Advertisement

Responsive Advertisement

தேவதை 53

 "தந்தையே.." 


கவி புரண்டு படுத்தான். கண்களை இறுக்கமாக மூடினான்.


"தந்தையே.." 


காதுகள் இரண்டையும் கரங்களால் பொத்தினான்.


"தந்தையே.."


உள்ளத்தில் இருந்து கேட்கும் குரல்கள் எப்படி விட்டுச் செல்லும்? தலையை பிடித்தபடி எழுந்து அமர்ந்தான். "தந்தையே.!" என அழைக்கும் குரல்கள் மட்டும் நிற்கவேயில்லை. கண்கள் கலங்கியது அவனுக்கு‌.


"அவள் அனுபவிக்கும் அதே வலியை எனக்கும் தந்து விட்டாள். இறந்தும் போன அவளின் சொந்தங்களை நினைத்து அவள் எப்படி அழுதாளோ அதே போல என்னையும் அழ வைத்து விட்டாள்.!" என்று புலம்பினான். 


அந்த உலகம் மட்டுமல்ல அந்த பிரபஞ்சம் முழுக்கவுமே அன்பு பரவி இருந்தது. ஆனால் அந்த அன்பு அவனின் கை சேரவில்லை. வெறுத்து போன மனதோடு பரிதவித்துப் போயிருந்தான் அவன். 


அவள் தெரிந்தே பழி வாங்கிக் கொண்டிருந்தாள். அவன் நெஞ்சில் அன்பு இல்லைதான். ஆனால் தன் குழந்தைகளை மறக்க இயலாத அளவுக்கு அவனுக்கு வேதனை இருந்தது. இந்த சில ஆயிரம் ஆண்டுகளும் அவனுக்கு வாழ்க்கையே நரகம்தான். திருப்பி கொண்டு வர முடியாத நிமிடங்களை நினைத்து கதறினான். தன் குழந்தைகளை தான் உருவாக்கி இருக்கவும் கூடாது, தான் கொன்று இருக்கவும் கூடாது என்று நினைத்தான். காலம் கடந்து விட்டது அனைத்திற்கும்.


ஆதி பிரபஞ்ச வெளியில் சுழன்றபடியே நடந்துக் கொண்டிருந்தாள். பொறுப்பான அன்பின் தேவதை அவள். யாரையும் வெறுப்பு காட்டி கொல்லவில்லை. மாறாக தன் எதிரிகளுக்கு அன்பு காட்டுவதை மட்டும் நிறுத்தி விட்டாள்.


அவளின் வாழ்க்கை மிகவும் நன்றாக இருந்தது. அவளின் அன்பை எதிர்பார்த்து எத்தனையோ பேர் இருந்தார்கள். அவள் இப்போது சரியானவர்களிடம் மட்டும் அன்பை காட்டினாள்.


வித்யநயனும், வியனியும் ஆதியிடம் மன்னிப்பு கேட்டார்கள். "நாங்க‌ உன்னை கொல்ல நினைச்சோம். உன்னையும் கவியையும் பிரிக்க நினைச்சோம். அதுக்காக மருத்துவர் வனி தந்த மருந்தை உனக்கு தந்தோம்.‌ அதனாலதான் உனக்குள் வெறுப்பு உண்டாச்சி. எங்களை மன்னிச்சிடு ஆதி.." என்றார்கள் இருவரும்.


ஆதி யோசித்து விட்டு "சரி.!" என்றாள்.


இருவரும் குழப்பமாக அவளை வெறித்தனர்.


"அன்பின் தேவதைகளுக்கு மிகவும் அத்தியாவசியமானது இந்த வெறுப்பு. பனிக்குதான் வெம்மை தேவை. அப்போதுதான் அந்த பனி புத்துயிர் பெற்று ஒவ்வொரு முறையும் புது வடிவம் பெறும். அது போலதான் எனக்கு வெறுப்பும். காட்ட கூடாத இடத்தில் காட்டி தோற்றுப் போவதை விட வெறுப்பு காட்டி வெற்றி வீராங்கனையாக இருந்து விட்டு போகலாம்.." என்றாள்.


அவர்கள் இருவருக்கும் இவள் சொன்னது விளங்கவில்லை. ஆனாலும் அவள் தங்களை மன்னித்து விட்டதே போதுமானது என நினைத்து அங்கிருந்து சென்றனர்.


ஆதி ஒருநாள் முழுதாய் வளர்ந்தாள். தனது பணியினை ஏற்கும் அளவுக்கு வளர்ந்து விட்டிருந்தாள்.


பால்வீதி கடவுள்கள் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள். "ஆன்மாக்களை ஒப்படையுங்கள்.!" என்று கரம் நீட்டினாள்.


ஹார்டிற்கு விருப்பம் இல்லை. அவருக்கு அங்கேயே இருக்க ஆசை. ஆனால் அவள் விரட்டி விடுவாள் என்று அவருக்கு தெரியும்.


"இனி நீங்க என் உலகத்துக்குள்ள காலடி எடுத்து வைக்க கூடாது.!" என்று எச்சரித்து விட்டு பூமிக்கு கிளம்பினாள்.


"நமது நிலையைப் பார்த்தீரா? ஒரு தேவதையெல்லாம் எச்சரிக்கும் அளவுக்கு மோசமாகி விட்டது!" கவலையாக சொன்னான் ஆக்சிஜன்.


ஆதி மனிதர்களை மீண்டும் உருவாக்கினாள். ஆனால் இம்முறையும் கவியின் உருவில் இரு கால், இரு கை உள்ள மனிதர்களைதான் படைத்தாள். 


