Advertisement

Responsive Advertisement

தேவதை 65

 "இதுக்கு பேர்தான் சுயநலம்.!" என்ற ஆதியை கேலியாக பார்த்த கவி "வீரம் ஜெயிக்குமா அன்பு ஜெயிக்குமான்னு தெரியாது. ஆனா இந்த மொத்த பிரபஞ்சத்திலும் எப்போதும் சுயநலம் மட்டும்தான் ஜெயிக்கும். நீ சொல்ற அந்த அன்பு, தியாகம், நிம்மதின்னு எல்லாமே இந்த சுயநலத்தை அடித்தளமா வச்சிதான் இருக்கு. நீ நிம்மதியா இருக்க ஏன் நினைக்கற? ஏனா உனக்கு அது தேவை. தேவைங்கறதே சுயநலம்தான்.!" என்றான்.


ஆதி முகத்தை திருப்பினாள். அவளின் முகத்தையும் அவளின் ரோசத்தையும் கண்டு அவனுக்குதான் பித்து பிடித்தது. 


"நான் என் உலகத்துக்காகதான் உன்னை மணம் செஞ்சேன். இல்லன்னு சொல்லவே மாட்டேன். ஆனா உனக்கான எந்த உரிமையும் நான் மறுத்ததே இல்ல. உன்னை நான் என் முழு மனசோடு நேசிச்சேன். இன்னைக்கு வரைக்கும் நேசிக்கிறேன். நீ என் உலகத்துக்கு பலமா இல்லாம பலவீனமா மாறி போன.. அன்னைக்கு நீ பூமியில் உட்கார்ந்து அழுத, உன் பிள்ளைகளை வேற கிரகத்து மனுசங்க கொன்னுட்டாங்கன்னு.! நான் உனக்காக.. நீ அழக் கூடாதுன்னு புது மனிதர்களை உருவாக்கினேன். ஆனா நீ என்னை கடைசி வரை நம்பல. மதிக்கவும் இல்ல. உன் சகோதரர்களை நான் அழிச்சிட்டேன்னு என்னை பழி வாங்கற நீ. ஆனா இந்த மொத்த பிரபஞ்சத்தோட முக்கிய விதி என்னன்னா 'ஓங்கிய கை எப்போதும் கீழே இருப்பவங்களை துன்புறுத்திக்கிட்டுதான் இருக்கும்' என்பதுதான்." என்றான்.


ஆதிக்கு விழிகள் கலங்கியது. 


"உனக்கு ஏன் என்னை பிடிக்கல தெரியுமா? ஏனா நான் உன்னை விட கை ஓங்கியவன். உனக்கு பலம் இல்ல. பலமுள்ள என்னை பார்த்து பயப்படவும், எனக்கு தலை வணங்கவும் உனக்கு விருப்பம் இல்ல. அதனால என்னை வெறுக்கற நீ. என் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா நீ வெறுப்பதை கண்டு உன்னை சித்திரவதை பண்றதை விளையாட்டு மாதிரி பண்ணிட்டு இருந்திருப்பாங்க. ஆனா நான் உன்னை விரும்பறேன். வித்தியாசத்தை நீதான் புரிஞ்சிக்கணும். எப்பவும் மத்தவங்களை அழ வச்சே பார்த்த ஒருத்தன்கிட்ட வந்து நீ அன்பின் பாடம் எடுக்க கூடாது.!" என்றான் பற்களை அறைத்தபடி.


ஆதியின் கலங்கிய விழிகளில் கோபம் கொஞ்சமாக புறப்பட்டது.


"உனக்கு இருப்பது வெட்டி ரோசம். அதை வச்சி எதுவுமே உருப்படியா செய்ய முடியாது. ஆனா நான் நினைச்சா இப்ப கூட உன்னை ஒன்னும் இல்லாம செய்ய முடியும்‌. சொல்லிக் காட்டுவதா நினைக்காத. ஆனா இன்னைக்கு நீ கொண்ட இந்த கொஞ்ச கோபமும் வெறுப்பும் கூட என்னாலதான் உனக்கு கிடைச்சது. ஒற்றை காதல். அதுதான் உன்னை மாத்தி விட்டது.." என்றான் விரல்களை நீட்டி எச்சரிக்கும் விதமாக.


ஆதி தரை பார்த்தாள். 


"உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும் ஆதி. இப்ப கூட நீ என்ன நினைக்கறன்னா நீ மாறியது போல நான் ஏன் மாறலன்னுதான்.. எனக்கு மாற்றம் தேவை கிடையாது. நீ பரப்பி விட்ட அன்பு தீர்ந்தா நிச்சயம் நான் மத்த உலகத்தின் மீது படையெடுத்துப் போவேன். நான் என் வழியில் சரியாதான் இருக்கேன். வீரம் எப்பவும் களத்துலதான் இருக்கும். அதை பெட்டியில் போட்டு பூட்டி வைக்க முயற்சிக்க கூடாது." என்றான் அவனே.


ஆதி மீண்டும் உடைந்தாள். இவ்வளவு நாளும் அவள் எதிர்பார்த்தது இதைதான். அவனின் மாற்றம். அது அவளுக்கு தேவைப்பட்டது. ஆனால் அவன் கதை தொடங்கிய அதே இடத்தில்தான் இன்னமும் இருந்தான். 


"ஒருத்தரோட குணத்தை மாத்தி நீ என்ன பண்ண போற? நீ ஒரு அன்பின் தேவதை. உன்கிட்ட வந்து நான் கோபத்தை காட்ட சொல்லி கேட்க கூடாது. ஏனா அது முட்டாள்தனம். உன் வேலையை நீ பாரு. என் வேலையை நான் பார்க்கறேன். உனக்கும் எனக்கும் மணமாகிடுச்சி. உதவாத விதியால இரண்டு பேரும் ஒரே கிரகத்துக்கு காப்பாளர்களாகவும் ஆகிட்டோம்‌. சகிச்சிதான் ஆகணும் நீ. நான் உன்னை சகிக்கிறது போல.!" என்றவனை அதிர்ச்சியோடு நிமிர்ந்துப் பார்த்தாள்.


"உன்னோடு இருப்பது எனக்கு சந்தோசம்தான். இல்லன்னு சொல்லல. ஆனா உன்னோடு இருப்பது எனக்கு நெருடல். முரண்பாடு. நான் நானாவே இருக்க முடியறது இல்ல. இப்படியெல்லாம் ஆகும்ன்னு தெரிஞ்சிருந்தா உன் உலகத்து பக்கம் எட்டிக் கூட பார்த்திருக்க மாட்டேன்." என்றான் கடுப்போடு.


அன்பு, கோபம், ரோசம், வீரம், பகை எதுவும் பொருட்டே இல்லை. இருப்பதை சகித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் ஆதி போல மாற்றம் பெற வேண்டும்‌. அதுவும் இல்லாவிட்டால் மாறாத கவியை போல வாழ்ந்துக் காட்ட வேண்டும். இது மட்டும்தான் இங்கே விதி. 


"ஆனா இது எப்படி நியாயம்? மனதால் பலம் பெற்ற ஆதியும், துளியும் மாற்றம் பெறாத கவியும் எப்படி இணைந்து வாழ முடியும்?" ஆக்சிஜன் கவலையோடு கேட்டான்.


"யார் இணைந்து வாழ சொல்றாங்க? இஷ்டம் இருந்தா சகித்து வாழ். இல்லையேல் தனித்து வாழ். சுலபமான விசயம்தானே?" ஃபயர் எதையோ வாயில் வைத்து புகைத்தப்படி சொன்னாள்.


"என்ன இது?" அவள் வாயில் இருந்ததை பிடுங்கி தரையில் எறிந்தார் அக்வா.


"இதுக்கு பேர் கஞ்சா. இதை கடவுள்கள் புகைப்பதாக உங்களோட ஆசை பிள்ளைகளில் சிலர்தான் கதை கட்டிட்டு இருக்காங்க.!" என்றாள்.


அக்வாவும் ஆக்ஸிஜனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். 


"புள்ளைகளை படைச்சோமா.. தொல்லைகளை படைச்சோமா?" கேலியோடு கேட்டான் ஆக்சிஜன்.


"தொல்லைன்னுதான் எனக்குத் தோணுது. நாம ஒரு ரோடு போட்டா இவனுங்க கோடி லட்சம் கோடுகளை போட்டு அவனவன் ஆளுக்கொரு விதமா ஆட்சி செய்றானுங்க. சரி அழியற உலகத்துக்கு வேற என்ன பெருசா தேவைப்பட்டுட போகுதுன்னு நாமளும் அமைதியா இருக்க வேண்டியதா இருக்கு.!" கவலையோடு சொன்னாள் ஃபயர்.


ஆதி சிலை போல நின்றிருந்தாள். அவளின் தோளை பற்றினான் கவி. 


"பரவால்ல ஆதி.. நீ நல்லா யோசி.. நான் சாகும்வரை என் துணை நீ மட்டும்தான். ஆனா நீயும் நானும் ஒன்னா சேர்ந்து வாழணும்ன்னு சட்டம் கிடையாது. உனக்கு நான் தேவை. தேவைப்படும்போது என்னை தேடி வா. என்னால முடிஞ்சதை நான் செய்றேன்." என்றவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு நகர்ந்தான்.


அன்பின் தேவதை மீண்டும் தோற்றாள்.  


"நான் தோற்கவே பிறந்துள்ளேன்.!" அவளின் சிறு குரலில் நின்றான் அவன். திரும்பி வந்தான். ஆதியின் முகத்தை தன் கைகளில் வாரினான்.


அவளின் கலங்கும் விழிகள் அவனின் இதயத்தில் ரணமாக பாய்ந்தது.


"இதுக்கு முன்னாடியும் கூட பல அன்பின் தேவதைகளும், சத்திய தேவர்களும் மணம் புரிஞ்சி இருக்காங்க. ஆனா அவங்க அன்பையும் வீரத்தையும் ஒதுக்கி தள்ளிட்டு காதலை மட்டும் கொண்டாடியதால எந்த தடங்கலும் இல்லாம வாழ்ந்தாங்க.." என்றான்.


ஆதிக்கு புரிந்துதான் இருந்தது. ஆனால் குற்ற உணர்வு!?


"உன் உலகத்துல உள்ளவங்க செத்துப் போனதுக்கும் உன் காதலுக்கும் நடுவுல என்ன சம்பந்தமும் இல்ல ஆதி. அவங்க பலவீனமா இருந்தாங்க. அதனால என் காரணம் கொண்டு செத்தாங்க. உங்களோட பலவீனம் உங்களுக்கு நல்லா தெரியும். உன் சகோதரன் செழினி அதை புரிஞ்சிக்கிட்டு இருந்திருக்கணும். அவன் குறுக்க வராம இருந்திருந்தா இன்னைக்கு உன் உலகம் அழிஞ்சிருக்காது. அதை நீ புரிஞ்சிக்கோ. உன் குற்ற உணர்வு அனாவசியம்.!" என்றான்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே



Post a Comment

0 Comments