Advertisement

Responsive Advertisement

தேவதை 48

 ஆதியின் விழிகளில் துளியும் அன்பை காண முடியவில்லை. ஆனால் கவிக்கு அவள் சொன்னதுதான் அதிக வலியை தந்தது. தன்னை நேசித்ததை பாவமென அவள் எண்ணுகிறாள் என்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் அவனின் ராணி. அவளே இப்படி சொன்னால் எப்படி?


"என்னை நேசித்ததில் என்ன தவறு கண்டாய்? உனக்கு நான் எந்த விதத்தில் பொருந்தாமல் போனேன்?" எனக் கேட்டான் எரிச்சலோடு.


ஆதி கசப்பாக சிரித்தாள். கோபத்தோடு வெறித்து சிரித்தாள்.


"பொருத்தம் எதற்கு இங்கே? நீங்கள் என் உலகத்தை அழித்தவர்.." என்றவளின் முகத்தை பற்றியவன் "இது உனக்கு இன்றேதான் தெரியுமா?" எனக் கேட்டான் ஆத்திரத்தோடு.


"இந்த காரணத்தை அன்றே சொல்ல வேண்டியதுதானே?" எனக் கேட்டான். அன்றே சொல்லி இருந்தாலும் இவளின் பேச்சை அவன் கேட்டிருக்க போவதில்லை. அதுதான் உண்மை. 


ஆதி சோகமாக தலை குனிந்தாள். "அன்பின் தேவதையாக ஒரு நாள் கூட வாழ முடியாது உங்களால்.." என்றாள். அவளை குழப்பத்தோடு பார்த்தான் அவன். அவள் சொல்ல வருவது அவனுக்கு புரியவில்லை.


"நீங்க என் எதிரி.. இருந்தும் நான் உங்களை நேசிக்க காரணம் என் முழு மனம் அல்ல. இந்த அன்பின் காரணம். என்னை முழுதாய் ஆக்கிரமித்து வைத்திருந்த அன்பின் காரணம். அன்பு.. அது எவ்வளவு மோசமான ஒரு உணர்வு தெரியுமா? உங்களை தூர விலக்கி வைக்க சொல்லும் என் கோபம். ஆனா என்னால முடியாது. ஏனா என் மூளையை மழுங்கடிச்சி வச்சிருந்தது இந்த அன்பு. இனி அந்த அன்பை கொண்டாடுவதை விட இந்த வெறுப்பை நேசிக்கலாம் என்று நினைக்கிறேன். இப்போது நான் சுதந்திரமாக உணர்கிறேன். யாரையும் கண்டு பயப்படவில்லை. யாரும் பொய் அன்பை காட்டி என்னை அடிமையாக்க முடியாது.." 


அவள் சொல்வது கவியால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. அவளை எந்த விதத்திலும் அவன் அடிமைப்படுத்தி வைக்கவில்லை. அவளை நேசித்தான். என்ன காரணமோ.. அன்பின் காரணமோ.. ஆனால் அவளை நேசித்தான். அவளை நேசிக்க அவனுக்கு பிடித்திருந்தது. அதில் அவன் அவமானப்படவில்லை.


"தப்பு செய்யாத.." என்றான் சிறு குரலில்.


சிரித்தவள் "இப்போதுதான் எனக்கு புத்தி தெளிந்துள்ளது ஏந்தலே. தயவு செஞ்சி இங்கிருந்து போங்க.." என்றாள்.


"ஆனா நீ என் உலகின் ராணி. என் உலகம் இயங்க நீ வேணும்.." கர்ஜித்தான் கவி. கொஞ்சமும் அசையாமல் நின்றாள் ஆதி. நெஞ்சில் வெறுப்பு உருவானால் பயம் போய் விடும் என்பதை இப்போதுதான் அவனும் அறிந்துக் கொண்டான்.


"அது உங்களின் பாடு. நான் இந்த கிரகத்தின் காப்பாளினி. நான் என் வேலையை பார்க்கிறேன். நீங்கள் போய் உங்க வேலையை பாருங்க.." என்றவள் அங்கிருந்து செல்ல திரும்பி நடந்தாள். அவளின் கழுத்தின் முன் வந்து நின்றது அவனின் கத்தி.


"விட மாட்டேன் ஆதி.. நீ வேணும் எனக்கு.." என்றான்.


"இந்த கத்தி என்னை தாக்காது. ஆனா என் கத்தி உங்களை தாக்கும். கத்தியை விடவும் மோசமானது வெறுப்பு. அதை உங்களுக்கு தரணும்ன்னுதான் எனக்கும் ஆசை. ஆனா உங்க உலகின் மீது பரிதாபம் கொண்டு விடுறேன்.." 


அவளின் கையை பற்றினான். "என்னோடு வா.." என்று இழுத்தான். அசையாமல் நின்றாள். அவளுக்கு எப்படி திடீரென்று இவ்வளவு பலம் வந்தது என்று புரியாமல் குழம்பினான் அவன்.


'வெறுப்பு குடி கொண்ட நெஞ்சில் எதுவும் சாத்தியம்..' என்றது அவனின் மனம்.


கோபமாக வந்தது அவனுக்கு. அனைத்தும் அவனின் கை மீறி போய் கொண்டிருந்தது.


