Advertisement

Responsive Advertisement

தேவதை 59

 கவியை முறைத்தாள் ஆதி.


"உன் பணியா? காக்கும் இடத்துல அழிச்சவன்தானே நீ?" கேலியாக கேட்டாள். 


"யாருமே தப்பு செய்ய மாட்டாங்களா? எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்க. இல்லன்னா முறைச்சிக்கிட்டே இருக்க. உனக்கு என்ன இப்ப.? நான் தண்டனை அனுபவிக்கணும். அதானே? தண்டனை கொடு.. இத்தனை வருசங்களா நீ பிரிஞ்சி இருப்பது எனக்கு தண்டனை தரல, இத்தனை வருசமா ஏன் வலி எனக்கு வலியா மாறி தண்டனை தரலன்னு நீ நினைச்சா என்னை கொன்னுடு.. நிம்மதியா சாகறேன் நான். உன்கிட்டதான் இப்ப வெறுப்பு இருக்கே. அதை முழுசா பயன்படுத்தி என்னை கொல்லு.!" என்றான் ஆத்திரத்தோடு.


ஆதி தரை பார்த்தாள். மனம் கனத்து போயிருந்தது அவளுக்கு. "உன்னை கொன்னாலும் யாரும் திரும்பி வர மாட்டாங்களே.!" என்றாள் சிறு குரலில்.


கவி பற்களை கடித்தான். "அப்படின்னா இதை அத்தோடு விடு. என்னை என் வேலையை பார்க்க விடு. எனக்கு சேர வேண்டிய ஆன்மாக்களை என்கிட்டயே கொடு.!" என்றான்.


ஆதி எழுந்து நின்றாள். பல முறை ஏற்கனவே யோசித்து இருந்தாள்.


"ஒரு ஒப்பந்தம் போட்டுக்கலாம் ஏந்தலே.. ஒவ்வொரு மனிதரையும் நாம் இரண்டும் பேரும் சேர்ந்தே உருவாக்கலாம். உங்க பங்கை நீங்க கொடுங்க. நான் என் பங்கை தரேன்.!" என்றாள்.


கவி யோசித்தான். இவள் அவ்வளவு சீக்கிரத்தில் இறங்கி வர மாட்டாளே என்பது அவனின் சந்தேகம்.


ஆதி நெருப்பு தாள் ஒன்றை வரவைத்தாள். அதில் ஏற்கனவே பல விசயங்கள் எழுதப்பட்டிருந்தது. தாளை கவியிடம் நீட்டினாள்.


"இதற்கு சம்மதித்து உன் கையெழுத்தை போடு.." என்றாள்.


கவி அதிலிருந்ததை படித்தான். மக்களை உருவாக்கினால் அவர்களின் எந்த விசயத்தை யார் கட்டுப்படுத்துவது யார் எக்குணத்தை தருவது என்று விலாவாரியாக எழுதியிருந்தாள். மக்களுக்கான வீரத்தை கவி தர வேண்டும் என்று எழுதியிருந்ததை படித்தவன் ஆச்சரியப்பட்டான். அவள் இந்த அளவிற்கு திருந்தி விட்டாளா என்று கூட சந்தேகம் வந்தது.


"சரி.." என்றவன் தன் கையெழுத்தை இட்டான். மீதியை அவன் சரியாக படிக்கவில்லை. 


நெருப்பு தாளை ஆகாயத்தில் வீசினாள் ஆதி.


"இந்த பிரபஞ்சமே சாட்சி இந்த கையெழுத்திற்கும், இந்த ஒப்பந்தத்திற்கும்.!" என்றாள்.


கவி அவளை சந்தேகமாக பார்த்தான். 


சில ஆன்மாக்களை கையில் எடுத்தாள். "நீ தர வேண்டியது வீரமும், விவேகமும், கோபமும், ஆசையும், பசியும், கற்கும் திறனும்.!" என்றாள் கவியிடம்.


கவி அவள் சொன்னது போலவே அனைத்தையும் தந்தான். விவேகத்தை அதிகமாகவே தந்தான். இன்னும் சொல்ல வேண்டுமானால் அவன் தர வேண்டிய அனைத்தையுமே எக்கச்சக்கமாகவே வழங்கினான்.


ஆதி அவனை வெறித்தாள். அவனின் ஆவலை கண்டு தனக்குள் நகைத்தாள். 


"உருவம் நானே.!" என்றவள் அந்த ஆன்மாக்களுக்கு கவியின் உருவத்தையே தந்தாள். கவி அதிர்ந்துப் போனான். அவர்களின் மீதான தனது பிடிப்பை அவள் அதிகம் செய்கிறாள் என்றே நினைத்தான்.


"அன்பை தரேன்.. அறிவை தரேன். ரசிக்கும் திறனை தரேன்.." என்று அனைத்தையும் தந்துக் கொண்டிருந்தாள்.


"புது உயிர்களை உருவாக்கும் சக்தியையும் தருகிறேன்.!" என்று கை நீட்டியவளை அதிர்ச்சியோடு பார்த்த கவி அவசரமாக வந்து அவளின் தோளை பற்றினான். அவளை பின்னால் தள்ளினான்.


"என்ன செய்ற நீ?" அதட்டினான். 


"ஏன்? இப்படியே வருசம் முழுக்க இரண்டு பேரும் இணைஞ்சி உயிர்களை உருவாக்கணுமா? சந்ததிகளை உருவாக்கும் திறன் ஒவ்வொரு உயிருக்குமே அவசியமானது. அதுதான் நான் என் பிள்ளைகளும் தரேன்.!" என்றவளிடம் மறுப்பாக தலையசைத்தான் அவன்.


