Advertisement

Responsive Advertisement

வாழ்வு 1.3

 இருள் நிறைந்த சாலையில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது அந்த கார். இமைக்கும் நேரத்தில் வேகமாக வந்த லாரி அந்த காரை இடித்து தள்ளியது. காரின் டிரைவர் எப்படியோ காரை கட்டுப்படுத்தி விட்டார். சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் இந்த காரின் அருகே நின்றன. வாகனங்களில் வந்திருந்த உயர்ந்த உள்ளம் கொண்டோர் விபத்துக்குள்ளானவர்களை காப்பாற்ற ஓடி வந்தனர்.


பின் சீட்டில் அமர்ந்திருந்த பெண்மணி தன் குழந்தையை அணைத்தபடி கீழே இறங்கினாள். அவளின் கையில் இருந்த குழந்தை வீறிட்டு அழுது கொண்டிருந்தது.


"ஒன்னும் ஆகாது செல்லம்." என்று சமாதானம் செய்து கொண்டிருந்தாள் அந்த தாய்.


அந்த தாயின் தலையில் இருந்து கொஞ்சமாக ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.


"ஹாஸ்பிடல் போலாம் வாங்க.." என்று அழைத்தான் ஒருவன்.


"இல்லங்க பரவாயில்ல." என்றவள் தன் கணவனுக்கு தகவல் சொல்ல முயற்சித்தாள்.


சற்று நேரத்தில் ஆம்புலன்சும் அவளின் கணவனும் வந்து சேர்ந்தார்கள். அவளும் அந்த குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தைக்கு அவ்வளவாக காயம் இல்லை. ஆனால் சிகிச்சை முடிந்து வந்து பார்த்த அந்த தாய்க்கு குழந்தை இருக்குமிடம் தெரியவில்லை. மருத்துவமனையிலிருந்து குழந்தையை களவாடிச் சென்று விட்டிருந்தனர். தனது குழந்தையை பறிகொடுத்தவள் உரக்க அழுதாள்.


***


வினீத் ஆள் அரவமற்ற அந்த சாலையில் காரை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தான். அவன் அருகே இருந்த பெட்டி திறந்துக் கிடந்தது. பெட்டி நிறைய தங்க நகைகள் இருந்தது. நகை கடையில் கொள்ளையடித்து வந்திருந்தான். அவன் கொள்ளையடிக்க பயன்படுத்திய துப்பாக்கியும் முக மூடியும் காரின் பின்சீட்டில் கிடந்தன.


போன் ஒலித்தது. எடுத்து பார்த்தான். அருணா அழைத்திருந்தாள்.


"எங்கே இருக்க.?" என்றாள் அவன் அழைப்பேற்றதும்.


"ஆன் தி வே.." என்றவனிடம் "வரும்போது அரிசி வாங்கி வா.." என்றாள். உடனே அழைப்பை துண்டித்துக் கொண்டாள்.


வியர்வையை துடைத்தபடி மளிகை கடையோரம் காரை நிறுத்தினான். அரிசி ஒரு மூட்டை வாங்கிக் கொண்டான். தனது வீட்டுக்கு போனான்.


கங்காதரன் வாசலிலேயே நின்று இருந்தார். வினீத் வந்ததும் கையை நீட்டினார். பெட்டியை தந்தான். கார் சாவியையும் வாங்கிக் கொண்டார்.


"இந்த மாச டார்கெட் முடிஞ்சது சார்.." என்றான் பணிவாக.


"என்னவோ போ.." என்றவர் அவனை தள்ளி விட்டுவிட்டு போனார்.


வினீத் அரிசி மூட்டையோடு அந்த வீட்டின் பின்னாலிருந்த பாழடைந்த கட்டிடத்திற்கு வந்தான்.


அருணா ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.


"பொது இடத்துல என்ன பழக்கம் இது.? தம்பிங்க தங்கச்சிங்க கெட்ட பழக்கம் பழகிட போறாங்க.." என்றபடி அவளை விலக்கி நிறுத்தியவனுக்கு தான் செய்யும் செயலை கண்டு வளர்வோர் எவ்வளவு கெட்டு போவார்கள் என்று வருத்தமாக இருந்தது.


அரிசியை சமையல் கட்டில் வைத்தான்.


பன்னிரெண்டு பெண் குழந்தைகள், பத்து ஆண் குழந்தைகள், இவனோடு சேர்த்து நான்கு இளைஞர்கள், மூன்று பெண்கள், நான்கு நடுத்தர வயது ஆண் பெண்கள். இவர்கள்தான் அந்த வீட்டில் இருந்தார்கள். 