"உன் கோபம் தீர நான் என்ன செய்யட்டும்? என் உலகம் எனக்கு நல்லபடியா இருக்கணும். என் மக்கள் சுக வாழ்வு வாழணும். அதுக்கு நீ மனம் மாறி உனக்குள் இருக்கும் வெறுப்பை அழிச்சிட்டு வரணும். இதுக்கு நான் என்ன செய்யட்டும்?" எனக் கேட்டான்.


"உங்களால முடியாது.." என்றவள் அவனிடமிருந்து கையை விலக்க முயற்சித்தாள். 


"நான் என் உலகத்துக்காக எது வேணாலும் செய்வேன்.." என்றவனை யோசனையோடு பார்த்தவள் "இந்த பூமியின் மனிதர்கள் நூறு பேரையும் கொன்னுட்டு வாங்க ஏந்தலே.." என்றாள்.


கவி இடம் வலமாக தலையசைத்தான். இது ஆதி என்றே அவனால் நம்ப முடியவில்லை.


"அவர்கள் நூறு பேரையும் கொன்ற பிறகு என்னை வந்து அழையுங்கள். பிறகு நான் வர யோசிக்கிறேன்.." என்றவள் அவனிடமிருந்து விலகி நடந்தாள்.


கவி அதிர்ந்து நின்றிருந்தான். தூரமாக சென்றவளை வெறித்துப் பார்த்தான். அவள் சொன்ன காரியம் அவனால் என்றுமே செய்ய முடியாத ஒரு காரியம்.


அவர்கள் அவனின் பிள்ளைகள். அவன் எப்படி அழிப்பான்? அவளுக்கு பைத்தியம்தான் பிடித்துள்ளது என்று நினைத்தான்.


ஆதி அருவி ஒன்றின் கரையில் அமர்ந்தாள். கழீழியம் என்ற கிரகத்தில் வானவில் அருவி பொழியும் என்று கேள்விப்பட்டுள்ளாள். அது போல இங்கேயும் இருந்திருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தாள்.


"இளவரசி.." குரல் வந்த திசையில் பார்த்தாள். குட்டி மீன் ஒன்று தண்ணீரில் துள்ளியபடி அவளை பார்த்தது.


"ஏன் அழைத்தாய்?" அன்போடு கேட்டாள். அன்பு அவளிடம் இருந்தது. அன்பு அழியவில்லை. அவள் அதற்காகவே பிறந்த ஒரு தேவதை. ஆனால் இப்போதுதான் அதை அடக்கியாள கற்றுக் கொண்டிருந்தாள். வெறுப்பையும் பயன்படுத்தினால் மட்டும்தான் தன்னால் குற்ற உணர்வு இன்றி வாழவே முடியும் என்பதையும் அறிந்திருந்தாள்.


"உங்களின் முகம் மிக அழகு இளவரசி.." என்ற அந்த வண்ண மீனை கையில் எடுத்தவள் "நீ அதை விட அழகு.." என்றாள்.


"இந்த உலகம் அழகு இளவரசி உங்களை போலவே. நீங்கள் இதற்கு காப்பாளினியாய் வந்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது." 


"பலவற்றையும் அறிந்தது போல பேசுகிறாய். உன்னை எனக்கு பிடித்துள்ளது.." என்றவள் அதன் தலையில் முத்தமிட்டாள். மீண்டும் அதை தண்ணீரில் விட்டாள். மீன் துள்ளியது. அவளின் முகத்தில் தண்ணீரை சிதற விட்டது. ஆதி சிரித்தாள். மீன் பாய்ந்து நீந்தி சென்றது. 


அவளின் புன்னகையை கண்டபடி அவளருகே வந்து அமர்ந்தான் கவி.


"ஆதி.."


அவள் மௌனமாக இருந்தாள்‌.


"என்னை வதைக்காதே.. நான் அன்னைக்கு உன் உலகத்தையும் உன் இனத்தையும் அழிச்சி இருக்க கூடாதுதான்.. எனது தவறை உணர்ந்துட்டேன். என்னோடு வா.." என்றான்.


ஆதி அசையாமல் இருந்தாள்.


"ஆதி.. அவர்கள் நம் பிள்ளைகள். நீ அவர்களின் காப்பாளினி. அவர்களை அழிப்பது பாவம்." 


"அவர்கள் இந்த‌ பிரபஞ்சத்தின் பல இனத்தவரை அழித்து விட்டார்கள். பகையாளிகளை சேர்த்து வைத்துள்ளனர். அது தவறு. அவர்கள் இந்த வாழ்வை துறந்தாக  வேண்டும். அவர்களின் இறப்பு என் மனதை கொஞ்சம் சாந்தப்படுத்தலாம்.." 


இவள் அவனின் ஆதி இல்லை. அவனின் ஆதி சிறு உயிர் வதைப்பட்டாலும் கதறி அழுபவள். அவளின் சோகங்களை எல்லாம் அவனின் நெஞ்சில் சாய்ந்து அழுது தீர்ப்பவள். இப்படி விட்டேறியாக பேச மாட்டாள். தன் குழந்தைகளையே கொல்ல வேண்டும் என்று நினைக்க மாட்டாள். அவனுக்கு தலையை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments