸி கிரகத்தார் தங்கள் கிரகத்திற்கு வந்த கடவுள்களின் காலடியில் சரணைந்தார்கள்.


"என்ன ஒரு ஈர்ப்பு?" என்று வியந்தான் ஒருவன்.


"தேஜஸ் நிறைந்த முகம்.‌. நீங்கள் காட்டும் அன்பில் சாக தோன்றுகிறது எனக்கு!" என்றான் இன்னொருவன்.


புவியின் மனிதர்கள் ஒருவரையொருவர் பார்த்தபடி நகைத்தனர். தங்களின் கண்களில் இருக்கும் அன்பை பயன்படுத்திய காரணம் ஒரு கிரகத்தையே காலடியில் விழ வைத்து விட்டது என்ற மகிழ்ச்சியில் உள்ளம் மகிழ்ந்தார்கள்.


ஏற்கனவே எட்டு கிரகங்களை வேட்டையாடி விட்டார்கள். இது ஒன்பதாவது கிரகம். 


அன்பை மிக சரியாக(!?) பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் பூமிவாசிகள். அன்பால் மயக்கி அவர்களின் கையாலேயே அவர்களை கொன்றுக் கொள்ள செய்தார்கள். இதனால் ஒரு லாபமும் இல்லைதான். ஆனால் பூமிவாசிகள் அனைவரையும் விட உயர்ந்தவர்கள் என்று பிரபஞ்சம் முழுக்க பெயர் பரவுவது அவர்களுக்கு பிடித்திருந்தது. போரிடாமல் ஒரு கிரகத்தையே வளைப்பவர்கள் சாத்தான்கள் என்றே அனைவராலும் அழைக்கப்பட்டார்கள். புவியின்வாசிகள் அந்த பெயரை பெறுவதில் பெருமிதம் கொண்டார்கள்.


"சொல்ல மட்டும்தான் செய்வீர்களா? சாக மாட்டீர்களா?" எனக் கேட்டான் பூமிவாசி ஒருவன்.


"நிச்சயம் உங்களுக்காக உயிரையும் தருவோம் கடவுளரே!" என்றவர்களை பார்த்து பல் இளித்தபடியே அனைவரும் தங்களின் வாள்களை கையில் எடுத்தனர். எதிரே இருந்த கூட்டத்தில் நுழைந்தனர். விளையாடினர். நடனம் ஆடினர். இசை பாடினர். ஆக மொத்ததில் தங்களின் வாளை கொண்டு நெவத்ஸியரின் உயிர்களை எடுத்தனர்.


"ரொம்ப மோசமான சக்தி. இது பூமியின் மனிதர்களுக்கு எப்போதும் இருக்க கூடாது!" என்றார் ஹார்ட்.


நெவத்ஸி அண்டத்தின் மீது ஹார்ட்டோடு சேர்ந்துப் பறந்துக் கொண்டிருந்த ஃபயர் "ஆனா இது செமையா இருக்கு!" என்றாள்.


ஃபயரை முறைத்தார் ஹார்ட். "இந்த வாழ்வில் என்ன சுவாரசியம் இருக்கு? நான் நினைப்பது மனிதர்கள் வாழ வேண்டும் என்று. வாழ்ககையை வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் கஷ்டங்களை விரும்பிப் ஏற்றுக் கொள்ள வேண்டும். இஷ்டப்பட்ட ஒன்று கிடைக்காமல் போனாலும் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று. தோல்விகளை அவர்கள் கொண்டாட வேண்டும். மரணங்களை அவர்கள் வரவேற்க வேண்டும். இப்படி அன்பில் மயக்குவது எவ்வளவு ஆபத்தானது‌ என்பதை நீ உன் குறிப்பேட்டில் எழுதி வை!" என்றார்.


"சுற்றி பார்க்க வந்ததுக்கு வேலை வைக்கிறாங்க!" என புலம்பியபடியே அன்பின் ஆபத்தை பற்றி எழுதினாள் ஃபயர்.


ஆதியின் மெய்காப்பாளராக நியமிக்கப்பட்டாள் நனி. கவிக்கு நனியின் திறமை மீது நம்பிக்கை இருந்தது. இந்த சில மாதங்களில் நிறைய திறமையை காட்டி விட்டாள் அவள். அவள் வாள் சுழற்றும் காட்சி அவனை வியப்பில் ஆழ்த்தியது. அவள்தான் தனது ராணிக்கு சரியான காவலாளி என்று நம்பினான்.


ஆதிக்கு இந்த புது தோழியை பிடித்திருந்தது. ஏனெனில் அவள் அன்பை காட்டினாள். ஆதியின் பலவீனத்தை அறிந்தவள் நனி. 


"அரசி.. உங்களுக்கு பிடிக்கும் என்று இந்த பூவை கொண்டு வந்தேன்!" என்று பனிப் பூக்களின் குவியலை அவளின் காலடியில் கொட்டினாள் நனி.


ஆதிக்கு உள்ளம் சிலிர்த்தது. நனி அழகாய் இருந்தாள். அவளின் கண்களில் எப்போதும் அன்பு குடியிருந்தது. அது ஆதிக்கு பிடித்திருந்தது. இரவிலும் பகலிலும் ஆதிக்கு துணையென, தோழியென ஆயினாள் நனி.


"எங்கள் ஏந்தலுக்கு ஏற்ற ஒரே ஜோடி நீங்கள் மட்டும்தான்!" என்றாள் அடிக்கடி.


ஆதி அமைதியாய் புன்னகைப்பாள்.