"வேணாம் ஆதி.. இது நிறைய பிரச்சனைகளை கொண்டு வந்துடும். சந்ததிகள் பெருகிக்கிட்டே இருக்கும். இந்த மொத்த அண்டமும் இங்கிருக்கும் மொத்த கிரகங்களுமே அவங்களுக்கு போதாது. உணவு பட்டியலில் மேலிடம் ஆகட்டும், மற்ற உயிர்களை அடக்கியாளும் திறனாகட்டும்.. அது கண்டிப்பா மனிதர்களுக்குதான் இருக்கும். அவங்க ஜீவித்து வாழ்வாங்க.. இந்த பூமியும் அண்டமும் ஆயிரம் வருசத்துல நிறைஞ்சிடும்.." என்றான். தன் இணைக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ என்று நினைத்தான் அவன்.


ஆதி நகைத்தாள். "அவர்களுக்கு மரணத்தையு.." அவள் மேலே சொல்லும் முன் சட்டென்று அவளின் வாயை பொத்தினான். அவனின் தீண்டலில் நிற்க பிடிக்காமல் விலகினாள் அவள்.


"மரணத்தையும் தருகிறேன். நூறு வருடத்தில் மரணம் தழுவும் படி ஆணையிடுகிறேன்.!" என்றாள்.


கவிக்கு அனைத்துமே வெறுத்துப் போய் விட்டது. இது போல ஒரு ஆணைகளை முட்டாள் கூட வழங்க மாட்டான் என்று அவனுக்குமே தெரியும். அப்படி இருக்கையில் இவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்றுதான் அவனுக்கு புரியவில்லை.


இதுநாள் வரை அவன் பார்த்த அனைத்து தோல்விகளையும், வருத்தங்களையும் விட அதிக வலியை தந்தது இதுதான்.


தரையில் மடங்கி அமர்ந்தான். "இது போல ஒரு துரோகம் எங்குமே இருக்காது ஆதி. அவங்க குழந்தைங்க.. இந்த நூறு வருசம் அவங்களுக்கு வளர கூட பத்தாது.. அவங்க அறிவு பல சந்ததி தாண்டி வளர்ந்து நாகரீகத்துக்கு மாறவே பல ஆயிரம் வருசங்கள் ஆகிடும். இந்த அண்டத்தை கால் வாசி கடக்க அவங்க கத்துக்கும் முன்பே அவங்களோட இனமே கூட அழிஞ்சிடலாம்.." என்றான் வருத்தமாக, கவலையாக.


ஆதி காதில் கூட விழாதது போல நின்றிருந்தாள்.


"நான்தானே தப்பு செஞ்சேன்? நீ ஏன் இவங்களுக்கு தண்டனை தர?" விழிகளில் நீர் மல்க கேட்டான். அவளின் மனதை மாற்றி விட முயன்றான்.


"இந்த பிரபஞ்சத்தை அவங்க ஏன் சுத்திப் பார்க்கணும்? இந்த பூமிக்கு என்ன குறைச்சல்? இரவில் அனைத்து அண்டங்களின் நட்சத்திரங்களும் இவங்க பார்வைக்கு தெரியும். அதை விட வேறு என்ன வேணும் இவங்களுக்கு? இங்கேயே இருக்கட்டும்.. உன் சூழ்ச்சி புத்திதான் இவர்களுக்கு இருக்கும். இவங்களை மீண்டும் பிரபஞ்ச வெளியில் விட முடியாது என்னால.!" என்றாள் ஒரே முடிவாக.


கவி இன்று போல் என்றுமே வாழ்க்கையை வெறுத்தது இல்லை.


"ஆதி.. நீ எனக்கு என்ன தண்டனை வேணாலும் கொடு.!" கடைசியில் தன் பதவி மறந்து கெஞ்சினான் கவி.


"நான் யார் உங்களை போல் ஓர் ஏந்தலுக்கு தண்டனை தர? இவர்கள் என் பிள்ளைகள். இவர்களுக்கு எது முக்கியம் என்று எனக்குதான் தெரியும்.!" என்றவள் "எந்த உலகத்தையும் இவர்கள் அடக்க வேண்டாம். பிரபஞ்சவாசிகளை எதிரியாக்க வேண்டாம். தேவதை உலகங்களை தேடி சென்று அவர்களோடு போர் புரிந்து மொத்த பிரபஞ்சத்தையும் அழிவுக்கு தள்ள வேண்டாம்.!" என்றாள் கலங்கும் குரலில்.


"ஆதி வேணாம் இது.."


"இவர்கள் என் பிள்ளைகள்.. ஆனால் உனக்கும் பிள்ளைகள். உன்னை போல் தீயவர்களானால் நான் தினமும் இறப்பேன். என்னை போல் இவர்கள் ஏமாளிகளானால் அப்போதும் நான் தினமும் இறப்பேன். ஆனால் இப்போது அப்படி ஆகாது என்று நம்புகிறேன். இவர்களின் வாழ்க்கை அழகாய் அமையும்.. நான் தினமும் இவர்களோடு வாழ்வேன். நான் தந்த அன்பும், நீ தந்த விவேகமும் இவர்களை உயர்ந்த ஜீவன்களாக மாற்றும். இவர்கள் கடவுள்களை விட உயர்ந்தவர்களாக மாறுவார்கள்.." என்றாள் ஏதோ ஒரு நம்பிக்கையில்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே



Post a Comment

0 Comments