Advertisement

Responsive Advertisement

தேவதை 64

 ''பைத்தியக்கார கடவுள்கள் நால்வர். ஒரு கோபக்கார தேவன். ஒரு ரோசக்கார தேவதை. இவர்களின் கை வண்ணத்தில் உருவானவர்கள் பூமியின் மனிதர்கள்.. இவர்களை வச்சி நல்லா விளையாடலாம். ஆன்மாக்கள் இவர்களை பந்தாடலாம். நல்ல சக்திகளும் கெட்ட சக்திகளும் இவர்களை கூறு போட்டு விற்கலாம். யாரும் கேட்க மாட்டார்கள். ஆதிக்கு இவர்கள் மீது பாசம். ஆனால் இவர்களை பத்திரம் என்ற கோட்டைக்குள் பூட்ட நினைத்து அவர்களுக்கான பல சக்திகளை தராமல் போனாள். கவிக்கு இவர்கள் தோற்று விடக் கூடாது என்று ஆசை. அதனால் வெறியையும் கோபத்தையும் இஷ்டத்துக்கு வாரி வழங்கினான். ஆனால் அந்த கோபத்தையும் சரியாய் பயன்படுத்த முடியாதவாறு அன்பு வந்து நாசம் செய்தது. அவர்கள் அன்பு செய்து வாழவும் முடியாதபடி அந்த கோபமே குறுக்கில் புகுந்து அவர்களின் நிம்மதியை அழித்தது. ஆக மொத்தத்தில் புவியின் மனிதர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்.!" இப்படிதான் சில தேவ உலகங்களில் வருங்கால வாரிசுகளுக்கு பாடம் எடுக்கப்பட்டது.


"ஒரு தேவன் எப்படி இருக்க கூடாது என்பதை கவியை பார்த்து நீங்க கத்துக்கணும். ஒரு தேவதை எப்படி இருக்க கூடாது என்பதை ஆதியை பார்த்து கத்துக்கணும். இரண்டு பேரும் செய்த தவறுகளால்தான் இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் குறைவான ஆயுளை உடையவர்களாக மனிதர்கள் இருக்காங்க. நம்ம உலகத்தின் இரண்டு வருடங்கள்தான் அவங்களோட மொத்த ஆயுளே.!" தனது ஆசான் சொன்னது கேட்டு அதிர்ந்துப் போய் வாயை பொத்தினாள் ஒரு குட்டித் தேவதை. 


"அவ்வளவுதானா?" எனக் கேட்டான் தேவ சிறுவன்.


"ஆமாம்.. அங்கே உள்ளவங்களுக்கு நோய் வரும்.!" என்ற ஆசானை குழப்பமாக பார்த்தார்கள் அவர்கள்.


"நோய் என்றால் உடல் நலத்தில் குறைவு உண்டாவது. அவங்க உடம்புல உள்ள உறுப்புகள் செயல் இழக்கும். உடல்நல குறைவு அதிகமாகும்போது அவர்களோட ஆயுள் வரும் முன்பே அவங்க இறந்துப் போவாங்க.."


"பாவம்.." குட்டித் தேவதை ஒருத்தி கண் கலக்கினாள்.


"அவங்களோடது சிக்கலான வாழ்க்கை. நிரந்தரம் இல்லாத வாழ்க்கை. கருவில் உருவான நேரத்திலிருந்து எப்போது வேணாலும் இறந்துப் போவாங்க. அவங்களுக்கும் மற்ற பூமியின் ஜீவராசிகளுக்கும் இடையில் ஒரு வித்தியாசமும் இல்ல. நம்ம மொத்த பிரபஞ்சத்திலும் மானிட உயிர்களை கணக்கெடுக்கும் காலம் வரும்போது கூட பூமியின் மனிதர்களை கணக்கில் எடுக்கறது கிடையாது. ஏனா அவங்க ரொம்பவும் தாழ்நிலை ஜீவன்கள். சிந்திக்க முடிவதால் மட்டுமே ஒருத்தங்க உயர்நிலையை அடைஞ்சிட முடியாது.‌ நீங்க உங்க வாரிசுகளை உருவாக்கும்போது,‌ உங்களுக்கு விதிக்கப்பட்ட கிரகத்தில் உயிர்களை உருவாக்கும்போது ரொம்ப கவனமா இருக்கணும்.!" ஆசான் சொன்னதற்கு அனைவரும் சரியென்று தலையசைத்தனர்.


