Advertisement

Responsive Advertisement

வாழ்வு 1.7

 வினீத் தனது கையிலிருந்த துப்பாக்கியை நேராக நீட்டினான்.


பேங்கின் மேனேஜர் பயத்தோடு சாவி கொத்தை எடுத்தார்.


தனது முகமூடியை சரிசெய்து கொண்ட வினீத் "இருக்கும் எல்லா பணத்தையும் கொடு.." என்றான்.


எதிரில் இருந்தவன் நடுங்கியபடியே லாக்கர் அறையை திறந்தான். உள்ளே இருந்த பண லாக்கரையும் திறந்தான்.


பண கட்டுகள் அடுக்கப்பட்டு இருந்தன. வாசம் வினீத்தின் நாசி வரை வீசியது. ஆனால் என்ன செய்ய? அந்த பணத்தாள்களின் மீதுதான் இவனுக்கு பிடிப்பு இல்லையே..


அவனை கண்காணித்தபடி பின்னால் நின்றுக் கொண்டிருந்த சயா அவனின் கண்களில் தெரிந்த பரிதவிப்பை பாவமாக பார்த்தாள்.


"உன் கண்களில் உருவான எல்லா கனவுகளை அழிச்சேன் நான். இனியும் அழிப்பேன் நான். ஏனா உன் கண்கள் கனவு காண படைக்கப்பட்டது இல்ல. அழுவதற்காக மட்டும்தான் படைக்கப்பட்டிருக்கு. அதை நான் தினமும் பார்ப்பேன். உன் கண்ணீரை கண்டு நான் தினமும் மகிழ்வேன்.." என்று அவனின் காதோரம் நின்று உளறிக் கொண்டிருந்தாள். அவனுக்கு மட்டும் ஆன்மாக்களின் பேச்சு சத்தம் காது வரை சென்று சேர்ந்திருந்தால் எப்படியாவது சிரமம் எடுத்தாவது இவளை அறைந்திருப்பான்.


"இந்த பேக்ல பணத்தை நிரப்பு.." பேக்கை அவன் விசிறிய அதே நேரத்தில் அவனின் வயிறு சலசலத்தது.


"ஆஹாஹாஹா.." கேனத்தனமாக சிரித்துக் கொண்டிருந்த சயா "இந்த முறை நீ போலிஸ்கிட்ட மாட்ட போறடா டுபாக்கூர்.." என்று சிரித்தாள்.


பற்களை கடித்தபடி அங்கேயே நிற்க முயன்றான் வினீத். ஆனால் வயிற்றின் சலசலப்பு ஓய்வதாக இல்லை. எவ்வளவு முயன்றும் அவனால் நிலையாக நிற்க முடியவில்லை. அருகில் சாய்ந்து விட சொன்னது பலவீனம். அங்கேயே கால் சட்டையை கழட்டி விட சொன்னது அவசரம். வயிற்றில் புயல் உருவானது போல இருந்தது. பூகம்பமே வந்தது போல இருந்தது.


அதற்கு மேலும் தாங்க முடியும் என்று தோன்றவில்லை.


"நீ இந்த பேக்கை நிரப்பி வை.. நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்.." என்றவன் பேங்கின் மேனேஜரிடமே "இங்கே டாய்லெட் எங்கே இருக்கு.?" என்று விசாரித்தான்.


பேங்க் மேனேஜர் வியர்வை வழியும் நெற்றியோடு டாய்லெட்டுக்கு செல்லும் வழியை கை காட்டினான். 


வினீத் சிரமத்தோடு அங்கிருந்து நடந்தான். சயா பேய் சிரிப்போடு அருகே இருந்த மேஜையின் மீது ஏறி அமர்ந்தாள். தன் ஆன்ம உருவின் விழிகளை மூடினாள்.


நேரங்கள் கடந்தது. வினீத்தை இன்னும் எப்படியெல்லாம் பழி வாங்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தவள் சத்தம் எதுவும் காதில் விழாமல் போகவும் கண்களை திறந்தாள்.‌ வானம் தெரிந்தது. 


அதிர்ச்சியோடு எழுந்து அமர்ந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். ஆற்றங்கரை ஒன்றின் மேட்டில் படுத்துக் கொண்டிருந்தாள்.


இங்கே எப்படி வந்தோம் என்று புரியாமல் எழுந்து நின்றாள். சுற்றி இருந்த இடங்கள் அடையாளத்திற்கு பிடிபடாமல் இருந்தது. குழப்பத்தோடு அங்கிருந்து நடந்தாள்.


"வினீ.. எங்கே போனானோ.? அவனை கரெக்டான டைம்க்கு போலிஸ்ல பிடிச்சி தரணும்.. இல்லன்னா என் ப்ளான் வேஸ்டா போயிடும்.." என்று தன்னெதிரே இருந்த சாலையில் ஓடியவள் எதிரே இருந்த பெரிய சைஸ் பேனரை கண்டு அதிர்ந்து நின்றாள்.


அருகில் நடக்க இருக்கும் மாநில அளவிலான கபடி போட்டிக்கு மந்திரி வினீத் சிறப்பு விருந்தினராக வர போவதாக அச்சடிக்கப்பட்டிருந்தது அதில்.


சயா இல்லாத இதயத்தை பற்றி விட்டாள்.


"எப்படி இது சாத்தியம்?" என்றவள் அவனின் முகத்தை கவனித்தாள். அவனின் முகத்தில் முப்பது ஆண்டுகள் கூடியிருந்தது. 


தலையை பிய்த்துக் கொண்டாள். அதுவும் இல்லாத ஒன்றுதான்.


"தலை சுத்துதுடா.." என்றபடியே விளையாட்டு நடக்கும் அரங்கம் நோக்கி நடந்தாள்.


"என்னதான் நடக்குது இங்கே?" என தன்னையே கேட்டபடி வினீத்தின் வாழ்க்கை ஏட்டை எடுத்தாள்.


முப்பது ஆண்டுகால வாழ்க்கை புதிதாக எழுதப்பட்டு அத்தனையும் இறந்த காலமாக இருந்தது. கழிவறையை விட்டு வெளியே வந்தவனை உடனே பிடித்து விட்டது காவல்துறை.


ஆனால் சிறைச்சாலைக்குள் தண்டனை அனுபவிக்கவில்லை அவன். அங்கிருந்த ஒரு தேர்ந்த அரசியல்வாதியிடம் சிஷ்யனாக மாறிப் போனான்.


அந்த அரசியல்வாதியிடமே அனைத்து பாடமும் கற்று அவரின் உதவியால் சிறையை விட்டு வெளியேறி, அவருக்கு சேவை செய்வது போல நடித்து அரசியலிலும் கால் பதித்து விட்டான். பிறகென்ன.. சில வருடங்களிலேயே அவனும் வட்ட செயலாளர். மாவட்ட செயலாளர். எம்.எல்.ஏ. இப்போது மந்திரியும்.


"விளையாட்டு துறை அமைச்சர் வினீத்தை போட்டியை துவங்கி வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.." என்று மைக்கில் பேசினாள் பெண்ணொருத்தி.


வினீத் கொடி அசைத்தான். போட்டியாளர்கள் கபடி ஆட ஆரம்பித்தனர்.


அவனின் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி, வெள்ளை தாடியை வியந்து பார்த்துக் கொண்டிருந்த சயா அவனின் வாழ்க்கை ஏட்டை எடுத்தாள். அவனின் முகத்தில் பந்து ஒன்று மோத வேண்டும் என்று எழுதினாள். சற்று நேரத்தில் குழந்தை ஒன்றின் கையிலிருந்து பறந்து வந்த பந்து ஒன்று அவனின் மூக்கை உரசி சென்றது. மூக்கிலிருந்து ரத்தம் கூட வழிந்தது.


"ஆனா எனக்கு திருப்தி இல்ல. யாரோ சதி பண்ணிட்டாங்க. நான் பிக்ஸ் பண்ண லைப்பை இவனுக்கு கொடுக்காம ஆன்மாவா இருந்த என்னை உறங்க வச்சிட்டு இவனை தரம் உயர்த்தி விட்டிருக்காங்க.." என்று புலம்பினாள்.


"யாரோ என்னை பழி வாங்கிட்டாங்க. நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்? இவன் என் லைப்பை அழிச்சான். நான் பழி வாங்க கூட வாய்ப்பு தராம எனக்கு துரோகம் பண்ணிட்டாங்க.." என்று விம்மி விம்மி அழுதாள்.


"ஏய் முட்டாள்.. உனக்கு துரோகமும் நடக்கல. ஒன்னும் நடக்கல. நீ தேர்ந்தேடுத்து விளையாடி பார்க்க ஒத்துக்கிட்டு கையெழுத்துப் போட்டு தந்த லைப்பைதான் நீ வாழ்ந்த. அவன் சும்மா உன்னை கைட் மட்டும்தான் பண்ணான். தண்ணீர் தொட்டியில் சாக இருந்த உன் நண்பனை காப்பாத்தி உன் பாவத்தை குறைச்சான். வாழ்க்கை ஏட்டுல வாழ ஒத்துக்கிட்டு கையெழுத்துப் போட்டுத் தந்த பிறகு அதை மாத்தி எழுதியதால்தான் அவனுக்கு இந்த தண்டனை. அந்த தண்டனை என்னன்னா நீ அவன் லைப்பை நாசம் பண்றது.." 


