சத்திய தேவ உலகின் மறு பக்கமிருந்த பனி மலையின் மீது அமர்ந்திருந்தாள் ஆதி. பனிற கொட்டிக் கொண்டிருந்தது. நேர் எதிரில் இருந்த ஒரு நட்சத்திரம் தன் கதிர்களால் அந்த இடத்தையே கண்ணாடி போல பிரகாசிக்க செய்துக் கொண்டிருந்தது.
ஆதி பனி துகள்களை கையில் எடுத்தாள். அப்படியே கீழே விட்டெறிந்தாள். விளையாட தோன்றியது. ஆனால் அதே சமயம் அது பிடிக்காமலும் போனது.
"ஆதி.." கவியின் குரலில் திரும்பிப் பார்த்தாள். அவளருகே வந்தவன் அவளை விட்டு சற்று தள்ளி அமர்ந்தான்.
ஆதி அவனை விட்டுவிட்டு நேராக பார்த்தாள்.
"நீ ஏன் இப்படி செய்யணும்? என்னை பழி வாங்கி இருக்கலாமே!?"
"ஆனா நான் என் கடமையிலிருந்து தப்பிக்க நினைக்கல.!" என்றவளின் முகம் பார்த்தான். பரிசுத்தம் என்பதன் அர்த்தம் அவனுக்கு கொஞ்சமாக விளங்க ஆரம்பித்தது.
"உனக்கு என்ன ஆச்சி?" அவனின் கேள்வியால் குழப்பமாக திரும்பினாள்.
"உன் நெஞ்சம் காலியா இருக்கற மாதிரி தோணுது. என்னால உன் அன்பையும் வெறுப்பையும் உணர முடியல.!" என்றான் தயக்கமாக.
ஆதி மௌனமாய் நட்சத்திரத்தை பார்த்தாள்.
"நான் என் சக்தியை நேரடியா பயன்படுத்தியதால் சோர்வா இருக்கேன். என்னால யாரையும் வெறுக்க முடியாது.!" என்றாள் நெற்றியை தேய்த்தபடி.
கவி உண்மையான இரக்கத்தோடு அவளைப் பார்த்தான். இறப்பை தேடி சென்றவன் திரும்பி வந்து விடவும் மனம் நிலைக்கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. ஆதியின் சிரமங்கள் அவனுக்கு கவலையை தந்தது.
"நான் ஒரு உண்மையை சொல்லட்டா?" அவனின் கேள்வியில் திரும்பினாள்.
"ம்." என்றாள்.
"நீ என் ராணி. என் இணை.."
"வேற ஏதாவது பேசலாம். தெரிஞ்ச விசயத்துக்கு நேரம் வீணடிக்க வேணாம்.!"
"இல்ல நான் அப்படி சொல்ல வரல. உன் வலியை நானும் உணருவேன்.!"
நகைத்தவள் "இணையான பிறகுதானே? ஆனா அதுக்கு முன்னாடி நான் அனுபவிச்சது.?" அவளின் கேள்விக்கு பெருமூச்சு விட்டான்.
"நீ எனக்கு மறுவாய்ப்பு கொடு.." நேரடியாகவே விசயத்திற்கு வந்தான்.
ஆதிக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.
"அதேதான் நானும் நினைச்சேன். பூமியில் இரண்டு பேரால் மட்டும்தான் மனித உயிர்களை உருவாக்க முடியும். நான் அதை பத்தி யோசிச்சி ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். இரண்டு பேரும் சேர்ந்து உயிர்களை உருவாக்கலாம். மனித உயிர்கள் தானாய் விருத்தியாகும் சக்தியையும் புத்தியையும் தரலாம். அப்புறம் நீ எப்படி போனா என்ன? நான் அழிஞ்சே போனாதான் என்ன?" விரக்தியாக சொன்னாள்.
அவளின் கையை பற்றி வேண்டும் என்ற அவா எழுந்தது அவனுக்குள்.
"இது கடமைக்காக ஏந்தலே.. நான் உங்களை போல கடமை தவற மாட்டேன்.. நம்பியிருக்கும் உலகை அழித்த உங்களை போல் நானும் ஒரு பாவத்தை செய்ய மாட்டேன். எனக்கு தந்த கடமையை சரியாக செய்வேன். எதிரியாயினும் கூட என் கடமையை செய்ய வேண்டி கரம் கோர்ப்பேன்.!" என்றாள்.
கவி புரிந்துக் கொண்டதாக தலையசைத்தான்.
"எனது சக்திகளை இழந்துட்டேன். அதனாலதான் கொஞ்ச நேரத்துக்கு உங்க உலகத்துல ஓய்வெடுத்துட்டு இருக்கேன். கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன். அது வரைக்கும் என்னை தொந்தரவு செய்யாம இருங்க.!" என்றவள் பனி குவியலில் தலை சாய்த்தாள்.
அவள் தன் மடி சாய்ந்து உறங்கிய நாட்கள் அவனின் நினைவில் வந்துச் சென்றது. பெருமூச்சு விட்டபடியே அவளின் முகம் பார்த்தான். அவளின் அருகிலேயே அவனும் தலை சாய்ந்தான்.
"என்னை நம்புறியா ஆதி?" எதற்கென்றே தெரியாமல் கேட்டான்.
"இல்ல.. எனக்கு ஏதாவது ஆனா அது ஏந்தலையும் பிரஜைகளையும் பாதிக்கும். அதனால நீங்க யாரும் என்னை தாக்க மாட்டிங்க. அந்த நம்பிக்கைதான்.!"
கவிக்கு நெஞ்சில் அடி விழுந்தது போலிருந்தது.
நேரம் கடந்தது. ஆதி எழுந்தாள். அங்கிருந்து சென்றாள். கவி அதே இடத்தில் படுத்திருந்தான். வாரங்கள் முடிந்த பிறகும் கூட அவன் அதே இடத்தில்தான் இருந்தான்.
அந்த உலகில் இருந்த தேவர்கள் யாரும் கவியிடம் வந்து பேசவில்லை. பிரச்சனை என்றதும் அவன் திரும்பி வந்து விட்டது அவர்களுக்கு நாணத்தை தந்திருந்தது. அவன் மற்ற அனைத்து உலகிற்கும் கெட்டவனாக இருந்தாலும் தன் மக்களுக்காக எந்த எல்லைக்கும் செல்பவன் என்ற விசயம் இன்னும் ஒருமுறை அவர்களுக்குப் புரிந்தது. அவனை விரட்டவும் இல்லை. அவனை வரவேற்கும் இல்லை அவர்கள்.
கவி பைத்தியம் போல படுத்து கிடந்தான். ஒரு மாதம் ஓடி விட்டது. புவியில் இது ஏழெட்டு வருடங்கள் என்று அவனுக்கு தெரியும். மனம் அடிக்கடி வெறுமையை உணர்ந்தது. ஆதி என்ன செய்கிறாள் என்று யூகிக்க முடியவில்லை அவனால்.
பாறை போல் அவன் அசையாமல் இருந்த ஒருநாளில் ஃபயர் அங்கே வந்து சேர்ந்தாள்.
"ஆதி உன்னை எதிர்பார்த்து காத்திருக்கிறாள்.!" என்றுச் சொன்னாள்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
0 Comments