Advertisement

Responsive Advertisement

தேவதை 42

சாதாரண மனிதர்கள் தேவ உலகத்தை அழித்தார்கள் என்றுச் சொன்னால் யார்தான் நம்புவார்கள்? 


கவிக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்த பல்லாயிரம் ஆண்டுகளில் அந்த நூறு மனிதர்களும் பல விசயங்களை கற்று விட்டனர். வளர்ந்து விட்டனர். பிரபஞ்சத்தின் துகள்களை சுவாசித்து எச்சூழ்நிலையிலும் வாழ பழகி விட்டனர். தானாய் கற்றுக் கொள்ளும் சக்தி அவர்களுக்கு இருந்துள்ளது. அதை கவிதான் அறியாமல் போய் விட்டான்.


தனது வாரிசுகள் இந்த அளவிற்கு முன்னேறி உள்ளதை நினைத்து அவனுக்கு சந்தோசம்தான். ஆனால் ஆதியும் அதே போல நினைப்பாளா? 


அவளிடம் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக தான் சொல்லி வந்த பொய்கள் அனைத்தும் உடைந்துப் போனதற்காக வருந்தினான் கவி.


"ஆதி.." என்றான்.


"அவள் வளர்ந்துட்டா ஏந்தலே.!" என்றான் யனி.


கவி புரியாமல் அவனைப் பார்த்தான்.


"அவ வளர்ந்துட்டா.. அவளுக்குள் வெறுப்பும் கூட உண்டாகும் அளவிற்கு அவள் வளர்ந்துட்டா.. அவ இனி குழந்தை இல்ல.." என்றவனை குழப்பமாகவே பார்த்தான் கவி.


ஆதியின் உடம்புக்குள் பரவி இருந்த வெறுப்பை தூண்டி விடும் விஷம் அவளின் உடைவில் உயிர் பெற்றதை யனியும் நனியும் உணர்ந்தனர். கவிதான் அதை அறியாமல் போய் விட்டான்.


அன்பு இறந்து ஆதியின் மனதுக்குள்ளேயே புதைந்துக் கொண்டிருந்தது. அவள் தன்னை கட்டுப்படுத்தும் நிலையை விட்டு தாண்டியிருந்தாள்.


அவளின் எதிரிகள் யாரென்று அவளுக்கு இப்போதுதான் புரிந்தது. வளர்ந்து விட்டிருந்தாலும் கூட இவ்வளவு நாளும் காதலின் போர்வையில் இருந்தவளுக்கு கவியின் மீது எந்த கோபமும் வந்தது இல்லை. இப்போது புரிந்தது அனைத்தும்.


அவளின் உலகம் அழிந்ததை மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்த்தாள். இதோ.. இப்போது இங்கே கண் முன் நிற்கும் அவனேதான் அன்று அனைவரையும் அழித்து தாண்டவம் ஆடினான். அவளின் அன்பின் உலகம் பரிசுத்தத்தின் மறு உருவம். அந்த உலகத்தை கருணையே இல்லாமல் அழித்தவன்தான் இவன்.  


அவளின் பிள்ளைகளை நினைத்துப் பார்த்தாள். அவளின் பிள்ளைகளின் மனதில் விஷத்தை விதைத்தவன் இவன்.


குழந்தையாய் இருந்த தன்னையும் அழிக்க முயன்றவன் இவன். அனைத்தும் கூட்டல் கணக்கு போல புரிந்தது.


"ஆதி.. நாம அப்புறம் பேசலாம்.." என்ற கவிக்கு இதயம் ஏனோ கசந்தது. இப்படி ஒரு கசப்பை அவன் இதுவரை உணர்ந்ததே இல்லை.


ஆதியின் உள்ளத்து கசப்பு அது என்பதை அவன் அப்போது அறியவில்லை.


