Advertisement

Responsive Advertisement

தேவதை 41

 விசித்திர உலகத்திற்கு எப்போது செல்வது என்று அனைவரும் பேசி முடிவெடுத்தனர். 


"விசித்திரர்களின் வாழ்நாள் செல்வங்களை வெற்றிக்கரமாக இங்கே எடுத்து வருவோம்.!" என்றான்‌ கவி.


"நிச்சயம் ஏந்தலே.! இதுவரை எப்படி மற்ற உலகங்களை வெற்றிக் கொண்டோமோ அது போலவே இதையும் வெற்றிக் கொள்வோம்.!" என்றான் யனி.


ஆதி அதிகாலை நேரத்தில் கண் விழித்தாள். இரவோடு பழகவே பல நாட்கள் பிடித்தது அவளுக்கு. இரவு புதிது அவளுக்கு‌.‌ இருளை கண்டு ஆரம்பத்தில் பயந்தாள் அவள். 


கவியை விரும்பிக் கொண்டிருந்தாள். அப்போதும் கூட அழிந்து போன தன் உலகத்தை எண்ணி மனதுக்குள் அழுதாள். மென்மையான அந்த மனதில் அழுகையும் அன்பும் மட்டும்தான் குடியிருந்தது.


ஆதி தனது மாளிகையை விட்டு வெளியே வந்தாள். எங்கும் பனி. எங்கும் பனி மரங்கள். ஏகாந்த வாசத்தை சுவாசித்தபடி கவி எங்கே என்று தேடினாள். அவனின் வாசம் எங்கோ தூரத்திலிருந்து வீசியது. அவனை தேடியபடி பனியில் கால் பதித்து நடந்தாள்.


சத்திய தேவர்களும் தேவதைகளும் அவளை கண்டு புன்னகைத்தனர். வணங்கினர். 


இந்த உலகத்திற்கு அன்பை போதுமென்ற அளவு கற்று தந்து விட்டதாக நம்பினாள் ஆதி. அவர்களின் புன்னகைகளை நம்பினாள்.


அரண்மனைக்குள் நுழைந்தாள். அவளின் மாளிகையில் அவன் இல்லை. அதனால் இங்கேதான் இருப்பான் என்று நம்பினாள். 


அரண்மனைக்குள் நுழைந்தபோதே அவளின் இதயம் பலவீனமாக துடித்தது. அவளின் நரம்புகளில் பிணைந்து ஓடிக் கொண்டிருந்த கவியினுடனான அவளின் பந்த வேர்கள் நிறம் மாற ஆரம்பித்தன.


எதுவோ சரியில்லை என்பதை உணர்ந்தாலே தவிர என்னவென்று அறியவில்லை. அரண்மனைக்குள் நடந்தாள். நடந்துக் கொண்டே இருந்தாள். அவனின் தனி அறையின் முன்னால் வந்து நின்றாள்.


அவனின் வாசம் அவளுக்குள் விஷம் போல கலப்பது போலிருந்தது. கவியின் அறை கதவின் மீது கை வைத்தாள். கதவு தானாக திறந்தது. பனி படுக்கையில் கண் மூடி இருந்தான் கவி. அவனின் அருகில் அவனின் அணைப்பில் இருந்தாள் நனி.


அணைத்துக் கொண்டிருந்தான். ஆதியின் உள்ளம் அதை திருப்பி திருப்பி சொன்னது. அணைப்பு என்பதை சாதாரணமா எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? அவன் அவளின் பாதி. பந்தத்தில் அவளை பிணைத்தவன். அவனின் வேர்கள் அவளின் உடம்பிலும் அவளின் வேர்கள் அவனின் உடம்பிலும் மாறி மாறி ஓடிக் கொண்டிருந்தன.


ஆதியின் இமைகள் ஈரமாகியது. நெஞ்சம் கனத்துப் போனது. பலவீனமாக உணர்ந்தாள். வலி அதிகமாகி கடைசியில் மரத்துப் போனது.


அவளுக்கு மட்டும்தான் மரத்தது. ஆனால் கவிக்கு பதில் வலி தாக்கதான் செய்தது. இதயத்தை பிடித்தபடி எழுந்து அமர்ந்தான். எதிரில் நின்றிருந்த ஆதியை பார்த்தான்.


"ஆதி உனக்கு என்ன ஆச்சி? ஏன் இவ்வளவு வலி?" எனக் கேட்டவனின் அருகே எழுந்து அமர்ந்தாள் நனி. ஆதியை கண்டதும் அதிர்ந்தாள்.


"மகாராணி.!" என்று கூவியவள் எழுந்தோடி அவளின் காலில் விழுந்தாள்.


"மகாராணி.. என்னை மன்னித்து விடுங்கள்.. நான் உங்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று எவ்வளவோ மறுத்தேன். ஆனால் ஏந்தல்தான் வலுக்கட்டாயமாக.. என்னை மன்னித்து விடுங்கள்.!" என்று கையை கூப்பினாள்.


கவி அதிர்ச்சியோடு எழுந்து நின்றான்.


"என்ன நாடகம் இது?" என்று கர்ஜித்தான்.


ஆனால் நனி ஆதியின் காலை விட்டு நகரவில்லை. 


