வருடங்கள் கடந்துக் கொண்டிருந்தது. ஆதி கத்தியை கண்டால் பயம் கொள்ளாத அளவிற்கு மாறி விட்டாள். வாள் சுழற்றவும் சிறிய அளவில் கற்றுக் கொண்டாள்.
கவி சுற்றி இருந்த பல உலகங்களை பிடித்து விட்டான். அனைவரையும் அடிமை படுத்தாத குறைதான். அந்தந்த உலகத்தின் அரசர்கள் இவனின் சொல் பேச்சு கேட்டே உலகை ஆள வேண்டும் என்று கட்டளையிட்டான். ஆனால் இந்த விசயங்கள் ஆதியின் பார்வை வரை செல்லாமல் பார்த்துக் கொண்டான். அவள் கண்ட ஒரே உத்தமன் தான்தான் என்பதை போல நடந்துக் கொண்டான்.
வித்யநயனும் இயனியும் உள்ளுக்குள் நெருப்பாக கொதித்துக் கொண்டிருந்தார்கள். ஆதியின் நெஞ்சிலிருந்து அன்பை அழிக்க உதவும் மருந்தை தினமும் அவளுக்கு கொடுத்து வந்திருந்தார்கள். அந்த மருந்து போதுமான அளவிற்கு அவளின் உடலில் கலந்து விட்டது என்றே சொல்லலாம். ஆனால் அந்த மருந்தை தூண்டி விட நல்லதொரு துரோகம் தேவைப்பட்டது. அந்த துரோகம் நடக்கவும், அந்த துரோகத்தை நடக்க வைக்கவும் நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள் இயனியும் வித்யநயனும்.
தினமும் மாலையில் ஆதியை பார்க்க வரும் கவி அன்றும் அப்படிதான் வந்தான்.
ஆதி கத்தியை சுட்டு விரலின் மீது வைத்து அதன் எடையை பரிசோதித்தபடி அமர்ந்திருந்தாள்.
"ஆதி.!" என்றபடி வந்து அவளின் முன்னால் அமர்ந்தான் கவி.
ஆதி நிமிர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தாள்.
இவளுக்காக இன்னும் பல ஆயிரம் வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்ற உண்மை அவனுக்கு கவலையாக இருந்தது.
"ஏந்தலே.. நான் பால்வெளி அண்டத்திற்கு போய் வரட்டா?" எனக் கேட்டாள்.
கவி அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தான். தன் அதிர்ச்சியை முகத்தில் இருந்து மறைத்தான்.
"ஏன்?"
"பிள்ளைகளை பார்க்க வேண்டும் போல் உள்ளது.!" என்றாள் மனிதர்களின் நினைவில்.
"நான்கைந்து நாட்களுக்கு பிறகு சென்று வருவாயாம் ஆதி!" என்றவன் அன்று மாலையே சத்திய தேவ உலகத்தை விட்டு வெளியே கிளம்பினான்.
மனிதர்களை பிரபஞ்ச வெளியில் இருந்து அழைத்து வர ஆட்களை பூமிக்க வர சொல்லி தகவல்களை அனுப்பினான்.
பூமியின் சிறைகளில் அடிமையாக இருந்த வேற்று கிரகவாசிகளை செவ்வாய் கிரகத்தில் இருந்த நிலத்தடி சிறைக்கு இடம் மாற்றினார்கள்.
பூமி வழக்கமான அமைதியோடு இருந்தது. மனிதர்கள் அன்பின் குழந்தைகளை போல நடிக்க ஆரம்பித்தார்கள். இது இப்போது இல்லை.. இந்த சில ஆயிரம் வருடங்களாகவே நடப்பதுதான். பிரபஞ்சத்தின் முக்கால்வாசி கிரகத்தை இவர்கள் பிடித்து விட்டனர்.
ஆதி கவியின் பிள்ளைகள் என்றால் பல கிரகங்களிலும் மக்கள் நடுங்கினார்கள். இயந்திரங்களை போல மனதை உடையவர்களும், கற்பாறையை போல திடம் உள்ளவர்களும் இவர்களின் கண்களுக்கு மயங்கி பிறகு இவர்களின் கத்திகளுக்கு பலியாகினர். அரக்கர்கள் என்று இவர்களுக்கு பெயரும் கூட சூட்டப்பட்டது. ஆனால் இந்த விசயங்களை ஆதியின் செவிகள் வரை சென்று சேராமல் இருந்ததில்தான் கவியின் புத்தி வேலை செய்துக் கொண்டிருந்தது.
ஆதி பூமிக்கு வந்தபோது விவசாயம் ஒரு புறம் நடந்துக் கொண்டிருந்து. மறு புறத்தில் பட்டாம்பூச்சி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆதிக்கு இதயம் குளிர்ந்தது.
ஆதியை கண்டதும் "தாயே.!" என்று ஓடி வந்தார்கள் அனைவரும்.
அவளை அணைத்துக் கொண்டார்கள்.
ஆதி தன் உருவில் இருக்கும் குழந்தைகளை அன்போடு பார்த்தாள். தன் உருவில் இருக்கும் இவர்கள் எந்த தவறும் செய்யாமல் திருந்தி விட்டது அவளுக்கு மகிழ்ச்சியை தந்தது.
"இந்த உலகம் சற்று சலிப்பை தருகிறது தாயே! ஆனாலும் இங்கே பிடித்துள்ளது. இங்குள்ள விலங்குகளும் பறவைகளும் எங்களின் நெருங்கிய நட்புகள் ஆகி விட்டார்கள்.!" என்றான் ஒருவன். அதே வேளையில் பறவைகள் பல பறந்து வந்து மனிதர்களின் தோளில் அமர்ந்தன.
