ஆதி ரத்தம் சொட்டும் தன் வாளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் தலை முதல் கால் வரை ரத்தத்தால் நனைந்திருந்தது.
"ஆதி உன் பின்னாடி பார்.." கவியின் குரலில் அவசரமாக திரும்பினாள். அவளை விட்டு வெகு தூரத்தில் நின்றிருந்த ஒருவனின் பல நூறு கரங்களில் ஒன்று பாம்பு போல நீண்டு வந்து அவளை வளைக்க முயற்சித்தது. பற்களை கடித்தபடி அந்த கரத்தை வெட்டினாள் ஆதி. மீதி கரங்களும் அவளை நோக்கி பாய்ந்தது. ஆதி இடம் வலமாக தலையசைத்தாள். போர் மிகவும் கடினம் என்பது இப்போது அவளுக்கு தெளிவாக தெரிந்தது. போரின் தேவையும் புரிந்தது.
பிரபஞ்சத்தின் வடக்கிழக்கு பகுதி நிழலில் வாழும் ராட்சத தேவர்கள் இவர்கள். பூமி கிரக மனிதர்களை விட அதிக சக்திகளோடும், அண்டங்களின் சக்திகளை கட்டுப்படுத்தும் அளவிற்கான சக்திகளை உடைய கடவுள்களை விடவும் சக்தி குறைந்த அனைவருமே தேவர்களாகதான் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.
பிரபஞ்சம் உருவாகிய பல லட்சம் கோடி ஆண்டுகளாக அவர்கள் தங்களின் நிழல் பகுதியை விட்டு வெளி வர கூட இல்லை. ஆனால் இப்போது வந்து பல தேவ உலகங்களையும், மனித கிரகங்களையும் அழிக்க முயன்றுக் கொண்டிருந்தார்கள்.
சிந்திக்கும் திறன் இருந்தது அவர்களுக்கு. ஆனால் அனைவரையும் அழிக்க வேண்டும் என்ற ஒரு சிந்தனை மட்டும்தான் அவர்களிடம் இருந்தது.
ஆரம்பத்தில் அவர்களை எதிர்க்க கிளம்பிய கவியையும் அவனது படையையும் தடுத்து நிறுத்தினாள் ஆதி.
"பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னாடி நீங்க செஞ்சதை அவங்க இப்ப செய்றாங்க.. அவங்களை அழிக்கறது தப்பு.." என்றாள். அவளே அவர்களின் உலகம் சென்று தன் அன்பை பரப்பினாள்.
ஆனால் அங்கே அன்பு துளி கூட வேலை செய்யவில்லை. அவர்கள் வெறுப்பையெல்லாம் கடந்த ஓர் அழிவின் சூன்யத்திற்கு சொந்தக்காரர்களாக இருந்தனர். இந்தப் பிரபஞ்சம் ஒரு பக்கம் அழிந்துக் கொண்டு வருவதற்கு காரணமே அவர்களின் சக்திகள்தான் என்பது அதன் பிறகே பிரபஞ்சத்தின் மற்ற உயிரனங்களுக்கு தெரிந்தன.
அவர்களை பொறுத்தவரை அனைவரும் எதிரி. அழிவின் சாராம்சம் அவர்கள். அவர்களை பொறுத்தவரை ஆதியும் அன்பும் அவர்களின் சூன்யத்து வெறுமையை போல அர்த்தமற்றவர்கள்.
புதிதாய் தங்களை தேடி வந்த ஆதியை அழிக்க பார்த்தார்கள் அவர்கள். ஆதி அவர்களிடமிருந்து தப்பி வந்ததே பெரும் பாக்கியமாக இருந்தது.
ராட்சத தேவர்களுக்கு எதிராக மற்ற அனைத்து உலகமும் ஒன்றிணைந்தது. அதே வேளையில் ராட்சத தேவர்களும் தங்களின் இருளில் இருந்து வெளியே வந்தனர்.
