பூமிக்கு ஓடி வந்தான் கவி. ஆதி தனக்காக காத்திருப்பாள் என்று அவன் நினைக்கவே இல்லை.
பூமி பச்சையும் பல வண்ணங்களுமாக இருந்தது. ஆதி இருந்த வனத்தை நோக்கி சென்றான் கவி. வனத்தின் ஆரம்பத்திலேயே வானம் வெறித்தபடி அமர்ந்திருந்தாள் ஆதி. அவளின் உடல் மாறிப் போயிருந்தது. முன்பை விட பாதி மெலிந்துப் போயிருந்தாள். அவளின் முகத்தில் கொஞ்சமும் ஒளி இல்லை.
கவி பயந்து விட்டான். ஓடிச்சென்று அவளின் முன்னால் மண்டியிட்டான்.
"என்ன ஆச்சி ஆதி?" கவலையோடு கேட்டான்.
நிமிர்ந்து அவனை பார்த்தவள் "ஒன்னும் இல்லையே.!" என்றபடி எழுந்து நின்றாள். ஆனால் நிற்கவும் சக்தி போதாமல் அவன் மீதுதான் விழுந்தாள். தன் மீது விழுந்தவளை தாங்கி பிடித்தவன் அவளின் முகத்தை வருடினான். அரை மயக்கத்தில் இருந்தாள் அவள். அவனுக்கு இதயம் உடைவது போலவே இருந்தது. மயக்கம் வருவது போலிருந்தது. அவளை தூக்கினான். எதிரே இருந்த மலர் மாளிகைக்குள் நடந்தான். இமைகளின் கீழ் ஈரம் படர்ந்துக் கொண்டிருந்தது.
"என்னை விட்டு விலகி போங்கள் ஏந்தலே.!" அதிகம் ஒலிக்காத குரலில் சொன்னாள்.
கவி அவளின் பேச்சை கேட்க வேண்டும் என்று முதல் முறையாக நினைத்தான். ஆனால் சந்தர்ப்பம்தான் சரியாக அமையவில்லை.
மாளிகையில் இருந்த படுக்கையின் மீது அவளை படுக்க வைத்தான். அவளின் கையை பற்றியபடி முகம் பார்த்தான்.
"என்னதான் ஆச்சி உனக்கு?" வருத்தம் நிரம்பிய அவனின் குரலை அவளுக்கு துளியும் பிடிக்கவில்லை.
பதில் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள். கவி எழுந்தான். வெளியே நடந்தான். அங்கிருக்கும் மிருகங்களிடம் விசயத்தை கேட்கலாம் என்று நினைத்துதான் நடந்தான். ஆனால் வெளியே ஃபயரே நின்றிருந்தாள். ஓடி சென்றவன் முதல் நொடியிலேயே அவளின் கழுத்தை பற்றி விட்டான்.
ஃபயர் அவனின் கையை தட்டி விட்டாள்.
"என் ஆதிக்கு என்ற ஆச்சி?" எனக் கேட்டபடியே தன் வாளை கையில் எடுத்தான்.
ஃபயர் கோபத்தோடு அவனை முறைத்தாள்.
"முட்டாள்.. அவ மெள்ள சாக முயற்சிக்கிறாள்.!" என்றாள்.
கவி அதிர்ந்துப் போனான். மாளிகையின் புறம் வெறித்து விட்டு இவளை பார்த்தான்.
"ஆனா.."
"ஏனா அவளுக்கு வாழ பிடிக்கல. அவ ஒரு கலகலப்பான தேவதை. ஆனா அவளோட இனத்தில் மிஞ்சி இருக்கும் எச்சம் அவ.. அ" மீதியை அவள் சொல்லும் முன் கத்தி பயரின் கழுத்தில் பதிந்தது.
"அவள் எச்சம் இல்ல.!" என்று கர்ஜித்தான்.
"என்னய்யா நீ.? ஒரு உவமை சொல்ல விடுறியா?" என்று சலித்தபடி வாளை தூர தள்ளினாள்.
"கடைசி மிச்சம் அவ. அதனால அவளுக்குள்ள எப்பவும் அந்த தனிமை இருந்துக்கிட்டேதான் இருக்கும். உன் உலகத்துலயாவது நாலு பேர் அவளோடு பேசுவாங்க. பழகுவாங்க. அவளுக்கும் தன் தனிமை தெரியாம இருக்கும். ஆனா இங்கே அவ அனாதை மட்டும்தான். மிருகங்களின் பாசம் அவளுக்கு போதுமானதா இல்ல. அதுவும் இல்லாம உன்னோடு சண்டை வேற அவளுக்கு. எத்தனை ஏமாற்றம்தான் தாங்குவா ஒரு அன்பின் தேவதை? அதனாலதான் தன் சக்திகளை தேவையில்லாம வழங்கிட்டு இருக்கா.. பிரபஞ்சத்தை கொஞ்சம் சுத்தி பார்த்துட்டு வா.. உன்னை தவிர மீதி எல்லோருமே அன்பின் பிடியில் திளைச்சி போய் இருக்காங்க. பிரபஞ்சமே ஒரு இன்பத்துக்குள்ள மூழ்கிட்டு இருக்கு. அளவுக்கு அதிகமான இன்பத்தை அனுபவிச்சிட்டு இருக்காங்க எல்லோரும்.!"
கவி அதிர்ந்தான். "ஆனா ஏன்?"
"முட்டாள் தேவனே.. அதான் சொன்னேனே.. அவளுக்கு வாழ்கை மீது பிடிப்பு இல்ல.. உன்னை வெறுக்கறேன்னு சொல்லிட்டு இருந்தவ கடைசியில் வாழ்க்கையை வெறுக்க ஆரம்பிச்சிட்டா.. நீ செஞ்ச வினைக்கு கடைசி வரை தண்டனை அவளுக்கு மட்டும்தான். இந்த தண்டனையில் இருந்து மரணத்தால் மட்டும்தான் விடுதலை வர முடியும்ன்னு நினைக்கிறா அவ. உன்னையும் பழி வாங்கிடலாம்ன்னு நினைக்கிறா.."
கவி தலையை பற்றினான். தரையில் அமர்ந்தான்.
"தெரியாம பண்ணிட்டேன். அதுக்கு நான் வேற என்னதான் செய்ய முடியும்?"
ஃபயர் அவனின் அருகே அமர்ந்தாள். சம்மணமிட்டபடி அவனின் முகம் பார்த்தாள்.
"அவளுக்கும் ஆசையை உருவாக்கு." என்றாள்.
கவி குழப்பத்தோடு அவளை பார்த்தான்.
"ஆசையில்லாதவர்கள் வாழ தகுதியில்லாதவர்கள் என்பது பிரபஞ்சத்தின் எழுதப்படாத விதி.." என்றவள் வானம் பார்த்தாள்.
"ஒருவேளை அவளுக்கு ஆசை வந்து, அப்புறம் அவ வாழ ஆசைப்படலாம்.!"
"ஆனா அவதான் என்னை பக்கத்துலயே சேர்த்துக்க மாட்டேங்கிறாளே.!"
"முயற்சி செய்.!" என்ற ஃபயர் எழுந்து நின்றாள். அங்கிருந்து புறப்பட்டாள்.
ஆதி கண் விழித்தபோது இருள் சூழ்ந்திருந்தது. ஆனால் மாளிகை முழுக்க மின்மினிப் பூச்சிகள் பறந்துக் கொண்டிருந்தது. எழுந்து அமர்ந்தாள். கவி தூரமாக அமர்ந்திருந்தான்.
"உன் பொறுப்பிலிருந்து விலக மாட்டன்னு நினைச்சேன். ஆனா நீ தற்கொலை செஞ்சிட்டு இருக்க.!" சொல்லி சிரித்தான்.
"இல்ல. தற்கொலை இல்ல.!" என்றவளை குழப்பமாக பார்த்தான்.
"இது வலி.. வலியை ஏத்துக்கிட்டு இருக்கேன். அதிகபடியான அன்பை நேரடியா தந்துட்டு சக்தி இல்லாம தரையில் விழுறது பிடிச்சிருக்கு. என்னோட மத்த எல்லா வலிகளும் மறந்துடுது அப்போது.!" என்றவளின் விழிகளில் கொஞ்சமாக ஒளி திரும்பி இருந்தது.
"உன்னை மறக்கறேன் அப்போது. அதுதான் எனக்கு வேணும்.!" என்றவள் அவனை தாண்டிக் கொண்டு வெளியே நடந்தாள். அவளின் கையை பற்றி நிறுத்தினான் கவி.
"எதிரியை ஏன் நினைக்கற.?" எனக் கேட்டான்.
"எதிரியைதான் நினைப்பாங்க. உனக்கு இங்கே என்ன வேலை?"
அவளின் கையை விட்டான்.
"என் பணி ஏற்க வந்தேன். பூமியில் புது உயிர்களை உருவாக்க வந்தேன்.!" என்றான்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
0 Comments