கவி தனது பணி மாளிகையில் இருந்தான். போர் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மொத்த உலகமும் அமைதி காத்தது. மனிதர்களும் கூட மௌனமாக ஆங்காங்கே அமர்ந்து இருந்தனர்.
செனியா படுக்கையில் இருந்தாள். அவளின் கையை பற்றியபடி அருகிலேயே அமர்ந்திருந்தான் கவி. சுயமாய் உருவாகி இருந்த அன்பு இது. இதற்கு எந்த மாய மந்திரமும் தேவையாய் இல்லை அவனுக்கு.
"செனியா.." முனகினான்.
வனி செனியாவின் காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டிருந்தார்.
"இவளிடம் அன்பு அதிகளவில் உள்ளது. அதன் வீரியம் உன் உலகத்தை செழிக்க வைத்துள்ளது.." என்றபடி தன் பக்கம் பார்த்த அந்த பிரபஞ்ச வைத்தியரை குழப்பத்தோடு பார்த்தான் கவி.
"இந்த மொத்த பிரபஞ்சமும் அழிந்துக் கொண்டிருக்கிறது கவி. அனைத்து நட்சத்திரங்களும் தங்களின் ஒளியை இழந்துக் கொண்டிருக்கின்றன. உன் உலகமும் இந்த அண்டமும் அழிவின் பிடியில் சிக்காமல் இருக்க காரணம் இந்த அன்பின் மனிதர்கள்தான்.." என்றார்.
கவிக்கு கவலையாக இருந்தது. ஆதி ஏன் இப்படி செய்கிறாள் என்று கோபமாக வந்தது.
செனியா தன் தந்தையின் கண்களை பார்த்தாள். "கவலைக் கொள்ளாதீர்கள் தந்தையே.. எனக்கு ஒன்றும் ஆகாது.." என்றாள்.
அவனின் விழிகள் கலங்கியது. "அன்பின் தேவதைகள் முட்டாள்.. அந்த வரிசையில் நீங்களும் அன்பின் மனிதர்களாக முட்டாளாகி விட கூடாது என்று நான் எவ்வளவு முயன்றேன்.. கடைசியில் இப்படி நீயும் இப்படி மாறி விட்டாயே.." என்றான் கரகரத்த குரலில்.
வனி அவனை வெறித்தார். 'நிச்சயம் இவன் முட்டாள்தான்..' என்று தனக்குள் முனகினார்.
"உங்களை விட வேறு என்ன முக்கியம் தந்தையே? உங்களுக்காக ஆயிரம் முறை முட்டாள் ஆவேன் நான்.." என்றாள்.
ஒரு உலகத்தை அழிக்கையில் வராத குற்ற உணர்வு, ஒரு தேவதை குழந்தையை தெரிந்தே ஏமாற்றுகையில் வராத குற்ற உணர்வு இந்த மனுசியின் வார்த்தைகளை கேட்டு வந்தது.
"அன்பு சுயநலமற்றது.." ஆதியின் குரல் அவனின் காதுகளில் ஒலித்தது.
அவனுக்கு கஷ்டமாக இருந்தது. செனியாவின் வலியை அவன் உணர்ந்தான். ஆதியின் வலியை விடவும் இது இன்னும் மோசமாக இருந்தது.
எழுந்து விடும் ஒருத்திக்காக, பிழைத்து விடும் ஒருத்திக்காக ஏன் இப்படி வாட வேண்டும் என்று கேட்டு குழம்பினான்.
மாளிகையின் வெளியே ஏதோ சலசலப்பு கேட்டது. வனி வெளியே நடந்தார். ஆனால் பாதியிலேயே திரும்பி வந்தார்.
"கடவுளர்கள் வந்துள்ளார்கள் கவி.." என்றனர்.
கவி தலையசைத்துவிட்டு அதே இடத்தில் அமர்ந்திருந்தான்.
கடவுளர்கள் அந்த மாளிகைக்குள் நுழைந்தனர். மாளிகை முழுக்க பனி மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. பனி பூக்களின் வாசம் கடவுளர்களுக்கு பிடித்திருந்தது.
கடவுளர்களின் உலகை விடவும் இங்கே அழகாக இருந்தது. ஆங்காங்கே தேவன்களும் தேவதைகளும் அமர்ந்திருந்தார்கள். ஒரு சிலர் மட்டும் எழுந்து நின்று கடவுளர்களுக்கு வணக்கம் சொன்னார்கள்.
"நாம கடவுளரா இல்ல அவங்களா?" ஒரு கடவுள் சந்தேகத்தில் கேட்டார்.
"இவங்க திமிரில் விளைந்தவர்கள்.. அதனால் இப்படிதான்.." என்றான் ஒருவன்.
கவியின் அருகே வந்தனர் கடவுளர்கள்.
"உன்னோடு பேச வந்துள்ளோம்.." என்றவர்களின் கூட்டத்தில் ஹார்ட்டும் இருப்பதை கண்டான் கவி.
