Advertisement

Responsive Advertisement

தேவதை 49

 கவி எழுந்து நின்றான்.


"நீதான் அன்பின் தேவதை. உனக்குத்தான் அன்பு தேவை. எங்களை தேடி நீயே வருவ.. உன் தப்பை அதுக்குள்ளயாவது உணர்ந்துடு.." என்று ஆதியிடம் சொன்னவன் அங்கிருந்து கிளம்பினான்.


கோபத்தோடு தனது உலகம் வந்து சேர்ந்தான். மனிதர்கள் அவனிடம் கேள்வியாக கேட்டனர்.


"தாயார் என்ன சொன்னாங்க?"


"அவங்களை நீங்க ஏன் கூட்டி வரல?"


"உங்களை நாங்க கொல்லலன்னு எங்க மேல அவங்களுக்கு கோபமா?"


அவர்களின் கேள்வியால் எரிச்சலுற்றான்.


"கொஞ்ச நேரம் அமைதியா இருக்கிங்களா?" என்று கத்தினான். அனைவரும் மூச்சு விடவும் தயங்கினர்.


"எல்லோரும் போய் அவங்கவங்க வேலையை பாருங்க.." என்றவன் சட்டென்று "குழந்தைகளே.. ஒரு எச்சரிக்கை.." என்றான். அனைவரும் அவனை கேள்வியாக பார்த்தனர்.


"ஆதி உங்களை கொல்ல வேண்டும் என்று காத்திருக்கிறாள். அதனால் பூமி கிரகத்திற்கு செல்லாதீர்கள்.!" என்றான்.


மனிதர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்களால் இவன் சொல்வதை நம்பவே முடியவில்லை. கவி தனது மனதின் சேமிப்பு கிடங்கில் இருந்த காட்சிகளை வெளியில் ஓட விட்டான். ஆதி சொன்னது கேட்டு அதிர்ந்தனர் மனிதர்கள்.


"இது எப்படி? அன்னை சொன்னதற்காக சத்திய தேவ உலகை அழிக்க வந்தோம். ஆனால் அவர் கடைசியில் நம்மை கொல்ல நினைத்து விட்டாரே.!" என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர்.


ஆதியின் மன மாற்றம் கவிக்கும் கவலையைதான் தந்தது. 


மனிதர்கள் அமைதியாக அங்கிருந்து சென்றார்கள். சத்திய தேவ உலகிலேயே அவர்களுக்கு வசிப்பிடம் செய்து தரப்பட்டது. ஆனால் கவியை போலவே மனது உடைந்து விட்ட மனிதர்கள் ஆதியை பழிக்கு பழி வாங்க நினைத்தார்கள்.


பூமியை விட்டு வந்த பிறகு கவி தனது மாளிகையிலேயே அடைந்து கிடந்தான். ஆதியின் விழிகள் அவனின் நினைவை விட்டு அகல மறுத்தது. நோயுற்றவன் போலானான். 


அந்த நேரத்தில்தான் மனிதர்கள் தங்களுக்குள் திட்டம் தீட்டினார்கள். அவர்கள் ஆதியை கொல்ல நினைத்தார்கள். அவள் அழிந்தால் இந்த பிரபஞ்சம் அழியும் என்ற விதி தெரிந்திருந்தும் கூட இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள் அவர்கள். ஏனெனில் அவர்களால் துரோகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை.


காலங்கள் ஓடியது. 


நனியும் யனியும் பூர்வ உலகின் உச்சி பாறை ஒன்றின் மீது அமர்ந்திருந்தார்கள். காழர்களும் பூர்வர்களும் அழியும் நிலையில் இருந்தார்கள். அவர்களில் முக்கால்வாசி பேரை கொன்று விட்டிருந்தான் கவி. இந்த இடைப்பட்ட பலவாயிரம் ஆண்டுகளில் பல தடவை படையெடுத்து வந்திருந்தான் கவி. நனியும் யனியும் தங்களின் உருவத்தை மாற்றிக் கொண்டு வந்து தங்களால் முடிந்த அளவு அவனை எதிர்த்து போரிட்டார்கள். ஆனால் எல்லாமே வீண். ஏனெனில் கவி ராட்சசனை விடவும் மோசமாக இருந்தான்.


காழர்களின் உலகில் நீர் நிலை கூட முக்கால்வாசி வற்றி விட்டிருந்தது. காழர்களால் தங்களின் மீன் வடிவத்திற்கு மாற கூட முடியவில்லை. குறைவான எண்ணிக்கையில் இருந்தார்கள் அவர்கள்.