அனாதைகளை கடத்தி வந்து அவர்களை தன் இஷ்டப்படி நடத்திக் கொண்டிருந்தார் கங்காதரன்‌. வினீத் மாதம் இவ்வளவு என்று பணம் ஈட்டி வர வேண்டும். இல்லையேல் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு வர வேண்டும். 


வினீத்தால் கங்காதரனை எதிர்க்க முடியவில்லை. என்ன செய்தாலும் வேலைக்காகவில்லை. அவனின் ஒரே மகிழ்ச்சியாக அருணா மட்டும்தான் இருந்தாள்.


உணவு தயாரானது. அனைவரும் உண்டார்கள். பாழடைந்த அந்த பங்களாவின் மேல் மாடியில் இருந்தது அருணாவின் அறை. தம்பிகளோடு சேர்ந்து படுத்துக் கொண்டிருந்த வினீத் நடு இரவில் மெதுவாக எழுந்து அருணாவின் அறைக்கு கிளம்பினான்.


தரையில் ஒரு கந்தல் பாயில் படுத்துறங்கும் அருணாவின் உருவத்தை கற்பனை செய்தவாறே கதவை திறந்தான். அப்படியே நின்றான். அருணாவும் அவனின் சக சகோதரன் மதிவாணனும் அந்த கந்தல் பாயில் ஆடைகளற்று கட்டிப் பிடித்து கிடந்தார்கள். வினீத்திற்கு இதயம் வெடிப்பது போலவே இருந்தது. அவளை காதலித்திருந்தான்.


இப்படியொரு துரோகத்தை எதிர்பார்க்கவில்லை அவன். அவளை கொன்று விடலாமா என்று தோன்றியது. 


"உன்னை அப்படி ஈசியா விட்டுடுவேனா.?" என்ற சத்யா உருவமற்ற காற்றாய் அவன் முன் குதித்தாள். கலங்கும் விழிகளோடு இருந்தவனை கண்டு நிம்மதியடைந்தாள். "உன்னை அணுஅணுவா துடிதுடிச்சி சாகடிக்க போறேன்.." என்றவள் தன் கையிலிருந்த தாளையும் எழுதுக்கோலையும் எடுத்தாள். அவன் அடுத்த முறை திருட செல்லும்போது காவல்துறையிடம் மாட்ட வேண்டும் என்று எழுதினாள்.


தன்னை ஒருத்தி வைத்து செய்கிறாள் என்ற விசயம் அறியாத அப்பாவி(இந்த பிறவி மட்டும்) வினீத் உடைந்த நெஞ்சோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.


சத்யா அவனை பின்தொடர்ந்தாள். அவனது தனி அறையிலிருந்த கந்தல் பெட்சீட்டின் மீது வந்து அமர்ந்தான். ஜன்னல் வழியே நிலா வெளிச்சம் வந்துக் கொண்டிருந்தது. அறையின் ஒரு பக்க சுவரில் பாசி பிடித்து கொசுக்களும் அறை முழுக்க பறந்துக் கொண்டிருந்தது.


நகையை திருடி வந்தது அவனுக்கு குற்ற உணர்வை தந்தது. இதுதான் சத்யா அவனுக்கு செய்த பிரதியுபகாரம். அவள் குற்ற உணர்வில் மூழ்கி விடக் கூடாது என்று விதியை மாத்தி எழுதினான் வினீ. ஆனால் அவளோ இவன் குற்ற உணர்வில் மட்டுமே சாக வேண்டும் என்று விதியை எழுதிக் கொண்டிருந்தாள். அவனுக்கு எண்பது ஆண்டுகள் ஆயுள் இருந்தது. ஆனால் அவன் மனதின் மகிழ்ச்சிக்கான ஆயுள் காலத்தை குறைத்துக் கொண்டே இருந்தாள்.


"பத்தல.. இது எதுவும் பத்தல.. புருசன் பிள்ளையோடு வாழ்ந்த என்னை திடீர்ன்னு கொன்ன இல்ல.? உன்னை எவ்வளவு சித்திரவதை செஞ்சாலும் எனக்கு தீராது.." என்று புலம்பினாள்.


வினீத்திற்கு உறக்கம் வர மறுத்தது. நகை கொள்ளையும், அருணாவின் துரோகமும் மாறி மாறி நெஞ்சை கவ்வியது.


புரண்டு படுத்தான். 


