Advertisement

Responsive Advertisement

வாழ்வு 1.9

 தன் கையில் கொடுக்கப்பட்ட வாழ்க்கை ஏட்டை அதிர்ச்சியோடு பார்த்தான் வினீ.


"இது சயாவுடையதா?" சந்தேகத்தோடு கேட்டான் தன் முன்பிருந்த ஆன்ம காவல் பதிவாளரை.


"ஆமா.." என்றவரிடம் "ஆனால் என்னால ஏன் இதில் இருக்கும் எதையும் திருத்த முடியாது.?" எனக் கேட்டான் சந்தேகம் தீராமல்.


"உன்னோட ஆன்ம நட்பு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டா. உன்னோட வாழ்க்கையை முழுசா மாத்தி வச்சிட்டா. நீங்க போட்டுக்கிட்ட ஒப்பந்தத்துக்கு சாட்சியாக இருப்பது நாங்கதான். நீங்க ஒப்பந்தத்தை மீறும் போது அதற்கான பலனை அனுபவிச்சிதானே ஆகணும்.?" என்று தன் பக்கம் இருந்த நியாயத்தை சொன்னார் அந்த அதிகாரி.


ஆனால் சயா இவ்வளவு கொடுமையான வாழ்க்கையை வாழும் போது எப்படி தன்னால் எதுவும் செய்யாமல் இருக்க முடியும் என்று குழம்பிப் போனான் வினீ.


அவள் அவனது வாழ்க்கையை எவ்வளவு கொடூரமாக மாற்றி அமைத்திருந்தாலும் கூட அவனால் அவளை வெறுக்க முடியவில்லை. ஏனெனில் அவள் அவனின் ஆன்ம நட்பு. எத்தனையோ யுகங்களாக இருவரும் நட்போடு இருக்கின்றனர். அப்படி இருக்கும் போது வெறும் ஒரு அறுபது ஆண்டுகளாக வாழ்ந்த பூமியின் வாழ்க்கைக்காக, அதுவும் கனவு போன்று ஒரு நிலையில்லாத வாழ்க்கைக்காக தனது தோழியை வெறுத்து விடுவானா அவன்.?


வெறும் சில ஆண்டுகள்தானே என்ற சமாதானத்தோடு பூமிக்கு புறப்பட்டான் வினீ. 


அவன் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து முன்னோக்கி சென்றிருந்தது சயாவின் இப்போதைய வாழ்க்கை.


தனது இறந்த காலத்திற்கும் முந்தைய ஒரு காலத்திற்கு சென்றவன் நினைத்தே பார்த்திருக்க மாட்டான் விதி எப்படி எல்லாம் விளையாடப் போகிறது என்பதை.


அழகான குழந்தை சரயு. அவளின் இளமைக் காலம் அனைத்தும் அவ்வளவு இனிப்பாக சென்றுக் கொண்டிருந்தன. தன்னால் முடிந்த அளவுக்கு அவளை வழி நடத்தி கொண்டிருந்தான் வினீ.


சரயுவின் பள்ளிக் காலமனைத்தும் அவ்வளவு சிறப்பாக சென்றது. அவளின் நண்பர்கள் அனைவரும் நல்லவர்களாகவே அமைந்தனர். அவளின் பெற்றோரும் நல்லவர்களே. அவரைச் சுற்றியிருந்த அனைவரும் நல்லவர்களே.


அவளின் புன்னகை முகத்தைக் கண்டும் கூட வருத்தத்தில் மட்டுமே இருந்தான் வினீ.


அவர்களின் விதி சதிராட வந்து சேர்ந்தது. அவளைப் பெண் பார்க்க வந்தான் கங்கா. 


முரடன் அவன். முசுடு அவன். குணத்தில் கெட்டவன் அவன். ஆனால் அவனின் முக அழகில் மயங்கி சரியென்று தலையசைத்து விட்டாள் சரயு.


விரைவிலேயே சரயுவிற்கும் கங்காவிற்கும் திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களுக்கு கங்கா நல்லவனாகதான் இருந்தான்.


நாட்கள் செல்லச் செல்ல கங்காவின் உண்மையான முகம் என்னவென்று சரயுவுக்கு தெரியவந்தது. எதற்கெடுத்தாலும் அடித்தான். எதற்கெடுத்தாலும் கொடும் சொற்களால் அவளை வாட்டி வதைத்தான்.


அவளால் அவனிடமிருந்து பிரிந்து போக முடியவில்லை. தாய் வீட்டிற்கு ஒருநாள் சென்றால் கூட ஒரு வாரத்திற்கு அடித்து துவைத்தான். பிறந்த வீட்டில் சொல்லிப் பார்த்தாள். ஆனால் அனைவரும் ஒன்றுபோல கணவனே கடவுள் என்று பாடம் எடுத்தனர்.


தானாகவே விவாகரத்து வாங்க நினைத்தாள். 


"எனக்கு டைவர்ஸ் வேணும்.." ஆயிரம் கடவுள்களை வேண்டிக் கொண்டு தைரியம் பெற்று கேட்டாள்.


சப்பென்று ஒரு அறையை விட்டவன் வீட்டிற்குள்ளேயே அவளை ஒரு மாதத்திற்கு பூட்டி வைத்து விட்டான். கெஞ்ச வைத்து வாரம் இருமுறை மட்டும் உணவு தந்தான். அவன் தந்த சித்திரவதைகளுக்கு பிறகு விவாகரத்தை பற்றியே மறந்து விட்டாள்.


சரயு அழுது சலித்து போனாள். அவளைக் கண்டு கண்டு வினீயும் மனம் வெதும்பி போனான்.


அன்றொரு நாள் சரயுவின் தம்பி வீட்டிற்கு வந்து சென்றான். 


அலுவலகத்தில் பணி முடித்துவிட்டு திரும்பி வந்த கங்கா மேஜை மீது கிடந்த இனிப்பு பொட்டலத்தை பார்த்து மனைவியை அழைத்தான்


"யார் வாங்கி வந்தது.?" என்று கேட்டான்.


"என் தம்பி வாங்கி வந்தான்.." என்று சொன்னவளின் கன்னத்தில் பளீரென்று ஒரு அறையை விட்டான். 


"புருசனை அந்த பக்கம் அனுப்பிட்டு நீ இந்த பக்கம் தம்பியோடு ஜல்சா பண்றியா.?" எனக் கேட்டு அவளை அடித்தான். அடியின் பளு தாங்காமல் விழுந்தவளை உதைத்தான்.


"எங்க குடும்பம் அப்படிப்பட்டது இல்லைங்க.. என் தம்பி எனக்கு இன்னொரு அப்பாவைப் போல.." என்று சொல்லி அழுதாள் சரயு.


ஆனால் தம்பியோடு இணைத்து பேசுபவன் தந்தையோடு பேசவும் நொடி நேரம் கூட எடுத்துக் கொள்ள மாட்டான் என்பது புரியாத பேதையாக போய்விட்டாள் அவள்.


"அவ்வளவு ஒழுக்கமான குடும்பமா இருந்தா நான் இருக்கும்போது உன் தம்பி வந்துட்டுப் போக வேண்டியதுதானே.?" என கேட்டு அவளின் தலை முடியை பிடித்து ஆட்டினான். 


"வலிக்குது என்னை விடுங்க.." அழுதபடி கையெடுத்துக் கும்பிட்டு கேட்டாள் சரயு.


"ஒழுக்கமானவளா இருந்தா மன்னிப்பை கேளுடி.." என்று உதைத்தான் மீண்டும்.


"நான் எந்த தப்பும் செய்யலைங்க.." அழுதவளிடம் மறுப்பாக தலையசைத்தவன் "தப்புதான்டி. புருசன் இல்லாத போது எந்த ஆம்பளையையும் உள்ளே விட கூடாது.." என்று சொல்லி அவளின் கன்னத்தில் அறைந்தான். 


சரயுவுக்கு மனம் நொந்து போனது. இதற்கு மேல் வாழவே கூடாது என்று நினைத்து விட்டாள்.‌ கங்கா வீட்டிலிருந்து சென்றதும் தனது அறைக்கு ஓடி போனாள்.


"இனி வாழவே கூடாது. இந்த ராட்சசன்கிட்டயிருந்து தப்பிக்க முடியல.. ஏன் வாழணும்.?" எனக் கேட்டபடியே புடவையை தூக்கி பேனில் வீசினாள்.


பதறிப் போனான் வினீ.


"சயா இப்படி செய்யாதே.." கெஞ்சினான். அழுதான். அவளுக்காக துடிக்க ஒரு ஜீவன் உள்ளது என்பதை அறியாமல் சாவை தேடிக் கொண்டிருந்தாள் அவள். 


வினீ தனது மொத்த சக்தியையும் பயன்படுத்தினான்.


சயாவின் மனதுக்குள் புகுந்து அவளின் எண்ணத்தை மாற்ற முயன்றான். அவளுக்கு அந்த தூக்கின் மீதான பயத்தை உண்டாகப் பார்த்தான். 


ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்தினான். அவளின் மனதை எப்படியோ கடைசி நேரத்தில் மாற்றி விட்டான். அவள் புடவையை தூக்கி எறிந்த பிறகே நிம்மதி அடைந்தான். 


அதன் பிறகும் அவளின் வாழ்க்கை அப்படியேதான் போனது. இதற்கு மரணமே பரவாயில்லை என்ற எண்ணம் ஒருநாளைக்கு கோடி முறை தோன்றியது.


அவளின் வாழ்க்கையை மாற்றி அமைக்க ஏதேனும் ஒரு நூலிழை கிடைக்காதா என்று போராடிக் கொண்டு இருந்தான் வினீ.