வித்யநயனுக்கு கோபமாக வந்தது. "ஆதி அன்பின் தேவதை‌. அவளின் தேவை இந்த பிரபஞ்சத்திற்கு வேணுங்கறதால அவளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தராங்க. ஆனா நாம சாதாரணம்தானே? நம்மோட பயன் என்ன? இந்த பிரபஞ்சத்தில் உள்ள நீர்வாழ் உயிரிகள் அனைத்துக்குமான சக்தி எங்களின் உலகத்திடமிருந்து செல்கிறது. ஆனா ஒருத்தருக்கும் எங்க உலகை பாராட்ட விருப்பம் இல்ல." என்றான் ஆத்திரத்தோடு.


வியனி ஆமோதித்து தலையசைத்தான். கவி சொல்வது போல கற்றல் ஒன்றே அனைத்தையும் தீர்மானிக்கும் என்றால், அந்த கடவுளர்கள் சொன்னது போல அனைத்து வகை உயிர்களும் இந்த பிரபஞ்சத்திற்கு தேவை, அனைத்தும் இங்கே சமம் என்றால் இவர்களின் உலகு இது போன்ற ஒரு நிலையை அடைந்திருக்காது‌.


"கடவுளர்களை போல ஒரு துரோகிகள் யாரும் இல்லை.." என்று புது குரல் ஒன்று ஒலிக்கவும் நனியும் யனியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.


"அவர்களை போல் சோம்பேறிகளும் யாரும் இல்லை.." என்றபடி குரல் நெருங்கி வந்தது. 


ஆதிதான் அது. வானிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தாள். ஒரு மேகத்தின் பின்னால் இருந்து தோன்றியவள் இவர்களில் முன்னால் வந்து நின்றாள். இருவரும் அவளை கண்டதும் எழுந்து நின்றனர்.


"ஆதி.." நனியை கண்டு சிரித்தவள் "இன்னமும் பழைய வேடத்தை விட்டு வெளி வரவில்லை போல.." என்றாள் நக்கலாக.


வித்யநயனாக உருமாறியவன் தனது வாளை எடுத்து அவள் முன் நீட்டினான்.


"ஆனால் நான் சண்டையிட வரவில்லை.." என்றவள் தனது சிறகை அடித்தபடி தரையை விட்டு ஓரடி மேலெழும்பி நின்றாள். அவர்கள் இருவரையும் சுற்றி வந்தாள். 


"உங்களை போலதான் எனக்கும் கோபம். இந்த பிரபஞ்சத்தின் மீது கோபம் என்றும் சொல்லலாம். என் உலகம் என் கண் முன் அழிக்கப்பட்டது. ஒரு கடவுள் கூட வரவில்லை. நாங்கள் முக்கியமானவர்களாக இருந்திருந்தால் இது போல நடந்திருக்குமா? உயர்வு தாழ்வுதான் காரணம். சத்திய தேவர்களிடம் வீரம் உள்ளது. அதனால் அப்பாவி தேவ தேவதைகளை கொல்கிறார்கள். அவர்களுக்கு நமது செல்வமோ, நமது பண்போ தேவை கிடையாது. வெறும் பெயர். அதுக்காக எது வரைக்கும் போவாங்க அவங்க.." என்றாள் வருத்தமுடன்.


"ஓ.." என்றான் வியனி. அவனுக்கு ஆதியின் மீது அவ்வளவாக நம்பிக்கை இல்லை. 


"நான் உங்களுக்கு உதவ வந்திருக்கேன். உங்ககிட்ட உதவி கேட்க வந்திருக்கேன்.!" என்றவள் அவர்களின் முன்னால் நின்றாள்.


"எனக்கு கவியை அழிக்கணும்!" அவள் சொன்னது கேட்டு இருவரும் அதிர்ந்தார்கள்.


"கவியையும் சத்திய தேவ உலகையும் அழிக்கணும்.!"


"ஆனா அவன் உன் இணை.."


"இணையற்ற முதல் தேவதையாக நான் இருந்துட்டு போறேன்.!" என்றவளை கண்டு மேலும் அதிர்ந்தார்கள். இது இந்த பிரபஞ்சத்தில் சாத்தியமே இல்லாத ஒரு விசயம். 


"ஆனா அது எப்படி முடியும்?"