தன் முன் நின்று பேசிக் கொண்டிருந்த யூனிகார்னை வெறிக்க வெறிக்க பார்த்த சயா "வாவ்.. இந்த வியாக்கியானத்தை நீங்க ஏன் இன்னைக்கு வந்து சொல்லணும்.? நீங்க ஏன் வந்து சொல்லணும்.?" என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள்.


யூனிகார்ன் காற்றில் வட்டமடித்தது.


"ஏனா இன்னையோடு சயாவுக்கு ஆயுசு முடிய போகுது. அவன் வாழ இருந்த வாழ்க்கையை மாத்தி அமைச்சி தந்த நீ. தண்டனையோ பரிசோ, எதையும் அடுத்தவங்க லைப்பை மாத்த ஆன்ம நட்புக்கு உரிமை கிடையாது.. நீ அந்த தப்பை பண்ணிட்ட. நீ சீக்கிரத்தில் பிறக்க போற. உன் லைஃப்ல எந்த அளவுக்கு சோதனை இருக்கும்ன்னு யூகிச்சிக்கோ.." என்ற யூனிகாரன் சட்டென்று அங்கிருந்து பறந்துப் போனது.


அதிர்ச்சியில் விழிகளை விரித்த சயா "நான் இந்த விளையாட்டை விளையாடல.. போதும் போன ஜென்மமே.." என்றாள்.


வானில் பாய இருந்த யூக்கார்ன் திரும்பிப் பார்த்தது.


"அதை உன் ஆன்ம நட்புக்கிட்ட சொல்லு.." என்று விட்டு போனது.


மூக்கிலிருந்து ரத்தம் வழிந்துக் கொண்டே இருந்தது வினீத்திற்கு.


"ஆம்புலன்ஸ்க்கு வழி விடுங்க.." என்று அலறியபடியே அந்த நெருக்கடி நிறைந்த சாலையில் சென்றது ஆம்புலன்ஸ்.


மருத்துவமனையில் இறந்தே போனான் வினீத்.


தனது ஆன்மாவின் உருவுக்கு வந்த வினீ சுற்றும் முற்றும் தேடினான். பிணத்தின் அருகில் சிலை போல நின்றிருந்த சயாவை கண்டவன் ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொண்டான்.


"ஓ சயா.. நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா?" எனக் கேட்டான் ஆவலாக.


சயா குழப்பத்தோடு அவனை பார்த்தாள்.


"நான் யார்ன்னு உனக்குத் தெரியுமா?" எனக் கேட்ட வளை முறைத்தவன் "பிரெண்டை கூட மறந்துட்டியா நீ?" எனக் கேட்டு திட்டினான்.


சயாவுக்கு தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை.


"நீ ஏன் அந்த ஆன்மாக்களின் சாலையை கடக்கல.? நீ இன்னும் உன் பூமியின் வாழ்க்கை நினைவுகளை கூட அழிச்சிக்கல. அப்புறம் எப்படி உனக்கு என்னை நினைவுல இருக்கு?" எனக் கேட்டாள் குழப்பத்தோடு.


அவளை அணைத்துக் கொண்டான் வினீ.


"ஏனா நான் அப்படிதானே எழுதி கையெழுத்துப் போட்டேன். இறந்த உடன் என் ஆன்ம ஞாபகம் வந்துடணும்ன்னு.." என்றபடியே அவளிடமிருந்து விலகியவன் அவளின் கையிலிருந்த ஏட்டை வாங்கி பார்த்தான்.


"இவ்வளவு மாத்தி வச்சிருக்க.. மொத்தமாவே மாத்திட்ட.." என்று கவலைப்பட்டான்.


"நீ செஞ்ச தப்புக்கு தண்டனையா உன்னோட அடுத்த வாழ்க்கையை நீ கஷ்டமுடைய ஒன்னாதான் தேர்ந்தெடுத்தாகணும்.." என்றான்.


சயா திகைத்து நின்றாள். இவனை பழி வாங்க போய் இப்படி ஒரு குழப்பத்தில் வந்து நிற்போம் என்று நினைக்கவேயில்லை அவள்.


"நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா? நீ என் பக்கத்துல இருக்கணும் சயா. அதுதான் நம்ம நட்புக்கு நல்ல அடையாளம்‌. நீ முப்பது வருசம் முன்னாடி என்னை விலகிட்ட. அதுக்கும் முன்னாடி எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நான் உள்ளுக்குள்ள நிம்மதியா இருந்தேன்‌. ஒரு நிறைவை உணர்ந்தேன். ஆனா அப்புறமா எவ்வளவு விசயங்கள் கிடைச்சும் கூட நான் வெறுமையைதான் உணர்ந்தேன். நீ வேணும் சயா நான் வாழ.." என்றான் அவளை இறுக்கமாக அணைத்தபடி.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..



Post a Comment

0 Comments