Advertisement

Responsive Advertisement

தேவதை 50

 கவியின் மனது ஏதோ ஒரு சங்கடத்தை உணர்ந்தது. குழப்பத்தோடு தனது அறையை விட்டு வெளியே வந்தான். பயிற்சி மைதானம் வழக்கம் போல செயல்பட்டுக் கொண்டிருந்தது.


தேவர்களும் தேவதைகளும் இவனை கண்டு புன்னகைத்து கையசைத்தனர். விரக்தி மறைத்த புன்னகையை தந்தான் கவி. வாள் வீசும் சத்தம் அவனுக்குள் புத்துணர்வை தந்தது. 


ஆதியை நினைத்து கலங்குவதை விட கத்தியை சுழற்றுவது பரவாயில்லை என்று தோன்றியது அந்த நொடியில். 


ஆதி அவனை பிரிந்து அறுபது எழுபது வருடங்கள் ஆகி விட்டன. ஒரு பிரபஞ்ச வாழ்வையே வாழ்ந்து கழித்தது போல வருத்தம் இருந்தது அவனிடம்.


அவனின் பிள்ளைகளால் அவன் சற்று தெளிந்தான். அவர்களின் அன்பு அவனை பைத்தியமாக மாற்றாமல் விட்டிருந்தது.  தனது வாளை எடுத்துக் கொண்டு பயிற்சி களம் நோக்கி நடந்தான். பலமான தென்றல் காற்று அவனின் வழியில் வீசியது. பனி பூக்கள் பல அவனின் காலடியில் வந்து விழுந்தன. பிறந்ததில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் அதே பூக்கள்தான். ஆனால் ஆதி வந்த பிறகு அந்த பூக்களின் அர்த்தம் கூட மாறி விட்டிருந்தது. அவளை நினையாமல் ஒரு நொடி கூட இருக்க முடியவில்லை அவனால். அவன் ஆன்மா என்றால் அவள் அவனின் சரீரமாக மாறி விட்டிருந்தாள். 


கலங்கும் நெஞ்சத்தை கட்டுப்படுத்தியபடி நடந்தவன் அப்போதுதான் வித்தியாசத்தை உணர்ந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். மனிதர்கள் ஒருவர் கூட அங்கே இருக்கவில்லை.


"என் பிள்ளைகள் எங்கே?" அங்கிருந்த வீரன் ஒருவனிடம் கேட்டான் கவி.


"அவர்கள் பூமிக்கு செல்ல போவதாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.." அவன் சொன்னது கேட்டு கவியின் முகம் மாறியது. 


'ஆதி அங்கே இருக்கா. அவர்களை ஏதாவது செஞ்சிடுவா.!' பயந்தான் அவன்.


வீரன் தயங்கியபடி கவியை நெருங்கினான். "அவர்கள் பேசிக் கொள்வதை ஒட்டுக் கேட்டேன் ஏந்தலே.. அவர்கள் நம் ராணியை கொல்ல போவதாக பேசிக் கொண்டார்கள்.." என்றவனின் கழுத்தில் கத்தியை பதித்தான் கவி. அவனின் கழுத்து பாதி வெந்துப் போனது.


"இதை ஏன் நீ முன்னாடியே சொல்லல?" கர்ஜித்தான். வீரன் நடுங்கினான்.


"பயந்து விட்டிருந்தேன் ஏந்தலே! அவர்கள் உங்களின் பிள்ளைகள். அவர்களுக்கு எதிராய் என்னால் எப்படி சொல்ல முடியும்? இப்போது ராணி மீது உள்ள அக்கறையில் உளறி விட்டேன்!" என்றாள். உண்மையை சொல்லி விட்டான். 


கவி அவனை விட்டான். கத்தியை கீழே இறக்கினான். காயம் பட்ட இடத்திலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. "போய் மருந்து எடுத்துக் கொள்!" என்ற கவி அங்கிருந்து கிளம்பினான்.


பிள்ளைகளும் இணையும். இருவரும் சண்டை போட்டுக் கொண்டால் அவன் யார் புறம்தான் நிற்பான்? இரு தரப்பினருமே அவனுக்கு முக்கியம். 


ஆதி தன் முன் இருந்தவனின் கழுத்தை விட்டாள். 


"என்னை அழிக்க உங்களால முடியாது. அதனால இங்கிருந்து ஓடிடுங்க.." என்றாள்.


சிரித்தபடி முன்னால் வந்தாள் ஒரு மனுசி.


"நீங்க அன்பின் தேவதையாக இருக்கலாம். ஆனா நாங்க சத்திய தேவர்களின் உலகில் வாழ்ந்தவர்கள். எங்கள் தந்தை வீரத்தை எங்களுக்கு பழகி விட்டுள்ளார். நாங்கள் உங்களை விட எங்களின் தந்தையைதான் அதிகம் விரும்பினோம். ஆனால் உங்களுக்காக அவரையே எதிர்க்க சென்றோம். அப்போதாவது உங்களின் மனதில் உள்ள சோகம் தீரும், அப்போதாவது நீங்கள் எங்களை பாராட்டுவீர்கள், அன்பை பற்றிய பாடம் எடுத்து எங்களை கொல்ல மாட்டீர்கள் என்று நினைத்தோம். ஆனால் நீங்கள் எங்களையே அழிக்க நினைத்து விட்டீர்கள். உங்களை அழிக்காமல் விட்டால் அது நாங்கள் எங்களுக்கே செய்துக் கொள்ளும் பெரிய துரோகம் ஆகிவிடும்.." என்றவள் தன் கத்தியை உயர்த்தியபடி ஆதியை நோக்கி ஓடி வந்தாள்.


ஆதி அசையாமல் கைகளை இறக்கையை போல விரித்தாள். கண்களை மூடினாள். நாசியை தீண்டும் வாசத்தை சிறு புன்னகையோடு சுவாசித்தாள். 


"ராபினி.." கவியின் குரல் எங்கோ தூரத்தில் ஒலித்தது. ஆதியின் காதுகளில் விழுந்தது அவனின் குரல். ஆனால் ராபினி நிற்கவில்லை. தயங்கவும் இல்லை. கவியின் திசையில் பார்க்கவும் இல்லை. கத்தியை ஆதியின் நெஞ்சில் செலுத்தினாள்.


ஆதி நினைத்திருந்தால் நிச்சயம் தடுத்திருக்கலாம். ஆனால் அவள் இந்த நாளுக்காக கடந்த அறுபது எழுபது வருடங்களாக காத்திருக்கிறாள். அவள் தன் உடலின் சக்திகளை இளக்கினாள். கத்தியை வேண்டுமென்றே ஆழமாய் செல்ல விட்டாள்.


"ஆதி.." தூரத்தில் இருந்து பறந்தோடி வந்துக் கொண்டிருந்த கவி உயிர் போவது போல கத்தினான். அவனுக்கு அப்படிதான் இருந்தது. அவளின் வலி அவனின் நெஞ்சில் பிரதிபலித்தது. ஆதி சிரித்தாள். 


"என்ன முட்டாள்தனம் செய்தீர்கள்?" என்று கத்தியபடி இவர்களை நெருங்கிய‌ கவி சாய்ந்துக் கொண்டிருந்த ஆதியின் உடம்பை தாங்கி பிடித்தான். ஆதியின் நெஞ்சில் பாய்ந்திருந்த கத்தியை பிடுங்கி தூர எறிந்தான். தனது நெஞ்சின் வலியை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவளை அப்படியே விட முடியவில்லை அவனால்.


"ஆதி.." அவளை கண்ணீரோடு அழைத்தான்.


"நான் அப்பவே சொன்னேன் இவங்களை கொன்னுடுங்கன்னு. ஆனா என்னை இவங்க சாகடிக்கணும்ன்னுதானே இவங்களை உயிரோடு வச்சி உங்க உலகத்துலயே பார்த்துக்கிட்டிங்க?" எனக் கேட்டாள். அவளின் கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டவன் மறுப்பாக தலையசைத்தான். "அவங்க நம் பிள்ளைகள் ஆதி.!" என்றான். 


"அப்படின்னா நானே செத்துட்டு போறேன். என்னை விடுங்க.." என்றவளின் பார்வை வேறு திசைக்கு சென்றது.


"ஆதி.. உன்னை நான் எப்படியும் காப்பாத்துவேன்.." 


'அது என்னாலும் முடியும். உன்னால என்ன முடியும்?' என கேட்க நினைத்தவள் "உங்களுக்கு உங்கள் பிள்ளைகள்தான் முக்கியம். தயவுசெய்து என்னை விடுங்கள்.." என்று கெஞ்சினாள்.


கவி கண்ணீரோடு மறுத்து தலையசைத்தான்.


"அப்படியானால் நான் சாகும் முன் அவர்களை கொல்லுங்கள்.. இரண்டில் ஒன்று.." என்றவள் விழிகளை மூடினாள். 


கவி மனதுக்குள் அழுதான். எழுந்து நின்றான். கத்தியை கையில் எடுத்தான். நூறு மனிதர்களும் அவனை சந்தேகமாக பார்த்தனர். அவனால் ஆதியை விட முடியாது என்று அவர்களுக்கும் தெரியும். ஆனால் அதே சமயம் அவனால் தங்களை கொல்ல இயலாது என்று நம்பினார்கள். 


கவிக்கு மனம் இல்லைதான். ஆனால் இதை தவிர அவனுக்கு வேறு வழியே இல்லை. இப்படி ஒரு நாள் வரும் என்று அவன் கனவில் கூட நினைக்கவில்லை. இதற்கு பதிலாக தனக்கே மரணம் வரலாம் என்று ஆசைக் கொண்டான். 


மனிதர்கள் அனைவரும் அவனை திகிலோடு பார்த்தார்கள். தங்களின் கத்திகளை எடுத்தனர். கரங்கள் நடுங்கியது அவர்களுக்கு. 


"நீங்க அன்னைக்கு எங்களோடு போர் தொடுக்கும்போது நாங்க உங்களை கொல்லல. காரணம் நீங்க எல்லோரும் என் பிள்ளைகள் என்பதாலதான். ஆனா இன்னைக்கு.. என்னை மன்னிச்சிடுங்க குழந்தைகளே.. இப்படி ஒரு சூழ்நிலை வந்திருக்கவே கூடாது.." என்றவன் வாளை உயர்த்தி ஒரு மனிதனின் மீது காட்டினான். கத்தியில் இருந்து பாய்ந்த கதிர் அந்த மனிதனை நொடியில் உருக்கி விட்டது. சடலம் கூட இல்லை. தண்ணீராய் கரைந்து மண்ணுக்குள் உறிஞ்சப்பட்டு விட்டான். கவி கதறினான். 


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே



Post a Comment

0 Comments