அன்று ஆரம்பித்தது இந்த போர். அன்பின் தேவதையான ஆதியும் கூட தன் அன்பு அனைத்து இடத்திலும் வேலை செய்யாது என்று புரிந்துக் கொண்டாள். கத்தியை கையில் எடுத்து போர் புரிந்தாள்.
மனம் உள்ளவர்களிடம்தான் அன்பு வேலை செய்தது. ஆனால் அந்த ராட்சத தேவர்களுக்கு மனம் என்ற ஒன்றே இல்லை. கவியை போல அவர்களின் மனம் இளகவில்லை.
சத்திய தேவ உலகை விட்டு பல ஒளியாண்டு தூரத்தில் இருந்த ஒரு பெரிய பாறை வடிவ கிரகத்தில் போர் நடைப்பெற்றது. ராட்சத தேவர்களை மேற்கொண்டு முன்னேற விடாமல் போர் புரிந்துக் கொண்டிருந்தார்கள்.
ஆதி தன் முன் நின்றிருந்த ராட்சதனின் அனைத்து கரங்களையும் வெட்டி சலித்துப் போனாள். கை ஓய்ந்து அவள் தரையில் விழ இருந்த சமயத்தில் அவளருகே ஓடி வந்தான் கவி. எதிரே இருந்தவனை நோக்கி தன் கத்தியை காட்டினான். கத்தியிலிருந்து வெளியேறிய சிவப்பு கதிர் மட்டும் அவன் அதே இடத்தில் மடங்கி விழுந்து இறந்துப் போனான்.
"ஆதி.. உனக்கு ஒன்னும் இல்லையே.!" கவலையோடு தன் இணையிடம் விசாரித்தான்.
"ம்.. உன் போல வீரம் எனக்கு எப்ப கிடைக்கும்?" எனக் கேட்டாள்.
ரகசியமாக சிரித்தவன் அவளின் காதோரம் குனிந்தான்.
"கத்து தர நான் தயார்.. ஆனா கத்துக்க நீ தயாரா?" எனக் கேட்டான்.
ஆதி அவனை சந்தேகமாக பார்த்தாள். அவனை தூர தள்ளினாள்.
"இதே மாதிரி இவன் எப்ப கேட்பான்!" ஃபயரின் கேள்வியில் குழப்பமாக அவளை பார்த்தான் ஆக்சிஜன்.
"உன் போல அன்பு எனக்கு எப்ப கிடைக்கும்ன்னு இவன் எப்ப கேட்பான்?" ஃபயரின் கேள்வியை கண்டு தன் கண்களை மூடினார் அக்வா.
"அடுத்து வரும் ஏதாவது ஒரு கதையில் இருக்கலாம்.." என்றார்.
இவர்கள் பிரபஞ்சத்தின் தூர வெளியில் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் போர் நடந்துக் கொண்டிருந்த இடத்தில் பரபரப்போடு ஓடியது ஒரு கூட்டம்.
கவியின் முன்னால் வந்து நின்ற வீரன் ஒருவன் "ஏந்தலே.! இளவரசரை காணவில்லை.." என்றான்.
ஆதி அதிர்ச்சியோடு சுற்றும் முற்றும் பார்த்தாள். இறந்து கிடந்த ராட்சதர்களை தவிர வேறு யாரும் அங்கே இருக்கவில்லை.
"அந்த ராட்சதர்கள்தான் தூங்கி போனாங்க.." பலவீனமாக அடிப்பட்ட நிலையில் ஒரு வீராங்கனை வந்து கவியின் முன்னால் மண்டியிட்டபடி சொன்னாள்.
கவி தன் கத்தியை இறுக்கமாக பற்றினான். ஆதியின் விழிகளில் இருந்து கண்ணீர் புறப்பட்டது.
அடுத்த பாகம்..??? நேரம் இருக்கையில் தட்டச்சு செய்து பதிவேற்றப்படும். நன்றிகளுடன் கிரேஸி ரைட்டர்..
0 Comments