"நான் இறந்தா அவன் இறப்பானா? நான் இறந்த பிறகு இந்த பிரபஞ்சத்தோடு சேர்ந்து அந்த உலகமும் அழியுமா?" 


அவள் சொன்னது கேட்டு பயந்தார்கள் இருவரும். 


"ஆதி நீ.."


"எதற்கும் துணிந்த மன நிலையில் உள்ளேன் நான். எனக்கு எதன் மீதும் பிடிப்பில்லை. இந்த பிரபஞ்சம் அழியும் என்பதை நம்பியபடி உயிரை துறக்க தயார் நான். ஆனால் நான் எப்படி இறப்பது? அதற்கு முன் இந்த மனிதர்களை அழிக்க வேண்டும். அனைவரும் எனது உருவில் உள்ளார்கள். ஆனால் கவியை விடவும் அதிக கெட்டவர்களாக உள்ளார்கள்.!" என்றாள் பற்களை அறைத்தபடி.


இப்போது ஆதிதான் கவியையும் விடவும் கெட்டவளாக இருப்பது போலிருந்தது அவர்களுக்கு. 


பூர்வ உலகின் மாபெரும் பறவை ஒன்று அவர்கள் மூவரையும் நோக்கி வந்தது. அந்த பறவை கற்பாறையை தொடும் முன் ஆதி அதனை நோக்கி தன் கைகளை விசிறினாள். பறவை அப்படியே சுருண்டு தரையில் விழுந்தது. விழுந்த இடத்தில் இறந்து போன பறவை சற்று நேரத்தில் எரிந்தது. 


வித்யநயன் அதிர்ந்து அந்த பறவை இருந்த இடத்தை எட்டிப் பார்த்தான். "என்ன செஞ்ச நீ?" எனக் கேட்டான் கோபத்தோடு.


"எனது வெறுப்பின் சக்தி என்னவென்று உங்களுக்கு காட்டினேன். என்னால, என் வெறுப்பால கடவுள்களின் சக்தியையும் ஒன்றுமில்லாம செய்ய முடியும்.." என்றாள்.


"ஓ.. சரி சரி.. நீ மறுபடியும் வேறு ஏதாவது பறவையை எரிச்சிடாத.. நாம பேசி ஒரு முடிவுக்கு வரலாம். திட்டமிடலாம். நாங்க உதவி செய்றோம். நல்ல திட்டத்தோடு உன் உயிரை எடுக்காமலேயே கவியை கொல்ல முயற்சிக்கலாம். ஏனா நீ இறந்தா அப்புறம் எங்க உலகமும் அழிஞ்சிடும். அதை எங்களால தாங்கிக்க முடியாது. இந்த மொத்த பழி வாங்கலுமே எங்களின் உலகிற்காகதான்.!" என்றுச் சொன்னான் வியனி.


ஆதி யோசித்தாள். சரியென்று தலையசைத்தாள். அங்கிருந்து கிளம்பினாள். பாதி வானம் பறந்தவள் திரும்பினாள். பறவை இறந்த இடத்தை நோக்கி கையை அசைத்தாள். சாம்பல் ஒன்றாக சேர்ந்தது. பறவை மீண்டும் உருவாகியது. உயிர் பெற்று வானில் பறந்தது. வித்யநயனும் வியனியும் அதிர்ச்சியில் சுற்று புறம் மறந்து விட்டனர்.


பறவை வியனியின் முன்னால் வந்து நின்றது.


"அரசே.. நமது உலகில் உணவு இருப்பு குறைந்துக் கொண்டே வருகிறது. இப்படியே சென்றால் இன்னும் சில வருடங்களில் மொத்த உலகமும் பசியால் இறந்து விடும்.!" என்றது அப்பறவை.


"நான் யோசிக்கிறேன்.. நீ போ.!" என்று பறவையை அனுப்பி வைத்த வியனி "இவ மிகவும் விந்தை. தான் காப்பாளினியாக இல்லாத ஒரு உலகின் ஒரு ஜீவனுக்கு மறு உயிர் கொடுத்த முதல் தேவதை இவள்தான். இவளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.." என்றான். இவ்வளவு நேரம் வித்யநயனியும் அதைதான் யோசித்துக் கொண்டிருந்தான். ஆதியின் உதவியால் தன் உலகில் தண்ணீரை கொண்டு வர முடியுமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் அவன்.


ஆதி பிரபஞ்ச வெளியில் நின்றபடி சிரித்தாள். அவர்கள் சொன்னது அவளின் காதுகளை சேர்ந்திருந்தது. 