ஆதி தன் பிள்ளைகளை பார்த்தபடி உயர்ந்திருந்த ஒரு கட்டிடத்தின் உச்சியில் அமர்ந்திருந்தாள். மிகவும் உயரமான கட்டிடம் அது. மலையில் பாதி உயரம் இருந்தது. இதெல்லாம் கவியின் சக்திகளால்தான் என்று அவளுக்குத் தெரியும். குறைவான ஆயுள், செயல்பட வழியே இல்லாத வாழ்க்கையிலேயே இவ்வளவு சாதிப்பவர்கள் தான் பிரச்சனைகளை தராமல் இருந்தால் எவ்வளவு சாதிப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தாள். 


கிழவர்களும் சிறுவர்களும் ஒரே பாதையில் நடந்தார்கள். நோயுற்றவர்களும் செல்வ செழிப்பில் வளர்ந்தவர்களும் ஒரே இடுக்காட்டில் புதைக்கப்பட்டனர். ஆதிக்கு இது சரியென்றுதான் தோன்றியது. முடிவு இருப்பது தெரியும்போதே இவ்வளவு ஆடுபவர்கள் மற்ற உலகத்து மக்களை போல படைத்து விட்டிருந்தால் என்ன செய்வார்கள் என்று நினைத்து சிரித்தாள். 


"இவங்க கவியின் பிள்ளைகள். இவங்களை போல ஆபத்தானவங்க வேறு எங்கேயும் இல்ல.. இவங்களை இந்த கூட்டுக்குள் அடைச்சி வைக்கிறதுதான் சரி.!" என்றவள் அந்த கட்டிடத்தினை விட்டு நகர்ந்தாள்.


செவ்வாய்க்குதான் இவள் தேவதையாகி இருக்க வேண்டும். ஆனால் ஆரம்பிக்கும் போதே கிரகம் மாறிப் போனதால் இந்த கிரகத்தோடு சம்பந்தப்பட்டு விட்டாள் அவள். இந்த கிரகத்தின் ஆதி காப்பாளன் கவிதான். ஆனால் ஆதியின் திடீர் குறுக்கீடால் பிரபஞ்ச ஏட்டில் அனைத்தும் மாற்றி எழுத்தப்பட்டு விட்டது‌. அவன் காப்பாளனாக வர வேண்டிய கிரகத்திற்கே அரை பதவி பெற்றுக் கொள்ள வேண்டியதாகி விட்டது. 


"நாங்களெல்லாம் எப்படி வாழ்ந்திருக்க வேண்டியவங்க.!?" (என் வாய்ஸ்தான்) (இந்த இடத்திற்கான உங்கள் வாய்ஸையும் கமெண்டில் நிரப்பி செல்லவும். பிரபஞ்ச வெளி மீது, நட்சத்திரம், வேற்று கிரகத்து வெளி மீது நமக்கும் உரிமை உள்ளதாக நம்புவோரும் மறக்காம கமெண்டிவிட்டு செல்லவும்)


பால்வீதியில் கடவுள்கள் இருந்த இடத்திற்கு வந்தாள் ஆதி. அடிக்கடி வருவாள். ஆனால் கடவுள்களோடு எதுவும் பேச மாட்டாள். 


"வா ஆதி.." அக்வாதான் வரவேற்றார். அந்த கூட்டத்தில் அவளுக்கு அவரை மட்டும்தான் பிடித்திருந்தது.


அவளிடம் அழகிய சிறகு ஒன்றை தந்தார்.


"இது எதுக்கு?"


"உன்னை அமைதியா வச்சிக்க இது உதவும்.!" என்றுப் புன்னகைத்தார்.


ஆதி சிறகைப் பார்த்து புன்னகைத்தாள்.


"நீங்க ரொம்ப விசித்திரம். உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு.."


அக்வா வெட்கப்பட்டார். "ஆணாகவும் பெண்ணாகவும் இருப்பதன் நன்மை என்ன தெரியுமா? இரு பாலரின் மன நிலையையும் புரிஞ்சிக்கறதுதான்.!" ஆனால் அவர் சொன்னது அவளுக்குதான் புரியவில்லை.


"என்னவோ.." என்றவள் அங்கிருந்து கல் மேடையின் மீது அமர்ந்தாள். அருகில் அமர்ந்தார் அக்வா. தயங்கி தயங்கி அவரின் மடியில் தலை சாய்ந்தாள் ஆதி. புன்னகைத்தபடி அவளின் தலையை வருடி தந்தார் அவர்.


"எனக்கு என்னை பிடிக்கல அக்வா." என்றாள் சில நொடிகளுக்கு பிறகு.


அக்வா சிரித்தபடி மறுப்பாக தலையசைத்தார்.


"ஒரு இனத்தின் கடைசி எச்சமா இருப்பது வலிக்குது‌.." என்றவளின் விழிகளில் நீர் திரண்டது.


அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டார் அக்வா. "ஒரு இனத்தின் கடைசி ஆள்‌‌.. அவர் நல்லவரோ கெட்டவரோ.. ஆனால் அவர் அரிதானவர் ஆகிறார் ஆதி. இப்ப நீயும் அரிதுதான். அன்பும் இங்கே அரிதுதான்‌.."


ஆதி குலுங்கி அழுதாள். "அதுதான் இங்கே பிரச்சனையே அக்வா. அரிதா இருப்பதாலதான் என்னால அதை சரியா நுகர்வு செய்ய முடியல. வினியோகிக்கவும் முடியல. இந்த பிரபஞ்சத்தின் மொத்த உயிர்களுக்கும் தேவையான அன்பையும் வினியோகம் செய்யும்போது நான் சோர்ந்து விழுந்துடுறேன். அதோட பாதிப்பா என் குழந்தைகளுக்கு தேவையான அளவுக்கு அன்பை தர முடியாம போயிடுது. ஒருத்தர்கிட்ட அளவுக்கு அதிகமா போய் சேர்ந்துடுது. சிலருக்கு சுத்தமா கிடைக்க மாட்டேங்குது. அந்த இரண்டு விசயமுமே அவங்களை மனதளவில் காயப்படுத்தி விடுது.. எனக்கு நான் நிலையான மனதோடு இருக்கணும்‌. என் குழந்தைகளுக்கு தேவையான அன்பை சமமா தரணும். அவங்க எல்லோரும் சந்தோசமா இருக்கணும்." என்றாள்.


அவளை கண்டு அக்வாவிற்கு பரிதாபம் தோன்றியது. அவளின் கவலை அவருக்கும் புரிந்தது. அவளுக்கு சமநிலை இல்லாத காரணத்தால் பூமியின் மக்கள் படும் துயரம் என்னவென்று அவருக்கும் தெளிவாக தெரியும்.


"இதுக்கு ஒரே வழிதான் இருக்கு ஆதி.." அக்வா சொன்னதும் சட்டென்று எழுந்து அமர்ந்தாள் அவள்.


"என்ன அக்வா?"


"நீ கவியோடு காதல் செய்யணும்.!" என்றவனை விசித்திரமாக பார்த்தாள்.


"இது ஒன்னுதான் வழி. நீ காதல் கொள்ளணும். உங்களுக்கு வாரிசுகள் உருவாகணும். நீ ஏன் ஒரு இனத்தின் மிச்சமா இருக்கணும். நீ நினைச்சா எத்தனையோ அன்பின் தேவன்களையும் தேவதைகளையும் பெற்றெடுக்க முடியும். அன்பின் தேவ தேவதைகள் அதிகமாகும்போது உனக்கு வேலைகள் இருக்காது. நீ தாராளமா பூமியின் மக்களை மட்டும் கவனிச்சிக்க ஆரம்பிக்கலாம்.." என்றார்.


ஆதி எழுந்து நின்றாள். என்ன பதில் சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை.


"இது ஒன்னுதான் அருமையான வழி ஆதி.. நீ யோசி.." என்றவர் அங்கிருந்து செல்ல நினைத்து நகர்ந்தார். ஆனால் இரண்டடி சென்று விட்டு திரும்பி வந்தார்‌.


"இன்னொரு விசயம். நீ செவ்வாயில்தான் காப்பாளினி ஆகியிருக்கணும். அது உனக்கு தெரியுமில்ல?" எனக் கேட்டார்.


ஆதி ஆமென தலையசைத்தாள்.


"பூமிக்கு கவி மட்டும்தான் காப்பான். நீ கிரகம் மாறி பூமியில் இறங்கி கண்ணீர் விட்டுட்ட. உன் கண்ணீரின் காரணமாதான் கடலும் உயிரும் அங்கே உருவாச்சி. உன் அழுகையால் விதியே மாற்றி எழுதப்பட்டுடுச்சி. நீ இல்லாம இருந்திருந்தா கவியின் இயற்கை சக்தியை கொண்டு தூய பனி மழைகளை மட்டுமே ஆதாரமா வச்சி நீர்நிலையை உருவாக்கி இருப்பான்.." என்றார்.


ஆதி உதட்டை கடித்தாள். "ஆனா அவன் தண்டனை தந்து விரட்டாம இருந்திருந்தா நான் ஏன் கிரகம் மாறி வந்திருக்க போறேன்?" என்றாள் கசப்போடு.


"சரியான கேள்வி.." என்ற அக்வா "என்ன இருந்தாலும் சரி.. அவன் தன் பதவியை பாதியா பங்கு போட்டிருக்கான் உனக்காக.. அதனால நீ உன் மனசை மாத்திக்க முயற்சிக்கலாம். காதல் செய்வது பற்றி யோசிக்கலாம்!" என்றவர் கிளம்பி சென்றார்.


ஆதி யோசனையோடு எழுந்து நின்றாள். பூமிக்கு வந்தாள். கவி இந்த பக்கம் வந்து பல ஆயிரம் வருடங்கள் ஆகி விட்டது. மீண்டும் உயிர் உற்பத்தி நேரத்தில் சென்று அழைத்து வரலாம் என்று இவ்வளவு நாளும் காத்திருந்தாள் ஆதி‌. ஆனால் இப்போது யோசனைகள் வேறு விதமாக இருந்தது.


வேலை பளுவும், பிள்ளைகளின் வேதனையும் அவளை ஒரு சேர தாக்கியது. 


"ஆனா நான் எப்படி அன்பு கொள்வேன்?" என்று புலம்பினாள் காற்றோடு. நிறைய யோசித்தாள்.


கவி உதிர்ந்து கிடந்த பனிப்பூக்களை அள்ளிச் சென்று தூரமாக கொட்டினான்.


"இந்த சத்திய தேவ உலகத்தின் இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தி எனக்கிருந்தா இங்கே பனிப் பூக்கள் எப்போதுமே பெய்ய கூடாதுன்னு சட்டம் போட்டிருப்பேன்!" என்று முனகினான்.


நிறமற்று கிடந்த ஐவிதழ் பனிப் பூக்கள் அது. நறுக்கி ஒட்ட வைத்த கண்ணாடியை போல் இருந்தன. ஒவ்வொரு இதழின் இடையிலும் ஓடிக் கொண்டிருந்தது ஒவ்வொரு வண்ண நரம்புகள். அனைத்தும் அழகாய்தான் இருந்தன. அதன் மணமும் கூட வசீகரமாகதான் இருந்தது. ஆனால் அவனுக்குதான் பிடிக்கவில்லை.


"ஏந்தலே!" ஆதியின் குரல் அவனின் பின் பக்கமிருந்து கேட்டது. உடனே திரும்பதான் நினைத்தான். ஆனால் பயமாக இருந்தது‌‌. இந்த முறை என்ன ஒப்பந்தம் போட போகிறாளோ என்று கவலைக் கொண்டான்.


"உங்ககிட்ட முக்கியமான ஒரு விசயம் பேசணும்.." 


தயங்கி திரும்பினான். "என்ன விசயம்?"


"எனக்கு குழந்தை வேணும்!" 


அவன் சொன்னது கேட்டு அதிர்ந்தான்.


"என்ன?" 


"உங்களுக்கும் எனக்கும் குழந்தை பிறக்கணும்ன்னு நான் ஆசைப்படுறேன்.."


தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டான் கவி. இவளின் திடீர் மாற்றம் அவனுக்கு சந்தேகத்தை தந்தது.‌ "காரணம்!?" 


"என்னால தனியா அன்பை வினியோகிக்க முடியல. ரொம்ப சிரமமா இருக்கு. நமக்கு குழந்தை இருந்தா எனக்கு உதவிகரமா இருக்கும்." என்றாள்‌.


அவளின் சோர்ந்த முகம் கண்டு அருகே வந்தவன் அவளின் கையை பற்றினான். அவளின் வெண்மையான புறங்கையில் முத்தமிட்டான்.


பழைய நினைவுகள் அனைத்தும் கடலலைகள் போல வந்து அடித்தன ஆதிக்கு. அவனுடனான அவளின் காதல் மொழிகளும், அவனின் கொஞ்சல்களும், அவர்களின் நேச பரிமாற்றங்களும் அவளை விஷ காற்றாக தாக்கின.


"இவ்வளவு சிரமப்படணுமா ஆதி? நமக்கு குழந்தைகள் பிறக்கும் வரை நீ இந்த பிரபஞ்சத்துக்கு அன்பை தராம நிறுத்திடு. உனக்கு எந்த பாதிப்பும் வராது." என்றான் அவன்.


"சிலரை எப்பவும் திருத்த முடியாது!" முனகினாள் அவள்.


"நீ  உடல் வருந்த கூடாதுன்னு நான் ஆசைப்பட்டேன். இதுக்கு பேர் முட்டாள்தனம் கிடையாது. புத்திசாலிதனம். தனக்கு போகதான் தானமும் தர்மமும். இது உனக்கு கடைசி வரை புரியாது. ஏனா உன் முட்டாள்தனத்தின் அளவு அப்படி!" என்றான் கசந்த சிரிப்போடு.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே




Post a Comment

0 Comments