"பணம் இல்ல. பாசம் இல்ல. வாழ்க்கை மேல பிடிப்பும் இல்ல. ஏன் வாழணும்.?" என தன்னையே கேட்டுக் கொண்டான்.


"நான் தர சித்திரவதையை தாங்கிக்க நீ வாழணும் கண்ணா.." என்ற சத்யா அவனின் தலையை வருடினாள். பதறி எழுந்தான். தன்னை யார் தீண்டியது என்று சுற்றும் முற்றும் பார்த்தான். யாரையும் காணவில்லை. கற்பனை என நினைத்து மீண்டும் கவிழ்ந்துப் படுத்தான்.


###


வினோதன் தண்டவாளத்தின் கிழக்கே பார்த்தான். பிறகு கைக்கடிகாரத்தை பார்த்தான். இன்னும் பத்து நிமிடத்தில் ரயில் வந்து விடும். கைகளும் கால்களும் நடுங்கியது. வியர்த்து ஊற்றியது. பயத்தோடு கண்களை மூடிக் கொண்டான்.


எதிரே இருந்த மரத்தில் அமர்ந்துக் கொண்டிருந்த சயா நகைத்தபடியேதான் இருந்தாள். 


"உனக்கு மரணம் கிடையாது வினோதா.." என்றபடி மரத்திலிருந்து கீழே குதித்தாள். மொட்டை வெயிலில் அவன் படுத்திருந்த தண்டவாளம் கொதித்துக் கிடந்தது. கற்கள் அத்தனையும் அவனின் மேனியை சுட்டது. 


"ஐயோ மாமா.." எங்கிருந்தோ ஓடி வந்தாள் பூவரசி. 


தண்டவாளத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தான் வினோதன்‌.


"என்ன பண்றிங்க.? ஏன் தற்கொலை செய்றிங்க.?" எனக் கேட்டவளிடம் அழுதபடியே தனது பரிட்சை தாளை நீட்டினான். நூற்றுக்கு அறுபத்தியெட்டு இருந்தது.


"எங்க அப்பா என்னை அடிப்பாரு பூவு.." என்றவன் விம்மி அழுதான். 


"அழாதிங்க மாமா.. நான் வேணா இதை தொண்ணூத்தி எட்டா மாத்தி தரேன்.." என்றவள் அவனது பேப்பரிலிருந்த ஆறை ஒன்பதாக மாற்றினாள்.


"உங்க அப்பாக்கிட்ட கையெழுத்தை வாங்கிய பிறகு இதை மறுபடி மாத்திக்கோங்க.." என்றாள்.


புன்னகையில் இதழ் விரித்தான். தண்டவாளத்தின் தூரத்தில் இருந்த மரத்தடியில் இருந்தது அவனது பள்ளிக்கூட பை. எடுத்து தோளில் மாட்டிக் கொண்டான். பூவரசி அவனை விட இரண்டு வயசு சிறியவள். பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருக்கிறாள். அவனை மாமா என்றேதான் அழைக்க வேண்டும் என்று வீட்டில் கடும் உத்தரவு. அவளும் பள்ளியின் வளாகம் தாண்டி விட்டால் அப்படிதான் அழைப்பாள். இருவருக்கும் இடையில் கவிதை போல ஓர் அழகான நட்பு இருந்தது.


"பூவு.. உன் வீட்டுல மட்டும் ஏன் நீ எவ்வளவு மார்க் வாங்கினாலும் அடிக்கிறது இல்ல.?" சந்தேகமாக கேட்டான் வழியில் நடந்தபடி.


"ஏனா அவளோட விதியை எழுதிய ஏஞ்சல் அவ்வளவு நல்லவ.." என்ற சயா தனது கையிலிருந்த தாளை பார்த்தாள். இதை இன்னும் எப்படி மோசமாக மாற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.


அடுத்த வாரத்தில் அவனின் பள்ளியில் ஒரு போட்டி நடக்கவிருந்தது. அவன் அதற்காய் பல மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும் என்று எழுதினாள். அவனின் மொத்த உழைப்பையும் அந்த போட்டியில் குவித்தாள்.


போட்டி நாளும் வந்தது. அனைவரையும் விட மிக அருமையாக பேச்சு போட்டியில் தன் பேசும் திறனை காட்டி இருந்தான் வினோதன். 


அனைவரும் கை தட்டினர். பூவரசி அவன் பேச்சை கேட்டு புல்லரித்துப் போயிருந்தாள். ஆனால் நடுவர் குழு அவனை கடைசி பரிசுக்கு தேர்தெடுக்கவில்லை. 


அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கவலையோடு வீட்டிற்கு கிளம்பினான். வீட்டில் அப்பா பெல்டில் விளாசி தள்ளினார்.


"கடைசி இடத்துக்கு கூட வர முடியல. நீ ஏன்டா தண்டமா இருக்க.?" என கேட்டு அடித்தார்.


அடி வாங்கி அழுதபடி வீட்டை விட்டு வெளியே நடந்தவனின் முன்னால் வந்து நின்றாள் பூவரசி.


"மாமா இது உங்களுக்காக.." என்று அரளி பூங்கொத்து ஒன்றை நீட்டினாள்.


"சூப்பரா பேசினிங்க.." என்று கையை தட்டினாள். வெட்கத்தில் முகம் சிவந்து இருந்தவனின் அருகே நெருங்கியவள் அவனின் கையை பிடித்தாள். அவனது உள்ளங்கையில் முத்தம் தந்தாள்.


"இதுவும் கிஃப்ட்.." என்றாள்.


அதிர்ச்சியில் விழிகள் வெளியே தெறிக்க இருந்தது அவனுக்கு. 


"இதை யார்கிட்டேயும் சொல்லிடாதிங்க." என்றவள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அங்கிருந்து ஓடி போனாள். 


உள்ளங்கையை பார்த்துக் கொண்டிருந்த வினோதனுக்கு அன்று இரவு முழுக்க உறக்கம் வரவில்லை. 


அப்படிதான் ஆரம்பித்தது அவர்களின் காதல். இருவரும் கல்லூரி படிப்பிற்கு வெளியூர் போனார்கள். காதல் மேலும் வளர்ந்தது. 


ஒருநாள் தங்களின் காதலை பற்றி வீட்டில் சொன்னார்கள்.


"செருப்பு பிஞ்சிடும்.." என்ற அப்பா உண்மையிலேயே அவனை செருப்பால் அடித்து விட்டார்.


"அந்த வீட்டுல இருந்து பத்து பைசா வரதட்சணை வராது.. உனக்கு அந்த பொண்ணு கிடையாது.." என்றார். சொந்த தங்கை மகள் அவள். அவளையே வேணாமென மறுத்தார், வெறும் சொத்திற்காக.


"மாமா எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க.." என்று கண்ணீரோடு வந்து அவனிடம் அழுதாள் பூவரசி.


அவளின் வீட்டில் சென்று பேசினான் வினோதன்.


"இல்ல மாப்ளை.. உங்க வீட்டு அந்தஸ்துக்கு நாங்க ஒத்து வர மாட்டோம்.. இது சரியா வராது.." என்று சொல்லி மறுத்து விட்டார் அவளின் அப்பா. 


பூவரசியின் வீடு போய் வந்ததற்காக அவனின் அப்பா வினோதனை மறுபடியும் திட்டி தீர்த்தார். தலைக்கு மேல் வளர்ந்த மகனை அடித்து வைத்தார். 


அம்மா ஓடி வந்து தடுத்தாள். அவளுக்கும் சேர்ந்து அடி விழுந்தது. 


வினோதன் அடி வாங்கியபடி கலங்கி நிற்பது கண்டு உள்ளம் மகிழ்ந்து நின்றாள் சயா.


காதலியை கைப்பிடிக்க முடியவில்லை. தந்தையின் அந்தஸ்தை உடைக்க முடியவில்லை. வாழ்க்கையை வெறுத்து விட்டிருந்த வினோதன் தண்டவாளத்தில் வந்துப் படுத்தான். ரயில் வர இன்னும் பத்து நிமிடம் இருந்தது. அன்று போல இன்றும் பூவரசி வருவாளா என்று ஏக்கமாக இந்த பத்து நிமிட இடைவெளியை கடக்க இருந்தான்.


அவனை கொல்வது சயாவின் நோக்கம் இல்லை.‌ அதற்காகதான் அந்த பாதையில் வரும் ரயிலை தாமதம் செய்துக் கொண்டிருந்தாள்.


"உன்னை இன்னும் நல்லா வச்சி செய்யணும்.." என நினைத்தவள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள் அடுத்து நடக்க இருந்ததை பற்றி. டிவிஸ்டுக்கே டிவிஸ்டு தர காத்திருந்தது விதி.


எப்படி என்ன ஆச்சின்னு அடுத்த எபிக்கு நீங்க வந்தாதான் சொல்வேன். அடுத்த எபி வரும் முன்னாடி இந்த எபியை பத்திய உங்க கருத்தை சொல்லிட்டு வாங்க அப்பு..😍



Post a Comment

0 Comments