அவர்களை கொல்ல வேண்டும் போல இருந்தது அவனுக்கு. அவர்கள் ஆதியின் காப்பாளினி உலகின் கடவுள்கள். ஆதியின் வாழ்வை பற்றியும் இந்த மனிதர்களின் வாழ்வை பற்றியும் எதிர்கால நிகழ்வுகளையும் அறிந்திருந்திருப்பார்கள். அவர்கள் நினைத்திருந்தால் இப்படி ஒரு நாள் வருவதை பற்றி முன்பே சொல்லி அவனை பிரச்சனையிலிருந்து தப்பிக்க செய்திருக்கலாம்.
"பேசுங்கள்.." என்ற கவி செனியாவின் முகத்திற்கே பார்வையை திருப்பினான்.
அவள் எழ முயன்றாள். ஆனால் அவனை அவளை எழ விடாமல் தடுத்தான்.
"பிரபஞ்சம் அழிந்துக் கொண்டிருக்கிறது.." என்றார் ஒரு கடவுள்.
"கேள்விப்பட்டேன்.."
"அதற்கு காரணம் அன்பின் தேவதை ஆதி. நீ அவளின் உலகத்தை அழித்ததால்தான் இவ்வளவு பிரச்சனை. நீ இப்போதே சென்று அவளின் மனதை மாற்று.."
கவி இடம் வலமாக தலையசைத்தான்.
"நீங்கள் கடவுளர்தானே? நீங்களே அதை செய்யுங்கள்.." என்றான்.
"கடுப்பேற்றுகிறேன்.." என்றாள் ஒருத்தி.
"மன்னிக்கவும் தேவனே.. நாங்கள் கடவுளர்தான்.. மறுக்கவில்லை அதை. ஆனால் இது பிரபஞ்சம். அனைவருக்கும் பொது. அனைவருக்கும் சொந்தம். இந்த பிரபஞ்சத்திற்கு நாம் அனைவரும் தேவை. இந்த பிரபஞ்சத்தை பொறுத்தவரை இந்த மனுசியும் ஒன்றுதான். நீயும் ஒன்றுதான். நானும் ஒன்றுதான். அவரவர் கற்றுக் கொண்ட விதிகளே அவர்களை மேலும் மேலும் உயர்வுப் படுத்திக் காட்டுகிறது.." என்றாள் ஒரு கடவுள்.
"ஓ.." என்றவன் திரும்பவேயில்லை.
"கவி.. எங்களுக்கு மரியாதை கொடு.. உடனே வந்து ஆதியை சமாதானம் செய்.."
கவி எழுந்தான். அவர்களை நோக்கி வந்தான். "நீங்கள் எதிர்காலம் அறிந்திருந்தும் எனக்கு முன்னறிவிக்கை செய்யாதது உங்களின் தவறு. அவளின் காலில் விழ என்னால் முடியாது. அவள் ஒரு முட்டாள். அதனால்தான் தனது ஏந்தலுக்கு எதிராகவே திரும்பி உள்ளாள். ஒரு அரசிக்கு உண்டான பணியிலிருந்து விலகியுள்ளாள். அந்த முட்டாளிடம் கெஞ்சுவதை விட இந்த பிரபஞ்சம் அழிவதை காணுவதே சிறப்பு. அழிவின் கடைசி நொடியில் பிரளய நடனம் ஆடுவேன் நான்.." என்றான்.
கடவுளர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
"நீ செய்த தவறால் இந்த பிரபஞ்சம் அழிய இருக்கிறது. அதனால் நாங்கள் உன்னை கைது செய்கிறோம். உனக்கு மரணத்தை தண்டனையென விதிக்கிறோம்.. நீ உன் பதவி துறந்.." படபடவென சொல்லிக் கொண்டிருந்த கடவுளர் ஒருவன் சட்டென்று பேசுவதை நிறுத்தினான். அவனின் கழுத்தில் இருந்தது கவியின் கத்தி.
கடவுளர்கள் அதிர்ச்சியோடு அவனை பார்த்தார்கள். "கற்றுக் கொள்வதே ஒருவரை கடவுளாக்கும் என்றால் வீரத்தையும் வாள் வீச்சையும் நான் கற்றுக் கொண்டது போல வேறு எவரும் கற்றுக் கொண்டதில்லை. அதனால் இங்கே நான்தான் கடவுள். பிரச்னைகளை வரும் முன் கணித்துக் கூறாமல் சோம்பேறிகளாய் ஓய்வு உலகில் ஓய்வெடுத்தற்காக உங்களுக்கு நான் மரண தண்டனை தருகிறேன். என் கத்தி என்னை விட அதிகம் கற்றுக் கொண்டு உள்ளது. ஒரு தேவ உலகையே அழித்த கத்தி. கடவுளரை அழிக்குமா இல்லையா என்று நான் சோதித்து பார்த்து விடுகிறேன்.." என்றான்.