"என்னை பயன்படுத்த நினைப்பது தவறில்லை, என்னை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றாத வரை.!" என்று முணுமுணுத்தபடி அங்கிருந்து சென்றாள்.


பிரபஞ்சத்தின் பல வண்ணங்களையும் ரசித்தாள். ரசித்தபடியே பூமியை நோக்கி நடந்தாள். இந்த பிரபஞ்சத்தை விட அழகான ஒரு இடம் இருக்குமா என்று யோசித்தாள். அவளின் யோசனையில் முதலில் வந்தது கவியின் உலகம்தான். நகைத்தபடி தலையை இடம் வலமாக அசைத்தாள். "பூமி.. எனது பூமி.. அதுதான் அழகு. இந்த பிரபஞ்சத்தை விடவும் அழகு.!" மகிழ்ச்சியோடு சொன்னபடி தனது ஒரே வீடான பூமிக்கு வந்து சேர்ந்தாள்.


பூமியில் அவள் வாழும் இடத்திற்கு வந்தபோது ஏதே ஒரு புது வாசத்தை உணர்ந்தாள். பல வருடங்கள் கழித்து சுவாசிக்கும் வாசம். 


சிரிப்போடு சுற்றும் முற்றும் பார்த்தாள். "எனது செல்லங்களே.. கண்ணாமூச்சு விளையாட்டு உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா?" எனக் கேட்டபடி தரையை விட்டு மேலே எழும்பி பறந்தாள்.


அவள் நின்றிருந்த இடத்தை சுற்றி ஒளிந்திருந்த மனிதர்கள் நூறு பேரும் வெளியே வந்தார்கள். அனைவர் கையிலும் பனிப் பூக்களால் செய்த மாலை இருந்தது.


"தாயே.. உங்களை காண வேண்டி வந்துள்ளோம்.." என்றான் ஒருவன். 


ஆதி கீழே இறங்கினாள். அவனின் கையில் இருந்த மாலையை வாங்கினாள். கழுத்தில் அணிந்துக் கொண்டாள்.


"நன்றிகள் பிள்ளைகளே!" என்றாள்.


"நீங்க ஏன் எங்களை சாகடிக்க நினைச்சிங்க?" என்றாள் ஒரு பெண். அவளால் அதற்கு மேலும் நடிக்க முடியவில்லை.


"ஏனா நீங்க இந்த பிரபஞ்சத்துக்கு ஆபத்து.!" என்றவள் வரும் வழியில் ஒரு சிறு கோளத்தினுள் நுழைந்து அங்கிருந்த பழங்களை பறித்து வந்திருந்தாள். அதை சுவைத்தபடி அவர்களை பார்த்தாள். நூறு பேரும் கோபத்தில் அக்னியாய் நின்றிருந்தார்கள்.


"அப்படின்னா நீங்களும் ஆபத்துதான். சொந்த பிள்ளைகளை அழிக்க நினைப்போர்தான் மிகவும் ஆபத்தானவர்!" என்றவனின் கழுத்தை பற்றியது ஆதியின் கரம்‌


அவன் பயந்து போனான். அவளின் கரம் இறுகியதால் அவனின் விழிகள் பிதுங்கியது. சுற்றி இருந்தவர்களும் பயந்தார்கள்.


"தாயே!" என்று ஓடி வந்தாள் ஒருத்தி.


"இல்லை.‌ யாரும் என் பக்கம் வராதிங்க.. நீங்க நினைக்கும் பழைய ஆதி இல்லை நான். என் குற்ற உணர்வை அழிக்க வேண்டி எனது குற்ற உணர்வுக்கு காரணமானவர்களை பழி வாங்கும் முயற்சியில் இருப்பவள்.!" என்றாள் கர்ஜனையோடு.


அவளின் முன்னால் இந்த மனிதன் தன்னால் முடிந்த அளவிற்கான அன்பை தன் விழிகளில் கடத்தினான்.


ஆதி சிரித்தாள். "இது இங்கே செல்லாது மகனே. நீ வெறும் அன்பை மட்டும் கொண்டுள்ளாய். ஆனால் நான் வெறுப்பையும் சேர்த்து கொண்டுள்ளேன். வெறுப்பு என்பதன் அர்த்தம் தெரியாதவன் நீ. உனக்கு அதை விளக்க முடியாது.!" என்றாள்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments