பூமியில் இரண்டாம் கட்ட மனிதர்கள் ஓடியாடி திரிந்துக் கொண்டிருந்தார்கள். மலை மீது அமர்ந்த வண்ணம் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான் கவி.
பூமியையே முழுதாய் மாற்றி மீண்டும் தண்ணீர், மரம், விலங்குகளை கொண்டு வந்து மனிதர்களை படைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. பழைய ஒப்பந்தபடியேதான் இந்த முறையும் மனிதர்களை உருவாக்கி இருந்தார்கள். இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இந்த இனமும் அழிந்து போகும் என்று அவனுக்குத் தெரியும்.
ஆதியை தேடினான். பனி மரத்தின் பழம் ஒன்றை பறித்து சுவைத்தபடி அவனின் அருகே வந்து அமர்ந்தாள்.
"எனக்கு இது சுத்தமா பிடிக்கல ஆதி.. என் பிள்ளைகளுக்குன்னு ஒரு கௌரவமும் உரிமையும் இருக்கு.!"
அவன் சொன்னது கேட்டு நக்கலாக சிரித்தாள்.
"அப்படியெல்லாம் கூட இருக்கா என்ன?" என்றாள்.
முறைத்தான் அவன்.
"உனக்கு எப்பவும் தலைக்கனம் அதிகம் கவி. எங்கே இருந்தாலும் நீதான் அங்கே தலைவனா இருக்கணும்ன்னு நினைக்கற.. உன் வாரிசுகளும் அதே மாதிரி இந்த பிரபஞ்சத்தை தொல்லை செய்யணும்ன்னு நினைக்கற.. ஆனா இது நான் இருக்கும் வரை நடக்காது.!" என்றாள் திட்ட வட்டமாக.
கவி தனக்குள் வேறு திட்டம் வைத்திருந்தான். அதை செயல் படுத்தியும் விட்டிருந்தான். ஆனாலும் கூட ஆதியின் திமிர் பேச்சு அவனின் பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தது.
"உன் வெறுப்பை வச்சி என் உலகத்தை அழிச்சிடுவேன்னு மிரட்டின இல்லையா?" என்று கேட்டான்.
ஆதி உணர்ச்சிகள் இல்லாமல் அவனை பார்த்தாள். ஆமென்று தலையசைத்தாள். "அதை உன் சகோதர சகோதரிகள் செஞ்சிருந்தா உங்க உலகம் அன்னைக்கு அழிஞ்சிருக்காது. நானும் ஆயுள் கைதியா உன் கையில் சிக்கியிருக்க மாட்டேன்.!" என்றான்.
ஆதி அவனின் முன் மடங்கி விழுந்தாள். மண்டியிட்ட வண்ணம் அவனை வெறித்தவள் "நாங்க எல்லாம் அன்பின் தேவ தேவதைகள்.. எங்களால எப்படி எதிரிகளை அழிக்க முடியும்?"
"அது உங்க பிரச்சனை ஆதி.. பிரபஞ்சத்தில் மிக முக்கிய பொறுப்பில் உள்ள தேவதைகள் நீங்க. அப்படின்னா உங்க பாதுக்காப்பை நீங்கதான் உறுதி செஞ்சிட்டு இருந்திருக்கணும்.."
"ஆனா நாங்க.."
"அன்பை தவிர வேறு தெரியாத அப்பாவி தேவதைகள்ன்னு சொல்ல போறியா? இது உனக்கே சலிக்கலையா? தன்னை தானே காப்பாத்திக்க அவங்கவங்கதான் கத்துக்கணும். வெறுப்பு உங்களோட அன்பின் பின்னால் இருக்குன்னா அதை நீங்கதான் தேடி பயன்படுத்தி இருக்கணும். நீ சொல்றது எப்படி இருக்குன்னா சேதாரம் ஆகணும்ன்னு காத்திருந்துட்டு, சேதாரம் ஆன பிறகு வாழ்க்கைக்கும் குறை சொல்லிட்டே உட்கார்ந்திருக்க நினைச்சி இருந்த மாதிரி தோணுது.!"
அவனின் குற்றச்சாட்டல் அவளுக்கு கோபத்தைதான் தந்தது.
"ஆனா நாங்க அப்பாவிகள்.!"
"உங்களை யார் அப்பாவிகளா இருக்க சொன்னது? நாங்களா? இந்த பிரபஞ்சமா? எது சொன்னது அப்படின்னு? நான் யார் தெரியுமா? இந்த மொத்த பிரபஞ்சத்துல உள்ள தேவ உலகையும் காலடியில் போட்டு நசுக்கும் அளவுக்கு வீரம் படைச்சவன். ஆனா உன்னால இன்னைக்கு என் வாரிசுகள் இந்த பூமியில் சிறை இருக்காங்க. இந்த மொத்த பிரபஞ்சத்திலும் சலிச்சி எடுத்தாலும் தாழ்ந்த நிலையில் உள்ள உயிரனங்களா இவங்கதான் இருப்பாங்க.!" என்று திட்டினான்.
"உங்க மேல தப்பு.. உங்களுக்கு எப்பவும் பூக்கள் மேலயும், புன்னகை மேலயும்தான் கவனம். நீங்க எதிரிகளை பத்தி நினைச்சிருந்தா கவனமா இருந்திருப்பிங்க. உங்க அலட்சியம் என் வாழ்க்கையையும் சேர்த்து அழிச்சிடுச்சி.!" என்று கத்தினான்.
ஆதி இடம் வலமாக தலையசைத்தாள். "இல்ல எங்களால அது முடியாது.!" சிறு குரலில் முனகினாள்.
"முடியாததும் இயலாததும் உங்களோட முயற்சியின்மை. அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? நான் இல்லனாலும் கூட அதுக்கடுத்த சில ஆயிரம் வருடங்கள்ல வேற ஏதாவது தேவ உலகம் உங்க இனத்தை அழிச்சிருக்கதான் போகுது. தங்களை தாங்களே காப்பாத்திக்க முடியாத ஒரு உயிர் இந்த பிரபஞ்சத்தில் இருப்பதே தண்டம். அந்த மாதிரி உள்ளவை அழிஞ்சாலும் தப்பே இல்ல.!" என்றவன் மக்களை ஒரு நொடி பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.
இந்த முறை மனிதர்களை உருவாக்குகையில் அவர்களுக்கு ஆவல் அளவை அதிகம் தந்திருந்தான் கவி. ஆவலும், பேராசையும் அவர்களை பிரபஞ்ச வெளியில் சுற்றி திரிய வைக்கும் என்று நம்பினான். ஆவலும் பேராசையும் அவர்களின் புது புது கருவிகளுக்கும், புது வாழ்க்கைக்கும் உதவும் என்று நினைத்தான்.
"என் வாரிசுகள் நிச்சயம் சாதிப்பார்கள்.!" என்றபடியே கிளம்பினான்.
அதே வேளையில் ஆதி அழுதுக் கொண்டிருந்தாள். "அன்பாய், அறியாமையாய், சுத்தமான மனதோடு இருந்தா தப்பா?" எனக் கேட்டு அழுதாள்.
"சகோதர சகோதரிகளே என் முன் வாருங்கள். எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.!" என்று விம்மியபடியே கேட்டாள்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
0 Comments