Advertisement

Responsive Advertisement

தேவதை 55

 பிரபஞ்சத்தில் இருந்த ஒட்டுமொத்த ஜீவன்களின் முதல் சந்தேகம் "கவி எப்படி புவி கிரகத்தில் மனிதர்களை உருவாக்கினான்?" என்பதுதான்.


"நாம போய் உண்மையை சொல்லிடலாமா?" என்ற ஹார்டை முறைத்தாள் ஃபயர்.


"அவன் ஒரு பைத்தியக்காரன். நம்ம மேலயேதான் சண்டைக்கு வருவான்.!" என்றுச் சொல்லி தடுத்தாள்.


ஆதி மருத்துவர் வனியின் அருகே அமர்ந்திருந்தாள். வெகு நாட்களாக சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தவள் இப்போதுதான் நேரம் கிடைத்து வந்திருந்தாள்.


வனி அவளை அழைத்து தனது தேனீரை தந்தார்.


"நன்றிகள் மருத்துவரே! உங்களாலதான் நான் இன்னைக்கு நிம்மதியா இருக்கேன்.!" என்றாள்.


மென்னகை புரிந்தார் அவர்‌. "குழந்தைகள் அனுபவிக்க கூடாத சிரமங்களை நீ அனுபவிச்சிட்ட.. ஏதோ என்னால முடிஞ்ச உதவி.." என்றார் அவர்.


"நீங்கள் தந்த மருந்து விஷத்திற்கு ஒப்பானது என்று சிலர் சொல்கிறார்கள்.. உண்மையா இது?" எனக் கேட்டாள். 


வனி ஆதியின் தலையை வருடி விட்டார். "இல்லை. ஆனா அதை அப்படியும் கூட சொல்லலாம்.!" என்றவரை குழப்பமாக பார்த்தாள் அவள்.


"நான் தந்தது அன்பு காட்டுதலை நிறுத்தி வைக்கும் மருந்து. அது உன் உடலோடு கலக்கும்போது உனக்கு தேவையில்லாதவர்களிடம் நீ அன்பு காட்டப்படுவது தடுக்கப்படும். நீ ஒன்றும் நட்சத்திரம் கிடையாது. எல்லா திசைக்கும் வெளிச்சம் காட்ட‌. நீ மழையாய் இரு. எந்த கிரகத்தில் தண்ணீரை ஆவியாய் பருகினாயோ அதே கிரகத்திற்கு உன் மழையை கொடு. எங்கே அன்பை பெற்றாயோ அங்கேயே உன் அன்பை கொடு. எங்கே உன் அன்பு மதிக்கப்பட்டு திருப்பி தரப்படும் என்று நம்புகிறாயோ அங்கேயே உன் அன்பை கொடு. இந்த பிரபஞ்சத்தில் மிகவும் மதிப்பு மிக்கது அன்பு மட்டும்தான். அதனால் அதை அனாவசியமானவர்களுக்கு தந்து அந்த அன்பின் மதிப்பை தரம் குறைக்க செய்யாதே!" என்றார்.


ஆதி புரிந்துக் கொண்டதாக தலையசைத்தாள்.


"மிக பெரிய உதவி செய்துள்ளீர்கள் மருத்துவரே.. ஆனால் நீங்கள் இந்த உதவியை எனக்கு செய்ய காரணம்.?"


"என் தாயார் ஒரு அன்பின் தேவதை‌. நான் கருவில் உருவாகி பிறந்தவன். உன்னை போல பரிசுத்தம் கிடையாது. ஆனாலும் அன்பின் தேவதையாக இருப்பதின் பலம் பலவீனம் அறிந்தவன். அதனால்தான் உனக்கு உதவி செய்தேன்.!" என்றார்.


ஆதி புன்னகையோடு அவருக்கு வணக்கம் செலுத்தினாள்.


"உனக்கு பொறுப்பேற்கும் வயது வந்து விட்டது. எப்போது மனிதர்களை உருவாக்க போகிறாய்?" எனக் கேட்டார் அவர்.


"விரைவில்.!" என்றவள் எழுந்தாள்.


"இன்னொரு நாள் சந்திக்கலாம் மருத்துவரே. உதவிக்கு நன்றிகள்.!" என்றவள் அங்கிருந்துப் புறப்பட்டாள்.


பல ஆயிரம் வருடங்கள். ஒரு நாள் இரு நாள் அல்ல. பல்லாயிரம் ஆண்டுகள். கவி தனது மாளிகைக்குள்ளேயே அடிமை போல சுருண்டு கிடந்தான். அவனின் புத்தி சிறிதும் வேலை செய்யவில்லை. அவனின் உலகம் அவனுக்காக காத்திருந்து சலித்துப் போனது. அவனின் வலியை அந்த உலகத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆதி பரப்பி விட்ட வெறுப்பின் காரணமாக அவர்கள் கவியினால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை புரிந்துக் கொண்டனர். 


"ஒரு ஏந்தலால் எப்போதும் நன்மை மட்டும்தான் நடக்க வேண்டும். நீங்க தேவையில்லாம ஒரு உலகத்தை அழிச்சி மாபெரும் சாபத்தையும் வாங்கிட்டிங்க. நீங்க இந்த உலகத்துக்கு ஏந்தலாய் இருக்கும் தகுதியை இழந்துட்டிங்க. ஏந்தல்கள் தன் குடிகளுக்கு வலிகளை தர கூடாது. நீங்களே புரிஞ்சிப்பிங்கன்னு நினைக்கிறேன்.." என்றான் ஒருவன்.


