Advertisement

Responsive Advertisement

தேவதை 47

 கடவுளர்கள் யோசித்துப் பார்த்தார்கள். தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தார்கள்.


"ஆதியை நீ சமாதானம் செய்தால் நீ கேட்கும் ஒன்றை நாங்கள் செய்து தருகிறோம் கவி.." என்றபடி முன்னால் வந்தான் ஒருவன்.


"என்னை பிச்சைக்காரன் என்று நினைத்தாயோ?" பற்களை கடித்த கவியின் கத்தி மீண்டும் உயர்ந்தது. 


கைகளை உயர்த்தியபடி அந்த கடவுள் பின்னால் நகர்ந்தான்.


"வேணாம் கவி.. ரொம்ப தப்பு பண்ற.. கடவுள்கள் நாங்கள் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.. புரிந்துக் கொள். பொறுப்போடு நடந்துக் கொள்.." என்றான்.


கவி தன் வாளை கீழிறக்கினான்‌. யோசித்தான். "உங்களால அன்பின் தேவ உலகத்தை திருப்பி உருவாக்கி தர இயலுமா?" எனக் கேட்டான்.


கடவுள்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.


"முடியாது. சாதாரண கிரகங்களை மட்டும்தான் எங்களால உருவாக்க முடியும். இது தேவ உலகம். அழிந்தது அழிந்ததுதான். அப்படி அந்த உலகத்தை உருவாக்க முடிந்திருந்தால் நாங்கள் ஏன் உன்னிடமும் அந்த தேவதையிடமும் கெஞ்ச போகிறோம்?" 


கவிக்கு புரிந்துப் போனது. அன்பின் தேவ உலகம் இல்லாமல் ஆதி தன்னை ஏற்றுக் கொள்வாள் என்பதில் அவனுக்கு நம்பிக்கை இல்லை. அவளின் மனம் மாற்ற வேறு வழி உண்டா என்று யோசித்தான். 


அவனுக்கு அவள் தேவை. ஏனெனில் அவளுக்கும் அவனுக்கும் இடையில் இருந்த பந்தம். அவனால் வேறு யாரையும் மணக்க முடியாது. இந்த சத்திய தேவ உலகம் மகாராணி இல்லாமல் காலங்களை கடக்காது. அவள் அவனின் உலகிற்கு இப்போதுதான் இன்னும் அதிகமாக தேவைப்பட்டாள். அவனின் தேவைகளுக்கும் அவள் தேவைப்பட்டாள். யோசித்து யோசித்து பைத்தியமானான்.


"உதவி செய் கவி. இந்த பிரபஞ்சத்தின் நலனுக்காகவாவது உதவி செய்.." என்றாள் ஒருத்தி.


"தந்தையே.." மனிதன் ஒருவன் அழைத்தான். அவன் புறம் திரும்பிப் பார்த்தான் கவி.


"இந்த மொத்த பிரபஞ்சத்தின் உயர் இனம் சத்திய தேவ இனமும், இந்த தேவன்களின் வாரிசுகளான புவியின் மனிதர்களும்தான் என்று பிரபஞ்ச ஏட்டில் எழுத சொல்லுங்கள். நம்மை யாரும் எந்த ஒரு சூழ்நிலையிலும் எதிர்க்கவே கூடாது என்று சத்தியம் வாங்குங்கள். கடவுள்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துகளில் சரி பாதியை வாங்கிக் கொள்ளுங்கள்.. பிறகு நாம் சென்று அன்னையை சமாதானம் செய்யலாம்.." என்றான் அவன்.


ஃபயர் அதிர்ந்தாள். "இவன் ஒரு உண்மை மனிதன்." என்றாள்.


"ஆம். நாம் எதிர்பார்த்தது போலவே உள்ளான்." ஆச்சரியத்தோடு சொன்னார் அக்வா.


"ஆனால் அவளை எப்படி நம்மால் சமாதானம் செய்ய இயலும்?" சோர்ந்துப் போய் கேட்டான் கவி.