அன்று அந்த உலகத்தின் மறு பக்கத்தில் இருந்த பனிச் சிலை குகைகளை பார்வையிட சென்றாள் ஆதி. கவியின் முன்னோர்கள் விதியின் வசத்தால் இறந்த பிறகு அவர்களை பனியில் வைத்து சிலையாக மாற்றி வைத்திருந்தார்கள். வெளியாட்களுக்கு அது பொருட்காட்சி பொம்மைகள். ஆனால் சத்திய தேவ தேவதைகளுக்கு அது கடவுள்களின் சிலைகள்.


கவி போர் பயிற்சியை முடித்துக் கொண்டு சென்று அருகே இருந்த மரத்தின் கிளை ஒன்றின் மீது அமர்ந்தான். யனி தன் கையிலிருந்த பானத்தை அவனிடம் நீட்டினான். யனி கவியின் சேவகனாகி விட்டான். கவிக்கு அனைத்து வித சேவைகளையும் அவன்தான் செய்துக் கொண்டிருந்தான்.


பானத்தை பருகினான் கவி. சுவையில் தன்னை மறந்தான். ஆனால் ஆதியின் நினைவு மனதை விட்டு மறையவில்லை.


"ஆதியை பார்த்துட்டு வரேன்!" என்று கோட்டையை நோக்கி நடந்தான்.


"ஏந்தலே! அரசியும் நனியும் பனி சிலைகளை பார்வையிட சென்றுள்ளார்கள்!" யனி சொன்னதும் மீண்டும் கிளையின் மீது அமர்ந்தான் கவி.


"அவளை விட்டு விலகி இருப்பது இப்போதெல்லாம் மிகவும் சிரமமாக இருக்கிறது யனி‌. அவளின் கண்களை பார்த்தால் பிறகு பிரபஞ்சத்தை மறந்து விடுவேன் போல! அவளின் வார்த்தைகள் அனைத்தும் இனிப்பாக உள்ளது‌. அவளின் அன்பு என்னை அவளின் அடிமையாக்கிக் கொண்டிருக்கிறது. அவளின் அன்பை என்னால் தடுத்து நிறுத்த முடியவில்லை.!" என்றான். அவன் சொன்னது புலம்பல் போல தோன்றியது யனிக்கு.


'இது போதாது ஏந்தலே! இன்னும் நெஞ்சில் நிறைய வேண்டும். அவளும் நீயும் மனதால் ஒன்று பிணைய வேண்டும். அப்போது உடைப்போம் நாங்கள். அழுதே சாக போகிறாய் நீ. உன் பேராசை போருக்கு பலியான என் உலகத்தார் அனைவரும் அன்று மகிழ்வார்கள். உன் சாவை கண்ட பிறகு இந்த மொத்த உலகத்தையும் அழித்து சூரிய ஆழி ஒன்றில் மூழ்கடிக்க போகிறேன் நான்!' என்று மனதுக்குள் சொன்னான் யனி.


ஆதி ஒவ்வொரு சிலையாக பார்த்துக் கொண்டே வந்தாள். அவர்கள் இறந்திருக்க வேண்டாம் என்று எண்ணினாள். 


"கிளம்பலாமா அரசியே? நேரம் சென்றுக் கொண்டிருக்கிறது. ஏந்தல் உங்களை தேட ஆரம்பித்து விடுவார்!" என்றாள் நனி.


ஆதி அந்த சிலைகளை கடைசி முறையாக பார்த்துவிட்டு வெளியே நடந்தாள். 


"அரசி..‌ ஆபத்து!" நனி கத்தியது கண்டு குழம்பியவள் நிமிர்ந்துப் பார்த்தாள். பூர்வ உலகின் வீரர்கள் இருவர் கத்திகளோடு ஆதியை நோக்கி பாய்ந்து வந்துக் கொண்டிருந்தார்கள். ஆதிக்கு பயம் சூழ்ந்தது. 


கவியை அழைக்க எண்ணினாள். ஆனால் அதற்கும் முன் ஆதிக்கு முன்னால் வந்து அரணாக நின்றாள் நனி.


போரிட வந்தவர்களை தன் கத்தியால் தாக்கினாள்.


"பயம் கொள்ளாதீர்கள் ராணியே. நான் என் உயிரை தந்தாவது உங்களை காப்பாற்றுவேன்!" சண்டையிட்டபடியே சொன்ன நனியின் வயிற்றில் இறங்கியது ஒரு கத்தி.


ஆதி‌ பயந்து தன் வாயை பொத்தினாள்.


அவள் ஆரம்பத்தில் பயந்தபோதே பிரச்சனை ஒன்று உருவாகி உள்ளதை யூகித்து விட்டான் கவி. பனி சிலைகளின் குகையை நோக்கி கிளம்பினான்.


நனியை ஏறி மிதித்த வீரன் ஒருவன் ஆதியை நெருங்கினான்.


"உன் சாவில் எங்களின் பழி தீர்க்கப்படும்!" என்றவனிடம் தனது அன்பு வேலை செய்யாது என்பதை மட்டும் புரிந்துக் கொண்டாள் ஆதி.


"செத்து விடு!" என்றவன் அவளின் கழுத்தை நோக்கி கத்தியை வீசினான். 


"அன்பே!" கண்களை மூடியபடியே கத்தினாள் ஆதி.


அந்த கத்தி தன் மீது வந்து குத்த வேண்டும் என்ற பேராசையில் வேகமாக எழுந்து ஓடினாள் நனி. ஆனால் அவள் வந்து சேரும் முன் ஆதியின் முன்னால் வந்து விட்டான் கவி. பாய்ந்து வந்த கத்தியை தன் உள்ளங்கையில் வாங்கினான்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments