Advertisement

Responsive Advertisement

தேவதை 56

 'விதி. விதியின் வகை எப்படி வேண்டுமானாலும் அமையும். ஆனால் விதியை மறுத்து ஓடுவதை போல முட்டாள்தனம் ஏதுமில்லை. நீ எதை நோக்கி ஓடுகிறாயோ அதுதான் உன் விதி. நீ எதனிடமிருந்து ஓடுகிறாயோ அதுவும் உன் விதியே. விதி என்பது உன் வாழ்வோடு இருப்பது. உன் செயல்களின் காரணமாக இருப்பது. உன்னையே நீ எதிர்த்தாலும் அதுவும் விதியே.!'


"ஒன்னும் புரியல.!" அக்னி ஏட்டை ஆதியிடமே திருப்பி தந்தான் கவி.


"அடுத்த பக்கத்தையும் படியுங்கள் ஏந்தலே.!" என்றவளின் குரலில் எரிச்சலும், வருத்தமும் ஒன்று சேர்ந்து இருந்தது.


கவி அடுத்த பக்கத்தை பார்த்தான்.


"இது பால்வீதியின் விதி. பால்வீதி எப்போதும் தனித்துவமானது. பால்வீதியின் காப்பாளினி தேவர் தேவதைகள் இருவர். அவர்கள் தனி தனியாய் மனிதர்களை உருவாக்கினால் அது அழிவை மட்டுமே தரும். ஆனால் இருவரும் சேர்ந்து உருவாக்குகையிலேயே அது நிலைத்திருக்கும். நிலைப்பது என்பது வாழ்நாளை குறிப்பது இல்லை. வாழுவோரின் நிலையை குறிப்பது.!" அக்னி ஏட்டை மூடினான் கவி.


"அந்த இரண்டாவது தேவன் நான்தான் இல்லையா? அதனால்தான் என்னால் இங்கே உயிர்களை உருவாக்க முடிஞ்சது. சரியா?" எனக் கேட்டான் ஆதியிடம்.


ஆதி மௌனமாக இருந்தாள். ஆனால் அதுதான் விசயமென்று இருவருக்குமே புரிந்துதான் இருந்தது.


"இந்த கடவுள்களை அழிக்கும் ஆயுதம் கண்டறிந்து விட்டால் பிறகு முதல் அழிவாக இந்த பால்வீதி கடவுள்களையே அழிப்பேன் நான். இது சத்தியம்.!" காற்றோடு சத்தியம் செய்தான் கவி.


கடவுளர்கள் நால்வரும் அவனை பார்க்க பிடிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டனர்.


"நமக்கு வாய்த்த விதிக்கு நாம்தான் அழ வேண்டும். அனைத்து அண்டங்களுக்கும் ஒவ்வொரு காப்பாளினி இருக்கையில் இங்கே மட்டும் ஒரு காப்பானும் காப்பாளினியும் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்த அந்த விதியைதான் சொல்ல வேண்டும்.!" என்று பற்களை கடித்தான் ஆக்சிஜன்.


"இது என் உலகம். நீங்கள் தயவு செய்து இங்கிருந்து போய் விடுங்கள்.!" என்ற ஆதியின் கழுத்தைப் பற்றினான் கவி. பல நாட்களுக்கு பிறகு அவளை தீண்டியிருந்தான். இருவருக்கும் இடையில் இருந்த பந்த வேர்கள் அவர்களை பிணைக்க பார்த்தது.


"நான் சாகறேன்னு சொல்லிட்டு போனேன். ஆனா நீதான் நிறுத்தின.. இந்த வீணா போன ஏட்டை தந்த. இப்ப போக சொல்ற.." என்றான் கோபத்தோடு.


ஆதி தனது ஒற்றை கையை உயர்த்தினாள். அவனின் கையை தட்டி விட்டாள். அவனை விட பலம் இருந்தது அவளிடம். 


"நான் இதை சொல்ல காரணம் உங்களோடு கூடி குலாவ இல்லை. உங்களை முறைப்படி இந்த உலகிலிருந்து பதவி விலக வைக்கதான்.!" என்றாள்.


கவி நகைப்போடு அவளின் காதோரம் குனிந்தான்.


"நீ அழிந்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டது ஆதி.!" என்றான்.


அவனை விலக்கி தள்ளியவள் "உங்களின் தாக்குதல்களை புன்சிரிப்போடு ஏற்றுக் கொண்டால் நான் நல்லவளா?" எனக் கேட்டாள் சிரிப்போடு.


"நமக்குள் எந்த சம்பந்தமும் வேண்டாம். நீ என்னை வெறுக்கும் அளவுக்கு நானும் உன்னை வெறுக்கிறேன். நான் செத்த பிறகு இந்த விதி மாறி போகும். அப்புறம் நீ ஒருத்தியே உன் நோஞ்சான் மனிதர்களை உருவாக்கலாம்.!" என்றான்.


ஆதி அவனின் கழுத்தை பற்றினாள். கவி இந்த தாக்குதலை எதிர் பார்க்கவில்லை.


"என்ன நினைத்தாய்? அப்பாவி அன்பின் தேவதையாக இருந்தால் அழிப்பாயா? அவர்களை நோஞ்சான் என்று சொல்வாயா?" எனக் கேட்டாள் கோபத்தோடு.


சிரிப்போடு அவளை தன்னிடமிருந்த விலக்கி தள்ளியவன் "ஒன்றை மட்டும் நினைவில் வச்சிக்க ஆதி.‌ உன் உலகை நான் அழித்தேன். ஆனால் நான் அழிக்கும் அளவுக்கு அளவுக்கு பலவீனமாக இருந்தது உங்கள் தவறே.!" என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.


ஆதி அவனை பிடித்து நிறுத்த நினைத்தாள். உயிர்களை உருவாக்கும் அவனின் விதியை அவனிடமிருந்து வாங்க நினைத்தாள். ஆனால் அதற்குள் அவன் புறப்பட்டு விட்டான்.


அதே சமயத்தில் சத்திய தேவ உலகத்தை நாற்புறமும் சூழ்ந்தனர் பல உலகத்து அரசர்களும், வீரர்களும்.


கவி பதவி துறக்கவும் உயிர் துறக்கவும் சென்று விட்டான் என்று செய்தி அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்து தந்தது. இது போல் ஒருநாள் வந்து இந்த உலகத்தை அழிக்க வேண்டும் என்று பல காலமாக காத்திருந்தவர்கள் அவர்கள்.


சத்திய தேவ உலகில் இறங்கியவர்கள் அவர்களை அழிக்க ஆரம்பித்தனர். ஏந்தல் இல்லாத காரணத்தால் அவர்களின் சக்தியும் சற்று குறைவாகதான் இருந்தது. முடிந்த அளவுக்கு போரிட்டும் கூட எதிரிகளை விரட்ட முடியவில்லை அவர்களால். 


முதல் சத்திய தேவன் இறந்தபோதே கவி ஆபத்தை உணர்ந்து விட்டான். அவசரமாக திரும்பினான். தன் உலகம் ஆபத்தில் உள்ளதை அறிந்து தனது ஆயுதத்தோடு களத்தில் இறங்கினான்.


எதிரியென பன்னிரெண்டு உலகங்களை சேர்ந்தவர்கள் இருந்தார்கள். 


"பலம் ஒன்றே காக்கும் என்றால் நான் என் மக்களை காத்து உங்கள் அனைவரையும் கொல்ல போகிறேன்.!" என்று கர்ஜித்தான் ஆதி.


இன்னேரம் இவன் இறந்திருந்திருப்பான் என்று நினைத்திருந்த எதிராளிகள் இவ்வளவு தூரம் வந்த பிறகு புற முதுகிட்டு ஓடுவதா என்ற எண்ணத்தோடு போரை தொடர்ந்து நடத்தினர்.


போர் பயங்கரமாக நடந்தது. இந்த போர் இப்படியே தொடர்ந்தால் பதிமூன்று தேவ உலகங்கள் அடியோடு அழியும். அது மட்டும் உண்மை.


"உங்களையெல்லாம் அப்போதே அழிக்காமல் போனதற்கு எனக்கு கிடைத்த தண்டனை இது.!" என்று ஆத்திரமுற்ற கவி தன் முன் இருந்த வீரனின் உடலை இரண்டாக வெட்டி எறிந்தான். 


மரண ஓலங்கள் மீண்டும் கேட்டது. தேவர்களும் தேவதைகளும் வெட்டுண்டு தரை வீழ்ந்துக் கொண்டிருந்தனர்.


வலியை தாங்க இயலாமல் அழுதாள் ஆதி. அங்கே அவள் வந்திருக்கவே கூடாது. ஆனால் அவள் ஒரு அன்பின் தேவதை. அவளால் தனது பணியை செய்யாமல் இருக்க முடியவில்லை.


அழிந்துக் கொண்டிருந்த வீரர்களை கண்டவளுக்கு தன் உலகின் அழிவுதான் நினைவுக்கு வந்தது.


"போதும் நிறுத்துங்கள்.!" என்றாள் ஆகாயத்தில் இருந்தபடி‌.


அனைவரும் அவளை ஆச்சரியத்தோடு பார்த்தனர்.


"ஆதி நீ என்ன செய்ற?" வியனி அதிர்ச்சியோடு கேட்டான்.


"முட்டாள்களுக்கு புத்தி புகட்ட வந்துள்ளேன்.!" பற்களை அரைத்தபடி சொன்னவள் காற்றில் நேராய் நின்றாள். ஒற்றை கையை தலைக்கு மேல் உயர்த்தினாள். மறு கையை அவர்களை நோக்கி நீட்டினாள். 


"இந்த பிரபஞ்சம் எப்போதும் நிம்மதியுற்று வாழ வேண்டும். இந்த பிரபஞ்சத்திற்காக.. இந்த பதிமூன்று உலக வருங்கால தேவ தேவதைகளுக்காக.. இங்கே அன்பு பரவட்டும்.!" என்றாள்.


உலகம் குலுங்கி நின்றது. அனைவரும் கத்திகளை கீழே எரிந்தனர். பகை அவர்களின் மனதை விட்டு போயிருந்தது. பாசத்தோடு ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர்.


கவி மட்டும் பயந்துப் போய் இருந்தான். ஆதியின் முழு மனதையும், அவளின் நிம்மதியையும் நன் நெஞ்சில் உணர்ந்தான் அவன். இந்த இனிப்பு மனம் எப்போது வேண்டுமானாலும் கசந்து போகும் என்று எண்ணி பயந்துக் கொண்டிருந்தான்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே



Post a Comment

0 Comments