அந்த மனிதன் ரகசியமாக சிரித்தான். கண்களை விரித்துக் காட்டினான்.


"நம்மால் முடியாதா?" எனக் கேட்டான் அந்த கண்களில் அதிக அன்பை வெளிக்காட்டியபடி.


கவிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் கடவுள்களுக்குதான் உள்ளம் எரிந்துக் கொண்டிருந்தது. கடவுளரிடமே பேரம் பேசுவோர் எதிர்காலத்தில் இன்னும் என்னவெல்லாம் செய்வார்கள் என்று கவலைப்பட்டார்கள் அவர்கள்.


ஆனால் கடைசியில் வேறு வழியே இல்லாமல் அந்த பேரத்திற்கு ஒப்புக் கொண்டார்கள். மீண்டும் ஏதேனும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் இந்த மொத்த சத்திய தேவ உலகத்தையுமே அடிமை செய்துக் கொள்ள நினைத்தார்கள்.


ஆதி இலக்கற்று நடந்தாள். இலக்கற்று தனது கண்ணீர் கடலிலேயே நீச்சல் அடித்தாள். இலக்கற்று பறந்தாள். அங்கிருந்த பறவைகளும், விலங்குகளும், தண்ணீர் வாழ் உயிரிகளும் அவளிடம் அன்பாக பேசினார்கள். அவளின் சொந்த இடம் இது‌. அவளுக்காக, அவள் ஆட்சி செய்ய வேண்டும் என்றே உருவான இடம் இது. மிகவும் மகிழ்ந்தாள். நிம்மதியை உணர்ந்தாள். தனது உலகம் வண்ணமயமாக உள்ளதை கண்டு உள்ளம் பூரித்தாள். அவளின் சிறு இறக்கை சந்தோச மிகுதியில் அதிகம் அசைந்தது.


சிட்டு குருவிகள் சில ஒன்றிணைந்து அவளுக்காக பனி உடைகளை செய்து தந்தன. வெண்ணிறத்தில் பல வண்ண சிறு கோடுகளை கொண்ட உடை அது.  அவளுக்கு பிடித்திருந்தது. 


தனது வாழ்வில் பல ஆயிரம் வருடங்களுக்கு பிறகு நிம்மதியாக இருந்தாள் இப்போதுதான்.


ஒருநாள் புவியின் மலை முகடு ஒன்றில் நடை பழகிக் கொண்டிருந்தவள் கவியின் வாசம் தன்னை நெருங்குவதை உணர்ந்தாள். சமதளத்திற்கு பறந்து வந்தாள். அங்கிருந்த மரத்தின் கனி ஒன்றை பறித்து சுவைத்தாள். இனிப்பு அதிகம் இருப்பதை உணர்ந்தாள்.


"ஆதி.." சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்தாள். கவியும் அவளின் மகன்கள் சிலரும் நின்றுக் கொண்டிருந்தார்கள்.


"இவனை கொன்று விட்டு வரும்படி சொல்லியிருந்தேன் குழந்தைகளே.." என்றாள்‌ புருவம் உயர்த்தி.


பிள்ளைகள் முன்னால் வந்தார்கள். "தாயே.. கடவுள்களோடு ஒப்பந்தம் போட்டு உள்ளோம். நாம் பலவித சொத்துக்களின் அதிபதிகள். இந்த பிரபஞ்சத்தில் உயர்ந்தவர்கள்.!" என்று அனைத்தையும் விளக்கிச் சொன்னார்கள்.


ஆதி சிரித்தாள். மீண்டும் ஒரு ஏமாற்றம். மீண்டும் ஒரு தோல்வி. ஆனால் வலிதான் இல்லை. இப்போதைய தன்னை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. என்ன நடந்தாலும் உடையாமல் இருப்பது எவ்வளவு பெரிய வரம் என்பதை இப்போதுதான் உணர்ந்தாள்.


