Advertisement

Responsive Advertisement

வாழ்வு 2.1

 கண்களை மூடியபடி படுத்திருந்த வினோதன் ரயில் வரும் சத்தம் தன் காதில் விழாதா என்று ஏக்கத்தோடு காத்திருந்தான்.


வெகுநேரம் காத்திருந்தான். ஆனால் ரயில் அந்த பாதையில் வரவே இல்லை. ஏனெனில் அதற்கு முன்பே அந்த தண்டவாள பாதையின் நடுவில் சிறு கோளாறை ஏற்படுத்தி வைத்திருந்தாள் சயா. தண்டவாளம் சரி இல்லாததால் ரயில் பாதியிலேயே நின்று விட்டது.


பாதையை சரி செய்ய ஒரு மணி நேரம் ஆகும் என்று ஆட்கள் வேலையை செய்து கொண்டிருந்தார்கள்.


வினோதன் பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இருந்தான்.


ஆனால் ஐந்து நிமிடங்களுக்கு பிறகு 'சாக வேண்டுமா.?' என்று ஒரு கேள்வி வந்தது.


பத்து நிமிடங்களுக்கு பிறகு 'நாம் ஏன் சாக வேண்டும்.?' என்று தோன்றியது. 


இருபது நிமிடங்கள் கடந்தது. எழுந்து அமர்ந்துவிட்டான் வினோதன். "எனக்கு சாக பிடிக்கல்ல..' என்று தன்னிடமே சொல்லிக் கொண்டு தண்டவாள பாதையிலிருந்து எழுந்து நடக்க ஆரம்பித்தான். இறப்பின் கடைசி நொடியை கண்டு வந்த காரணத்தால் வாழ்வின் மீதான பயம் குறைந்து விட்டிருந்தது. நடப்பது நடக்கட்டும் என்ற சலிப்பு வந்து சேர்ந்திருந்தது.


எங்கோ இருந்து பூவரசி ஓடிவந்தாள். 


"மாமா." என அழைத்தபடி பாய்ந்து அவனை அணைத்துக் கொண்டாள். 

"எங்கே போனிங்க மாமா.? உங்களை எங்கேயெல்லாம் தேடுறது.?" எனக் கேட்டாள் அழுகையோடு.


"என்னாச்சு பூவு?" என்றவனிடம் "உங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடல் கூட்டி போய் இருக்காங்க மாமா.." என்றாள். 


அவளை விலக்கி நிறுத்தி விட்டு வீட்டை நோக்கி வேகமாக ஓடினான் வினோதன். வீடு காலியாக இருந்தது.


"எங்கேடா போனாய்.?" என்று கேட்டாள் பக்கத்து வீட்டுக்காரி.


பதில் சொல்லாமல் மருத்துவமனையை நோக்கி ஓடினான். அப்பா உயிருக்குப் போராடும் நிலையில் இருந்தார்.


'காப்பாற்ற முடியாது' என்று சொன்னார்கள் மருத்துவர்கள். 


வினோதனுக்கு தலையைப் பிடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. என்ன இருந்தாலும் தந்தை அவர். வாழ்க்கையை வெறுத்தவன் தந்தையை வெறுக்கவில்லை.


"எப்படியாவது காப்பாற்றுங்கள்.." என்று மருத்துவரின் கையை பிடித்தான்.


"எப்படி முடியும்.? அவரோட ஹார்ட் ரொம்ப மோசமான நிலைமையில் இருக்கு. இதுக்கு மேல காப்பாத்த எங்களால் முடியாது.." என்று கையை விரித்து விட்டார்கள்.


மறுநாள் காலையில் அப்பா இறந்து போனார். அடுத்து ஒரு வருடம் கழித்து பூவரசிக்கும் அவனுக்கும் திருமணம் நடந்தது.


பூவரசியை அதிகம் நேசிப்பதாக நம்பிக்கொண்டிருந்தான் அவன். ஆனால் அடுத்த இரண்டாம் வருடத்திலேயே உடன் பணிபுரியும் மற்றொரு பெண்ணின் மீது அவனுக்கு ஈர்ப்பு வந்து சேர்ந்தது. அவனாலேயே நம்ப முடியவில்லை. பூவரசிக்கு உயிரை விடத் துணிந்த நேரம் அவனின் நினைவில் இருந்தது.


ஆனால் எப்படி இந்த புது காதல் மலர்ந்தது என்று அவனுக்கே தெரியவில்லை.


அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தாள் சயா.


அடுத்த ஆறு மாதங்கள் சென்றது. கர்ப்பவதியாக இருந்த பூவரசிக்கு தன் கணவன் தனக்கு செய்யும் துரோகம் தெரிய வந்தது. 


அவனுக்காக தான் கொண்ட காதல் எத்தகையது என்பதை நினைத்துப் பார்த்து மனதுக்குள் வெம்பியவள் வாழ்க்கையை முழுதாக வெறுத்தாள்.


ஒரு நொடி வாழ்ந்தாலும் அது தனக்கும் தன் உயிருக்கும் அவமானம் என நினைத்து தற்கொலை செய்து கொண்டாள்.


மேடிட்ட வயிற்றோடு இறந்து‌ கிடந்த மனைவியை கண்டு தலையை பிடித்தான் வினோதன். ஒரு காலத்தில் எதற்காக அவன் ஏங்கினானோ அந்த பொருள் கைச் சேர்ந்தும் ஒழுங்காக பார்த்துக் கொள்ள முடியாத காரணத்தால் அந்த செல்வம் அவனின் கையை விட்டுப் போயிருந்தது. 


இறந்தவள் திரும்பி வரவே மாட்டாள் என்று அறிந்து அழுது கதறினான். ஆமாம்.. அவன் எவ்வளவு அழுதும் அந்த ஒற்றை நொடி திரும்ப வரவில்லை. 


மரித்தவள் மரித்தவளாகவே இருந்து விட்டாள்.  அவளின் பிணத்தை மடியில் போட்டு கதறி அழுதாலும் அவனின் மனதிலிருந்த குற்ற உணர்வு சிறிதும் தீரவில்லை.


பூவரசியை புதைத்து வந்த இரண்டாம் நாள் முழுதாய் பித்துப் பிடித்து பைத்தியமாகி போனான் வினோதன்.


அதுக்கும் முன்னாடி நாம பூவரசியோட லைப்பை போய் பார்த்துட்டு வரலாம்.


பூவரசி இறந்துப்‌ போனாள். அவளின் ஆன்மா தனியாக பிரிந்து வந்தது. அவளுக்கு எதிரே இருந்த பூவிளந்தேவி பூவரசியை கேலியாக பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள்.


"இப்படி ஒரு ட்விஸ்டை நிச்சயம் உன் காதலி எதிர்பார்த்திருக்கவே மாட்டா.. அவ பொறுமையா இருந்திருக்கலாம் இன்னும் கொஞ்ச வருஷம்.." என்று மீண்டும் மீண்டும் சிரித்தாள்‌.


பூவரசியின் பிறவியாக பூமியில் பிறந்து இருந்த கலை தலையை பிடித்தபடி சென்று ஒரு ஓரமாக அமர்ந்தான்.


நன்றாக சென்றிருக்க வேண்டிய வாழ்க்கை அவர்களுடையது.


"ஏற்கனவே தவறு செய்ததால்தான் இப்படி ஜென்ம ஜென்மத்திற்கும் பழிவாங்கப்பட்டு கொண்டிருக்கிறோம். நாம நினைத்தது எதையும் நடத்திக் கொள்ள முடியாமல் இருக்கிறோம்.." என்று கடுப்பில் இருந்தான் அவன்.


சயா முட்டாள் போல இந்த ஜென்மத்திலும் தவறுகளை செய்து விட்டிருந்தாள். அடுத்த ஜென்மம் வாழ்க்கையை நினைத்து அவனுக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. 


பைத்தியமாகி போன வினோதன் மனைவியின் கல்லறையையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தான். 


"என்னை எப்படி என் கணவன்கிட்ட இருந்து பிரிச்ச.. என் குழந்தையைக் கூட கையில் ஏந்த முடியாம செஞ்ச. அதே போல இந்த முறை உன்கிட்ட இருந்து உன் மனைவி பிரிச்சிட்டேன். உன் குழந்தையையும் அழிச்சிட்டேன். இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு.." என்று சொல்லி ஆனந்த சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தாள் அந்த முட்டாள் ஆன்ம பெண்.


வினோதன் பைத்தியமாக அந்த ஊர் முழுக்க திரிந்தான். வீடு வீடாக பிச்சை எடுத்து சாப்பிட்டான். 


அவனின் அம்மா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றாள். ஆனால் அம்மாவின் பேச்சை அவன் கேட்கவில்லை. தன் அம்மாவையே அவனுக்கு நினைவில் இல்லை. பூவரசியின் கல்லறையின் அருகிலேயே குடி கொண்டிருந்தான்.


அடர்ந்த தாடியும் அழுக்கு உடையும் பசிக்காத வயிறுமாக அவனது நாட்கள் சென்று கொண்டிருந்தன.


அப்படியே பத்து வருடங்கள் ஓடிவிட்டன. சயா தினமும் கொக்கரித்து கொண்டிருந்தாள். தினமும் சிரித்துக் கொண்டிருந்தாள்.


பத்து வருடங்கள் முடிய இருந்த ஒரு நாளில் தான் படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்து வந்தான் வினோதன்


பைத்தியக்காரனாக ஊரைவிட்டு வெளியே நடந்தான். தண்டவாளத்தில் இறங்கினான். மெல்ல அடி எடுத்து வைத்து முன்னோக்கி நடந்தான். 


பூவரசியுடனான காதல் அவனுக்கு நினைவில் இருந்தது. எப்படி மற்றொரு பெண்ணிடம் காதலில் விழுந்தோம் என்று புரியாமல் குழம்பித் தவித்தான். தன் நீண்ட தாடியை பிடித்து இழுத்தபடி நடந்துக் கொண்டிருந்தான். எதிரே வந்த ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டான்.


நொடியில் இறந்தவன் மறு நொடியே தனது ஆன்ம நினைவை கைவிட்டான்.


சயாவை கண்டு பரிவு கொண்டான். சென்று அவளை அணைத்துக் கொண்டான். 


"சயா நீ எனக்கு எவ்வளவு மோசமான வாழ்க்கை கொடுத்தாலும் நான் உன்னை நேசிப்பேன்.. நீ என்னோட சயா.." என்ற வழக்கமான அதே வசனத்தை சொன்னான்.


கலகலவென சிரித்தாள் தூரத்தில் இருந்து வந்த பூவிளந்தேவி.


"உன் தோழி செஞ்ச தவறு என்னன்னு உனக்கு புரியல. அவ மறுபடியும் வாழ்க்கை ஏட்டையே ஏமாத்திட்டா.." என்றாள்.


சயாவுக்கு ஒன்றும் புரியவில்லை. வினீயையும் பூவிளந்தேவியையும் குழப்பத்தோடு பார்த்தாள்.


"யார் நீங்க.?" என்று கேட்டாள்.


"சயா மறந்துட்டியா.? நான் உன் ஆன்ம நட்பு.." என்றவனை தூரமாக விலக்கி தள்ளினாள் பூவிளந்தேவி.


"ஏய் முட்டாள் பெண்ணே! நீ இந்த முறை இவனைப் பழிவாங்கல. உன்னையேதான் பழி வாங்கிட்ட. உன்னோட ஆன்ம ஜோடிதான் இந்த ஜென்மத்துல அவனுக்கு மனைவியா இருந்தா.." 


விஷயத்தைக் கேள்விப்பட்டதும் குழம்பிப் போனாள் சயா. 


"எனக்கு புரியலையே.." என்றாள். 


"இந்த ஜென்மத்துல பூவரசியா,  உன் நண்பனுக்கு மனைவியா இருந்தது உன் ஆன்ம காதலன் கலைதான்.. நீ இந்த முறையும் ஒப்பந்தம் போட்டுக்கிட்ட ஏட்டை மாத்தி எழுதிட்ட. அதுவும் மொத்தமாகவே மாத்திட்ட. நீ பூமியில் வாழ்ந்தது வெறும் முப்பது வருசங்கள். அது எதுவும் உண்மை கிடையாது. நீ ஒரு ஆன்மா. ஆன்மாவுக்கு ஒரு நிரந்தர வாழ்க்கை இருக்கு. ஒரு நிரந்தர நினைவும் இருக்கு. ஆனா நீ ஒவ்வொரு முறையும் உன்னோட ஆன்ம நினைவை ஞாபகத்தில் கொண்டு வராம போயிட்ட. உன்னோட பூமி வாழ்க்கையோடு மட்டுமே உன் வாழ்க்கையை பொருத்தி பொருத்திப் பார்க்கற. அதனாலதான் நீ ஒவ்வொரு முறையும் பழிவாங்க நினைக்கற. நீ அப்படி பழி வாங்கும் ஒவ்வொரு முறையும் உனக்கான தண்டனைகளை கூடிகிட்டே போகுது. இந்த முறையும் நீ அப்படிதான் செஞ்ச. ஏற்கனவே நீ செஞ்ச தவறாலதான் கலை அவனுக்கு ஜோடியா போனான். இனி ஆன்மா விளையாட்டின் அதிகாரிகள் என்ன சொல்றாங்களோ அதுக்கேத்த மாதிரிதான் நீ நடந்தாகணும். அவங்க சொல்றதைதான் கேட்டாகணும். சாதாரண விளையாட்டை ரொம்ப மோசமான தண்டனையை மாத்திட்ட நீ. ஒரு சாதாரண பூமியின் வாழ்க்கையை உண்மையான ஆன்ம நினைவுகளோடு சேர்த்து குழப்பிகிட்ட. உன் வாழ்க்கையை நீயே நரகமாக்கிட்ட. எதுவும் நிரந்தரம் கிடையாது என்பதுதான் பூமியின் ஒரே விதி. ஆனா இந்த பூமியையே நிரந்தரமாக்க பார்த்துட்ட.. அதற்கான தண்டனை உனக்கு கண்டிப்பா கிடைக்கும்.." என்ற பூவிளந்தேவி அங்கிருந்து போனாள். 


சயாவின் கையை பற்றினான் வினீ.


"பரவாயில்ல சயா. இது வெறும் விளையாட்டுதானே.? கஷ்டங்கள் எதுவும் கிடையாது. நீ கவலைப்பட வேண்டாம்.." என்று ஆறுதல் சொன்னான்.


கலையும் கூட அதையேதான் சொன்னான். 


தன் ஆன்ம ஜோடியே அணைத்துக் கொண்டவன் "நீ எதுக்கும் கவலைப்பட வேண்டாம்.. தண்டனை கிடைக்கும்.. அப்புறம் எல்லாம் சரியா போயிடும்.. நாம பழையபடியே ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழலாம்.. நான் உன்னை எப்போதும் நேசிப்பேன்.. இதை மாத்த யாராலும் முடியாது.." என்று சொன்னான்.


சாயவும் மற்றவர்களும் ஆன்ம உலகிற்கு சென்றனர். 


அதிகாரிகளிடம் தங்களின் வாழ்க்கை ஏட்டையும், தாங்கள் செய்த தவறுகளை கணக்கிட்ட மானிட்டரையும் தந்தனர். 


அனைத்தையும் கணக்கிட்டு பார்த்த அதிகாரிகள் "உங்களுக்கு வேற பொழப்பே இல்லையா.?"  என்று பச்சை பச்சையாக திட்டினார்கள்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..



Post a Comment

0 Comments