"அவளை போலவே இறக்கை உள்ள மனிதர்களை அவள் படைப்பாள் என்று நினைத்திருந்தேன்.!" என்றார் ஹார்ட்.


"நானும் அப்படிதான் நினைச்சிருந்தேன்.!" சோகமாக சொன்னாள் ஃபயர்.


ஆதி இந்த முறை மனிதர்களின் மூளையில் நிறைய விசயங்களை எழுதி வைத்தாள். இனப்பெருக்கம் என்ற ஒன்றையும், இறப்பு என்ற ஒன்றையும் சேர்த்து எழுதினாள். இதை எதிர்பார்க்கவில்லை கடவுள்கள்.


"முட்டாளா‌ இவள்? மனிதர்கள் என்பவர்கள் ஆட்சி படிக்கட்டில் மேலே உள்ளவர்கள். இவள் அவர்களுக்கும் இனப்பெருக்க முறையை விதைக்கிறாள். அவர்கள்  பல நூறாய் பெருகினால் பிறகு அவர்களுக்கே சலிப்பாக இருக்கும்.!" என்று புலம்பினான் ஆக்சிசன்.


"அதை விடவும் மிகப் பெரிய வினோதமாக மனிதர்களுக்கு மரணத்தை தந்திருக்கிறாள். அவர்கள் கருவாய் உருவாகும் நாளிலேயே அவர்களின் மரணமும் உடனேயே இருந்துக் கொள்ளும். சராசரியாக நூறு வருடத்தில் ஒரு மனிதன் இறந்துப் போவானாம். இதை விட வேறு சிறந்த நகைச்சுவை எங்கே இருக்கும்? நூறு வருடங்கள் என்பது கண் மூடி திறப்பதற்குள் முடிந்து விடும். மனிதர்கள் என்ன வாழ்வார்கள்? ஆதி ஒரு காப்பாளினியாக தோற்று விட்டாள்.!" தனது கருத்தை சொன்னாள் ஃபயர்.


கடவுள்கள் இதை பற்றி அவளிடமே வந்து பேசினார்கள். ஆனால் ஆதி எதையும் காதில் வாங்க மறுத்து விட்டாள். "இது என் உலகம். என் இஷ்டப்படி நான் நடப்பேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் தாராளமாக இறந்துப் போகலாம். நான் வேண்டுமானால் அதற்கு உதவியாக சற்று வெறுப்பை பரிசளிக்கிறேன்!" என்றாள்.


"பைத்தியம் இவள். தப்பி சென்று விடலாம்.!" என்றபடியே பூமியை விட்டு சென்று விட்டனர் கடவுள்கள்.


ஆதி சிரித்தபடியே தான் உருவாக்கிய மனிதர்களை பார்த்தாள். அனைவரும் நாகரீகம் அற்று, மரங்களிலும் கிளைகளிலும் தொங்கிக் கொண்டு இருந்தார்கள்.


"அன்பு இந்த பிரபஞ்சத்திலேயே விலை மதிப்பில்லாத ஒன்று. அதை இனியும் நான் வீணாக்க மாட்டேன்.!" என்றவள் அந்த மனிதர்களுக்கு துளியும் அன்பை தரவில்லை. மனிதர்கள் என்று பெயர் மட்டும்தான். விலங்குகளை போலவேதான் இருந்தார்கள் அவர்களும். விலங்குகளோடு சண்டையிட்டார்கள். விலங்குகளை வேட்டையாட கற்றுக் கொண்டார்கள். விஷ கனிக்கும், பசி தீர்க்கும் கனிக்கும் வித்தியாசம் தெரியாமல் கனிகளை உண்டு உயிரை விட்டனர்.


அங்கேதான் ஆதி தனது புன்னகையை அதிகப்படுத்தினாள். ஏனெனில் மனிதர்கள் ஒவ்வொருவரும் இறக்கும்போது அவர்களின் மரணத்தின் வலியை கவி உணர்ந்தான்.


ஆதி அதற்காகவேதான் திட்டமிட்டு மனிதர்களை கவியின் உருவத்தில் உருவாக்கி இருந்தாள். அவள் அப்படி உருவாக்கும்போதே அவர்கள் கவியின் பிள்ளைகள் ஆகி விட்டனர். அவன் ஆதியை துணையாய் கொண்ட காரணத்தால் அந்த பிள்ளைகளின் மீதான பந்தமும் கூட முன்பை விட அதிகம் இருந்தது. எந்த அளவிற்கு என்றால் அது யாருமே எதிர்பாராத அளவிற்கு பிணைப்பை உருவாக்கிய பந்தமாக இருந்தது. ஒருவர் இறந்தாலும் அங்கே தானே இறந்தது போல வலியை அனுபவித்து துடித்து கதறினான் கவி.


சத்திய தேவ உலகத்தின் நரக நாட்கள் அப்போதிருந்துதான் தொடங்கியது. கவியின் நெஞ்சத்து வலியை அந்த மொத்த உலகத்து தேவர்களும் தேவதைகளும் அனுபவித்தார்கள்.


ஆதி மனம் குளிர பூமியின் உச்சி பாறை ஒன்றின் மீது அமர்ந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அன்பை மறைத்து வைத்திருந்த கண்களில் மேலட்டுக்கிலேயே துளைத்துக் கொண்டு நின்றது வெறுப்பு மட்டும்தான். ஒவ்வொரு மனிதரின் இறப்பும் அவளுக்கு முக்கியம். அதனாலேயே மனிதர்களின் இனப்பெருக்க எண்ணிக்கையை கணக்கிலடங்காதவாறு பெருகுவதை கண்டும் மௌனமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். 


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே



Post a Comment

0 Comments