Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 22

 சங்கவி தனது அறைக்குள் குறுங்கிப் படுத்திருந்தாள்.

"சங்கவி.." ஆதீரனின் குரலில் எழுந்து அமர்ந்தாள். அவன் பக்கம் திரும்பி பார்த்தாள். முகம் வாடி, சிவந்த கண்களோடு ஜீவன் செத்தவனாக காணப்பட்டான். இரக்கம் தோன்றும் போல இருந்தது. கோபம் வர வேண்டும் என்று தன்னிடமே கெஞ்சிக் கொண்டாள்.

"சாப்பிட வா.."

"எனக்கு பசிக்கல.." என்றவள்  சுவரினை வெறித்தாள்.

அவளருகே வந்து ஒற்றை கால் மண்டியிட்டு அமர்ந்தான். அவளது கையை பற்றினான். தன் கையை பின்னால் இழுத்தாள். பிடியை விட்டு விட்டான். அவனது மாற்றம் அவளுக்கு சிறு நிம்மதியை தந்தது.

"ப்ளீஸ் சங்கவி சாப்பிட வா.."

அவனின் கெஞ்சலுக்கு பிறகு அமைதியாய் அமர்ந்திருக்க முடியவில்லை. எழுந்து நின்றாள். தள்ளாடியபடியே வெளியே நடந்தாள். அவள் தடுமாறி நடப்பதை பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு இன்னும் அதிகமாக குறுகுறுத்தது.

டைனிங் ஹால் நாற்காலிகளில் வருணும் ஆதீரனும் வந்து அமர்ந்தனர். சங்கவி வழக்கமான அதே யோசனையில் இருவருக்கும் உணவினை பரிமாறினாள்.

"உட்காரு பாப்பா.." பவளம் சங்கவியை நாற்காலி ஒன்றில் அமர வைத்தாள். அதன் பிறகே தனது நிலை மாறிவிட்டது என்ற விசயம் அவளுக்கு புரிந்தது.

தன் தட்டில் பரிமாறப்பட்ட உணவை வெறித்தாள். இவ்வளவு நாளும் பழைய சாதமோ இல்லையேல் மீந்துபோன சாதமோ மட்டும்தான் அவளுக்கு பரிமாறப்படும். ஒருநாள் புது உணவை சுட சுட பரிமாறியதற்காக பவளத்திற்க்கு ஒரு அறையை தந்திருந்தாள் காந்திமதி. பழைய நினைவு வந்து நெஞ்சை அடைத்தது. நேற்றைய நாளின் காயமும் கூட பச்சை ரணமாகதான் இருந்தது.

அக்காவை நினைக்கையில் சோறு கூட இறங்கவில்லை. உணவை விரல்களால் அளந்துக் கொண்டிருந்த வேளையில் அங்கு வந்தாள் காந்திமதி.

சங்கவியை முறைத்தபடியே தனது இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

பவளம் காந்திமதிக்கும் உணவைப் பரிமாறினாள்.

காந்திமதி எப்படியெல்லாம் தன் அக்காவை மிரட்டி விரட்டியிருப்பாள் என்று யோசித்து பார்த்த சங்கவிக்கு மனம் நெருப்பாக எரிந்தது. காந்திமதியை இப்போதே கொன்றுவிட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அதை செயல்படுத்த மனதிலும் தெம்பில்லை. உடலில் தெம்பில்லை.

அம்மாவின் அருகே அமர்ந்திருக்க ஆதீரனுக்கும் மனமில்லை.

"நிஜமா நீ இந்த வீட்டை விட்டு போகப் போறியா சங்கவி.?" வருண் சந்தேகத்தோடு கேட்டான்.

உணவுத் தட்டிலிருந்து பார்வையை திருப்பியவள் ஆமாமென்று தலையை மட்டும் அசைத்தாள். 

அவள் சொன்னதைக் கேட்டு காந்திமதியின் மனதுக்கு நிம்மதி பரவியது. அந்த நிம்மதி முகத்திலும் பளிச்சென்று தெரிந்தது.

காந்திமதியின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்த சங்கவிக்கு என்னவோ போலிருந்தது. தோற்பது போலிருந்தது. இயலாமையின் காரணமாக மனதுக்குள் ரத்தக்கண்ணீர் வடிவது போலிருந்தது.

'நிஜமா போகப் போறியா சங்கவி.? உன் அக்காவை உன்கிட்ட இருந்து பிரிச்சி விரட்டி அடிச்சி கொன்னவ இந்த வீட்டுல நிம்மதியாக இருக்க போறா.. காதலி ஓடிப் போனான்னு அவளோட மொத்த குடும்பத்தையும் சிதைச்சவன் இப்போது தப்பு செஞ்சது அம்மான்னு தெரிஞ்சவுடனே அமைதியாகிட்டான். இவங்க இரண்டு பேருக்கும் தண்டனை கூட தராம, இவங்களை சுதந்திரமாக விட்டுட்டு போகப் போறியா சங்கவி.?' அவளுக்குள் ஒரு குரல் கேட்டது.

சங்கவி வீட்டை விட்டுப் போகிறேன் என்று மறுபடியும் உறுதியாய் சொன்ன பிறகு ஆதீரனுக்கும் முன்பை விட அதிகமாக முகம் வாடிவிட்டது.

காரணகாரியங்கள் தெரியாவிட்டாலும் கூட சங்கவியை விலக்கி அனுப்ப மனமில்லை அவனுக்கு. ஆனால் தான் சொன்னால் அவள் கேட்க மாட்டாள் என்று அவனுக்குத் தெளிவாக தெரியும். ஏற்கனவே அவளை தன்னால் முடிந்த அளவுக்கு சிரமப்படுத்தியாகி விட்டது. இனி மேலாவது அவள் நிம்மதியாக இருக்கட்டும் என்று நினைத்தான்.

"வேற என்ன செய்யட்டும்.? ஏன் அக்காவை பழிவாங்கதானே இவர் என்னை கல்யாணம் செய்து வந்தாரு.? இனி எனக்கு என்ன இங்கே வேலை.? நானே ஒரு அனாதை.. நான் என் வீட்டுக்கு போய்தானே ஆகணும்.?" என்றாள் கரகரத்த குரலில்.

அவள் சொன்னதை கேட்டு ஆதீரனுக்கு வருத்தமாக இருந்தது.

"என் அக்கா இருந்திருந்தா இப்படி அனாதையா நின்னிருக்க மாட்டேனே.! அந்த வீட்டுக்கு போன பிறகு வெறும் சுவரை பார்த்தபடி எப்படி நான் வாழப் போறேனோ.? என்‌ அக்கா ஞாபகத்திலும் என் அம்மா ஞாபகத்திலும் சீக்கிரம் நான் செத்துடுவேன்னு தோணுது.." என்றாள் தலை குனிந்தபடி.

"நீ இங்கேயே கூட இருக்கலாமே சங்கவி.." வருண் ஆதங்கமாக கேட்டான்.

"என்ன உரிமையில் இருக்கிறது.? இவங்க அம்மா மறுபடியும் என் கால்ல சூடு வைக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்.?‌என் அக்காவை போலவே என்னையும் கொல்ல மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்.?" என்றாள் விம்மலோடு.

அவளின் கண்ணீரை கண்ட பிறகு ஆதீரனால் அமைதியாக அமர்ந்திருக்க முடியவில்லை

எழுந்து வந்தான். அவளின் தலையை தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான். 

காந்திமதிக்கு தன் கண்களை சுட்டுக்கொள்ள வேண்டும் போல இருந்தது தன் மகன் செய்யும் செயலை பார்க்கையில்.

"இப்படி சொல்லாதே சங்கவி. நான் ஏற்கனவே ரொம்ப பீல் பண்ணிட்டு இருக்கேன். உன்னை போலவேதான் நானும் ஒரு அனாதை. குந்தவியையும் என் வாழ்க்கையையும் ஒருசேர தொலைச்சிட்டு அனாதையாய் நிற்கிறேன். தயவுசெய்து இங்கிருந்து போகாதே ப்ளீஸ். நான் உன்னை எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன். நீ அங்கே தனியா கஷ்டப்பட வேண்டாம். அட்லீஸ்ட் உன் அப்பா குணமாகி வீடு திரும்பும் வரையிலாவது இங்கேயே இரு.." என்றான் கெஞ்சல் குரலில்.

சங்கவி தன் விழிகளை துடைத்துக் கொண்டு "யோசிச்சி பார்க்கிறேன்.." என்றாள்.

உணவை உண்டுவிட்டு மாத்திரைகளை போட்டுக் கொண்டவள் தனது அறையின் வெறும் தரையில் அமர்ந்தாள்.

அவள் உறங்கும் முன் அவளைத் தேடி வந்த ஆதீரன், "நீ வேற ரூம்ல தூங்கிக்க சங்கவி.." என்றான்.

சங்கவி தயக்கத்தோடு எழுந்து நின்றாள்.

தடுமாறி நடந்தவளை தூக்கிக் கொண்டவன் மாடிப்படிகளில் ஏறினான். நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாய் காத்திருந்தாள் சங்கவி. தனது அறைக்குப் பக்கத்தில் இருந்த அறையில் அவளை இறக்கி விட்டான் ஆதீரன்.

"இனி நீ இங்கேயே தங்கிக்க.."

சரியென்று தலை அசைத்தவள் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.

அவளின் கையைப் பற்றினான் ஆதீரன். குழப்பத்தோடு நிமிர்ந்தாள். அவளின் முன் சட்டென்று மண்டியிட்டு விட்டான் அவன்.

"தயவுசெஞ்சி என்னை மன்னிச்சிடு சங்கவி.." அவளின் கைகளை நெற்றியில் மோதியபடி கெஞ்சினான்.

"அவ என் நெஞ்சு முழுக்க பரவி இருந்தா.. என் மூளை முழுக்க அவ மட்டும்தான் இருந்தா.. அவ இல்லாம போனதும் என் புத்தி சரியா வேலை செய்யல. அதனாலதான் இப்படி தப்பு பண்ணிட்டேன். தயவு செஞ்சி நீயாவது என்னை மன்னிச்சிடு சங்கவி.." என்றவன் அவளின் கைகளை விட்டுவிட்டு கையெடுத்துக் கும்பிட்டான். 

உறைந்து நின்றாள் சங்கவி. அவனிடமிருந்து இப்படி ஒரு செயலை அவள் எதிர்பார்க்கவில்லை. கை கூப்பியபடி இருந்தவன் அவளின் கால் நோக்கி விழுந்தான். பதறியபடி இரண்டடி பின்னால் நகர்ந்தாள் சங்கவி.

தரையில் தலை வணங்கி இருந்தான். உடம்பு அதிர்ந்தது.

'ஏன்டா இப்படி செய்ற.?' என்று மனதுக்குள் புலம்பினாள். மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.

குலுங்கி அழுதுக் கொண்டிருந்தவனை காண சகிக்காமல் தரையில் மண்டியிட்டாள்.

"பரவால்ல விடுங்க. அழாதிங்க.." அவளையும் மீறி வந்தது வார்த்தைகள்.

"குந்தவி இல்லாம இனி நான் எப்படி வாழப்போறேன்.?" என்று அழுதபடி கேட்டான்.

சலிப்பாக இருந்தது சங்கவிக்கு. தயக்கத்தோடு அவனை அணைத்துக் கொண்டாள். அவனின் முதுகை வருடித் தந்தாள்.

"ப்ளீஸ் அழாதிங்க. உங்க அம்மா செஞ்ச தப்புக்கு நீங்க என்ன செய்ய முடியும்.?" என கேட்டாள்.

ஆனால் மனசாட்சியோ அவளை செருப்பால் அடித்தது. 'உன் அக்கா சாவுக்கு இவன்தான் காரணம்.. வெட்கம் கெட்டு திரியாதே..' என்று திட்டியது.

மனசாட்சியை ஓரம் கட்டிவிட்டு அவனுக்கு சமாதானம் சொன்னாள்.

சமாதானம் சொன்னவளை அணைத்து கொண்டவன் அவளின் கழுத்தில் தன் முகத்தை புதைத்தான்.

கூச்சமாக இருந்தது சங்கவிக்கு. கழுத்தை கண்ணீரைக் கண்ட பிறகும் அவனை விலக்கி தள்ள மனம் வரவில்லை.

புலம்பிக் கொண்டே இருந்தான். அழுதுகொண்டே இருந்தான். அவளும் தன்னால் முடிந்த சிறுசிறு சமாதான வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அழுத பிறகே அந்த அறையை விட்டு வெளியே போனான் ‌ஆதீரன்.

பெருமூச்சு விட்டபடி வந்து கட்டிலில் அமர்ந்தாள் சங்கவி.

ஆதீரனின் அறையில் அவனுக்காக காத்திருந்தான் வருண். சகோதரனின் முகம் பார்த்தவன் அவனின் அழுது வீங்கிய முகம் கண்டு மனம் மனம் வாடினான்.