"உ.. உன்னை என் தோழி என்று நினைத்தேனே!?" ஆதிக்கு குழப்பமாக இருந்தது. வலி வேறு ஏதாவதாகவோ மாறுவதன் வலி இன்னும் பெரிய வலியாக இருந்தது.


"ஆதி.. இது நாடகம்.!" என்று கர்ஜித்தான் கவி.


அவனால் இப்படி செய்ய முடியாது. அவனுக்கும் அவளுக்கும் இடையில் பந்தத்தின் வேர் இருந்தது‌. இருவரில் யார் துரோகம் செய்தாலும் பந்த வேர் கருகி போய் விடும். பந்த வேர் கருகும் போதே அவர்களின் உயிரும் போய் விடும். முட்டாள் கூட இப்படி ஒரு தவறை செய்ய மாட்டான் என்பது அவனின் கணக்கு.


ஆனால் ஆதியின் கணக்கு வேறாக இருந்தது. அவள் உடல் கூடலை பற்றி யோசிக்கவேயில்லை. அவன் நனியின் மீது காதல் கொண்டிருப்பதாக எண்ணினாள். கவியின் நெஞ்சில் புது நேசம் உண்டாகி விட்டதாக நம்பினாள்.


"நீங்கள் இவளை விரும்புகிறீர்களா?" 


"முட்டாள் தேவதையே.! நீ முட்டாள் என்று எப்போது புரிந்துக் கொள்வாய்? நீ என் மகாராணி. என் உலகின் தலைவி. உன்னை விட்டுவிட்டு வேறு ஒருத்தியை எப்படி நேசிப்பேன்?" எனக் கேட்டான் கடுப்போடு.


"இல்லை.. எனக்குள் வேறு ஏதோ உணர்வு.!" என்றாள் நெற்றியை பிடித்தவண்ணம்.


"எந்த உணர்வும் இல்லை ஆதி. நீ என்னை நம்பு.!" என்றவன் தனது வாளை எடுத்தான்.


"நனி.. நீ செய்ததை நான் மன்னிக்கப் போவதில்லை. மரணமே உனக்கான பரிசு.!" என்றான்.


"நீங்கள் செய்த தவறுக்கு இவள் ஏன் பழி ஏற்க வேண்டும்?" ஆதி கோபத்தோடு கேட்டாள்.


"அன்பின் தேவதையாக இருந்தால் இந்த அளவிற்கா முட்டாள்தனம் கூடும்?" நக்கலாக கேட்டான் கவி.


ஆதி வருத்தமாக தரைப் பார்த்தாள்.


"ஒரு தேவதை எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணம் நீ.!" என்று கை நீட்டி பழி சொன்னான்.


ஆதி கண்ணீர் சிந்தினாள். அவன் வெறுக்கிறான் என்று நினைத்தாள். 


"ஏந்தலே.!" ஓடி வந்தான் யனி.


ஆதியை கவனிக்காதவன் அவளை தாண்டிக் கொண்டு உள்ளே ஓடினான்.


"விசித்திர உலகத்தை நம்மால் பிடிக்க முடியாது.!"  என்று சொல்லி வருந்தினான் யனி.


"அப்புறம் பேசலாம்.!" எச்சரித்தான் கவி. ஆதியிடம் உண்மையை சொல்ல கூடாது என்று நினைத்தான்.


"அந்த உலகத்தை நாம் அழிக்கலாம் என்று போர் படை கருவிகளை தயார் செய்தோம்.. இதுவரை அழித்த பல உலகங்களில் இதுவும் ஒன்று என நினைத்தேன். ஆனால் இது அனைத்தும் தவறாகி விட்டது. உங்களின் பூமி பிள்ளைகள் எப்படி தேவ உலகிற்குள் நுழைந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் எப்படியோ வந்து விட்டார்கள். தேவர்களும் கூட மனிதர்களின் கண்களில் தெரியும் அன்புக்கு அடிமையாகி விட்டிருக்கிறார்கள். இதை பயன்படுத்தி அவர்கள் விசித்திர உலகத்தையே வேட்டையாடி விட்டார்கள். நீங்கள் எப்படி அன்பின் தேவ உலகத்தை முழுதாய் அழித்தீர்களோ அதே போல விசித்திர உலகத்தை அவர்கள் அழித்து விட்டார்கள். ஒரு ஜீவன் கூட உயிரோடு இல்லை!" என்றான்.


கவி ஆதியையே மறந்து விட்டான்.


"இது எப்படி சாத்தியம்?" எனக் கேட்டான்.


"உண்மைதான் ஏந்தலே! விசித்திர தேவர்கள் அனைவரும் அழிந்து விட்டார்கள்.!"


"ஆனால் அவர்கள் வெறும் மனிதர்கள்.!" எதிர் வாதமாடினான் கவி‌.


இவர்களின் வாதத்தை கேட்க இயலாமல் அழுதாள் ஆதி.


அன்பின் தேவ உலகின் அழிவு பற்றிய பேச்சு அவளை வதைத்து விட்டது. கவி செய்யாத துரோகத்தை செய்ததாக நம்பி உடைந்து விட்டிருந்தாள். அதே மனதோடு தன் உலகத்தை நினைத்து விட்டாள். இத்தனை நாளும் உள்ளுக்குள் மட்டும் அழுதுக் கொண்டிருந்தவள் இப்போது நெஞ்சம் உடைய விம்மினாள்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments