ஆதி சிலை போல அமர்ந்திருந்தாள். அவளின் சகோதரிகளும் சகோதரர்களும் அவளை சுற்றி அமர்ந்திருந்தார்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக சகோதர சகோதரிகளின் நினைவு கூட இல்லை அவளுக்கு. ஆனால் இன்று தேவைப்பட்டது. அதனாலேயே சிரமப்பட்டு தன் நினைவிலிருந்த அவர்களை வெளியே வர வைத்திருந்தாள்.
"ஏன் ஆதி?" அவளின் கைப்பற்றி கேட்டாள் ஒருத்தி.
"நீங்க ஏன் உங்களை பாதுகாத்துக்க முயலல?" உணர்ச்சிகளை துடைத்த குரலில் கேட்டாள்.
அனைவரும் மௌனமாக இருந்தனர் சில நிமிடங்கள்.
"நீங்க உங்களை பாதுகாத்துக்க எந்த முயற்சியும் செய்யல. எனக்கும் நீங்க எதையும் சொல்லி தரல. இடை நிறுத்தாத வாழ்வு நமது. பிரபஞ்சத்தின் அழிவு வரை வாழ போறோம்ன்னா நாம எத்தனை விசயங்களை பாதுகாப்பா உருவாக்கணும்? என் குழந்தைகள் வெறும் நூறு வருசம்தான் வாழுறாங்க. ஆனா ஆயிரம் வகையில் தங்களோட பாதுகாப்பை தேடுறாங்க. ஆனா நீங்க ஒரு பெரிய இனமா மொத்தமாவே அழிஞ்சிட்டிங்க. கவி சொன்னது உண்மைதான். உங்களோடது அலட்சியம். அதுதான் இத்தனைக்கும் காரணம்.!" என்றாள் ஆதி.
எதிரே அமர்ந்திருந்தவர்கள் மறுப்பாக தலையசைத்தனர். "அப்படி இல்ல ஆதி.. அன்பின் தேவதைகள் அதிசயமானவர்கள். அவங்களை எல்லோரும் கொஞ்சுவாங்க. மதிப்பாங்க. நட்சத்திரம் போல பார்ப்பாங்கன்னு நினைச்சோம். ஆனா யாரா இருந்தாலும் அவங்கவங்க பாதுகாப்பை அவங்கவங்கதான் உறுதி செய்யணும்ன்னு தெரியாம போச்சி ஆதி. எப்பவும் யாராவது நம்மை கவனிச்சிப்பாங்கன்னு நினைக்கிறது முட்டாள்தனம்ன்னு அழிஞ்ச பிறகுதான் புரிஞ்சுது. உனக்கு தெரியுமா, நம்மால எதிரிகளை கொல்ல முடியும். உனக்குள் பிறப்பெடுத்த வெறுப்பை வச்சி இல்ல.. நேர்மையான சண்டையிலயே அவங்களோட இதயத்தை நம்மால வெளி எடுத்து கொல்ல முடியும். ஆனா எப்பவும் இன்பம், மகிழ்ச்சி, நிம்மதின்னு இருந்துட்டதாலும், அடுத்து என்ன ஆகும், எதிரிகள் நமக்கு உண்டா, அவங்க நம்மை ஏதாவது செய்வாங்களான்னு யோசிக்காததாலும்தான் இந்த இழப்பு. தப்பு எங்க மேலதான். ஆனா உன் மேல எதுவும் இல்ல ஆதி.!" என்றாள் மற்றொருத்தி.
ஆதியின் விழிகளில் இருந்து கண்ணீர் கொட்டியது.
"வீணா போனவ இப்ப ஏன் அழறான்னு தெரியல.!" நெஞ்சத்தை பிடித்தபடி, படுக்கையில் புரண்டபடியே புலம்பினான் கவி. "எவன்டா அவன் இந்த மணம் செய்ய திட்டம் சொன்னது? மணம் ஒன்னு செஞ்சிட்டு சாகறேன்டா பாவிகளா.." அவனது புலம்பல் சத்தம் கேட்டு அவனது நூலகத்தின் கண்ணாடி கைகளால் தன் காதுகளை பொத்திக் கொண்டது.
"உங்களை நோக்கி வந்த பகையை ஏன் பார்க்காம போனிங்க நீங்க?" என்று அழுதாள் ஆதி.
அவளின் தலையை வருடி தந்தான் செழினி.
"நாங்க எல்லோரும் நாற்திசை பார்க்கல. அதுதான் பெரிய தப்பு ஆதி. இவ்வளவு நல்லவங்களா உள்ள நமக்கு யார் தீங்கு செய்வாங்கன்னு இருந்துட்டோம். ஆனா அதுதான் இன்னைக்கு இவ்வளவு பெரிய அழிவுக்கு காரணமாகிடுச்சி.!" என்ற ஒருவன் அவளின் சிறகை வருடி தந்தான்.
"நல்லவங்க யாரும் இல்ல.!" பூமியின் மனிதர்கள் கண்டு பிடித்திருந்த குளிர்பானத்தை சுவைத்தபடியே சொன்னாள் ஃபயர்.
"ஆமா.. ஆனா இன்னசென்ட் இருக்காங்க.." என்ற அக்வாவை மேலும் கீழும் பார்த்தவள் "அடிக்கடி பூமிக்கு போய் புழங்காதே. அவங்க கத்தி கத்தி லட்சம் மொழியை கண்டுபிடிச்சி வச்சிருக்காங்க.." என்றாள் கடுப்போடு.
"அவங்க அறிவாளிகள்.. சரி விடு நாம இந்த விசயத்துக்கு வருவோம்."
"ஆனாலும் கூட நான் ஒத்துக்க மாட்டேன். இன்னசென்டா இருந்தா தப்பு நடக்க கூடாதா? இன்னசென்ட்ங்கறது பிரபஞ்சத்தின் மறு அவதாரம் ஒன்னும் இல்ல. அது ஒரு அறியாமை.!" ஃபயர் சொன்னது கேட்டு அதிர்ந்துப் போனார் அக்வா.
"எப்படி நீ இப்படி சொல்லலாம்.. இன்னசென்டா இருப்பது அவங்க தப்பு கிடையாது.."
"கண்டிப்பா அவங்க தப்புதான்.. இந்த பிரபஞ்சத்துல யாருக்கு வேணாலும் எது வேணாலும் நடக்கலாம். அதனால இந்த உதவாத இன்னசென்டை தூக்கி எறிஞ்சிட்டு அவங்கவங்க வாழ்க்கைக்கு அவங்கவங்களே பொறுப்பேத்து பத்திரமா இருந்தா போதும்.!" என்ற ஃபயர் எழுந்து நின்றாள்.
"நம்மை விட அதிக குழப்பத்துல இந்த பூமியின் மனிதர்கள் இருக்காங்க. என்ன ஆச்சின்னு தெரியல." என்றாள் குழப்பமாக.
அக்வா ரகசியமாக நகைத்தார். "அது ஒரு விசயம்.." என்று பீடிகை போட்டார்.
"விசயத்தை சொல்லு.!" மேகம் ஒன்றின் மீது அமர்ந்தபடி சொன்னாள் அவள்.
"ஆதியும் கவியும் மனிதர்களை ஒரு வித சித்திரவதைக்கு உள்ளாக்கிட்டாங்க.." என்றவரை குழப்பமாக பார்த்தாள்.
"மனிதர்களுக்கு பேராசை தோன்றவும், முயற்சிகள் செய்யவும் கவி சக்தியை தந்தான். ஆனா ஆதி அதுக்கும் முன்னாடியே சோம்பலையும், அன்பின் மூலம் உடைஞ்சி போகும் மன நிலையையும் தந்துட்டா.. அதனாலதான் இந்த பிரச்சினை.." என்றான்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
0 Comments