கடவுளர்கள் ஓரடி பின்னால் நடந்தார்கள். அசிங்கமான பிறவியாக இருந்தான் அவன். அவன் தங்களை மிரட்டுவதை அவர்கள் விரும்பவில்லை. கருப்பு நிறத்தில், வலுவான உடல் கட்டோடு, இரண்டே கால், இரண்டே கை, இரண்டே கண்களோடு இருந்தான் அவன்.
"நீ தவறு செய்கிறாய். கடவுளர்களை பகைத்து கொள்வதை போல வேறு எந்த தவறும் இந்த மொத்த பிரபஞ்சத்திலுமே கிடையாது.." தூரத்தில் இருந்து சொன்ன கடவுளரின் தோளில் வந்து பதிந்தது ஆதியின் மற்றொரு கத்தி.
உண்மையிலேயே காயம் உண்டாகி இருந்தது. கற்றுக் கொள்வது ஒன்றே அவரவர் உயர்வை தீர்மானிக்கிறது என்ற பிரபஞ்சத்தின் விதி அங்கே மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. சாதாரண தேவன் வீசிய கத்தி கடவுள் ஒருவரின் உடம்பிலிருந்து ரத்தத்தை வரவைத்து விட்டது என்று பிரபஞ்சத்தின் ஏட்டில் எழுதப்பட்டது.
"அன்பை பகைத்து கொள்வதன் விபரீதத்தை நான் உணர்ந்தேன். இந்த சத்திய தேவனை பகைத்து கொள்வதன் விபரீதத்தை நீங்களும் உணர்வீர்கள்.." என்றவனின் கண்களில் கோப கனல் தெறித்தது.
"தெய்வத்துக்கே மாறு வேஷமே.. என்.." பாட்டு பாடிய ஃபயரை திரும்பி பார்த்து முறைத்தனர் மற்ற கடவுளர்கள்.
"வெகு காலங்களுக்கு பிறகு எங்கள் மனிதர்களின் உலகில் பாடப்பட போகும் பாடல் இது.." என்றாள் சிறு குரலில்.
"உன்னைத்தான் நான் முதலில் கொல்ல விரும்புகிறேன் ஃபயர்.. என் ஆதியை ஏமாற்றி விட்டீர்கள் நீங்கள்.." என்ற கவி அருகே இருந்த வீரனிடம் இருந்து கத்தியை பிடுங்கி இவளை பார்த்து குறி வைத்தான்.
"பாவியாகாதே கவி.. நீதான் அவளை ஏமாற்றினாய். நாங்கள் அவளின் சோகம் தீர உதவி மட்டும்தான் செய்தோம்.." என்று முனகினாள் அவள்.
"பொய்.. பொய்.. அனைத்தும் பொய்.. நீங்க என்னையும் ஆதியையும் வச்சி விளையாடி இருக்கிங்க.." காட்டு கத்தல் கத்தினான் கவி.
"இவன் பைத்தியம் என்பதில் சந்தேகமில்லை. இவன் செய்த தவறுக்கு மற்றவர்கள் மீது பழியை சுமத்துக்கிறான்.." மறுமொழி சொன்னாள் ஃபயர். அதே வேளையில் அக்வா தனது குறிப்பு நோட்டில் இதை எழுதிக் கொண்டார். "இதை ஏன் எழுதுற?" குழப்பமாக கேட்டாள் ஃபயர்.
"இது நம் வருங்கால மனிதர்களுக்கு உதவும் சகி. அவர்கள் தங்களின் தவறுகளினால் மனமுடைந்து குற்ற உணர்விலேயே காலத்தை கடத்தாமல் இது போல யாரோ ஒருவரின் மீதோ அல்லது அவர்களின் முன்னால் போகாமல் இருக்க போகும் கடவுள் மீதோ பழியை சுமத்தி விட்டு அவர்கள் இந்த குற்ற உணர்வுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். நம் குழந்தைகள் அழகாய் வாழ வேண்டும். அதற்கு இதுவும் ஒரு உதவியாக இருக்கும்.." என்று விளக்கம் தந்தார் அக்வா.
"அவன் நம்மை கொல்ல போறதா சொல்லிட்டு இருக்கான். எப்படி நீ மனசாட்சி கூட இல்லாம இப்படி குறிப்பு எடுத்துட்டு இருக்க?" எரிச்சலாக கேட்டான் ஆக்சிஜன்.
"அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? அனைவரின் எதிர்காலத்தையும் கணிக்க முடிந்த நமக்கு நமது எதிர்காலத்தையும் கணித்திருக்கும் சக்தி இருந்திருந்தால் இந்த பிரச்சனை இப்போது வந்திருக்காது.." என்ற அக்வா தனது குறிப்பு சரியாக எழுதப்பட்டுள்ளதா என்று பார்த்துக் கொண்டார்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
VOTE
COMMENT
SHARE
FOLLOW
0 Comments