Advertisement

Responsive Advertisement

தேவதை 66

 ஆதி சத்திய தேவ உலகத்திலேயே தங்கியிருந்தாள். கவியோடு பேசிக் கொள்ளவில்லை. அவளின் யோசனையே அவளை வேறு வேலைகள் செய்ய விடாமல் வைத்திருந்தது. 


பனி மரம் ஒன்றின் வேரில் அமர்ந்திருந்தாள் அவள். கவி அவளின் உணவுக்காக பல கனிகளை கூடையில் நிரப்பி அனுப்பி வைத்திருந்தான்.‌ அவளுக்கு உண்ண பிடிக்கவில்லை. பூமியில் இருக்க வேண்டும் என்று ஆசைக் கொண்டாள். அதுதான் அவளின் வீடு. ஆனால் அன்று அக்வா சொன்னதை நினைக்கையில் மனம் வேறு விதமாக சிந்தித்தது.


அவள் செவ்வாய் கிரகத்திற்கு சொந்தமானவள் என்றால் பிறகேன் பூமி கிரகத்தில் தன் சொந்தம் தேட வேண்டும் என்று குழம்பினாள். கவியின் அருகாமையைதான் மனம் வேண்டுகிறதோ என்று யோசித்தாள். அதை அவள் ஒத்துக் கொண்டாலும் இல்லையென்றாலும் அவனுடனான விதியின் முடிச்சை அவளால் உணர முடிந்தது. 


அவளின் யோசனையை கலைக்கும் விதமாக அவளின் தோளில் கரம் ஒன்று பதிந்தது. திரும்பிப் பார்த்தாள். அவளின் நினைவுகளில் இருந்து காற்று உருவமாக உருவாகி வந்த செழினி நின்றிருந்தான்.


"சகோதரரே.!" என்றவளின் அருகே வந்து அமர்ந்தான் அவன்.


அவளின் கரத்தோடு தன் கரம் கோர்த்தான்.


"நீ எப்பவும் சந்தோசமா இருக்கணும்.!" என்றான் வானம் பார்த்தபடி. வண்ண நட்சத்திரங்கள் அனைத்தும் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன.


"உன் பூமியில் இந்த மாதிரி இல்ல. மந்தமான நட்சத்திர வெளிச்சம்தான் அங்கே இருக்கு.!" என்றான்.


ஆதி புன்னகையோடு வானம் பார்த்தாள். "ஆமா.. ரொம்ப குட்டியா, புள்ளி மாதிரிதான் அங்கே நட்சத்திரங்கள் தெரியும். எல்லா நட்சத்திரமும் மஞ்சள் புள்ளிதான்.  இது போல பல வண்ணங்கள் அங்கே இருக்காது." என்றாள். 


"இது ரொம்ப தப்புன்னு தெரியலையா ஆதி? அவங்க என்ன பாவம் செஞ்சாங்க? இவ்வளவு அழகான பிரபஞ்சம் காலியா இருங்கு. உன் பிள்ளைகளின் விளையாட்டால் இந்த பிரபஞ்சம் நிரம்பணும். இங்கிருக்கும் எந்த கிரகத்து மனிதர்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு அவங்களுக்கு இருக்கு. அவங்க இந்த பிரபஞ்சத்தை ஆள பிறந்தவங்க. ஒவ்வொரு கிரகத்திலும் அவங்களோட கால் தடம் பதியணும். அவங்களோட இடத்துல நின்னு ஒரு முறையாவது யோசிச்சி இருக்கியா? வானத்தை எப்போதும் ஏக்கமா பார்க்கறாங்க. ஏன் நாம மட்டும் கூண்டுக்குள்ள இருக்கோம்ன்னு கவலைப்படுறாங்க.." என்றான் அவன் சோகமாக.


ஆதி அவனுக்கு ஆமோதித்து தலையசைத்தாள். விழிகள் கலங்கி இருந்தது. 


"ஒரு வேளை.. கவியோட சூழ்ச்சி குணங்கள் அவங்ககிட்ட இல்லாம இருந்திருந்து, எளிதில் உடையும் என்னோட குணமும் அவங்களுக்கு இல்லாம இருந்திருந்தா நிச்சயம் அவங்களை உயிர்காத்து கூண்டுக்குள்ள அடைச்சிருக்க மாட்டேன்." என்றாள் கன்னங்களை துடைத்தபடி.