"புது பொய்களை சொல்ல நேரம் தேடுகிறீரா ஏந்தலே?" எனக் கேட்டவளை குழப்பமாக பார்த்தவன் "பொய் சொல்லல ஆதி.. உண்மையை உன்னிடம் சொல்லல. அவ்வளவுதான். என் பிள்ளைகள் முட்டாளாய் இருப்பதை நான் விரும்பல. அதனாலதான் அவங்களுக்கு போர் பயிற்சி தந்து பிரபஞ்சம் சுத்தி வர அனுப்பினேன். அவங்க என் பிள்ளைகள். ஒரு கிரகத்திற்குள் அடைந்து அதற்குள்ளேயே வாழ்ந்து சாகுபவர்கள் அல்ல.." என்றான்.


ஆதி சிரித்தாள்.


"ஆனா அவங்க என் பிள்ளைகள் என்பதை மறந்துட்டிங்க நீங்க.. ஒரு அன்பின் தேவதையின் பிள்ளைகள் எப்படி பிரபஞ்சத்தின் மற்ற கிரகங்களை.. ஒரு தேவ உலகத்தையே அழிப்பார்கள்? என்னை நீங்கள் பழி வாங்கிட்டு இருந்திருக்கிங்க.. ஒரு அன்பின் தேவதையான என்னை தோற்கடிப்பதில் உங்களுக்கு அவ்வளவு சந்தோசம்.!" என்றாள். 


மனிதர்களை சந்திக்க வேண்டிய அவசரத்தில் இருந்தான் கவி. இவளின் வாதம் கண்டு சலிப்பாக இருந்தது.


"நாம அப்புறம் பேசலாம் ஆதி.!" என்றவன் அவளை விட்டுவிட்டு வெளியே நடந்தான். 


"சத்திய தேவ ஏந்தலே.. நான் இன்னும் பேசி முடிக்கல.." என்றவளிடம் திரும்பி வந்தவன் "முட்டாள்.. எனக்கு வேலை இருக்கு.. நீ போய் பனிப் பூக்களை கோர்த்து மாலையாக்கி கழுத்தில் போட்டு விளையாடிக் கொண்டிரு.." என்றான்.


சிரித்தாள். அவனின் அரையிலிருந்து வாளை உருவினாள்.


"என்ன செய்ற?" எனக் கேட்டான் கவி.


"உங்களோடு போரிட போறேன்.." என்றவளை வியப்போடு பார்த்தவன் "அன்பின் தேவதை நீ.!" என்றான்.


"ஆ.. ஆனா நீங்கதான் என் அன்பின் தேவ உலகத்தை அழிச்சிங்க.." என்று கண்ணீர் விட்டவள் அவனை நோக்கி கத்தியை சுழற்றினாள்.


என்ன செய்வது என்று யோசித்தான் கவி.


"மகாராணி.. நீங்கள் செய்வது தவறு.." என்றான் சத்திய தேவன் ஒருவன். அவனை நோக்கி கத்தியை காட்டினாள் ஆதி. அவளின் வெறுப்பு அந்த கத்தியில் படர்ந்து எதிரில் இருந்தவனை தாக்கியது. அவன் அங்கேயே மடிந்து விழுந்தான். இறந்தும் போனான். கவி அதிர்ச்சியோடு ஆதியை பார்த்தான்.


ஒற்றை மரணத்திற்கும் வலி தாங்காமல் கதறி அழுபவள் இப்போது ஒரு கொலையையே செய்தது பெரிய விசயமாக தோன்றியது அவனுக்கு‌. அவளின் விழிகளில் அன்பே தென்படவில்லை. ஏதோ ஒரு புது உணர்வு இருந்தது. அது சற்று பயத்தை தந்தது.


"நான் ஆதி.. அன்பின் தேவ உலகின் கடைசி இளவரசி.. என் உலகத்தை அழித்தவர்களை பழி வாங்க போகிறேன்.." என்றபடி கத்தியை உயர்த்தினாள் ஆதி.