அவளின் வாழ்க்கையை இப்போது மாற்றி அமைக்கக் கூடாது. அப்படி மாற்றியமைத்தால் அவர்களின் பின்வரும் ஜென்மங்கள் அனைத்தும் மேலும் மோசமானதாக அமையும். அது அத்தனையும் தெரிந்திருந்தும் கூட அமைதியாக இருக்க முடியவில்லை வினீயால். அவளின் வாழ்வை மாற்றியமைக்க ஏதேனும் ஒரு விஷயம் கிடைக்காதா என்று விண்வெளி முழுக்க பறந்து திரிந்தான். பலரையும் பார்த்து விசயத்தை கேட்டறிய முயன்றான்.


தான் சென்ற விசயத்தில் ஒரு குறிப்பிட்ட தகவலை மட்டும் கண்டுபிடித்து விட்டு திரும்பி விட்டான் வினீ.


அன்றைய நாளில் சரயு குழம்பின் ருசி பார்த்தாள். சுவைத்தது. சாப்பாடு மேஜையின் மீது உணவை கொண்டுப் போய் வைத்தாள். சரயுவின் கணவன் கங்கா குழம்பை சாதத்தில் ஊற்றி பிசைந்தான். ஒரு வாய் உண்டான். சரயு தண்ணீரை கொண்டு வந்து அவனருகே வைத்தாள். அருகே வந்தவளின் கன்னத்தில் பளீரென ஒரு அறையை விட்டான் கங்கா. குழம்பும் சாதமும் கன்னங்களில் ஒட்டிக் கொண்டது. வலியில் கொடகொடவென்று கண்ணீர் கொட்டியது.


"மனுசன் சாப்பிடுவானா இந்த குழம்பை?" என்று கர்ஜித்தவன் உணவை அப்படியே சாப்பாடு மேஜையின் மீது கொட்டினான். பாத்திரங்களை கீழே இறைத்துவிட்டு‌ வெளியே நடந்தான். சரயு கண்ணீரோடு அதே இடத்தில் நின்றாள். அவளுக்கு பின்னால் நின்றிருந்த வினீ சந்தோச விசில் அடித்துக் கொண்டிருந்தான். தனது பரிசோதனையை தொடங்கி விடலாம் என்ற எண்ணத்தோடு கங்காவை பின்தொடர்ந்து ஓடினான்.


கங்கா தன்னுடைய அலுவலகம் நோக்கி சென்றுகொண்டிருந்தான். அவனின் வாழ்க்கை ஏட்டை பிரபஞ்ச நூலகத்திலிருந்து திருடி வந்து இருந்தான் வினீ.


கங்காவின் வாழ்க்கை ஏட்டில் விசயங்களை மாற்றி எழுதினான். அலுவலகம் நோக்கி காரை ஓட்டிக் கொண்டிருந்த கங்கா காரை திருப்பிக்கொண்டு வீடு வந்தான்.


சரயு உண்ணாமல் சோகத்தோடு சோபாவில் படுத்திருந்தாள். கங்கா கதவை தட்டியதும் அவசரமாக ஓடிச் சென்று கதவைத் திறந்தாள். அவனை கண்டதும் பயந்து போனாள். முகம் வெளிறிப் போனாள். இந்த நேரத்துக்கு ஏன் வந்தான் என்று புரியாமல் குழம்பிப் போனாள். அந்த எட்டு மணி நேரங்கள் மட்டும்தான் அவளுக்கான சுதந்திரமாக இருந்தது. அவனின் அருகில் சிறையை உணர்ந்தாள்.


"ஏங்க.?" என்றவளின் அறைபட்ட கன்னத்தில் கையை பதித்தான் கங்கா. "சாரி சரயு.." என்றான்‌ வருத்தத்துடன்.


அவளின் அறைபட்ட கன்னத்தில் முத்தமிட்டான். அன்பின் முத்தம் அது. அவளால் நம்ப முடியவில்லை.


ஆனால் அவர்கள் இருவருக்கும் பின்னால் நின்றிருந்த வினீ சரயுவின் முகத்தில் பரவும் நிம்மதியை கண்டு மகிழ்ந்தான்.


அதன் பிறகான ஒவ்வொரு நாளும் மிகவும் அருமையாக போனது சரயுவுக்கு. மிகவும் அன்பாக பார்த்துக் கொண்டான் கங்கா.


ஆனால் எல்லாமே விரைவில் மாற போகிறது என்பதை வினீயோ சரயுவோ அறியவில்லை. 


சரயு ஒருநாள் தாய்மையுற்றாள். வினீக்குள் ஏதேதோ மாற்றம். மனது ஒரு நிலையில் இல்லை. அந்த மனதை ஒருநிலை படுத்த முடியவில்லை. தான் வாழ்ந்த முந்தைய ஜென்மத்திற்கும் முன்னால் வந்து சயாவின் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டிருந்தவன் தனக்கும் அவளுக்குமான எதிர்காலம் தேடி ஓடினான். ஆனால் விசயங்களை முழுதாய் அறிந்த பிறகு வாழ்க்கையே வெறுத்து விட்டான்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே



Post a Comment

0 Comments