"நெருப்பும் பனியும் ஒன்னு சேராதுன்னு சொல்வாங்க. ஆனா என் குழந்தைகளோட மனசு அப்படிதான் இருக்கு. அந்த மனசு எந்த அளவுக்கு வெப்பம் தாங்கும்ன்னும் தெரியாது. அந்த மனசு எந்த அளவுக்கு மரத்து போகும்ன்னும் தெரியாது. எந்த நேரத்துல உடையும்ன்னும் தெரியாது. கலவைகள் எல்லா நேரத்திலும் சரியான வடிவமைப்பை தந்துடாது.!" என்றாள் உடைந்த குரலோடு.


"விதி இது. நான் மட்டும் என்ன செய்வேன் சகோதரரே.? அவங்க எப்பவும் எங்க இரண்டு பேரோட ஆசியோடுதான் இருப்பாங்க. சாத்தானும் தேவதையும் ஒன்னா கலந்தது போல அவங்க. போன முறை உருவானவங்களை விட இந்த முறை உருவானவங்களோட பரிமாண வளர்ச்சி முன்னேறி இருக்கு. இப்படியே போனா இன்னும் சில ஆயிரம் வருசம் கழிச்சி நான் அவங்களை உருவாக்கும்போது அவங்க அந்த பூமியெனும் கூண்டை சுலபமா உடைச்சி எறிஞ்சிட்டு பறந்துடுவாங்க. உயிர் காற்று அவங்களுக்கு தேவையில்லாம கூட போயிடும். எதிர்காலத்தை நினைச்சி ரொம்ப பயமா இருக்கு சகோதரரே.!" என்றாள்.


அவளின் கன்னங்களில் உருண்ட கண்ணீரை துடைத்தான் அவன். "இங்கே மாற்றங்கள் தேவை ஆதி. நம்ம உலகம் அழிஞ்சதை நினைச்சி நீ அழற. ஆனா உன்னால இப்ப புது உணர்வு இந்த பிரபஞ்சத்தில் பிரசவித்து இருக்கு. அன்பை போலவே வெறுப்பும் நிறைய விசயத்துக்கு உதவுவதா நிறைய பேர் சொல்றாங்க.. விதியை எல்லா நேரத்திலும் குறை சொல்ல வேண்டாம். நடந்ததை மறந்துடு. கவிக்கு தண்டனை தர முடியும் உன்னால. ஆனா அவனை மாத்த முடியாது. அவனை அழ வைக்க முடியும். வலியை தர முடியும். அவனை அழிக்க கூட முடியும். ஆனா நிச்சயம் அவனை மாத்தி அமைக்க முடியாது. அதுதான் அவன். நீ புரிஞ்சிக்க பாரு.. இது முடிவிலி வாழ்வு. எத்தனை ஆண்டுகள் வேணாலும் ரோசத்தோடு விலகி இரு. ஆனா நீயே சலிச்சிப் போய் மறுபடியும் இவனை தேடுவ. ஏனா உன் ஆயுள் அந்த மாதிரி. இந்த வாழ்க்கை அந்த மாதிரி.. உன் பிள்ளைகளுக்கு சலிக்கால வாழ்க்கை தந்த நீ. ஆனா உன்னால அப்படி வாழ முடியாது. புரிஞ்சிக்க.." என்றான்.


ஆதி தரையைப் பார்த்தாள்.


"ஆனா நான் ஏன் தோற்கணும்?"


"கல்லை காதலிச்சா சிலைதான் கிடைக்கும். பூக்கள் கிடைக்காது." என்றவன் எழுந்து நின்றான்.


"நான் செஞ்ச தப்புதான் இத்தனைக்கும் காரணம். உனக்கு இதுல தோல்வி கிடையாது. வெற்றியும் கிடையாது. ஏனா பிரச்சனை நடக்கும்போது நீ குழந்தை. கவியோட தவறை நான் செஞ்சிருந்தா நீ என்னை உடனே மன்னிச்சி இருப்ப. ஏனா நான் உன் ரத்த பந்தம். அதான் விசயம். யோசி ஆதி.!" என்றவன் காற்றோடு மறைந்துப் போனான்.


ஆதி அதே இடத்தில்தான் அமர்ந்திருந்தாள். யோசித்துக் கொண்டிருந்தாள். 


முடிவெடுக்க திணறி பிரபஞ்ச நூலகத்துக்கு சென்றாள். குறிப்பேடுகளை புரட்டிப் பார்த்தாள்.


மருத்துவர் வனி இவளை தேடி வந்தார். "உன் அன்பு பலவீனமாகும்போது இந்த பிரபஞ்சத்துல போர் ஏற்படும் ஆதி. அதை பலவீனமாக்காம பார்த்துக்க.!" என்று எச்சரித்து விட்டுச் சென்றார்.


கவி தினமும் அவளுக்கு பனிப் பூக்களால் செய்த மாலைகளை அனுப்பி வைத்தான். அவளின் மனதை தன் வசமாக்க எவ்வளவோ முயன்றான் அவன்.


"காதல் இல்ல.. எனக்கு வாரிசு தேவை. அதுக்காகதான் உன்னுடனான மண பந்தத்தில் மறுபடியும் இணையுறேன்.!" என்றாள் ஒருநாள்.


கவி சரியென்று தலையசைத்தான். ஆனால் அவனோடு இருக்கையில் காதல் இல்லை என்று அவளால் தைரியமாக சொல்ல முடியவில்லை. அவனின் மீது கொண்ட ஈர்ப்பு குறைய என்ன வழி என்று யோசித்துப் பார்த்தாள். எதுவும் கிடைக்கவில்லை. 


நாட்கள் நகர்ந்தது. பிரபஞ்ச கால நேர கணக்கில் வருடத்திற்கு ஒரு முறை தன் அன்பை பிரபஞ்ச உயிர்களுக்கு ஆதி வினியோகிக்கும்படி ஆயிற்று. அன்பை வினியோகித்த அடுத்த நொடியில் உடல் சோர்ந்தாள். அதுவே தோற்றுப் போவது போலதான் இருந்தது‌.


"நீ பூமிக்கு போ.!" என்று ஒருமுறை சொன்னார் வனி. ஆதி யோசித்துவிட்டு பூமிக்கு வந்தாள். அவளின் சோர்விற்கு தெம்பென காற்றில் கலந்து இருந்தது அன்பு. 


அப்போதுதான் அவளுக்கு வனி சொன்னதன் அர்த்தம் புரிந்தது. அவள் தன் பணி செய்து சோர்வுறும் ஒவ்வொரு முறையும் பூமியில் கலந்து இருந்த அன்பை தனக்கு உயிர் மூச்சாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்தாள்.


சில ஆண்டுகளுக்கு பிறகு ஆதியின் தேவை என்ன என்பது கவிக்கும் புரிந்துப் போனது. 


"நீ பூமியிலேயே இருக்க ஆசைப்பட்டால் இரு.. நானும் உடன் இருக்கிறேன்.!" என்றான்.


"இந்த பூமியின் காத்துல முப்பது சதவீத அன்புதான் கலந்திருக்கு. நீ இவங்களை இன்னும் கெடுத்து வச்சிடாத.. இங்கிருந்து போ.!" என்று விரட்டினாள் அவள்.


"ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுச்சாம்.!" ஆதியும் கவியும் நின்றுப் பேசிக் கொண்டிருந்த மேக படுக்கையின் கீழ் இருவர் பேசிக் கொண்டு சென்றனர்.


"இதேதான் உனக்கும்.!" என்று பற்களை கடித்தபடி சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான் கவி.


வருடங்கள் கழிந்தது. ஆதி பிரபஞ்சம் செல்வதும், பணி முடிப்பதும், மீண்டும் திரும்பி வந்து பூமியில் மக்களோடு மக்களாக கலந்து இருப்பதுவுமாக நாட்கள் நகர்ந்தது.


ஆனால் அதற்கும் தடை வந்தது ஒருநாள்.


"என்னோடு வா.!" என்று ஆதியை இழுத்துச் சென்றான் கவி. பிரபஞ்சத்தில் சூரிய குடும்பத்திலேயே ஒரு சிறிய பிரபஞ்ச வெளி மாளிகையை உருவாக்கி இருந்தான் அவன். அழகிய மாளிகை அது. நட்சத்திரங்கள் தூரத்தில் ஒளி வீசிக் கொண்டிருந்தன.


ஆதி ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தாள்.


"இது உனக்காக.‌!" என்றான்.


ஆதி பூமியை திரும்பிப் பார்த்தாள். 


"நான் என் இயல்பை மாத்திக்க முடியாது ஆதி. ஆனா என் காதலுக்காக உனக்கு உதவி செய்ய முடியும். நீ உன் அன்பை முழுசா பரப்பணும். நான் போருக்கு செல்லாம இருக்கணும். அது இரண்டுமே நீயும் நானும் ஒன்னா இருந்தா மட்டும்தான் நடக்கும்." என்றான்.


ஆதி மௌனமாக தலை குனிந்தாள். அவன் சொன்னது புரிந்துதான் இருந்தது. மனம் இளக வேண்டும் என்பதை விட வேறு வழி கிடையாது என்பதுதான் அவளை அதிகம் வருத்தத்தில் ஆழ்த்தியது.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே




Post a Comment

0 Comments