"பீல் பண்ணாத ஆதி. நடந்ததை மாத்தவே முடியாது. தயவு செஞ்சி இதுக்கு மேலாவது புத்திசாலியா இரு.." என்று அறிவுரை கூறினான்.

அதே நேரத்தில் சங்கவியின் அறைக்குள் வந்தாள் காந்திமதி. சங்கவியை இளக்காரமாக பார்த்தபடி முன்னால் வந்து நின்றாள். கட்டிலை விட்டு எழவே இல்லை சங்கவி. வந்து நின்றவளை எரிச்சல் பார்வை பார்த்தாள்.

"ஏன்டி மானம் கெட்டவளே! உன் அக்கா‌ சாவுக்கு நானும் என் மகனும்தான் காரணம். அப்படி இருந்தும் இந்த வீட்டிலேயே டேரா போட்டிருக்க.. உனக்கு வெட்கம் மானமே இல்லையாடி?"

"அம்மா.." சத்தமாக கத்தியபடி தரையில் விழுந்தாள் சங்கவி. 

காந்திமதி குழப்பத்தோடு சங்கவியை பார்த்தாள். சங்கவியின் அலறல் குரல் கேட்டு வருணும் ஆதீரனும் வேகமாக ஓடி வந்தனர்.

விழுந்து கிடந்த சங்கவியை தூக்கி நிறுத்தினான் வருண். "என்ன ஆச்சி.?" விசாரித்தான்.

"என் வீட்டுல ஏன்டி தங்குறன்னு கேட்டு என்னை அடிச்சிட்டாங்க.." என்று தேம்பியவள் கண்களைக் கசக்கினாள்.

ஆதீரனுக்கு கோபமாக வந்தது. 

அருகே வந்து சங்கவியை தன்னோடு அணைத்துக் கொண்டவன் அம்மாவின் புறமாக திரும்பினான்.

"இவ இந்த வீட்டுலதான் இருப்பா.. இவ என் பொண்டாட்டி. இவ இங்கே இருக்கறது உங்களுக்கு பிடிக்கலன்னா தயவு செஞ்சி நீங்க இந்த வீட்டை விட்டு வெளியே போங்க.." என்றான் காட்டமாக.

அவனின் குரலில் இருந்த வெறுப்பு காந்திமதியை அதிர்ச்சி அடைய செய்தது.

"நான் இவளை ஏதும் செய்யல.." என்றாள் கோபத்தோடு.

"ஆமா.. நீங்க இவளையும் எதுவும் செய்யல. குந்தவியையும் எதுவும் செய்யல.." என்று கத்தியவன் சங்கவியை அழைத்துக்கொண்டு தனது அறைக்கு நடந்தான்.

இரண்டெட்டு எடுத்து வைத்தவன்  நின்றான்.

"இன்னொரு முறை உங்களின் காரணமாக இவ மேல தூசி கூட விழக்கூடாது. அதையும் மீறி ஏதாவது நடந்தா நான் இந்த மொத்த வீட்டையுமே கொளுத்திடுவேன்.." என்று எச்சரித்தான்.

விம்மியழுது கொண்டிருந்தவளை அணைத்தபடி தனது அறைக்கு வந்தான். அவளை தனது கட்டிலில் அமர வைத்தவன் "தயவுசெய்து அழாதே சங்கவி. அவங்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இன்னொரு முறை இப்படி நடக்காது. இந்த வீட்டுல உனக்கு எந்த கஷ்டமும் இருக்காது. என்னை நம்பு.." என்றான்.

சங்கவி மொத்தமாக தலையசைத்தாள்.

தலையணை ஒன்றை எடுத்துக் கொண்டவன் "நீ தூங்கு.." என சொல்லிவிட்டு அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்தான். 

நெற்றியை பிடித்தபடியே சோபாவில் தலை சாய்ந்தான். குந்தவியின் முகம் கண் முன் வந்து நின்றது. விழிகளை மூடினான். மூடிய விழிகளில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கவிக்கு மனம் இளகுவது போலிருந்தது. சட்டென்று முகத்தை திருப்பி கொண்டவள் தலையோடு போர்வையைப் போர்த்திக் கொண்டு தலையணையில் விழுந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

LIKE 

COMMENT 

SHARE 

FOLLOW.

Post a Comment

0 Comments