Advertisement

Responsive Advertisement

தேவதை 61

 மனிதர்களுக்கான எதிரிகள் கூட்ட மாநாடு அது. ஆனால் மனிதர்களே ஒருவருக்கொருவர் எதிரிதான் என்பதை அறியவில்லை அந்த முட்டாள்கள்.


"தனது எதிரிதான் தன் நண்பன். தன் நண்பனேதான் தனது துரோகி. தான் தருவதே தனக்கு திரும்பி வருகிறது. இதை கூட அறியாதவர்கள் என்ன மனிதர்கள்? இதில் எந்த உலகிற்கும் இல்லாத அதிசயமாக இவர்களுக்கு மட்டும் இரட்டை காப்பாளார்கள்.!" என்று சிடுசிடுத்தான் ஆக்சிஜன்.


"பிரச்சனையே இரண்டு பேர் காப்பாளார்களாக இருப்பதாலதான்.." என்ற ஃபயர் சூரிய குளத்தில் குளித்த அதே வெப்பத்தோடு வந்து இருந்தாள். அவளின் மேனியில் இருந்து வழிந்துக் கொண்டிருந்த நெருப்பு குழம்பையும், புகையையும் வெறித்தான் ஆக்சிஜன்.


"இரண்டு பேர் சேர்ந்து எடுக்கும் முடிவு அனைத்து நேரத்திலும் வெற்றியை தராது. அதிலும் இரு வேறு இன தேவதைகள் இவர்கள்.!" ஃபயர் சொன்னதில் உண்மை இருந்தது.


அழகான ஜீவன்களால் நிரம்பி இருக்க வேண்டியது பூமி. ஆனால் இரு தேவ தேவதைகளால் குழப்ப குளத்தில் குளித்து எழுந்த பைத்தியக்காரன் போலாகி விட்டது.


இந்த லட்சணத்தில் ஃபயர் பரப்பி விட்ட வதந்தியின் காரணமாக இந்த அப்பாவி பூமி மக்களை அழிக்க தேடி கொண்டிருந்தார்கள் பல இனத்தவர்கள். (இதை நாம வேற ஒரு கதையில் விரிவாக பார்க்கலாம்.😉)


ஆம் பூமிவாசிகள் அப்பாவிகள்தான். பிரபஞ்சத்தின் பரந்த வெளியோடு ஒப்பிடுகையில் ஒடுக்கப்பட்ட ஒரே இனம் இந்த பூமியின் மனித இனம்தான். ஆனால் அவர்களை ஆராய்ச்சி செய்து பார்த்தால் அவர்கள் ஹார்ட்டை விடவும் புத்தி கழண்டவர்களாக‌ இருப்பர்.


"ஆனா இந்த கதை மனிதர்கள் பற்றியது இல்ல. ஆதி கவி பற்றியது.." என்று ஒலித்தது ஒரு வாசகரின் குரல். (ஓகே.. டிராக்கை வளைக்காம நேரா கொண்டு போகலாம்.)


மனிதர்கள் இப்படி வாழ்ந்துக் கொண்டிருந்த நாளில் கவி தனது வாழ்க்கையே வெறுத்துப் போனதாக நம்பி தனது சத்திய தேவ உலகிற்கே திரும்பி சென்றான்.


ஆதி அவன் சென்றதும் நிம்மதியை உணர்ந்தாள். ஆனால் அவளின் நிம்மதியும் பாழ் பட்டது. அவள் இந்த பூமிக்கு முதல் முதலாக வருகையில் எங்கே தங்கினாளோ இன்று வரையிலும் அங்கேதான் தங்கினாள். அந்த இடம்தான் அவளுக்கு பிடித்திருந்தது. ஆனால் மனிதர்கள் இயற்கையையும் அழிக்க தொடங்கிய காரணத்தால் அவள் வாழ்ந்த இடத்தில் பெய்துக் கொண்டிருந்த பனி மழைகள் அப்படியே மறைந்து காணாமலேயே போய் விட்டன. 


அவள் பனிப் பூக்களை தேடினாள். அவளுக்கு கவியை விடவும் பனிப் பூக்கள்தான் அவசியமாக இருந்தது. அவளின் மனதை சமநிலையில் வைத்துக் கொள்ளவும், அழிந்த தன் இனத்தை பற்றிய நினைவுகள் அவளை சூழாமல் இருக்கவும் அந்த பனிப் பூக்கள்தான் முக்கியமாக இருந்தன. ஆனால் மனிதர்களால் இவளின் ஒற்றை சந்தோசமும் பறி போய் விட்டது. 


வேறு இடம் தேடி சென்றாள். ஆனால் அனைத்து இடங்களிலுமே சீதோஸ்ண நிலை தலைகீழாக மாறிக் கொண்டிருந்தது.


"குரங்கு கையில் தந்த பூமாலை.. ஆதி கவி கையில் தந்த ஆன்மாக்கள்.. மனிதர்கள் கையில் தந்த பூமி.. இது மூனும் கடைசி வரை நல்ல முடிவை தராது.." ஃபயர் கவலையில் புலம்பினாள்.


அது ஓர் அழகிய காலை வேளை. கவி தனது மாளிகையினுள் குப்புற படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். பிரபஞ்சத்தில் அன்பு எக்கச்சக்கமாக பரவி இருந்த காரணத்தால் அவனும் அவனது வீரர்களும் போரை பற்றி நினைக்க தேவையில்லாமல் போய் விட்டது. அதனால் பயிற்சியையும் அவர்கள் கை விட்டு விட்டனர்.


மணம் முடித்த காரணத்தால் கவியால் மற்ற தேவதைகளோடும் தேவர்களோடும் முன்பு போல உறவு கொண்டு உல்லாசமாகவும் இருக்க முடியவில்லை. இப்போதுதான் இந்த இணை பந்தத்தை அடியோடு வெறுத்தான் அவன். 


"அவனுக்கு வேலையே இல்லை. வேறு என்ன செய்வான். மல்லாந்து படுத்தோ இல்லை குப்புற படுத்தோதான் தூங்குவான்.!" ஃபயர் நேரம் காலம் தெரியாமல் கவியை பற்றி விமர்சித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஆதியின் வாசத்தை தனது நாசியில் உணர்ந்தான் கவி. அதிர்ந்து எழுந்து அமர்ந்தான். சுற்றும் முற்றும் பார்த்தவன் அந்த மாளிகையை விட்டு வெளியே ஓடி வந்தான்.


ஆதி இங்கே வந்துள்ளாளா என்று தேடினான். 


"நீங்க நலமா மகாராணி.?" வீரன் ஒருவன் கேள்வி கேட்பது கவியின் காதுகளில் விழுந்தது. ஏதோ ஒரு புது நம்பிக்கை. ஏதோ ஒரு புது எதிர்பார்ப்பு என மாளிகையின் நடு கூடத்திற்கு ஓடி வந்தான் கவி.


ஆதி நின்றிருந்தாள். அவளை கண்டதும் சமைந்து நின்று விட்டான் கவி. வாழ்க்கையே திரும்ப கிடைத்தது போலிருந்தது அவனுக்கு. மனதுக்குள் நிரம்பி வழிந்த உற்சாக ஊற்றை கட்டுப்படுத்த இயலாமல் அவளை நெருங்கினான்.


"ஆதி.." ஆவல் மிகுந்து அழைத்தான்.


நிமிர்ந்தவள் புன்னகைத்தாள். அனைத்தும் பழைய நிலைக்கு திரும்பி விட வேண்டும் என்று ஆசைக் கொண்டான் அவன். அவளை காதலித்த, அவள் தன்னை காதலித்த அந்த பழைய காலத்திற்கே திரும்ப வேண்டும் என்று நினைத்தான்.


"மனிதர்கள் எல்லோரும் அழிஞ்சிட்டாங்க ஏந்தலே.. மறுபடியும் புது மனிதர்களை உருவாக்கணும். அதுக்கு நீங்களும் வேணுமே.. அதனாலதான் கூட்டிப் போக வந்தேன்.!" என்றாள் புன்னகையோடு.


"இதுக்கு பேர்தான் ஓட ஓட அடிக்கிறது.." சொல்லிவிட்டு பிரபஞ்சம் குலுங்கும் அளவிற்கு நாடக தனமாக சிரித்தாள் ஃபயர்.


'இவ புன்னகையில் தீயை வைக்க.. என்னை சாகடிக்கறதை ஒரே திட்டமா வச்சிருப்பா போலிருக்கு. இப்பவேதான் கொஞ்ச வருசமா நிம்மதியா இருந்தேன். மறுபடியும் என்னை இம்சித்து கொல்ல வந்துட்டா.. இவ ஒரு ராட்சசி..' ஆதியை வெறித்தபடி மனதுக்குள் திட்டினான் கவி.


"ஒரு செல்ல ராட்சசின்னு திட்டி இருக்கலாம். கொஞ்ச கூட காதல் உணர்வே இல்லாதவன் இவன்.!" ஆக்சிஜன் தன் பங்கிற்கு குறைப்பட்டுக் கொண்டான். 


"அவ வச்சி செஞ்சிட்டு இருக்கா. அவனுக்கு காதல் உணர்வு இல்லாதது உனக்கு குறையா தெரியுதா?" ஆக்சிஜனை பிரபஞ்ச வெளியில் ஓட விட்டு விரட்டினாள் ஃபயர்.


கடவுள்கள் இருவரும் இப்படி ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் கவியை தனியே அழைத்துக் கொண்டு மாளிகையை விட்டு வெளியே வந்தாள் ஆதி.


பனி மரங்களை கண்டு பொறாமையாக இருந்தது அவளுக்கு. கவி நிம்மதியாக இருப்பது அதை விட பொறாமையாக இருந்தது. 


பனி மரம் ஒன்றின் மீது சாய்ந்து நின்றாள் ஆதி. அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். அவனின் கண்களில் ஆசை மறையவேயில்லை. சிரமப்பட்டு மறைத்துக் கொண்டிருந்தான்.


'ஒரு தேவதைக்கான முழு இலக்கணம் இவள்.!' கவியின் மனம் தானாய் கவி பாடியது.


"இந்த பனிப் போரை நிறுத்திக்கலாம் ஆதி. மனிதர்களை நான் உருவாக்குறேன். அப்புறம் நாம நிம்மதியா வாழலாம்.!" என்றான் ஆவலோடு.


ஆதி பெருமூச்சு விட்டாள்.


"எழுதப்பட்ட விதியை மாத்த வேண்டிய அவசியம் இல்ல. பழைய கணக்கேதான்!" என்றவளை நம்பிக்கை இல்லாமல் பார்த்தவன் "ஆதி.. இதுக்கு ஒரு முடிவே இல்லையா?" சோகமாக கேட்டான்.


ஆதி யோசித்து விட்டு மேலும் கீழுமாக தலையசைத்தாள். "இருக்கு. நீ என்னோடு வரலன்னா.. நான் சொல்படி கேட்கலன்னா என் வெறுப்பை பரப்பி உன் உலகத்தை அழிச்சிடுவேன்.!" என்றாள் பொறுமையாக.


கவி அதிர்ந்தான். இது அவள்தானா என்று குழம்பினான். இந்த வலிகளுக்கு முடிவு என்றைக்கு என கேட்டு மனதுக்குள் கதறினான் அவன்.


அது என்ன முடிவா இருந்தாலும் நாளைக்கு பார்த்துக்கலாம்.. அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே



Post a Comment

0 Comments