Advertisement

Responsive Advertisement

தேவதை 60

 பூமியில் புது மனிதர்கள் உருவாகி இருந்தார்கள். சந்ததிகள் உருவாகிக் கொண்டிருந்தார்கள். நூறே வருடத்தில் வெறும் நூறே வருடத்தில் மூப்பு வந்து இறந்தும் கொண்டிருந்தார்கள்.


அவர்களின் இறப்பில் கவியோடு சேர்ந்து ஆதியும் வலியை அனுபவித்தாள். அவள் மகிழ்ச்சியாக அந்த வலியை ஏற்றுக் கொண்டிருந்தாள்.


ஆரம்ப காலத்தில் நாகரீகம் என்ற ஒன்றை அறியாவிட்டாலும் கூட வாழ்வது எப்படி என்ற விசயத்தை அறிந்து வைத்திருந்தார்கள் மனிதர்கள். அதுவே அவர்களுக்கு போதும் என்று நினைத்தாள் ஆதி.


தாங்கள் யார், ஏன், எப்படி, என்ன என்ற கேள்விகள் உருவாகவே பல ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன. அனைத்து உலகிலும் ஒரு ஜீவன் பிறந்து வளர்ந்து அறிந்தது. ஆனால் இந்த பூமியில் மட்டுமே ஒரு இனம் பிறந்து வளர்ந்து தலைமுறைகளை கடந்து ஒவ்வொரு விசயங்களாக கற்றுக் கொண்டிருந்தது. மொத்த பிரபஞ்சத்திலும் மிகவும் சவாலான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் மனிதர்கள்தான் என்று அனைத்து தேவ உலகிலும் பேசிக் கொண்டார்கள். 


ஆரம்பத்தில் ஒரு விசயத்தையோ, கற்றலையோ ஒரு தலைமுறை தாண்டி கடத்துவது சிரமமான காரியமாக இருந்தது அவர்களுக்கு‌. ஆனால் கவி தந்த சக்திகளில் ஒன்றான தானாய் மெருகேறும் திறனால் அவர்களும் பல விசயங்களை கற்றுக் கொண்டனர்.


மனிதர்கள் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டாலும் கூட கவி மட்டும் தோல்வியையும், கோபத்தையும் ஒருசேர அனுபவித்துக் கொண்டிருந்தான். 


ஆதி பெரும் சண்டையை நிறுத்திய காரணத்தால் சத்திய தேவ உலகம் கவியையும் ஆதியையும் பழைய அன்போடு பார்க்க ஆரம்பித்தது. அந்த ஒரு விசயத்தில் மட்டும் ஆதியை வாழ்த்தினான் கவி. 


ஆனால் மனிதர்கள் தினமும் இறப்பது அவனுக்கு துளியும் பிடிக்கவில்லை. முன்பு அவன் உருவாக்கி இருந்த மனிதர்கள் மிருகங்களை அடக்கினர். விண்வெளியில் இருந்த அனைத்து ஜீவன்களையும் வெற்றிக் கொண்டனர். ஆனால் இவர்களோ இயற்கைக்கு கூட பயந்தனர். ஆற்றில் வெள்ளம் வருகையிலும், கடலில் சூறாவளி வருகையிலும் அவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. மிருகங்களோடு மிருகங்களாக பயந்து பாதுகாப்பான இடம் தேடி ஓடினர்.


கவியால் இந்த காட்சிகளை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. தன் பிள்ளைகள் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். சூறாவளியிலும் சிறகு விரித்து பறந்து, வெள்ளத்திலும் நீந்தி மகிழ வேண்டும் என்று நினைத்தான். அதையேதான் ஆதியிடமும் சொன்னான்.


"அது அவர்கள் வாழ்க்கை. நீ அவர்களுக்கான தேவையை தந்து விட்டாய்.‌ இதுக்கு மேல அவங்களே வாழ்ந்துப்பாங்க.!" என்றாள் ஒரே முடிவாக.


ஆம். அவர்கள் வாழ்ந்தார்கள். கோடி கோடி இலைகளை பரிசோதித்து காய்ச்சல் தீர்க்கும் இலை எதுவென்று அவர்களால் கண்டறிய முடிந்தது. சத்தமிட முடிந்தது. அந்த சத்தத்தை பல ஆயிரம் மொழிகளாக உருமாற்ற முடிந்தது. பாறையின் சிறு சிறு கிறுக்கல்களில் ஆரம்பித்து கடைசியில் அந்த பாறையையே பெரும் சிற்பமாக மாற்ற முடிந்தது. 


அவர்கள் செய்துக் கொண்டிருந்தது சாதாரண விசயம் இல்லையென்று அனைவருக்குமே தெரியும். ஒரு இனம் அது. 


இயற்கைக்கு பயந்து ஓடியவர்கள் சில ஆயிரம் வருடங்களில் தாங்களாய் நின்றனர். அந்த இயற்கையை எதிர்க்க தங்களுக்கு துணிவில்லை என்று உணர்ந்து அந்த இயற்கை தங்களை ஆக்கவும் அழிக்கவும் செய்கிறது என்ற அரை விசயம் புரிந்து கொண்டனர். ஆக்கும் அழிக்கும் ஒன்றை கடவுள் என்று பெயரிட்டனர். மொத்த பிரபஞ்சத்திலும் முதன் முதலாய் கடவுள் என்றவர்களை உணர்ந்து அவர்களை ஏற்றும் கொண்டனர். 


இது நிச்சயம் விந்தையே. ஏனெனில் மொத்த பிரபஞ்சமும் கடவுளை அறிந்தும் புறக்கணித்து விட்டிருந்தது. ஆனால் இவர்கள் அறியாமலேயே கடவுளை கடவுளென ஏற்றுக் கொண்டனர். பல அண்டங்களில் 'கடவுளுக்கு இங்கே வேலை இல்லை' என்று ஒப்பந்தம் கூட எழுதி விட்டனர். அப்படி இருக்கையில் இந்த விசித்திர ஜீவன்கள் கடவுளை குத்துமதிப்பாக அறிந்தது பெரிய விசயம் போல் பேசப்பட்டது.


நன்மையில் தீமை உண்டு என்பது போலதான் இவர்கள் வாழ்க்கையும் ஆனது. 


"கவியும் ஆதியும் சேர்ந்து உருவாக்கிய மனிதர்கள் நிச்சயம் அரை பைத்தியர்களாகதான் இருப்பாங்க.!" ஃபயர் ஆரம்பத்தில் ஒருநாள் சொன்னது அப்படியேதான் நடந்தது.


மனிதர்களுக்கு தேவை இருந்ததோ இல்லையோ ஏதேதோ செய்தார்கள். ஏதோ பைத்தியங்கள் என்று விட்டொழிக்கவும் முடியவில்லை. ஏனெனில் ஒருவர் செய்யும் காரியம் மற்றொருவருக்கு தொல்லையாக மாறி போனது. ஒருவரின் இன்சொல் மற்றொருவருக்கு தீஞ்சொல்லாக மாறிவிட்டது. 


கவி தந்தது அல்ல. அது ஆதி தந்தது. அவளால்தான் வெறுப்பு அவர்களின் மனதில் கலந்து விட்டிருந்தது. அன்போடு கலந்த வெறுப்பு அது. கருவில் கலக்கப்பட்ட மரணத்தை போல. வெறுப்பு என்ற ஒன்று பல பிரச்சனைகளை தன்னோடு அழைத்து வந்திருந்தது. அந்த வெறுப்பில் பிறந்த பல உணர்வுகள் அதன் பிறகான மனிதர்கள் வாழ்வில் விஷமாக மாறி போனது.


நாகரீகம் உருவாகாமலேயே இருந்திருக்கலாம். கடவுள் என்ற வார்த்தை பயன்படுத்த படாமலேயே இருந்திருக்கலாம். அதிலும் பணம் என்ற ஒன்று அதை விடவும் பேராபத்தாய் வந்து சேர்ந்தது. ஓராயிரம் நல்லதிலும் ஒரு குறையை மட்டும் வளர்த்தெடுக்கும் நுட்பம் பெற்றவர்களாக மாறி போனார்கள் மனிதர்கள். 


ஒருவர் வெற்றிப் பெற ஆயிரம் பேர் தோற்க வேண்டி இருந்தது. ஒருவர் சொகுசாய் வாழ ஆயிரம் பேர் உழைக்க வேண்டி இருந்தது. இயற்கைக்கு பயந்து கண்டறிந்த தெய்வம் கூட பணத்தை தயார் செய்யும் தொழிலுக்கு மூலதனமாக மாறி போனது. 


அன்பின் பெயர்தான் சொல்லப்பட்டது. ஆனால் வெறுப்பு அதன் பின்னால் ரகசியமாக குடியிருந்தது.


இது போல சொதப்பலை என்றுமே செய்தது இல்லை என்று தோன்றியது கவிக்கு. ஆனால் அவன் சொல்வதை ஆதி என்றைக்கு காது கொடுத்து கேட்டாள்?


"இது சரியா?" ஒருநாள் பொறுமை மீறி அவளை தேடி சென்று கத்தினான் கவி.


ஆதி புன்னகைத்தாள். 


"நீ அன்பின் தேவதைதானே? உன்னால எப்படி சொந்த குழந்தைகளையே இப்படி பழி வாங்க முடியுது? இவங்க வாழ்வது வாழ்க்கையே இல்ல ஆதி. உனக்கு புரியலையா? ஒருத்தருக்கொருத்தர் வெறுப்போடு இருக்காங்க. என்னோட கோபமும், வீரமும் இல்லன்னா இன்னேரம் இந்த இனமே அழிஞ்சி போயிருக்கும்.!" என்றான். அவன் சொன்னது உண்மைதான். அவனின் கோபமும் ரோசமும் செயல்படுகையில்தான் வெறுப்பின் மறு உருவமான துரோகத்தை மனிதர்களால் வெற்றிக் கொள்ள முடிந்தது‌.


கதையே தலை கீழாக மாறி போய் விட்டது இந்த வெறுப்பின் காரணமாக. கவியின் கோபம் தந்த பிரச்சனைகளை விட ஆதியின் வெறுப்பு தந்த பிரச்சனைகள் பல மடங்காக பெருகி விட்டது.


"அழிஞ்சாலும் அது அவர்களின் காரணமே.!" ஆதி சொன்னது கேட்டு அதிர்ந்தான் கவி.


"என்ன உளறுற?" என்றவனை புன்னகை மாறாமல் பார்த்தாள்.


"ஒரு ஜீவன், ஒரு இனம் வாழ தேவையான அனைத்து உணர்வுகளையும் தந்திருக்கோம். ஒரு நீண்ட நெடும் சங்கிலியாய் சந்ததி வாழ தேவையான வளங்கள் இந்த கிரகத்தில் இருக்கு. அப்புறமும் நீ எப்படி என்னை குறை சொல்கிறாய்? வாழ வேண்டியது அவர்கள். சிந்திக்க வேண்டியது அவர்கள். அவர்கள் ஓரினம். ஒற்றை இனம். அது மறந்து தங்களுக்குள் சண்டை போட்டு ஒருவரையொருவர் அழித்துக் கொண்டிருந்தால் அதற்கு நான் எப்படி காரணமாக முடியும்? தன் இனத்தை அழிப்பது தன்னை அழிப்பது என்ற ஒற்றை அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களாக இவர்கள் மாறி போயிருந்தால் அதற்கு நான் காரணமாக முடியுமா?" எனக் கேட்டு எரிந்து விழுந்தாள்.


கவி முகத்தை தேய்த்தான். அதிக நாட்கள் கூட ஆகி விடவில்லை. வெறும் சில ஆயிரம் ஆண்டுகள். ஆனால் அதற்கே இந்த மனிதர்கள் இப்படி மாறி போய் விட்டார்கள். கதையாக எழுத சொல்லி இருந்தால் கூட அவன் இப்படி ஒரு கோரமான கதையை எழுதி இருக்க மாட்டான். ஆனால் அவனின் தவிப்பை ஆதி அறிந்துக் கொள்ள மறுத்தாள்.


"இப்படியே போனா இந்த இனம் விரைவில் அழிஞ்சிடும்.!" கலங்கிய விழிகளோடு சொன்னான்.


ஆதியின் இதழில் சிறிதும் புன்னகை குறையவில்லை.


"அழியட்டும். நான் புது இனம் உருவாக்குவேன். புது மனித இனம்." என்றாள் வானை பார்த்தபடி.


கவி இடம் வலமாக தலையசைத்தான். "இது மாறி மாறி வட்ட சுழற்சி போல நடக்கும். நீயும் நானும் தந்த உணர்வுகள் அப்படிப்பட்டது. அதன் விளைவு எப்போதும் இதேதான்.!" என்றான் வெறுத்துப் போனவனாக.


இந்த சில ஆயிரம் வருடங்களில் ஆதியிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்து விட்டான் கவி. நெருப்பு தாளில் எழுதப்பட்ட ஒப்பந்தம் இந்த பிரபஞ்சம் அழியும் வரை மாறாது என்று திட்டவட்டமாக சொல்லி விட்டாள் அவள். இருந்த ஒரே வழி. அவளின் மனதை மாற்றுவதுதான். ஆனால் அது சுத்தமாகவே முடியவில்லை அவனால்.


"இவ ஒரு அன்பின் தேவதை என்று எவனாவது சொன்னால் அவனை சூரிய ஆழியில் தள்ளுவேன்.!" என்று பிரபஞ்ச வெளியில் நின்று கத்தினான் கவி. அதை தவிர வேறு என்ன செய்வது என்று அவனுக்கே தெரியவில்லை.


"இத்தனை ஆயிரம் வருசத்துல வசனத்தை கூட மாத்தல இவன்.!" ஃபயர் தனது இருப்பிடத்தில் இருந்தபடி சொன்னாள்.


அவளுக்கு வாழ்க்கை சோர்வாக நகர்வது போலிருந்தது. அதனால் அவள் ஒரு புது விசயத்தை பிரபஞ்ச வெளிகளில் பரப்பி விட்டாள். 


அனைவரையும் விட அதிக மகிழ்ச்சியில் இருந்தது ஹார்ட்தான். அவர் எப்படி ஆசைப்பட்டாரோ அதே போல் மனிதர்கள் இருந்தார்கள். ஒரு சிலரை அவருக்கும் பிடிக்கவில்லைதான். ஆனால் அந்த இனத்தை பிடித்திருந்தது. மழைக்காக வானம் பார்க்கும் அவர்களின் கண்களில் தன் உயிரை கண்டார் அவர். பயிர்களிலும், மாமிசங்களிலும் அவர்கள் வாசம் பிடிக்கையில் அதை தானே நுகர்வது போல உணர்ந்தார். பூமியில் வாழ்ந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் தானே வாழ்வதாக உணர்ந்தார்.


அவர்களின் குறைவான ஆயுள் கூட அவருக்கு பிடித்திருந்தது. ஏனெனில் அப்போதுதான் அவரால் பல வாழ்க்கையை வாழ முடிந்தது. அவர் கண் மூடி திறப்பதற்குள் புது புது மனிதர்கள் பிறந்து வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள்.


உருண்ட பூமி தட்டையானது என்று சொல்லிக் கொண்டிருந்த காலம் போய் மனிதர் வாழும் பூமி விசித்திரமான பைத்தியகாரர்களின் வசிப்பிடம் என்றாகி போனது‌. 


வருடங்கள் சென்றுக் கொண்டிருந்த ஒரு நாளில் நெவத்ஸி கிரகத்தில் ஒரு கூட்டம் நடைப்பெற்றது. அவர்கள் அனைவரும் புது சந்ததிகள். அழிந்த தங்களின் சந்ததிகளை பற்றிய விசயங்களை அறிந்தவர்கள். போன சந்ததி செய்த அதே செயலைதான் இவர்களும் செய்தார்கள். தங்களின் முன்னோர்களை எதிர்த்த ஆதியின் பிள்ளைகளை தேட முயன்றனர். அதற்காகதான் தங்களை போலவே பாதிக்கப்பட்ட மற்ற அண்டத்தின் மக்களையும் அழைத்து பேசினர்.


"ஆதியை பற்றி பிரபஞ்சம் முழுக்க பேசிக் கொள்வதை கேட்டா எனக்கு எரிச்சலா இருக்கு.!" என்றான் ஒருவன்.


"எனக்கும்தான். எத்தனையோ தேவதைகளை கூட நம் காலுக்கு கீழே போட்டு மிதிச்சிட்டோம். ஆனா இவ ஒரு அழிந்த இனத்தின் கடைசி தேவதை. இவளோட வாரிசுங்க நம்ம உலகத்துக்கு எதிரிங்கறதை நம்பவே முடியல.!" என்றான் மற்றொருவன்.


"இவளின் வாரிசுகளை கண்டுபிடித்து அழிச்சா அவங்களுக்கு இந்த பிரபஞ்சத்தின் மிக பெரிய பரிசு கிடைக்கும்ன்னு கூட பேசிக்கிறாங்க. அப்படி என்ன உயர்ந்தவர்கள் இந்த ஆதியின் வாரிசுகள்? அவங்களை நிச்சயம் அழிச்சாகணும்.!" என்றாள் ஒருத்தி.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.

Post a Comment

0 Comments