கவிக்கு விழுந்த அடுத்த அடி அது. அவன் ஏந்தலாய் இருந்தான். அவன் ஒரு நல்ல ஏந்தல் என்றால் நிச்சயம் பதவி விலகியாக வேண்டும். ஆனால் அவன் தன் உலகை காப்பாற்ற வேண்டிதான் ஆதியை மணம் முடித்தான்.‌ அவன் தன் உலகை காப்பாற்ற வேண்டிதான் ஒரு குழந்தையை வேண்டினான். 


இருதலைக் கொள்ளியாய் மாட்டிக் கொண்டான் அவன்.


அவனின் வலியை முடித்துக் கொண்டாக வேண்டும். இல்லையேல் ஆதியிடம் குழந்தை வரம் கேட்டாக வேண்டும். 


"இரண்டுமே முடியாது. நீ செத்தாலும் இந்த பிரச்சனை தீராது. உதவாத கோபத்துல நீ செஞ்ச காரியம் உன்னையும் உன் உலகத்தையும் அழிக்குது கவி.!" என்று தன்னையே திட்டிக் கொண்டான்.


ஆதி புவியில் அமர்ந்திருந்தாள். மனம் சங்கீதம் பாடியது‌.‌ இதயம் ராகம் இசைத்தது.


மனிதர்களை உருவாக்கி அவர்களின் வாழ்வில் இன்பம் காண வேண்டும். ஆனால் எப்போது தொடங்குவது என்று தெரியாமல் காலம் தள்ளிக் கொண்டிருந்தாள்.


அது ஓர் அழகிய நாள். ஆற்றோரம் இருந்த பச்சை புற்களின் மீது பறந்துக் கொண்டிருந்தாள் ஆதி. அவளின் வெள்ளை இறகுகள் மெள்ள அசைந்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு இசையை முனகிக் கொண்டிருந்தாள்‌ அவள். சுற்றிலும் வெண் பனியால் மூடியிருந்தது காலநிலை. வெண் பனியின் இடையே பறந்து வந்தது ஒரு அழகிய பட்டாம்பூச்சி. பட்டாம்பூச்சியை கண்டவள் அதை கையில் பிடிக்க நினைத்தாள். அந்த பட்டாம்பூச்சியை துரத்தினாள். பனியின் இடையே அங்கும் இங்குமாக பறந்து அதை துரத்தினாள். 


அந்த பட்டாம்பூச்சியை அவள் பிடிக்கும் முன் "ஆதி" என்றொரு குரல் கேட்டது.


ஆதி சுற்றும் முற்றும் பார்த்தாள். கவி தூரத்தில் நிற்பதை உணர முடிந்தது அவளால்‌. தரையில் கால் பதித்தவள் அவனை நோக்கி நடந்தாள்.


"சொல்லுங்கள் ஏந்தலே!" என்றாள்.


"நான் இனி ஏந்தல் இல்லை ஆதி. எனக்கு உலகம் இல்லை. இனி நான் அனாதை!" என்றவனை கிண்டலாக பார்த்தாள்.


"என் உலகை காக்கதான் உன்னை மணம் முடித்தேன் நான். ஆனா நீ அந்த இணை பதவியையே பழி வாங்க பயன்படுத்தி விட்டாய். உன்னால் எனக்கு வலி. என்னால் என் மக்களுக்கு வலி. என் உலகை காப்பாற்ற வேண்டி நான் பதவி துறக்க முடிவு செய்து விட்டேன். அழிந்துக் கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் எல்லையில் போய் நின்று அந்த பிரபஞ்ச எல்லையோடு சேர்ந்து அழிய போகிறேன் நான். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள். என்னை விட பெரிய துரோகி நீதான். நான் உன்னை ஏமாற்றினேன். நீ என்னை பழி வாங்கினாய். நான் உன் உலகை அழித்தேன். நீ பதிலுக்கு எங்கள் உலகை அழித்து விட்டாய். பூமியில் இருந்த என் மனித பிள்ளைகளையும் கொன்று விட்டாள்.


இந்த பிரபஞ்சத்தில் அன்பின் தேவதைகள் நல்லவர்கள் என்று யாராவது சொன்னால் அவர்களின் நாக்கு கருகட்டும். அன்பை விட மோசமான ஆயுதம் இல்லையென்று புரிந்து அனைவரும் புத்திசாலியாக பிழைத்துக் கொள்ளட்டும்.." என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.


ஆதி அவனின் முன்னால் வந்து நின்றாள். "உங்களுக்கு நான் ஒரு வாய்ப்பு வழங்குகிறேன்.!" என்றாள்.


கவி சந்தேகமாக அவளைப் பார்த்தான்.


"ஆனா அதுக்கு பதிலா வேறு ஒரு உதவியை நீங்க செய்யணும்.!" என்றவள் அவனிடம் அக்னி ஏடு ஒன்றை தந்தாள்.


அதில் எழுதியிருந்ததை படித்தவன் குழப்பத்தோடு அவளை பார்த்தான்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. 



Post a Comment

0 Comments