கோபமும் வெறுப்பும் மனதில் கூடியது. அருகே இருந்த மரத்தின் கிளையில் அமர்ந்தாள்.


"நல்லது.. உங்களின் வாழ்க்கையை நீங்களே முடிவெடுக்கலாம். இது எனது உலகம். இப்போது நீங்கள் வெளியே போகலாம்.." என்றாள்.


அனைவரும் திகைத்துப் போனார்கள்.


"ஆனால் உங்களை நாங்கள் சமாதானம் செய்தாக வேண்டும். உங்களின் மனதில் இருக்கும் வெறுப்பை அழித்தாக வேண்டும்.." என்றாள் ஒரு மனுசி.


சுயநலமான பிரபஞ்சம் என்று அறிந்துக் கொண்ட பிறகும், யாராலும் தர இயலாது நம்பிக்கையை யாரிடம் எதிர்ப்‌ பார்ப்பாள் ஆதி? முன்பாய் இருந்திருந்தால் சரிந்திருப்பாள். ஆனால் இப்போது மூளையில் அந்த முட்டாள்தனமான அன்பு இல்லை. அதனால் அனைத்தும் கண்ணாடி போல தெரிந்தது.


"உங்களின் சமாதானத்திற்கு என்னால் ஒத்துப் போக முடியாது.. நீங்கள் போகலாம்.." என்றவள் மரத்தின் கிளையில் சாய்ந்து படுத்தாள்.


மனிதர்களின் கண்களை அவள் பார்க்கவே இல்லை. பார்த்தாலும் விழும் அளவுக்கு மோசமாய் இல்லை. அவள் ஒரு அன்பின் தேவதை. அன்பின் மனிதர்களிடம் விழும் அளவுக்கு நல்லவேளையாக விதி வாய்க்கவில்லை.


மனிதர்கள் கவலையோடு கவியை பார்த்தார்கள்.


"நீங்கள் சத்திய தேவ உலகம் செல்லுங்கள்.." என்றான் கவி. அவர்கள் தயங்கினார்கள்.


"இவளுடனான விதி எனக்கு சொந்தமானது. நான் என்னால் முடிந்ததை செய்துக் கொள்கிறேன்.. நீங்கள் செல்லுங்கள்.." என்றான்.


மனிதர்கள் தயக்கத்தோடு அங்கிருந்துப் புறப்பட்டார்கள்.


"ஆதி.." என்றான் கவி சில மணி நேரங்களுக்கு பிறகு.


ஆதி திரும்பிப் பார்த்தாள். என்னவென்று பார்வையால் கேட்டாள்.


"நீ என்னை மன்னிக்க நான் என்ன செய்யட்டும்?" 


"எதுவும் இல்லை. என்னை தொந்தரவு செய்யாமல் இங்கிருந்து நீங்கள் கிளம்பினாலே நலம்.." 


கவிக்கு கோபமாக வந்தது. 


"என்னை இகழாதே.. பின்விளைவை மோசமாக அனுபவிப்பாய்.."


ஆதி இறங்கி வந்தாள். அவனின் முன்னால் வந்து நின்றாள்.


"உங்களை போல ஒருவரை நேசித்த பாவத்திற்கு எந்த பின்விளைவையும் அனுபவிப்பேன் நான்.." என்றாள்.


(கதை 3நிமிச யூடியாவே தினம் தருவதால கதை இழுத்துட்டு போற மாதிரி நிறைய பேர் பீல் பண்றிங்க. அதுக்கு சாரி.. இதையே ஒன்றிணைத்து நான் இருபது எபியா தரும்போது டக்குன்னு முடிஞ்ச மாதிரி இருக்கும் உங்களுக்கு. தினசரி டைம்னால வந்த குழப்பம் இது. இந்த குழப்பத்திற்கு நான்தான் காரணம். அதனால மன்னிச்சிக்கங்க. நான் இதற்கு மேலாவது பெரிய யூடியா தர டிரை பண்றேன்..)


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.





Post a Comment

0 Comments