அவர்கள் இந்த சில ஆயிரம் வருடங்களாகவே பூமியின் மற்ற உயிரினங்களை துன்புறுத்துவதை நிறுத்தி விட்டார்கள். தங்களின் போட்டிக்கு தகுதி வாய்ந்த எதிராளிகளை கண்டுப்பிடித்து விட்டவர்களுக்கு இந்த பறவைகளும் விலங்குகளும் ஏதோ சிறு பூச்சிகள் போல தெரிந்தன.
ஆதி அங்கிருந்த தனது மலர் கோட்டையில் தங்கினாள். பூமியின் உணவுகளில் அவளுக்கு பிடித்ததை கொண்டு வந்து தந்தார்கள் மனிதர்கள். அவளிடம் இதமாக பேசினார்கள். ஆதிக்கு அவர்களை மிகவும் பிடித்திருந்தது.
இரண்டாம் நாள் சத்திய தேவ உலகிற்கு புறப்பட்டாள் ஆதி.
"அவளிடம் உண்மையை சொல்லி இருக்கலாம்.!" அக்வா பிரபஞ்ச வெளியில் நின்றபடி சொன்னார்.
"எல்லாம் விதிப்படிதான் நடக்கும்!" என்ற ஹார்ட் மனிதர்களை பார்த்து புன்னகைத்தார். "புவியின் மனிதர்களால் இந்த மொத்த பிரபஞ்சத்தையும் கூட அடிமைப்படுத்த முடிகிறது. இவர்களின் கடவுளாக பெருமைப்பட வேண்டும். ஆனால் எனக்கு மனம் வலிக்க செய்கிறது. எனது கடவுள் தன்மையில் சற்று பைத்தியக்காரத்தனம் கலந்து உள்ளதாக இந்த பிரபஞ்சத்தின் மற்ற கடவுளர்கள் சொல்வது உண்மைதான் என்று நினைக்கிறேன்.!" என்றார்.
தூரத்தில் நின்றபடி இவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த ஃபயர் சிரித்தாள். "இந்த வார்த்தைகளில் எந்த மாற்றமும் இல்லை.!" என்றாள்.
ஆதி பூமியை விட்டுப் புறப்பட்டதும் பூமி வழக்கமான வேலைக்கு கிளம்பி விட்டது.
நாட்கள் நகர்ந்தது. ஆதி கத்தியை வைத்து தன் மீது தாக்குதல் விழாமல் தடுக்க கற்றுக் கொண்டாள்.
அவளின் உடம்பில் கலந்திருந்த அன்பின் எதிரி மருந்து வீரியமாக வளர்ந்துக் கொண்டிருந்தது.
கத்தியை பயன்படுத்துதல் தவறு அல்ல என்று அவளின் நெஞ்சில் பதிய வைக்கப்பட்டு விட்டது. நனி இந்த விசயத்தில் நன்றாகவே பாடம் எடுத்தாள்.
உயிர் வதையையும் கூட சரியென்று சொல்லி அவ்வப்போது ஆதியின் மனதைக் கரைக்க முயன்றாள்.
அந்த விசயத்தில் ஆதிக்குதான் மனது இளகவில்லை.
வருடங்கள் உருண்டோடிக் கொண்டே இருந்தது. சத்திய தேவ உலகின் பலமும் வளர்ந்து விட்டிருந்தது. அரசி ஆதியின் அன்பின் வேர் அந்த உலகத்தின் நடு மத்தி வரை கிளை பரப்பி விட்டிருந்தது. கவியை தவிர மற்ற அனைவரின் மனதிலுமே அன்பு வளர்ந்துக் கொண்டிருந்தது.
அவள் முழு அரசியாகி அந்த உலகத்தை வழிநடத்தும் நாள் எப்போது வருமென்று அனைவருமே எதிர்ப்பார்த்தனர். அவளின் அன்பு அவர்களை ஈர்த்தது. அது மிகவும் இயல்பே. ஆனால் கவி அந்த இயல்பில் சிக்காமல் சாதாரணம் போல மிகவும் குறைவான அன்போடு ஆதியோடு பழகிக் கொண்டிருந்தான்.
வருடங்கள் ஓடியே விட்டது. அதிசயம் போலிருந்தது அனைத்தும்.
பயிற்சி மைதானத்தின் நடுவில் நின்றிருந்தாள் ஆதி. அவளின் கையில் நீண்டதொரு வாள் இருந்தது. அந்த வாளை கவிதான் அவளுக்கு உருவாக்கி தந்திருந்தான். ஆதி இளம் தேவதையாக வளர்ந்து விட்டிருந்தாள். அவளின் முகத்தில் ஆளுமை வந்திருந்தது.
ஆதியின் எதிரில் நின்றிருந்த நனி சுழன்று வந்தாள். தன் கத்தியால் ஆதியை தாக்க முயன்றாள். ஆனால் ஆதி ஒரே நொடியில் அவளை தன்னை விட்டு தூர தள்ளி நிறுத்தினாள். அவளின் கழுத்தில் தொட்டும் தொடாமல் இருந்தது ஆதியின் கத்தி. எதிரியை நொடியில் சரணைடைய செய்ய வைக்கும் யுக்தியை அவள் கற்றிருந்தாள்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
VOTE
COMMENT
SHARE
FOLLOW
0 Comments