*** இரண்டு நாளா உடம்பு சரியில்ல நட்புக்களே.. அதான் லீவ்***
"கேட்டாளே ஒரு கேள்வி.." பாட்டு பாடும் சத்தம் வந்த திசையை பார்த்த அக்வா தனது சிரிப்பை அடக்க பாடுப்பட்டார்.
"நீ ஒரு விசித்திரம் ஃபயர்!" என்றார்.
ஃபயர் ஆதியையும் கவியையும் பார்த்துவிட்டு "இடம் பொருள் கலந்த பாடல்!" என்றாள்.
கவி ஆதியின் கேள்வியால் அதிர்ந்துப் போனான்.
"நான் உன் இணை.."
"எனது பலவீனத்தை பயன்படுத்தி இணையான ஒருவன்!" ஆதி தாமதிக்காமல் பதிலை சொன்னாள்.
"நீ அழுத அன்னைக்கு.. அன்னைக்கு நீயும் நானும் இணை கூட கிடையாது. உன் கண்ணீரை காண மனம் வரலன்னு நான் மனிதர்களை உருவாக்கினேன்.." என்றான் உரத்த குரலில்.
அவனின் கண்களில் இருந்த கோபமோ, அவனின் குரலில் இருந்த ஆங்காரமோ எதுவுமே அவளை பயமுறுத்தவில்லை. அதை உணர்ந்து தன்னை தானே பாராட்டியும் கொண்டாள்.
ஆனாலும் அவன் சொன்ன விசயம்தான் அங்கே முக்கியமாக இருந்தது. மனதின் ஒரு ஓரம் சூரிய கதிரில் நனைந்த பனியை போல கரைந்துக் கொண்டிருந்தது. அதை வெறுத்தாள் ஆதி.
"அப்ப நீ யார் எனக்கு? இந்த கிரகத்துக்கு வர வேண்டிய அவசியம் என்ன எனக்கு? நெவத்ஸி கிரகத்துக்கு நான் வந்தேன்.. நினைவு இருக்கா உனக்கு? நீயும் நானும் இந்த பிரபஞ்சத்தின் விதி. உனக்கு இது புரியலையா?" எனக் கேட்டான்.
அதே சமயத்தில் வானில் இருந்து பனி கொட்டியது. ஆதி விரல்களை சொடுக்கிட்டாள். பனி முழுவதும் பனிப் பூக்களாக மாறி விழ ஆரம்பித்தது. பூக்களை நோக்கி தன் வலது கரம் நீட்டினாள். உள்ளங்கையில் வந்து விழுந்த பூக்களை காதலோடு ஏந்தினாள்.
"பனி பூக்களை என் நினைவில் நீ காதலிக்கிறாய்.!" கவியின் கருத்தை காதில் வாங்காதது போல இருந்தவள் "என் உலகத்தை நீங்க அழிச்சிங்க. என்னை அழிக்க கத்தியை உயர்த்தினிங்க.. குழந்தையா இருந்த என்னை சிறையில் அடைச்சி வச்சிங்க.. என்னை கொல்ல முடியாத ஒரே ஒரு காரணத்துக்காக என்னை சகிச்சிக்கிட்டிங்க.. நாம விதி கிடையாது. நீங்க என் அழிவின் தொடக்கம்!" என்றாள் ஆதி. அவளின் பார்வை வானத்தை நோக்கியே இருந்தது.
பனியின் நிறத்தில் இருந்தவளை தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவளின் தலையில் விழுந்துக் கொண்டிருந்த பனி பூக்களையும், அன்பு இறந்துப் போயிருந்த அவளின் விழிகளையும் பார்க்காமல் தவிர்க்க முடியவில்லை அவனால்.
"நீ என் உலகத்தின் மகாராணி. நீ பதவியை துறந்தால் என் உலகம் சிக்கலில் மாட்டிக் கொள்ளும்!"
ஆதியின் விழிகளில் இருந்து ஓர் துளி கண்ணீர் கீழே விழுந்தது.
"என் உலகமே அழிஞ்சிடுச்சி. உங்க உலகம் சிக்கல்ல மாட்டுவது பற்றி நான் கவலைப்படுவேனா?" எனக் கேட்டாள் அவன் புறம் திரும்பி.
கவி பெருமூச்சு விட்டான். தோல்வியை ஏற்றுக் கொண்டாக வேண்டிய சூழ்நிலை. ஆனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவனால்.
"நம்ப வச்சி ஏமாத்தாதே ஆதி. உனக்காக நான் என் பிள்ளைகளை கொன்றேன்.!"
கலகலவென சிரித்தவள் "இது என் உலகம். இங்கே என்னை தவிர வேறு யாரும் உயிர்களை உருவாக்க கூடாது என்பதற்காகவே அவர்களை அழிக்க சொன்னேன். எனது கிரகத்தில் நான் விரும்பாத எதுவும் இருக்க கூடாது. நீங்களும்தான். இப்போதே கிளம்பி செல்லுங்கள்.." என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.
கவி விழிகளை மூடியபடி அதே இடத்தில் நின்றான். உடம்பு முழுக்க கோபம் பொங்கிக் கொண்டிருந்தது. ஒரு நட்சத்திரத்தை விடவும் அதிக சூட்டை தன் மனதில் உணர்ந்தான் கவி.
ஆதி மரம் ஒன்றில் ஏறி அமர்ந்தாள். விலங்குகள் சில ஓடி வந்தன. மரத்தின் கீழே படுத்துக் கொண்டன. சில பறவைகள் அந்த மரத்தின் கிளைகளில் அமர்ந்தன.
கவி தன் வாளை கையில் எடுத்தான். பற்களை அறைத்தான்.
"பைத்தியக்காரன் இங்கேதான் வரான்.." தங்களின் தனி உலகில் இருந்தபடி பூமியை பார்த்துக் கொண்டிருந்த ஃபயர் கவியிடம் சிக்க கூடாது என்று நினைத்தபடி அங்கிருந்து நகர்ந்தாள்.
கவி அங்கே வந்தபோது ஹார்ட் தியானத்தில் இருந்தார். அக்வா வழக்கம் போல ஏதோவொரு நடனத்தை ஆடிக் கொண்டிருந்தார்.
கவி தன் வாளை எடுத்து ஹார்ட்டின் முன்னால் நீட்டினான். ஒளி பாய்ந்தது. ஆனால் ஹார்ட்டை எதுவும் செய்யவில்லை.
ஹார்ட் மெல்ல கண்களை திறந்தார்.
"உனது பிரச்சனைக்கு நீதான் காரணம்.. எங்களிடம் கோபத்தை காட்டுவதால் உனக்கு ஒரு பயனும் இல்லை.!" என்ற ஹார்டின் தோளில் வந்து குத்தியது கவியின் கத்தி.
"அன்று நான் கேட்டபோது ஆன்மாக்களை ஏன் தந்திங்க? எனக்கும் இந்த கிரகத்துக்கும் இடையில் என்ன கருமம் பிடிச்ச சம்பந்தம் இருக்குன்னு என்னை இப்படி உடைச்சி பார்க்கறிங்க?" என்று கத்தினான்.
ஹார்ட் கத்தியை பிடுங்கி தரையில் குத்தி வைத்தார்.
"எங்களின் அண்டத்தில் உயர் உயிர்கள் உருவாக இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் இருந்தது. ஆனால் நாங்கள் அதற்கு முன்பே சோதித்து பார்க்க ஆரம்பித்தோம். அதனால்தான் இப்படி இரு முறை உயிர்களை உருவாக வைத்தோம்.!" என்ற ஹார்டை அழிக்கும் வழி இல்லாமல் போனது கண்டு எரிச்சலுற்றான் கவி.
"சோதனை செய்ய நான்தான் கிடைத்தேனா?"
மறுப்பாக தலையசைத்தபடி சிரித்தார் ஹார்ட். "நாங்க வந்து உன்கிட்ட உயிர் உருவாக்க சொல்லல. நீதான் வந்து கேட்ட.. மறந்துடாத அதை.!" என்றார்.
கவி பற்களை அரைத்தான்.
"நாளொன்று வந்தால் நீங்கள் நன்றாக அனுபவிப்பீர்கள்.." என்றவன் தன் கத்தியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.
சத்திய தேவனாக இருந்தும் இவ்வளவு தோல்வியை கண்டு
விட்டான் அவன். அத்தனைக்கும் ஆதிதான் காரணம் என நினைத்ததால் அவள் மீது முடிந்த அளவு வெறுப்பை காட்ட நினைத்தான். அதுதான் முடியாமல் போய் விட்டது.
ஆதி நன்றாகவே பழி வாங்கி விட்டாள் என்று சொல்லலாம். தன்னை அவள் வெறுக்கிறாள் என்று தெரிந்தும் அவள் மீதான தன் அன்பை குறைத்துக் கொள்ள முடியாமல் போனதை எண்ணி வருந்தினான்.
மீண்டும் தனது உலகிற்கு வந்தவன் தனது பழைய கோட்டையிலேயே சென்று தன்னை பூட்டிக் கொண்டான்.
"அன்பின் தேவ உலகம்.. என்ன நேரத்துல அந்த உலகத்துக்குள்ள காலெடுத்து வச்சேனோ.. இன்னைக்கு வரை என் வாழ்க்கையை தொலைச்சிட்டு இருக்கேன்.!" என்று புலம்பினான்.
அவன் தன்னை பூட்டிக் கொண்ட நேரத்தில் ஆதி தன் சிறகை விரித்தாள். அவள் வளர்ந்து விட்டிருந்தாள். அவளுக்கென்று பல வேலைகள் இருந்தன. ஓர் இனத்தின் கடைசி தேவதையாக இருந்தாலும் கூட அவள் தன் பணியை கை விட விரும்பவில்லை. அவள் ஒரு கிரகத்திற்கு காப்பாளினி மட்டும் அல்ல அதையும் தாண்டி இந்த பிரபஞ்சத்திற்கே அன்பை பரப்புவள்.
கவி அங்கிருந்து சென்ற பிறகு ஆதிக்கு ஓய்வெடுக்க கூட நேரம் கிடைக்கவில்லை. அவளின் பணி என்னவென்று தேடி தேடி அறிந்தாள். அனைத்தையும் கற்றுக் கொள்ள முயன்றாள். ஓர் உலகம், ஓர் இனம் செய்ய வேண்டிய வேலைகளை இப்போது அவள் ஒருத்தியே செய்ய வேண்டி இருந்தது. ஆனால் அவள் எதற்கும் சலித்துக் கொள்ளவில்லை. இப்போதுதான் நிம்மதியாக இருந்தாள்.
நாட்கள் சென்ற பிறகு கடவுள்கள் சிலர் ஆதியை தேடி வந்தனர்.
"நீ உண்மையிலேயே வெறுப்பை விதைத்து விடுவாயோ என்று பயந்திருந்தோம்.. ஆனால் நீ உண்மையிலேயே அன்பின் தேவதை.!" என்றனர்.
ஆதி அவர்களை கண்டுக் கொள்ளாமல் தாண்டி நடந்தாள். அவள் நல்லவள் கிடையாது. எதிரில் இருப்பவர்கள் பார்த்து பேசியாக வேண்டும்.
"ஆதி.. உன்னை நாங்கள் விரும்புகிறோம்.." என்றபடி கடவுள் கூட்டம் பின் தொடர்ந்தது.
"கவியை கொன்று வாருங்கள். நான் நம்புகிறேன்.!" என்றாள் அவள் வானில் பறந்தபடி.
கடவுள்கள் திகைத்தார்கள்.
"ஆனால் அது எங்களால் முடியாது. அவன் சத்திய தேவன். எங்களால் அவனை அழிக்க முடியவில்லை.!"
கடவுள்களை அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தாள். அவளுக்கு சிரிக்க தோன்றியது. கவியின் மீதுதான் ஆத்திரம் வந்தது. அடுத்து என்ன செய்வது என்று யோசித்தாள்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
0 Comments