கவிக்கு சிரிப்பு வந்தது. ஆனால் அது இதழ்களை தாண்டவில்லை. 


"எனது காதலை உடைச்சிங்க நீங்க.. எனது உலகத்தையும் அழிச்சிங்க.. எனது பிள்ளைகளை எனது ஆசைப்படி இல்லாமல் திசை திருப்பி விட்டிங்க.. உங்களை நான் மன்னிக்க முடியாது ஏந்தலே.!" என்றாள்.


"ஆனால் அது என் கத்தி.." தான் சொல்வது சம்பந்தம் இல்லாதது போல தோன்றியது கவிக்கு. 


கத்தியை அவனிடமே வீசினாள் ஆதி. தனது கத்தியை எடுத்தாள்.


கவியின் உடம்பில் ஓடிக் கொண்டிருந்த பந்த வேர்கள் கருப்பாய் மாறிக் கொண்டிருந்தன. அவளின் உடம்பில் இருந்த வேர்களோ நெருப்பு போல சிவப்பாக மாறிக் கொண்டிருந்தன.


ஆதி தனது கத்தியை அவன் மீது வீசினாள். அவனின் உடலில் காயம் பட்டு ரத்தம் கசிந்தது. இந்த இடைப்பட்ட நேரத்தில் இவ்விடத்திற்கு வந்து விட்ட சத்திய தேவர்களும் தேவதைகளும் பயத்தில் அலறினார்கள். தங்களின் ஏந்தலுக்கு அடிப்படும் என்பதை கூட அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


"கத்தாதீர்கள் தேவர்களே.. உங்கள் யாரையும் நான் விடப் போவதில்லை.. என் உலகத்தை எப்படி என் கண் முன் அழித்தீர்களோ அதே போல இந்த உலகத்தையும் அழிப்பேன் நான்.." கர்ஜித்தாள்.


கவி குழம்பினான். அவன் பார்த்த ஆதி அவள் இல்லை. இவள் ராட்சசி போல இருந்தாள். 


"எனது உலகத்தின் அழிவிற்கு உங்கள் மரணம்தான் ஈடாகும். உங்களை அழித்தால்தான் என் சகோதர சகோதரிகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும்.."


"ஆதி வேண்டாம்.. மரணத்திற்கு இன்னொரு மரணம் ஈடில்லை.. அவர்களை மன்னித்து விடு.. நம் அன்பின் உலக கடைசி இளவரசியாய் உள்ள நீ நூறு ஆயிரம் அன்பின் தேவர்களை உருவாக்கு.." என்றார்கள் அங்கே தோன்றிய அவளின் நினைவுகளில் இருந்த ஆதியின் சகோதர சகோதரிகள்.


ஆதி அழுதாள். "சகோதரிகளே.." என்றாள். அவளின் அழுகை கண்டு கவிக்கு மனம் பிசைந்தது. இப்போதுதான் குழந்தை போல இருந்தாள் அவள். அவளின் கண்களை துடைத்து கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது.


"உங்கள் எல்லோரையும் இழந்து நான் எத்தனை நாட்கள் அழுதேன் தெரியுமா? நான் எப்படி பயந்தேன் தெரியுமா? அழிந்த இனத்தின் கடைசி ஆளாக, ஒற்றை ஆளாக இருப்பதன் வலி தெரியுமா? இவர்கள் என்னை சிறையில் அடைத்தபோது நான் கதறிய கதறல் தெரியுமா?" என்று கேட்டு அழுதாள்.


கவிக்கும் கூட பரிதாபமாகதான் இருந்தது.


இத்தனை ஆயிரம் வருடங்களாக பேசாமல் அவள் ஏன் இதை இப்போது பேசுகிறாள் என்று குழம்பினான். இந்த இடைப்பட்ட நேரத்தில் அங்கிருந்து நழுவி விட்ட யனியையும் நனியையும் அவன் கவனிக்கவேயில்லை.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments